இனிதானது விழா

எனது ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிரம்பி நூறு பேருக்கும் மேலாக நின்று கொண்டே உரைகளைக் கேட்டார்கள்,

ஆம்புருனோ, அவர்கள் குற்றவாளிகளே என்ற எனது சிறுகதையை ஜெயராவ் மிகச்சிறப்பாக நாடகமாக்கியிருந்தார், அறிவியல் மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தில் உள்ள பள்ளிகள் தோறும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய நாடகமிது.

புருனோவின் விசாரணையைச் சமகாலச் சூழலோடு பொருத்தி அவர்கள் நாடகமாக்கியிருந்தது சிறப்பாக இருந்தது, ஜெயராவ் தமிழ் சூழலின் தனித்துவமிக்க நாடக இயக்குனர் என்பதை உறுதியாக நிரூபித்துக்காட்டினார். அவருக்கு நிறைந்த அன்பும் நன்றிகளும்.

புத்தகங்களை வெளியிட்டுப் பேசிய எஸ்.ஏ.பெருமாள், பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், பர்வீன் சுல்தானா, கபிலன் வைரமுத்து, ராமகுருநாதன், டாக்டர் ராமானுஜம் ,பேராசிரியர் மாடசாமி அனைவரும் புத்தகங்களுக்குள் ஆழ்ந்து அறிந்து பேசினார்கள், அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

காந்தி குறித்து நிறையப் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் ஒன்பதரை மணியோடு அரங்கினைக் காலி செய்துவிட வேண்டும் என்ற காலக்கெடு காந்தியின் எழுத்துகள் குறித்த எளிய ஆரம்பம்  என்ற அளவிலே பேச முடிந்தது, இன்னொரு முறை முழுமையாக காந்தியின் எழுத்துலகம் பற்றி விரிவாகப் பேசத் திட்டமிட்டிருக்கிறேன்

புதிய புத்தகங்களின் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு அற்புதமாக வந்திருக்கிறது, உயிர்மையின் வடிவமைப்பாளர்கள், பிழை திருத்துனர், மற்றும்  இந்தப் புத்தகங்களை தனிக்கவனம் கொண்டு உருவாக்கிய செல்விக்கு நேசமுள்ள நன்றிகள்.

எனது எல்லா எழுத்துச் செயல்பாடுகளுக்குப் பின்பும் மாறாத உத்வேகமாக இருந்துவரும் நண்பர் மனுஷ்யபுத்திரனின் துணையே இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வின் வெற்றிக்கு முக்கியக் காரணம்

எனது எழுத்துகளையும் இலக்கிய உரைகளையும் கவனத்துடன் உள்வாங்கிக் கொள்ளும் வாசகர்களின் அன்பும் அக்கறையுமே என்னைத் தொடர்ந்து எழுத செய்கிறது, அவர்களுக்கு என் தீராத நன்றிகள்.

நிகழ்வில் கலந்து கொண்ட இறையன்பு ஐஏஎஸ், இளங்கோவன் ஐஆர்எஸ், டாக்டர்.மோகன், எஸ்.வி.வேணுகோபாலன், பேராசியர் ராஜு, பாரதிமணி, உள்ளிட்ட முக்கிய நண்பர்கள், வலைப்பதிவர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க உதவிய பிரபு, அருண்பிரசாத், ஜோதிக்கும் மனம் நிறைந்த நன்றி

**

0Shares
0