கடந்த ஒரு வார காலமாக ஊரிலிருந்தபடியே எனது வாசகர்கள், நண்பர்கள் எனப் பலரையும் ஒன்றிணைத்து கடலூர் மற்றும் சென்னை வெள்ளநிவாரணப்பணிகளுக்கான உதவிகளை மேற்கொண்டேன். நேற்று சென்னை திரும்பினேன்.
மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி. திருநெல்வேலி என என்னோடு தொடர்புடைய பல நண்பர்கள், வாசகர்கள் தங்களால் முடிந்த உதவிப்பொருட்களைச் சேகரித்து வேன்களில் அனுப்பி வைத்தார்கள்.
இது போலவே சென்னையிலுள்ள சில தன்னார்வக் குழுக்களுக்குத் தேவையான பொருட்களை தனியார் நிறுவனங்களை அணுகிப் பெற்றும் தந்தேன்
எனது அண்ணன் டாக்டர் எஸ். வெங்கடாசலம் கடலூர் மற்றும் சென்னைக்குத் தேவையான பல்வேறு ஹோமியோ மருந்துகளை அனுப்பி உதவி செய்தார்.
நேற்று சென்னை திரும்பியதும் பள்ளி பிள்ளைகளுக்கான நோட்டுகள், மற்றும் பை தேவை என நண்பர் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார்.
சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டேன், அந்த உதவியை தானே செய்வதாக ஏற்றுக் கொண்டார்
இந்த மழை இளைஞர் சக்தியின் பேராற்றலை நிரூபணம் செய்திருக்கிறது.
சென்னைவாசிகள் இவர்கள் செய்த பேருதவிகளை என்றும் மறக்கமாட்டார்கள்.