jefferey mussaieff masson எழுதிய when elephents weep புத்தகத்தை வாசித்தேன்
நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான புத்தகப்பட்டியலில் இந்த நூல் இடம் பெற்றிருந்தது. உளவியல் ஆய்வாளரான ஜெப்ரி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காடுமலை சுற்றி மிருகங்களை தொடர்ந்து அவதானித்திருக்கிறார். உளவியல் ஆய்வில் அமைந்த இந்த புத்தகம் மிக சுவாரஸ்யமான அனுபவம் தருவதாகயிருந்தது.
தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்று தனிவகையே இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராவணன் என்பவர் எழுதிய சிந்தாமணி வைத்திய நூல்கள் ஒலைச்சுவடிகளாக நிறைய இருக்கின்றன. அதில் சிலவே பதிப்பு கண்டிருக்கின்றன. இந்த ராணவ வைத்திய ஏடுகள் இலங்கை மற்றும் சீனாவிற்கு பௌத்த துறவிகள் வழியாக சென்றிருக்கின்றன என்றும் ஒரு கருதுகோள் இருக்கிறது.
விலங்குகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அதன் குணபாவங்களை பற்றி விரிவாக பேசும் நூல்கள் தமிழில் இருக்கின்றன. அதற்கு வாகடம் என்று பெயர். இவை செய்யுள் வடிவத்தில் அமைந்திருக்கின்றன. குதிரை வாகடம். காளை வகாடம், யானை வாகடம் பெரிய மாட்டு வாகடம் என்று பல்வேறு மருத்துவ நூல்கள் இருக்கின்றன. மாடுகளுக்கு மூலிகை அரைத்து தந்துநோயை குணப்படுத்துவதோடு பல்வேறு விதமான சூடு போடுவதன் வழியே நோயை குணமாக்கவும் செய்வார்கள். அதற்கான சூட்டுகோல் இருக்கும். எந்த இடத்தில் எப்படி சூடு போட வேண்டும் என்பதும் ஒரு வைத்திய முறையே. இந்தசூட்டுகோலில் மருந்து தடவப்பட்டிருக்கும். அத்தோடு பச்சிலை சாற்றை தடவி விடுவதால் காயம் உடனே ஆறிவிடும்.
மாடுகள், யானைகள் குதிரைகளின் உடலியல் பற்றி விரிவான அவதானிப்புகள் மற்றும் அதன் நிறம் உயரம் நீளம் பருமன் போன்றவற்றை ஆராயும் சாத்திரங்கள் நம்மிடையே இருந்திருக்கின்றன. அதை வைத்து குதிரை எப்படி ஒடும். அதன் வேகம் எப்படியிருக்கும் என்பதை கணித்திருக்கிறார்கள். அசுவ வாகடம் என்றும் குதிரை வைத்திய நூலில் எண்ணிக்கையற்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
விக்ரமாதித்யன் கதைகளில் வரும் பட்டிக்கு எறும்புகள் பேசுவது நன்றாக கேட்கும். அந்த வித்தைக்கு பெயர் பபீலிகவாதம். அது ஆயகலைகளில் ஒன்று. இப்படி பறவைகள் பேசுவதையும் தேனீக்களின் ரீங்கார நடனத்தையும் பற்றி மனிதர்கள் நூற்றாண்டுகாலமாகவே நெருங்கி ஆராய்ந்திருக்கிறார்கள். நிறைய கற்பனை செய்திருக்கிறார்கள். அந்த கற்பனையிலிருந்து கதைகளும் வியப்பூட்டும் தகவல்களும் வெளியாகி உள்ளன.
விலங்குகளின் பிரதான உணர்ச்சி பயமே. அது எந்த நேரமும் தன்னை ஏதாவது அபாயம் பின்தொடரக்கூடுமோ என்ற பயத்திலே இருக்கிறது. பரிசோதனை கூடத்தில் எலிகளை சோதனை செய்த போது ஏதாவது விபரீதமான சப்தம் கேட்டவுடன் அதன் மூளை நரம்புகள் உடனே தூண்டப்பட்டு எலியின் உடலில் படபடப்பும் அசுரவேகமும் பீறிடுவதை கண்டிருக்கிறார்கள். இந்த உணர்ச்சி தூண்டுதலை மட்டும் துண்டித்துவிட்டால் பூனையின் முன்னால் எலி வாக்கிங் போவதோடு அதை வலுச்சண்டைக்கு கூட இழுக்க கூடும்.
துக்கம், சந்தோஷம், ஏமாற்றம் பிரிவு போன்ற உணர்ச்சிகளை மிருகங்கள் எப்படி வெளிப்படுத்துகின்றன, ஏன் அப்படி நடந்து கொள்கின்றன என்பதை பற்றிய உளவியல் ஆய்வில் அமைந்த . ஏன் மிருகங்களை பற்றி ஆராயும் போது அதை தொடர்ந்து மனிதர்களுடன் ஒப்பிடுகிறோம் என்பதில் தான் அவரது முதல்கவனம் குவிகிறது.
மிருகங்களை அணுகும்போது அதை விட மனிதன் மேம்பட்டவன். அவனை விட எந்த மிருகமும் எந்த உணர்ச்சி வெளிப்பாட்டிலும் மேம்பாடு கொண்டதில்லை. மனிதர்கள் மீது மிருகங்கள் எவ்வளவு விசுவாசம் கொண்டிருக்கின்றன என்பது தான் மனிதனின் முக்கிய கவனம். அதற்குள் அடங்காத மிருங்களை அவன் உக்கிரமானவை என்று ஒதுக்கிவிடுவான் என்று மனித உணர்ச்சிகளின் வழியே மிருக உணர்ச்சிகளை ஒப்பிட்டு ஒரு போதும் முடிவுக்கு வரக்கூடாது என்று கூறுகிறார்.
இதற்கு காரணம் மிருகங்கள் ஒரு போதும் சந்தோஷத்தை தேடி அலைவதில்லை. அதன் ஆசைகள் யாவும் அதனால் எவ்வளவு முடியும் என்ற வரம்புக்குள் தான் உள்ளது.சிறுநரி ஒரு முயலை அடித்து சாப்பிட முனையுமே அன்றி ஒரு யானையை அடித்து தனியே சாப்பிட்டுவிடலாம் என்று ஒரு போதும் பேராசை கொள்ளாது. அவை சந்தோஷத்தை தன் உடல்மொழியால் வெளிப்படுத்துகிறது.
நரிகளை பற்றி இருபது வருசம் ஆய்வு செய்த மெக்கனால்டு அதன் நடையில் இருந்தே அது என்ன மனநிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டுவிடலாம் என்கிறார். மனிதர்கள் தங்கள் சந்தோஷங்களையும் துக்கத்தையும் மறைத்துக் கொள்கிறவர்கள். அதை உடல்மொழி வெளிப்படுத்திவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ள பெருக்கின் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தனது குட்டியை மீட்பதற்காக யானை ஒன்று ஆற்றின் திசையில் வேகமாகஒடி சப்தம் எழுப்பி அதை கேட்டு அருகாமை கிராமவாசிகள் மீட்ட சம்பவத்தை வெளிப்படுத்தும் நூலாசிரியர். தன்னை காப்பாற்றிய தாயின் முன்னால் அந்த குட்டி சிறு குழந்தை போல நடுங்கிக் கொண்டிருந்தது. அதன் கண்களிலிருந்து கண்ணீர் வந்தபடியே இருந்தது. தாயின் முகத்தில் தோன்றிய உணர்ச்சி பெருக்கை போல ஒரு போதும் கண்டதேயில்லை என்று விவரிக்கிறார். யானையின் மன இயல்புகளை நுட்பமாக இந்தநூல் அவதானித்துள்ளது.
சிறுவயதில் யானைப்பாகன் ஒருவனை எனக்கு தெரியும். அவன் தன் வீடு இருக்கும் இடம் யானைக்கு தெரிய கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பான். இதற்காக சைக்களில் சென்று ஒரு சந்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு குறுக்கே வேறு பாதை வழியாக நடந்து பேருந்தை பிடித்து நகரின் வெளியில் உள்ள அவனது வீட்டிற்கு போய் சேருவான். இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு விதமாகவே அவன் வீடு போய்வருவான். எதற்கு என்று கேட்ட போது யானைக்கு தெரிந்துவிட்டால் அது மூர்க்கம் கொண்ட நேரத்தில் தன்னை தேடி வந்துவிடும் என்றான். அது நிஜமா என்று தெரியாது.
ஆனால் மாவுத்தர்களுக்கும் யானைக்குமான உறவு அற்புதமானது. அவன் யானையின் கண்களை வைத்தே அது இப்போது என்ன மனநிலையில் இருக்கிறது என்பதை சொல்லிவிடுவதை கண்டிருக்கிறேன். அது போலவே தன்னை பற்றி அவன் யானையின் முன்பு அதிகம் பேசியதும் கிடையாது. மனிதர்களோடு பழகிய யானைகள் தன்னியல்பு மறந்து போய்விட்டன. கோவில்களில் ஒற்றை யானையை காணும் போது அதன் தனிமை கண்ணை உறுத்துகிறது.
ஒரு நகரில் ஒரேயொரு யானை தானிருக்கிறது. அதை பார்த்து பழகிய பலரும் அதன் அருகாமையில் வாகனங்களில் கடந்து போகிறார்கள். சிறுவர்கள் கூட யானையின் மீது இன்று அதிசயம் கொள்வதில்லை. வாழ்க்கை நெருக்கடி யானையையும் தொற்றிக் கொண்டுவிட்டது.
ஒரு முறை நீண்ட நேரம் பசியோடு இருந்த யானை ஆத்திரத்தில் பிளிறிய போதும் அருகாமை கடையில் இருந்த சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம் அம்மா யானை கத்துமா.. இன்னைக்கு தான் முததடவை கேட்கிறேன் என்றதை கேட்டேன், யானைகள் கண்களால் உலகோடு பேசுகின்றன அந்த மௌனம் தான் யானையின் கவசம் போலும்.
காட்டை மறந்த யானைகள் இன்று சன்னதி வாசலில் நின்றபடியே ஆசி தந்து கொண்டிருக்கின்றன. யாரும் அதை கவனம் கொள்வதேயில்லை. இப்போது அது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே ஆகிப்போயிருக்கிறது.