குறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்

நூறு வீடுகளுக்கும் குறைவாக உள்ள சிறிய ஊராகயிருந்தது. காரில் வந்து இறங்கிய அவர்களைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் வேடிக்கை பார்த்தார்கள். அதில் ஒரு சிறுவனை அழைத்து கந்தசாமி வேணாங்குளம் எங்கேயிருக்கிறது எனக்கேட்டார். அந்த சிறுவன் பரிகாரமா எனக் கேலியான குரலில் கேட்டபடியே தெற்கே கையை காட்டினான்.

காரிலிருந்து கந்தசாமியின் மனைவியும் அவரது ஒரே மகளும் பரிகாரம் செய்யச் சொல்லி அழைத்து வந்த ஜோசியரும் இறங்கினார்கள்.  ஜோசியர் அவிழ்ந்த வேஷ்டியை இறுக்கிக் கட்டியபடியே சொன்னார்.

ரொம்ப பவர்புல்லா குளம் சார். எல்லா தோஷமும் போயிடும்.

கந்தசாமி தலையாட்டியபடியே தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

கந்தசாமிக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தோல் நோய் பீடித்திருந்தது. செய்து வந்த வணிகமும் எதிர்பாராமல் நஷ்டமானது. கட்டிக் கொடுத்த மகள் வீட்டிலும் பிரச்சனை. இது போதாது என்று நீதி மன்றத்தில் நடந்து வந்த பழைய வழக்கு ஒன்றிலும் அவர் தோற்றுப்போனார்.  பரமபதக் கட்டத்தில் பாம்பு தன்னை கிழே இறக்கிவிடுவதாக உணர்ந்தார். கோவில்கள். பூஜைகள் பரிகாரங்கள் என்று எதையெதையோ செய்து வந்தார். எதிலும் நலமடையவில்லை. அப்போது தான் வேணாங்குளம் பற்றி சொன்ன ஜோசியர் அங்கே தோஷம் நீங்க வேணாட்டு மன்னரே குளித்துப் போனதாக கதை சொன்னார். கந்தசாமிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேணாங்குளத்திற்கு போய் வர ஒத்துக் கொண்டார்.

சிறிய கிராமம். சிவப்பு நாழி ஒடு வேய்ந்த வீடுகள். சற்றே அகலமான தெரு. ஆனால் ஆள் நடமாட்டமேயில்லை. சில வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. அவர்கள் வேணாங்குளத்திற்குப் போன போது காய்ந்து உலர்ந்து போயிருந்தது. படிகட்டுகள் தூசிபடிந்திருந்தன. குளத்தின் நான்கு பக்கமும் நான்கு பதுமைகள்.

இது தான் வேணாங்குளமா என்ற சந்தேகத்தில் அருகில் விறகு பிளந்து கொண்டிருந்த ஒருவரிடம் இது தான் பரிகாரக் குளமா எனக்கேட்டார். ஆமாம் என தலையாட்டியபடியே அவர் தனது வேலையை தொடர்ந்தார்.

கந்தசாமி தனது மகளும் மனைவியும் வரட்டும் என தூர்ந்து போயிருந்த குளத்தின் படியில் நின்றபடியே இருந்தார். குளம் வற்றிப் போனது அறியாமல் வந்துவிட்டோமோ., ஜோசியர் இதைக் கூடவா விசாரிக்காமல் இருப்பார் என்று கோபமாக வந்தது.

ஜோசியரும் அவரது மனைவி மகளும் வேணாங்குளத்தருகே வந்தார்கள்.

குளத்தில் கிழிந்த துணிகளும் உலர்ந்த இலைகளும் பிளாஸ்டிக் குப்பைகளுமாக கிடந்தன. கந்தசாமி குளத்தில தண்ணியே இல்லையே என ஜோசியரிடம் கேட்டார்.

பல வருஷமா காய்ந்து போய் தான் கிடக்கு. உள்ளே இறங்கி தண்ணி இருக்கிறதா நினைச்சிகிட்டு தலையை நனைச்சிட்டு வாங்க என்றார்.

தண்ணியில்லாம எப்படிய்யா குளிக்கிறது என கந்தசாமி கோபத்துடன் கேட்டார். செய்த பாவம் என்ன கண்ணுல தெரியவா செய்யுது. மனசு அதை உணரலே. அப்படி தான் பரிகாரமும். இந்த குளத்துல கண்ணுக்கு தெரியாத தண்ணீர் இருக்கு. அதை உணர்ந்து குளிச்சா தோஷம் போயிடும். நம்பிக்கை தானே எல்லாமும்.

கந்தசாமி காய்ந்து போன குளத்தினுள் இறங்கினார். பத்து இருபது படிக்ள் கொண்டதாக தோன்றிய குளத்தினுள் இறங்க இறங்க படிகள் கீழே போய்க் கொண்டேயிருந்தன.

ஒற்றை ஆளாக அவர் இறங்கிக் கொண்டேயிருந்தார். எவ்வளவு நேரம் இறங்கினார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் நிமிர்ந்து பார்த்த போது பெரும்பாதாளம் ஒன்றினுள் இறங்கி நிற்பது போல தோன்றியது. இன்னமும் குளத்தின் அடிப்புறம் வரவில்லை. படிகள் கிழே போய்க் கொண்டேயிருந்தன.

என்ன விந்தையிது. சிறிய குளம் எப்படி இவ்வளவு பெரிதாக மாறியது எனக் குழப்பம் வந்தது. மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஒன்று கூடின. கூட்டு வணிகம் செய்த போது அண்ணனை ஏமாற்றியது, நம்பிக் கொடுத்து வைக்கப்பட்ட பணத்தை மோசடி செய்தது என அவரது பழைய பாவங்கள் யாவும் நினைவுகளாக வந்து போயின.

சொந்த சகோதரனை ஏமாற்றிய ஒருவன் எப்படி வீழ்ச்சி அடையாமல் இருப்பான். திடீரெனை அண்ணன் முகம் மனதில் வந்து போனது.

தான் தவறே செய்யவில்லை என்பது போல இத்தனை நாட்களாக பாவனை செய்து வந்தது அந்த நிமிசத்தில் மனதில் உறுத்த ஆரம்பித்தது.

மறைத்துக் கொள்ளும் போது தவறுகள் எடையற்றிருக்கின்றன. உணரத்துவங்கியதும் தவறின்  எடை மிகுந்துவிடுகிறது என கந்தசாமிக்குப் பட்டது

தான் மனசாட்சியின் படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருக்கிறோம் என்று தாமோதரனுக்குப் புரிந்தது.

செய்த பாவத்திலிருந்து விடுபடுவதற்கு ஏமாற்றிய அண்ணன் குடும்பத்திற்கு உரியதை கொடுத்து விடவேண்டும் என்று மனதில் பட்டது.

அந்த நினைப்பு வந்தவுடன்  திடீரென கால்களில் தண்ணீர் படுவது போல உணர்ச்சி எழுந்தது. அவர் நின்றிருந்த படி தண்ணீரினுள் இருப்பது போல உணர்ந்தார். குனிந்து தண்ணீரை அள்ளித் தலையில் தெளிப்பது போல பாவனை செய்தார்.

“படியில் நின்னுகிட்டு அப்படி என்ன யோசனை“ என மனைவி சப்தமாக கேட்டதும் அவருக்கு தன் உணர்வு வந்தது.

குளத்தின் ஆழத்திற்கு இறங்கவேயில்லையா. மனம் தான் அப்படி கற்பனை செய்து கொண்டதா என குளத்தை உற்றுப் பார்த்தார். காய்ந்த படிக்கட்டுகள். நீரற்ற குளம்.

அந்தக் குளம் மனசாட்சியை விழிப்படையச் செய்கிறது. செய்த குற்றங்களின் ஈரத்தை உணரவைக்கிறது. உண்மையில் அது மாயக்குளமே தான்.

அவர் குளித்து முடித்தது போல பாவனை செய்தபடியே குளத்திலிருந்து வெளியே வந்தார்

“மனசில எதையாவது நினைச்சிட்டு காசை குளத்துல போடுங்க“ என்றார் ஜோசியர்

பையிலிருந்த சில்லறைகளை எடுத்து அண்ணன் குடும்பத்திற்கு உரியதை கொடுத்துவிடுகிறேன் என நினைத்தபடியே குளத்தில் வீசி எறிந்தார்

குளத்திலிருந்த பதுமையின் பார்வை அவரைக் கேலியாகச் சிரிப்பது போலிருந்தது

••

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: