சிந்துபாத்தின் சாகசம்.

தி கோல்டன் வாயேஜ் ஆஃப் சிந்துபாத் திரைப்படத்தில் சிந்துபாத் லெமூரியா தீவைத் தேடிச் செல்கிறான். 1973ல் வெளியான இந்த ஹாலிவுட் படத்தில் தமிழக வரலாற்று ஆய்வில் குறிப்பிடப்படும் கடல்கொண்ட தேசமான லெமூரியாவை கற்பனையான புதையல் தீவாகச் சித்தரிக்கிறார்கள்

ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் மாலுமி சிந்துபாத் ஏழு கடல் பயணங்களை மேற்கொள்கிறான். இந்தச் சாகசப் பயணங்களைப் பற்றி எண்ணற்ற திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நான் பார்த்த சிந்துபாத் படங்களில் மிகச்சிறப்பானது இதுவே

ஆயிரத்தோரு இரவு கதையில் இரண்டு சிந்துபாத் இடம்பெறுகிறார்கள். முதல் இரட்டை உருவக் கதை. ஒரு சிந்துபாத் ஏழை. மற்றவன் மாலுமி. வாயிற்காப்பாளரான ஏழை சிந்துபாத், மாளிகையின் உரிமையாளரான மாலுமி சிந்துபாத்தை ஒருமுறை சந்திக்கிறான். மாலுமி, தனது வாழ்க்கைக் கதையையும், தான் எவ்வாறு கடற்பயணங்களை மேற்கொண்டு செல்வம் ஈட்டினேன் என்பதையும் விவரிக்கிறார். இதுவே சிந்துபாத்தின் ஏழு கடற்பயணங்களாக அறியப்படுகிறது.

படத்தில் இடம்பெறுவது சிந்துபாத்தின் ஒரு பயணக்கதையே. அபூர்வமான புதையல் லெமூரியாவில் மறைந்திருப்பதாக அறிந்த சிந்துபாத் அதனைத் தேடி கடற்பயணம் மேற்கொள்கிறான். லெமூரியாவைக் கண்டடைகிறான். அது இன்றைய கம்போடியாவில் இருப்பது போன்று பிரம்மாண்டமான புத்தர் சிலைகளும் காளி மற்றும் தெய்வ உருவங்களும் கொண்டதாகயிருக்கிறது. அங்குள்ள குகையினுள் அவன் தேடும் புதிருக்கான விடை கிடைக்கிறது

இன்றுள்ள எந்தத் தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் உருவாக்கபட்ட ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் வியப்பூட்டுகின்றன.

படத்தின் துவக்கத்தில் சிந்துபாத் கப்பலில் பயணம் செய்யும் போது விசித்திரமான உயிரினம் ஒன்று தங்க ஆபரணம் ஒன்றை கவ்வி கொண்டு வானில் பறப்பதைக் காணுகிறான். கப்பலில் இருந்த ஒருவன் அந்தப் பறவையை அம்பு எய்து வீழ்த்துகிறான்.

சிந்துபாத் ஆபரணத்தைக் கழுத்தில் அணிந்து கொள்கிறான். அப்போது கனவுவயப்பட்டது போலச் சில விநோத காட்சிகள் அவனுக்குள் தோன்றுகின்றன. உள்ளங்கையில் கண் பச்சை குத்தியிருந்த நடன மங்கை மார்ஜியானா தோன்றி மறைகிறாள்.

அந்த ஆபரணம் தீவினையின் அடையாளம். ஆகவே அதனை அணிய வேண்டாம் எனக் கப்பலில் இருந்தவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால் சிந்துபாத் அதனை ஆசையாக அணிந்து கொள்கிறான்.

திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு புயல் அவர்கள் கப்பலை மராபியா நிலப்பகுதிக்குக் கொண்டு செல்கிறது. அங்கே கோரா என்ற மந்திரவாதி அவர்களைப் பின்தொடருகிறான்.

தந்திரமாகப் பேசி சிந்துபாத் அணிந்துள்ள ஆபரணத்தைப் பெற முயற்சிக்கிறான். ஆனால் சிந்துபாத் அவனது சூழ்ச்சியை அறிந்து தப்பிப் போகவே கோரா சண்டையிட்டுப் பறித்துக் கொள்ள முயலுகிறான்.

சிந்துபாத் அருகிலுள்ள நகருக்குள் தப்பியோடிவிடுகிறான். அந்த நகரை நிர்வாகம் செய்யும் அமைச்சர் அவனைத் தேடி வந்து சிந்துபாத் அணிந்துள்ள ஆபரணம் ஒரு துண்டு மட்டுமே எனப் புரிய வைக்கிறான். அதன் மற்ற பகுதிகளை ஒன்று சேர்க்கும் போது புதையலை அடைய முடியும் எனச் சிந்துபாத் அறிந்து கொள்கிறான்.

தங்க முகமூடி அணிந்த மந்திரி உதவியோடு அவர்கள் லெமூரியா நோக்கி பயணம் மேற்கொள்கிறார்கள்.

கடலிலும் மந்திரவாதி துரத்துகிறான். மந்திரசக்தியால் விநோத உயிரினம் ஒன்றை உருவாக்கி உளவு பார்க்கிறான். அவர்கள் மந்திரவாதியிடமிருந்து தப்பி லெமூரியாவை அடைகிறார்கள்

அந்தத் தீவில் வசிக்கும் கோர்னா பழங்குடியினரைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக மந்திரவாதி கோரா அங்கிருந்த ஆறு கரங்கள் கொண்ட காளி சிலைக்கு உயிர் கொடுக்கவே, அச்சிலை வாளேந்தி உக்கிரமாகச் சிந்துபாத்துடன் சண்டையிடுகிறது. அபாரமான காட்சியது.

இந்தச் சண்டைக்காட்சியினை உருவாக்க புகழ்பெற்ற இந்திய நடனக்கலைஞரான சூர்யகுமாரியை இயக்குநர் ஹாரிஹவுசன் நியமித்தார். ஹாலிவுட் திரைப்படங்களில் பங்கேற்று புகழ்பெற்ற சூரியகுமாரி சண்டைக்காட்சியில் காளியின் நடனத்தைச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்திய இசைக்கலைஞர்களைக் கொண்டு இந்தக் காட்சிக்குப் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள்.

மந்திரவாதியின் சக்தியால் கப்பலில் இருந்த மரப்பதுமை உயிர்பெற்று இறங்கி வந்து சண்டையிடும் காட்சியும் சிறப்பானது. அந்த மரப்பதுமை சிந்துபாத் வைத்திருந்த வரைபடத்தைத் திருடிக்கொண்டு போகிறது. படத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள சென்டாருக்கும் கிரிஃபினுக்கும் இடையிலான சண்டையும் நேர்த்தியானது.

கோரா நெருப்புப் பந்தால் எரித்ததால், முகம் சிதைந்து போன அமைச்சர் ஒரு தங்க முகமூடியால் மறைத்துக் கொண்டபடி நடமாடுகிறார். விசித்திரமான கதாபாத்திரம். அவரே கடந்தகால உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

சிந்துபாத்தின் கடற்பயணங்களில் வெளிப்படும் சாகசமும் மாயாஜால நிகழ்வுகளும் எல்லா வயதினரும் ரசிக்கக் கூடியவை. இந்தப் படமும் அது போன்றதே.

.

0Shares
0