விர்ஜிலியோ பினேரா (Virgilio Piñera) க்யூபாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது மாமிசம் (Meat) சிறுகதையைத் தமிழில் கவிஞர் ரவிக்குமார் மொழியாக்கம் செய்துள்ளார். மிக முக்கியமான சிறுகதை. இக்கதை இப்படித்தான் துவங்குகிறது
திரு. அன்சால்டோ மட்டும்தான் அந்த நகரத்தில் விதிவிலக்கு. எந்தக் கலக்கமும் இல்லாமல் ஒரு பெரிய கத்தியை அவன் தீட்டிக்கொண்டிருந்தான். பிறகு தனது பேண்ட்டை முழங்கால் வரை கீழே தள்ர்த்திவிட்டான். தனது இடதுபுற பிருஷ்டத்திலிருந்து ஒரு துண்டுக் கறியை வெட்டி எடுத்தான். உப்பும் வினிகரும் போட்டு அந்தக் கறியைச் சுத்தம்செய்து அதை ப்ராய்லரில் வைத்து வதக்கினான். ஞாயிற்றுக்கிழமைகளில் சமைப்பதற்குப் பயன்படுத்தும் வாணலியில் அந்தக் கறியைப் போட்டு வறுத்தான். மேசையில் அமர்ந்து தனது கறியைச் சுவைத்துச் சாப்பிட ஆரம்பித்தான்
இறைச்சிப் பற்றாக்குறை ஏற்பட்ட ஒரு நகரில் மனிதர்கள் தங்களைத் தானே அறுத்து சாப்பிடப் பழகுகிறார்கள் என்ற திகைப்பூட்டும் சிறுகதையின் வழியாகவே விர்ஜிலியோ பினேராவை அறிந்து கொண்டேன்.
கதை முழுவதும் குரலை உயர்த்தாமல் கதையை நகர்த்திக் கொண்டு போகிறார் பினேரா. இவரது பிறபடைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற உத்வேகத்திற்குக் காரணமாக இருந்தது அவரது எழுத்துநடை.
விர்ஜிலியோ பினேராவின் René’s Flesh நாவலை இணையத்தில் ஆர்டர் செய்து வாங்கினேன். மாமிசம் கதையைப் போலவே இதுவும் உடலை துன்புறுத்துவது தொடர்பான கதை என்றே அறிமுகக்குறிப்பு எழுதப்பட்டிருந்தது. 256 பக்கங்கள் கொண்ட நாவல். இரண்டு நாட்களில் அதை வாசித்து முடித்தேன்.
மாமிசம் சிறுகதையைப் போலப் பலநூறு மடங்கு உக்கிரத்துடன், வெளிப்படையாக, குரூரமாக, வலியும் வேதனையுடன் உடல் படும் அவஸ்தைகள் இந்நாவலில் விவரிக்கபடுகின்றன, இந்த நாவல் ரெனேயின் அவஸ்தைகளை விவரிக்கிறது. குறிப்பாகப் போர்டிங் ஸ்கூலில் அவன் அடையும் சித்ரவதைகள் பற்றியது
புகழ்பெற்ற உறைவிடப்பள்ளி ஒன்றில் மகனைச் சேர்க்க நினைக்கும் ரெனேயின் தந்தை அவனிடம் “கற்றுக் கொள்வதற்கு நாம் நிறைய வேதனைகளை, கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும். படிப்பு எளிதில் கிடைத்துவிடாது. என் உடலைப்பார் எத்தனை வடுக்கள்“ என்று பெருமையாகக் காட்டுகிறார்.
படிப்பதற்கு எதற்காக உடலை வருத்திக் கொள்ள வேண்டும். ஏன் இவ்வளவு தண்டனைகள் தரப்பட வேண்டும் என ரெனேவிற்குப் புரியவில்லை.
உறைவிடப்பள்ளி வாழ்க்கையைப் பினேரா அளவிற்குத் துல்லியமாகச் சொன்ன ஒருவரில்லை.
உண்மையில் அது ஒரு தண்டனைக்கூடம். யூத வதைமுகாமைப் பற்றி வாசித்திருப்போமில்லையா. அது போன்ற ஒரு வதைமுகாம். ஆனால் கல்வி நிலையம் என்ற பெயருடன், புகழுடன் அது மாணவர்களை இருகரம் நீட்டி வரவேற்கிறது
அந்தப்பள்ளியின் மோட்டோ ``Suffer in silence”. உலகெங்குமுள்ள உறைவிடப்பள்ளிகளுக்கு இந்த மோட்டோ பொருந்தக்கூடியதே.
விதவிதமான தண்டனைகளை வழங்கி மாணவர்களை ஒழுங்காகப் படிக்க வைப்பதாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் Mr. Marblo பெருமையுடன் கூறுகிறார். அத்தோடு அவர் தனது கடமையைப் பற்றி இப்படி விவரிக்கிறார்,
புதிதாகப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடலை எனக்கு நன்றாகத் தெரியும். முறுக்கேறிய, துடிப்பான அந்த உடலை வசக்கி, ஒடுக்கி நான் விரும்புகிறபடி பணிய வைப்பேன். அமைதியாக வேதனைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதே எங்கள் பள்ளியின் நோக்கம். ஒருவேளை அந்த அமைதி தானே உருவாகாவிட்டால் கட்டாயமாக அதை உருவாக்குவது எங்கள் கடமை, அழுகை, கூச்சல். புலம்பல் எதற்கும் இங்கே இடம் கிடையாது. கல்வி கற்றுக் கொள்வது எளிதானதில்லை. அதற்கு நிறையக் கஷ்டப்பட வேண்டும். அடியும் உதையும் பெறாமல் அறிவை எப்படி வளர்த்துக் கொள்ள முடியும் .திராட்சையில் இருந்து தானே ஒயின் வந்துவிடாது. நாம் தான் கசக்கி பிழிந்து ஒயினைத் தயாரிக்க வேண்டும்.
கணக்கு புரியவில்லை என்றாலோ, வரலாறு பாடத்திலுள்ள ஆண்டுகளை நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதாலோ எதற்காக அடிக்க வேண்டும். அடித்தால் நினைவு வளர்ந்துவிடுமா எனக்கேட்கிறான் ரெனே
கண்டிப்பும் கட்டுபாடும் ஒழுக்கமும் மட்டுமே ஒருவனைச் சிறந்த மாணவனாக்கும் எனக் கேலியான குரலில் சொல்கிறார் தலைமை ஆசிரியர்.
உறைவிடப்பள்ளியில் ரெனே அனுபவிக்கும் சித்ரவதைகள் அளவில்லாதவை. அங்கே மாணவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள். ஆசிரியர் தங்கள் உடலை கூடக் கவனிக்க அக்கறையற்றவர்கள். பருத்த உடல்களுடன் அவர்கள் மாணர்வகளிடம் கட்டுபாடான வாழ்க்கை பற்றிப் போதிக்கிறார்கள்..
உடல் தான் தண்டனையின் களம். உடலை வதைப்பதன் வழியே மனதை மாற்றிவிட முடியும் எனக் காலம்காலமாகப் பள்ளிகள் நினைக்கின்றன. சிறந்த மாணவனை உருவாக்க வேண்டும் என்றால் அதற்குப் பிரம்படிகள் அவசியம் என்றே பள்ளிகள் நம்புகிறார்கள்.
ரெனேயின் உறைவிடப்பள்ளியில் போதுமான உணவு தரப்படுவதில்லை. வயிறு நிரம்பிவிட்டால் மாணவன் சோம்பேறியாகிவிடுவான். பசித்த வயிறு தான் கற்றுக் கொள்வதற்கு எளிதானது என்கிறார் தலைமை ஆசிரியர்.
எந்த ஒன்றையும் திரும்பத்திரும்பச் செய்ய வைப்பதன் வழியே மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்ற பொய்யான நம்பிக்கையை ஆசிரியர்கள் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது மிகப்பெரிய சித்ரவதை. எந்த ஒன்றை விருப்பமில்லாமல் மாணவன் திரும்பச் செய்தாலும் அதை வெறுக்கவே செய்வான். கட்டாயம் ஒன்றை மண்டைக்குள் திணித்துவிடும். ஆனால் மனதிற்குள் பதிய வைக்காது.
தனது கட்டுபாடுகளை, தண்டனைகளை ஏற்றுக் கொண்டு எப்படி மாணவர்கள் அறிவில் சிறந்தவர்களாக அதிக மதிப்பெண்கள் பெற்று வெளியே சென்று சாதனையாளர்களாகத் திகழ்கிறார்கள் என்பதை ஒவ்வொரு பிரேயரிலும் தலைமை ஆசிரியர் பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறார். உப்புசப்பில்லாத அவரது பேருரையை ஒவ்வொரு முறையும் கேட்க வேண்டும் என்பது எவ்வளவு கொடுமை என்கிறான் ரெனே.
மாணவர்களை இப்படி அறிவுரை சொல்லிக் கொல்கிறோம் எனத் தலைமை ஆசிரியர் உணர்வதேயில்லை. காரணம் அவரது உடல் சொரணையற்றுப் போய்விட்டது, தடித்த உடல் அப்படித்தான் நடந்து கொள்ளும்.
“spirit” is a meaningless term; all of life is reduced to flesh” என்பதே உறைவிடப் பள்ளி கற்றுதரும் பாடம். உடல் என்பது வெறும் தசைகள். அதை நாம் நினைத்தபடியே உருமாற்றிக் கொள்ள முடியும். உலகம் உங்கள் உடலை தான் குறிவைக்கிறது. ரெனேயின் அப்பா சொல்கிறார்
Look: your body, mine, your mother’s body-everyone’s body is made of meat. This is very important, and because it is often forgotten, many people fall victim to the knife
புன்னகை படர்ந்த முகத்துடன் ஆசிரியர்கள் மோசமான வார்த்தைகளைக் கொண்டு திட்டுகிறார்கள். முகத்தை இனிமையாக வைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் மாணவர்களை அடிக்கிறார். உணவு, உறக்கம், படிப்பு எல்லாமும் கட்டாயத்தின் பேரிலே நடந்தேறுகிறது.
சீனியர் மாணவர்கள் தாங்கள் அடைந்த தண்டனைக்குப் பழிதீர்த்துக் கொள்வது போலப் புதிய மாணவர்களைத் தண்டிக்கிறார்கள்.
ரெனே இந்தக் கட்டுபாடுகளை மீறுகிறான். அடங்க மறுத்து தன் இயல்பில் செயல்படுகிறான், இதற்கான விசாரணை நடைபெறுகிறது. மேலும் கண்டிப்பு நடைமுறைப்படுத்தபடுகிறது. ரெனே அதை எப்படி எதிர்கொள்கிறான் என்ற குரூரமான சித்திரத்தை முகத்தில் அறைவது போலக் காட்டுகிறார் பினேரா
இன்றைய உலகம் ஒரு பெரிய இறைச்சிக்கடை. அங்கே நமக்குத் தேவையான எந்த மாமிசத்தையும் பெறலாம். மாமிசத்தை அறுத்து விற்பது அனுமதிக்கப்பட்ட செயல். அதில் ஒரு குற்றமும் இல்லை. வலியில்லாமல் ரத்தம் சிந்தாமல் சதையை அறுக்கத் தெரிந்த விற்பன்னர்கள் உருவாகிவிட்டிருக்கிறார்கள். உடல்கள் விற்பனை பொருளாகிவிட்ட உலகில் மனிதர்களின் அழுகையும் கூக்குரலும் அர்த்தமற்றவை. அவற்றை வணிகர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் உங்கள் சதையை அறுத்து உங்களுக்கே விற்கிறார்கள் என்பதே நிஜம். இந்த வியாபாரத்திற்கு ஊடகங்கள் துணை நிற்கின்றன.
சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. நம் உடலை காப்பாற்றிக் கொள்வது எளிதானதில்லை என்ற உண்மையை உணரத்துவங்கியவன் பதற்றம் கொள்கிறான். தப்பிஒட முயற்சிக்கிறான். நிர்கதியை உணருகிறான். இதைத் தான் பினேராவின் நாவல் சுட்டிக்காட்டுகிறது.
நாவலின் துவக்கத்தில் ரெனே இறைச்சிக்கடையைப் பார்வையிடவும் அங்கே நடைபெறும் செயல்களிலிருந்து கற்றுக் கொள்ளவும் தந்தையால் நிர்பந்திக்கபடுகிறான். தான் ஒரு இறைச்சிக்கடைக்காரன் ஆக வேண்டுமா என ரெனே கேட்கும் போது, இல்லை இந்த அனுபவத்தைக் கொண்டு வேறு உயர்வான வேலையை நீ அடையலாம் என்கிறார்
விர்ஜிலியோ பினேராவின் எழுத்தைக் காப்காவிற்கு நிகராகச் சொல்லலாம். காப்காவிடம் இவ்வளவு குரூரம் காணப்படுவதில்லை, ஆனால் அபத்தமான சூழலை விவரிப்பதும். கசப்புணர் கலந்த பகடியை உருவாக்குவதிலும் காப்காவின் நிழலைப் போலவே இருக்கிறார். இந்நாவலை வாசிக்கும் போது நினைவில் வந்த இன்னொரு நாவல் Patrick Suskind எழுதிய Perfume.
இந்நாவலில் வாசனையற்ற உடல் கொண்ட ஒருவனைப்பற்றிப் படிக்கும் போது திகைத்துப் போனேன் . அதற்கு நிகரான உக்கிரத்தைக் கொண்டது பினேராவின் நாவல்.
இந்த உறைவிடப்பள்ளி எங்குள்ளது என்ற தகவல் நாவலில் கிடையாது. காரணம் உலகெங்கும் உள்ள பள்ளிகளில் எந்த ஒன்றாகவும் இதைக் கருதலாம் தானே
•