நாளை நடைபெறும் நண்பர் மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்
***
எனக்குப் பிடித்த மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்
உன் பிறந்த தினத்தில்
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு
நாம் சந்தித்துக்கொண்ட ஆண்டின்
உன் முதல் பிறந்த தினத்தில்
எவ்வளவு இளமையாக இருந்தாயோ
அப்படித்தான்
இன்றும் இருக்கிறாய்
அன்று முத்தமிட்டபோது
எப்படிக் கண்ணீர் சிந்தினாயோ
அப்படித்தான்
இன்றும் கண்ணீர் சிந்துகிறாய்
அன்று உனக்கு
என்ன பிரார்த்தனை இருந்ததோ
அதேதான் இன்றும் உனக்கு
அன்று அந்த நாள்
எப்படி உன் மனதில் கனத்துவிட்டதோ
அதேபோலத்தான் இன்றும் கனக்கிறது
அன்று உனக்கு
உன் பிறந்த நாள் ஆடையில்
எப்படி உனக்கு ஒரு சிறு மனக்குறை இருந்ததோ
அதே போலத்தான் இன்றும் இருக்கிறது
அன்று உனக்கு எப்படி
என் அன்பு போதாமல் இருந்ததோ
அப்படித்தான் இன்றும் இருக்கிறது.
எதுவுமே மாறவில்லை
இருந்தும்
ஏனோ வயதாகிறது என்கிறார்கள்
மெளனமாக நின்றுகொண்டிருக்கும்
பாறைகள்மேல் தானாக வளரும் புல் போல
வளர்கிறது இந்த வயது.
••
பிசாசைப் பழக்குதல்- மனுஷ்ய புத்திரன்
நான் யாருக்கும் தெரியாமல்
ஒரு பிசாசைப் பழக்கினேன்
முதலில் அதன்
அதிகப்படியான பற்களையும் நகங்களையும்
வெட்டி எடுத்தேன்
பிறகு
பறக்கக் கூடாது
எப்படி நடக்க வேண்டும்
என்பதைக் கற்பித்தேன்
ஓசையெழுப்பும் ஆபரணங்களை
கழற்றிவிட்டேன்
வாடகை வீடுகளில் வசிக்கும்போது
துக்கத்தையோ சந்தோஷத்தையோ
அளவாக ரகசியமாக
வெளிப்படுத்த வேண்டியதைப்
புரிய வைத்தேன்
பிசாசின்
உணவுப் பழக்கத்தை மாற்றுவது
மிகவும் பாதுகாப்பானது என்று தோன்றியது
குறிப்பாக மது அருந்தக் கூடாது
என்று சொன்னபோது
பிசாசு எதிர்ப்பு தெரிவித்தது
மீண்டும் கூட்டிவந்த இடத்திற்கே
அனுப்பிவிடுவேன் என்றதும்
அது பயந்துவிட்டது
பிசாசுகள்
கடந்த காலத்தை மிகவும் நேசிப்பதால்
பொதுவாக மனிதர்களை
கடுமையாக வெறுக்கின்றன
பிசாசும் ஒரு நிலையே என்பதை
அதற்குப் புரிய வைத்தேன்
இருப்பதிலேயே
மிகவும் சிரமமானது
ஒரு பிசாசிற்கு
வேலை கற்றுக்கொடுப்பதுதான்
அது அலைந்து திரிந்தே
பழகிவிட்டது
பிசாசின் எல்லா ஞாபக மறதிகளையும்
நான் மன்னித்துவிடுகிறேன்
மறக்கவே முடியாத வேறு ஞாபகங்கள்
அதை அலைக்கழிக்கின்றன
என் படுக்கைக்கு வந்து
என்னோடு தூங்க
பிசாசை அனுமதித்தேன்
என் நண்பர்கள்
தன்னைத் துன்புறுத்துவதாக
பிசாசு அடிக்கடி புகார் செய்கிறது
கூடி வாழக் கற்றுக்கொள்வதன் அவசியத்தை
அதற்கு உணர்த்தினேன்
குழந்தைகள்
தன்னைக் கண்டு பயப்படுவதாக
என் பிசாசிற்கு ஒரே வருத்தம்
பிசாசு முகமூடியொன்று அணிந்து
பிசாசுக் கதையொன்று சொன்னால்
அதனிடம் வருவார்களென்று சொல்லித்தந்தேன்
பிசாசை நான் தனிமையில்
விட்டுச் சென்றுவிடும்போது
தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறது
நான் என்ன செய்கிறேனென
தொடர்ந்து கவனித்துவரச் சொன்னேன்
என் காகிதங்களை
தெரியாமல் எடுத்துப் படித்துவிட்டு
பிசாசும் எழுதத் தொடங்கியபோது
முதல் முறையாக
பயப்படத் தொடங்கினேன்
***
வாழ்நாளின் மிகச்சிறந்த தேநீர்
பால் பாக்கெட்டின் மேல்
ரத்தக் கறை படிந்திருந்தது
பாக்கெட் போடும்
வயோதிகர்
கேட்டை பிடித்துக்கொண்டு
நின்றுகொண்டிருந்தார்
‘ரத்தக்கறை படிந்த
தேநீரை
நான் எப்படிப் பருகுவது?’
என்று அவரிடம் கேட்டேன்
‘வழியெல்லாம்
மழைத் தண்ணீர்
கீழே விழுந்துவிட்டேன்’ என்று
தலையைத் தொட்டுக் காட்டினார்
தலையில்
இன்னும் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது
ஒரு வயோதிகன்
இந்த நகரத்தில்
பிச்சை எடுக்க மறுக்கிறான்
கூட்டிக்கொடுக்க மறுக்கிறான்
யார் காலையும் நக்குவதற்கு மறுக்கிறான்
யாருடைய வயிற்றிலும் அடிக்க மறுக்கிறான்
தன்னைத் தானே விற்றுக்கொள்ள மறுக்கிறான்
பால் பாக்கெட்டுகளில்
படியும் ரத்தக் கறையை
ஒரு அழுக்குத் துணியால்
அவசர அவசரமாக
துடைத்துக்கொண்டிருக்கிறான்
என் வாழ்நாளின் மிகச்சிறந்த
தேநீரை இன்று நான் அருந்தினேன்
ஒரு கைவிடப்பட்ட
வயோதிக தகப்பனின்
குருதிச் சுவை மிகுந்த தேநீரை
****
