கவிக்கோ அப்துல்ரகுமானின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
கல்லூரி நாட்களில் அவரது பால்வீதி படித்து வியந்து கவிஞர் மீராவின் மூலமாகக் கவிக்கோ அவர்களைச் சந்தித்துப் பழகத்துவங்கினேன்.
சென்னைக்கு வந்த பிறகு அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று வருவேன். நிறையப் புத்தகங்கள். இசைநாடாக்களைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.
அவர் ஆசிரியராகப் பணியாற்றிய தமிழன் என்ற நாளிதழில் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். மறக்கமுடியாத நாட்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகக் குற்றாலத்தில் கவிக்கோ நடத்திய இஸ்லாமிய இலக்கியக்கருத்தரங்கிற்குச் சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன். அவருடன் தென்காசி வரை ரயில்பயணம். இரவெல்லாம் உருதுக் கவிதைகளை எடுத்துச் சொல்லி அசரவைத்துவிட்டார்.
தொலைபேசியில்அவரது குரலைக் கேட்டாலே உற்சாகம் பிறந்துவிடும்.
அவருக்குப் பிடித்தமான கவிதைகளை, கவிஞர்களைக் கொண்டாடக்கூடியவர்.
தந்தையைப் போலப் பாசம் காட்டிய அற்புதமான மனிதர்.
அவரது மறைவைப் பேரிழப்பாகவே கருதுகிறேன்.