அன்னை வயல்

விகடன் எம்.டி. திரு. பாலசுப்ரமணியம், இயக்குனர் கே.பாலசந்தர் என இரண்டு நிகரற்ற ஆளுமைகளின் மறைவு என்னைத் தாளாத மனத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

இருவருடன் நெருங்கிப்பழகியவன் நான். என் மீதான அவர்களின் அன்பும் அக்கறையும் தீராத நன்றிக் கடனுக்குரியது.

விகடன் எம்டியான திரு.பாலசுப்ரமணியம் அவர்களை மாணவ நிருபர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நாளில் முதன்முறையாகச் சந்தித்தேன். அன்று நான் ஒரு கல்லூரி மாணவன், புதிதாக எழுதத் துவங்கியவன்.

நேர்காணலின் போது எதற்காக பத்திரிக்கையாளராக விரும்புகிறீர்கள் என அவர் கேட்டதற்கு நான் பத்திரிக்கையாளர் ஆகவிரும்பவில்லை, எழுத்தாளர் ஆக விரும்புகிறேன். எழுதுவதற்கு  இடம் வேண்டுமில்லையா, அதனால் தான் இந்த திட்டத்தில் சேர விரும்புகிறேன் என்று பதில் சொன்னேன்

அவர் சிரித்தபடி பயிற்சி கொடுத்து எழுத்தாளர்களை உருவாக்க முடியாதே என்றார்

ஆனால் இந்த திட்டத்தில் இருந்தபடியே கதைகள் எழுதக்கூடாது என்று ஒரு கட்டுபாடும் இல்லையே என்று பதில் சொன்னேன்

எழுதுங்கள் என உற்சாகத்துடன் என்னைத் தட்டிக் கொடுத்து விகடனில் எனது சிறுகதைகள் தொடர்ந்து வெளிவர காரணமாக இருந்தவர் திரு. பாலசுப்ரமணியம் .

அவருக்கு சிறுகதை பிடித்திருந்தால் அது குறித்து பாராட்டு கடிதம் அனுப்பி வைப்பார். அவரிடம் நிறைய முறை பாராட்டுப் பெற்றிருக்கிறேன்,  ஆனந்த விகடன் ஒரு அன்னை வயலைப் போல எத்தனையோ எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. அதற்கான மூல காரணம் பாலசுப்ரமணியம் அவர்களே,

எழுத்தாளர்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பும் நேசமும் இணையற்றது.

வேலையற்றவனாக, இலக்கில்லாமல் சென்னையில் அலைந்துகொண்டிருந்த நாட்களில் எத்தனையோ முறை என்னை அழைத்து உங்களுக்கு ஏதேனும் உதவி தேவை என்றால் கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

என் வாழ்க்கைச் சிரமங்களை நான் பார்த்துக கொள்கிறேன், எழுத இடம் கொண்டுங்கள் அது மட்டும் போதும் என்று அவரிடம் பிடிவாதமாகச் சொல்லியிருக்கிறேன்.

எனது தொடர்கள் விகடனில் வெளியாகவும், தொடர்ந்து என் சிறுகதைகள், கட்டுரைகள் வெளியாகவும் அவர் தந்த உத்வேகமும் அன்பும் முக்கிய காரணங்கள். அவர் ஒரு ஆசானைப் போல எனக்கு வழிகாட்டினார்.

பேரன்பு கொண்ட  அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.

இன்று அவரது பிறந்தநாள், அவரது நினைவுகளுடன் கைகூப்பி பிரார்த்தனை செய்து கொண்டேன்.

இந்த வார விகடனின் கடைசிபக்கத்தில் கைகூப்பியபடியே அவர் நன்றி தெரிவிக்கும் சித்திரம் ஒன்று வெளியாகியிருக்கிறது,

அதை வெட்டி எனது எழுதும் மேஜை அருகே ஒட்டி வைத்துக் கொண்டேன். அதை பார்க்க பார்க்க என்னை அறியாமல் கண்ணில் நீர் கசிந்தபடியே இருக்கிறது.

மகத்தான அந்த மனிதரின் இதயத்தில் எனக்கும் ஒரு சின்னஞ்சிறு இடம் இருந்தது என்பது எத்தனை பாக்கியம்.

•••

இயக்குனர் பாலச்சந்தரின் படங்கள் என்றால் குடும்பத்துடன் நாங்கள் போய்விடுவோம், படம்விட்டு வீடு திரும்பிய இரவு அது பற்றி நீண்ட விவாதம் வீட்டில் நடக்கும்.

சில நேரம் அதே படத்தை இரண்டாவது, மூன்றாவது தடவை கூட குடும்பத்துடன் போய் பார்த்து வருவோம், தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க இயக்குனராக ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் வாழ்க்கையோடும் பின்னிப்பிணைந்தவர் கே.பி. அவர்கள்

ஒருமுறையாவது அவரைச் சந்திக்க முடியாதா என ஏங்கிய எனக்கு பாலச்சந்தரின் மகன் கைலாசத்தின் நட்பு கிடைத்த போது அவரிடம் அப்பாவைக் காண வேண்டும் என்று சொன்னேன்

அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போல நாளை காலை வாரன்ரோட்டில் உள்ள எங்கள் வீட்டு வா என்று கைலாசம் சொல்லிச் சென்றார்

மறுநாள் காலை ஏழு மணிக்கு கேபி சார் வீட்டுவாசலில் போய் நின்றேன். அவரது கார் டிரைவர் யாரை காண வேண்டும் எனக் கேட்டார்

கைலாசம் என்றதும் உள்ளே போய் அழைத்து வந்தார், கைலாசம் என்னை வீட்டிற்குள் அழைத்துப் போனார், அந்த அதிகாலையில் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையில் சிரித்தமுகத்துடன் படப்பிடிப்பிற்கு கிளம்பிக் கொண்டிருந்த கேபிசாருக்கு அறிமுகம் செய்து வைக்கபட்டேன்

என் முதுகில் தட்டியபடியே நீயும் பிலிம் இன்ஸ்டியூட்டா என்று கேட்டார்.

இல்லை எழுத்தாளர் என்றேன்

என்ன பொஸ்தகம் எழுதியிருக்கே, எனக்கு குடு, படிச்சி பாக்குறேன் என்று சொல்லிவிட்டு என் முதுகில் தட்டிக் கொடுத்து என் படம் எல்லாம் பாப்பியா எனக்கேட்டார்

தயங்கி தயங்கி எங்கள் வீடே உங்கள் ரசிகர்கள் என்றேன்.

அதற்குள் யாரோ அவரை காண வந்துவிட்டார்கள், பேசியபடியே  வெளியே கிளம்பி போய்விட்டார், அன்று கேபிசார் வீட்டில் முதன்முறையாக சாப்பிட்டேன்

அன்று முதல் கைலாசத்தின் மறைவு வரை கேபி அவர்கள் வீட்டிற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன், அவருடன் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன், அவரது திரைக்கதைகள் எழுதுவதற்கு உதவி செய்திருக்கிறேன், மின்பிம்பங்களில் பல குறுந்தொடர்கள் எழுதும் நாட்களில் அவருடன் இணைந்து பணியாற்றவும்  செய்திருக்கிறேன்.

உலக தமிழ்மாநாடு தஞ்சையில் நடைபெற இருந்த போது தஞ்சை பெரிய கோவில் பற்றி ஒரு ஒளி ஒலி காட்சி அமைக்க அரசு திட்டமிட்டது, அந்தப் பணி கேபி அவர்களிடம் ஒப்படைக்கபட்டது

சோழர்கள் பற்றிய ஆய்விற்காக அவர் என்னை துணை செய்ய அழைத்தார். மூன்று மாத காலம் அவருடன் தினமும் சந்தித்து பழகும் சந்தர்ப்பம் உருவானது

அத்துடன் பலமுறை தஞ்சை கோவிலுக்குச் அவருடன் செனறு வந்தேன், அந்த திட்டம் எதிர்பாராமல் கைவிடப்பட்ட போது அவர் என்னிடம் உனது ஆய்வை ஒரு நூலாக எழுதி வெளியிடு என வற்புறுத்தினார், எனக்கு அதில் ஈடுபாடில்லை என விட்டுவிட்டேன்

எனது புத்தகங்களை பாராட்டி அவர் நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நாள் என்னை அழைத்த கேபி அவர்கள் ஒரு கதைக்கருவை சொல்லி அதை முழுதிரைக்கதையாக எழுதிக் கொடு என முன்பணம் தந்து அனுப்பி வைத்தார்

நானும் இரண்டு மாசம் செலவழித்து அதை ஒரு திரைக்கதையாக எழுதி தந்தேன்

அதை படமாக்க முயன்ற கேபி அவர்களுக்கு எதிர்பாராமல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது,

அத்துடன் அதை படமாக்க முன்ணணி நடிகர்கள் தேவை. அவர்களுக்காக நான் காத்திருப்பதில் விருப்பமில்லை என அந்த திட்டத்தைக் கைவிட்டார்

ஒருவேளை அதை வேறு யாராவது படமாக்கவிரும்பினால் நீ பயன்படுத்திக் கொள் என்று என்னிடம் சொன்னார்.

இல்லை இது உங்களுக்காக எழுதப்பட்ட திரைக்கதை, உங்களிடமே இருக்கட்டும் என்று சொன்னேன், நெகிழ்வுடன் என்னை அணைத்து ஆசிர்வாதம் செய்தார் கேபி. ஒரு தந்தை மகனை அணைத்து ஆசிர்வாதம் செய்தது போலவே அந்த நிமிஷம் உணர்ந்தேன்.

கைலாசமும் கேபி அவர்களும் என் மீது காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் என்ன ஈடு செய்ய முடியும் என்னால்.

இன்று அந்த இருவரும் மறைந்துவிட்டார்கள். கசியும் கண்ணீருடன் அவர்களின் நினைவுகளை சுமந்தபடியே நினைத்து நினைத்து விம்முகிறேன்

••

0Shares
0