இக்யூவின் காதல்பாடல்கள்

ஜென் கவிஞர்கள் நாடோடிகளாக இருந்த காரணத்தால் அவர்கள் பயண வழியில் வேசைகளுடன் தங்கி இரவைக் கழித்துப் போவது இயல்பே, ஆனாலும் அந்த இன்பத்தைப் பற்றியோ பரத்தமை பற்றியே ஜென் கவிதைகளில் அதிகம் பாடப்படவேயில்லை,

இதில் ஒரேயொரு விதிவிலக்கு, இக்யூ ஸோஜன் ( Ikkyu) தன்னை Crazy Cloud”, என்று அழைத்துக் கொண்ட தனித்துவமிக்க ஜென்கவிஞர் இவர்.

வெளிப்படையாக பரத்தைகளோடு கூடி இருப்பதுடன் அவர்களை புகழ்ந்து பாடி, பாலின்பத்தை குறை கூறும் கள்ளத்துறவிகளையும் இக்யூ கேலி செய்கிறார்,

பௌத்த மடாலயங்களின் மீதான கடுமையான விமர்சனம், வெளிப்படையாக குடியை. பெண்களை புகழ்ந்து பேசுதல் ஆகிய இரண்டு எதிர்ப்பு குரல்கள் இக்யூவை ஒரு கலக்கார கவிஞராக்கியது,  இவரது கவிதைகளை dirty zen poems  என்றே வகைப்படுத்துகிறார்கள்

பரத்தை மனமற்றிருக்கிறாள்,

அவளது வாடிக்கையாளனோ

மனம் கொண்டிருக்கிறான்

என்ற இக்யூவின் கவிதைவரி  எளிமையானது போல தோற்றம் கொண்டிருந்தாலும் சில்வண்டு இடையுறாமல் அதிர்ந்து கொண்டிருப்பதைப் போல தனக்குள்ளாக பெரும் அதிர்வை உருவாக்கி கொண்டேயிருக்கிறது

பரத்தை தன் உடலின்பத்தை கொண்டாடுவதில்லை,  உடலுறவு என்பதை வெறும் புறநிகழ்வாக கொண்டு  தனது எண்ணங்களை அவளால் விலக்கி கொள்ள முடிகிறது, அது ஒரு ஜென்நிலை,

தன்னிலிருந்து விலகி நின்று தன்னைப்பார்க்கும் முறையது, அதை தான் பரத்தையர்கள் மேற்கொள்கிறார்கள், ஆகவே அவர்களுக்கு பாலின்பம் என்பது கிளர்ச்சி தரக்கூடிய ஒன்றில்லை,

மாறாக அவளைத்தேடி வரும் வாடிக்கையாளன் மிதமிஞ்சிய கற்பனையோடும், காம உந்துதலுடனும் வருகிறான், அவனது மனம்  காமத்தில் ஊறிக்கிடக்கிறது, அவன் பரத்தையை விடவும் தாழ்ந்தவன் ஆகிவிடுகிறான் என்கிறார் இக்யூ

மனமற்றிருத்தல் என்பது மனதைக் கட்டுபடுத்தும் செயலில்லை, அதை உபகரணமாக பயன்படுத்தாத நிலை, துறவிகளுக்குத் தியானத்தின் வழியே மனமற்றநிலையை அடையக் கற்றுத்தரப்படுகிறது, அந்த மனமற்றநிலையை வேசை தன்னியல்பாகப் பெற்றிருக்கிறாள், அவளுக்குள் இயங்குவதும் துறவின் ஒரு நிலையே,

அதே நேரம் அவளது வாடிக்கையாளன் சஞ்சலமும் தடுமாற்றமும் கொண்ட மனதோடு இருக்கிறான், அவனுக்குப் பரத்தையோடு உறவு கொள்ளும் போது குற்றவுணர்வும் இருக்கிறது, சந்தோஷமும் இருக்கிறது, அவன் காமத்தைப் பற்றிய எண்ணங்களையும் உடலுறவையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை,

ஒரு பரிகாசச்சொல்கூட அவனது காமத்தைத் தூண்டவே செய்கிறது, ஆகவே உடலை அறியும் போது அவன் மனம் உடலின் சங்கமத்தை விட மனது அதை எப்படித் தூய்கிறது என்பதிலே அதிக கவனம் கொள்கிறான், எனில் உடல் அவனுக்கு வெறும் கருவி மட்டுமே, அதனால் தான் பாலின்பத்தில் அவனுக்கு நிறைவு என்பதே வருவதேயில்லை,

இந்த மனமற்றநிலையைப் பற்றியே இக்யூ கவிதையில் குறிப்பிடுகிறார், பொதுவாக வேசைகளை தாழ்ந்த நிலையில்  சமூகம் ஒதுக்கி வைத்திருந்த நிலையில் அவளை ஒரு ஜென் துறவியின் நிலைக்கு மேம்படுத்திக் காட்டுகிறார் இக்யூ,

அவரது இன்னொரு கவிதையும் இதே மனமற்ற நிலையை தான் பேசுகிறது

முதலுமில்லை

முடிவுமில்லை

மனம் பிறக்கிறது

இறக்கிறது

வெறுமையினுள் வெறுமை

இருப்பது போல

இந்த பாடலில் மனம் பிறப்பதோ இறப்பதோயில்லை, அது வெறுமையை தான் உருவாக்குகிறது,  அந்த வெறுமை என்பது எளிமையான ஒன்றில்லை, மிக அரிதான ஒரு நிலை என்பதாக காட்டப்படுகிறது.

எனக்கு

யாருமில்லை

நான்

கூட

என்ற நகுலன் கவிதையில் ஒலிப்பதும்  இதே மனமற்ற நிலையின் குரல் தானே, இதை நகுலன் ஒரு புகாராக சொல்வதில்லை, மனவருத்தம் கொள்வதுமில்லை, மாறாக தன்மிதப்பு என்ற நிலைக்குப் போகிறார்

இருப்பதற்கென்று தான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்

என்ற அவரது இன்னொருகவிதையும் நினைவிற்கு வருகிறது,

இருப்பது இல்லாமல் போவது என்பது வெறும் தோற்றம்  மறைவு தொடர்பான பிரச்சனையில்லை, ஒவ்வொரு நிமிசமும் நாம் எதிர்கொள்ளும் முக்கியப்பிரச்சனை தோன்றுதல் மறைதலே,

நம் கண்ணிற்குத் தெரியாதவை பற்றி நமக்குப் பயம் அதிகமாக இருக்கிறது, கண்முன்னே இருப்பதோ சலிப்பு தருகிறது, எந்த பொருள் எப்போது கண்ணில் இருந்து உலகில் இருந்து மறைந்துபோகும் என்று தெரியாத பதைபதைப்பு மனிதனை வாட்டி வதைத்தபடியே இருக்கிறது

ஆகவே தோன்றுதலும் மறைதலும் பற்றி ஜென்  ஆழ்ந்து பேசுகிறது, அதன் விந்தைகளை விசித்திரத்தை கேளிக்கையை நமக்கு அடையாளம் காட்டுகிறது

அப்படித்தானிருக்கும் உலகம் என்று சாசுவதப்படுத்துகிறது,

திரும்பவும் ஒரு நகுலனின் கவிதை இந்த அனுபவத்திற்கு நெருக்கமானதாக மனதிற்கு வருகிறது, நகுலன் ஒரு ஜென் கவியே, தமிழில் எழுதும் ஜென் கவி என்று சொல்வேன்,

அலைகளைச் சொல்லி

பிரயோஜனமில்லை

கடல் இருக்கிற வரை

இந்த கடலும் அலையும் காண் உலகை குறிப்பதில்லை, மனதின் இயக்கத்தை தானே குறிக்கின்றன,மனதை ஏன் ஜென் கவிஞர்கள் இவ்வளவு முக்கியத்துவப்படுத்துகிறார்கள், காரணம் மனம் குறித்த விஞ்ஞானப்பார்வைகள் அதை மாபெரும் இயங்குசக்தியாக அறிந்து சொல்வதற்கு முன்பாகவே அவர்கள் மனதை நுட்பமாக ணர்ந்திருந்தார்கள்,

மனத்தூய்மை மற்றும் மனதை செலுத்தும் வழி பற்றியே ஜென் அதிகம் பேசுகிறது

மனம் எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கிறது, இல்லை மனம் சலனமற்றே இருக்கிறது நிகழ்வுகள் அதை சலனப்படுத்துகின்றன என்ற இரண்டு எதிர்மறைகளை ஜென் ஆராய்கிறது, மனதை விதவிதமான குறியீடுகளில் உவமைகளில் உருவகங்களில் ஜென் கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன, ஒருவகையில் ஜென் கவிதைகளை வாசித்தல் என்பது தியான முறைகளில் ஒன்று தான்,

மரபான ஜென்கவிஞர்கள் பௌத்த சங்கங்களின் அதிகாரத்தை விமர்சிப்பதில்லை, மூத்த துறவிகளின் அறிவுரைகளை அப்படியே எடுத்துக் கொள்வதே வழக்கம்

ஆனால் இக்யூ இவற்றை கேள்வி கேட்பதோடு பௌத்த துறவிகளின் சங்கம் அதிகாரப்போட்டியிலும் குடிபோதையிலும் உழன்றபடியே வெளிஉலகிற்கு பரிசுத்தமானது போல தன்னை காட்டிக் கொள்கிறது என்று நேரடியாக விமர்சிக்கிறார், இந்த எதிர்ப்புக்குரல் ஜென்கவிதைகளில் தனித்த ஒன்றாகவே ஒலிக்கிறது

ஒருமுறை இக்யூ இடுப்பில் ஒரு வாளோடு சாலையில் நடந்து போகிறார், எதிரே வரும் ஒரு அறிஞர் உன்னை போன்ற துறவிகள் வாளை வைத்துக் கொள்வது அனுமதிக்கபடாத்து, எதற்காக கையில் வாளோடு பயணம் செய்கிறாய் என்று கேட்க, இக்யூ தனது வாளை உடையில் இருந்து வெளியே எடுத்து காட்டினால் அது அட்டை கத்தி,

இக்யூ சிரிப்போடு சொன்னார்

இப்படித்தான் பிக்குகள் வெளியே துறவி போலவும் உள்ளே அட்டைக்கத்தி போல பிரயோசனமில்லாமலும் இருக்கிறார்கள் ,

இக்யூவின் கலக்குரலுக்கு அன்றைய பௌத்தசபை கடுமையான எதிர்ப்பை தெரிவித்த்து, அவரை குடிகாரன் பெண்மோகி என்று ஒதுக்கிவைத்தார்கள், ஆனால் பௌத்த துறவிகளின் கள்ளத்தனத்தை வெளிப்படியாக விமர்சித்த அடித்தட்டு மக்கள் இக்யூவின் குரல் தங்களுடையது என்று அங்கீகாரம் செய்தார்கள்,

கியாட்டோ கோவிலின் தலைமை துறவியாக இருந்த இக்யூ அங்கு நடைபெறும் முறைகேடுகளை கண்டு ஒருவார காலத்தில் அதிலிருந்து வெளியேறினார் என்கிறது வரலாறு.

வெற்றி, பணம், மோசமான புகழுரைகள்

நான் விரல் சூப்பியபடியே

தனியே சும்மா அமர்ந்திருக்கிறேன்

என அதைப்பற்றி குறிப்பிடும் இக்யூ துறவிகளுக்கு பெயரும் புகழும் பெற வேண்டும் என்ற பசி அனலாய் கொதித்துக் கொண்டிருக்கிறது , அதற்கு தன்னால் தீனி போட முடியாது என்கிறார், இதன் காரணமாகவே இக்யூ அடிநிலை மக்களோடு ஒன்று கலந்து வாழ ஆரம்பித்தார்

குறிப்பாக மீனவர்களுடன் அவருக்கு நல்ல உறவு இருந்த்து, நிறைய படித்து அறிவை வளர்த்துக் கொண்டவர்களின் மனதால் மீனவனின் எளிமையான கடற்பாடலை ரசிக்க முடியாது, உண்மையில் மீனவனின் பாடலின் முன்பாக அறிவாளியின் கவிதைகள் அர்த்தமற்றது என்று ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இக்யூ,

மீனவர்களோடு படகில் ஏறியபடியே ஹொய்சா ஆற்றின் நீரலைகளையும் இரவில் ஆகாசத்தில் ஒளிரும் நிலவையும், மேகங்களையும் ரசிப்பது அவரது இயல்பு, அந்த காட்சிகளை தனது கவிதையில் நிறைய பதிவு செய்திருக்கிறார் இக்யூ

சித்திரயெழுத்து வரைவதில் இக்யூ மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார், சித்திர எழுத்துகளும் ஒருவிதமான கவிதைகளே, அவை காட்சி வடிவக்கவிதைகள் என்கிறார் இக்யூ

காமத்தையும் குடியையும் பற்றி தொடர்ந்து கவிதைகள் எழுதிய இக்யூ

இதை சிவப்புநூல் வகை  இலக்கியம் என்று தனித்து அடையாளப்படுத்துகிறார், சிவப்பு நூலிழை என்பது காமத்தின் குறியீடாகும்

எட்டங்குல நீளமானது, உறுதியானது

எனக்கு விருப்பமான பொருளது

தனித்திருக்கும் இரவில்

அதை நான் முழுமையாகத் தடவிக் கொள்கிறேன்

வெகுகாலமாயிற்று

அதை ஒரு அழகான பெண் தொட்டறிந்து

என் கோமணத்திற்குள்ளிருக்கிறது

ஒரு முழுப்பிரபஞ்சம்

என்ற கவிதையின் வரும் கேலியும் பெண்உறவறியாத காமத்தின் தவிப்பும் முக்கியமானவை , இவ்வளவு வெளிப்படையாக பாலின்பம் பற்றி ஜென் கவிதை பாடுவதில்லை,

இக்யூ அதை மீறியே தனது கவிதையை எழுதிப்போகிறார், உடலற்ற தனியிருப்பை மட்டுமே ஜென் கவனப்படுத்திய சூழலில் ஆணுறுப்பு பற்றி கூட கவிதை எழுத முடியும் என்று காட்டியவர் இக்யூ

தன்னோடு பௌத்த மடாலயத்தில் உடனிருந்து பின்பு தனது சதிவேலைகளால் மடாலயத்தின் முக்கிய பெறுப்புக்கு வந்த யசோ என்ற துறவியை பற்றி மிக மோசமான வசைகளில் பாடுகிறார் இக்யூ, இவரது கவிதைகளில் மட்டுமே தனிமனிதனைச்சுட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன, யசோவின் மீதான இக்யூவின் கோபம் அவரது கவிதைகளில் பீறிடுகின்றது,

ஜென் தரிசன நிலையை அடைந்த ஒருவன் இப்படி கோபத்தை காட்டக்கூடாது என்று கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார் இக்யூ, ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை,

வெறுப்பும் அன்பை போல  எந்த ஒளிவுமறைவுமற்று வெளிக்காட்டப்படவேண்டிய ஒரு உணர்ச்சியே என்று இக்யூ ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்,

அது கசடு வெளியாவதை போல நம் மனதை தூய்மையாக்கவே செய்யப்படுகிறது என்கிறார்,

Do Something  என்ற வாசகம் உலகையே  உத்வேகத்துடன் இயக்கிவந்த சூழலில் லாவோட்சேயின் Do nothing என்ற கருத்து புதிய தத்துவ கண்ணோட்டத்தை உருவாக்கியது, லாவோட்சே குறிப்பிடும் nothing எளிமையான ஒன்றில்லை, அப்படி ஒன்றும் செய்யாமலிருப்பதும் எளிதானதில்லை, சும்மா இருத்தல்  என்று நாம் சொல்வதற்கு இணையானது,  இதை தவறாக நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள்க்கூடாது,  இந்த எதுவுமற்று இருப்பதை ஜென் கவிதைகள் ஆழமாக வலியுறுத்துகின்றன

நேற்றைய தெளிவு என்பது

இன்றைய முட்டாள்தனம்

என்ற இக்யூவின் வரிக்குள் ஒலிப்பது இந்த எண்ணமே

மழை பெய்வதாயின்

பெய்யட்டும்

காற்று வீசுவதாயின்

வீசட்டும்

என்ற அவரது கவிதை வரி

எந்த ஒன்றையும் அனுமதியுங்கள், அது குறித்து முடிவு செய்வதை விட, அதை பற்றிய கற்பனைகள். பயங்களை விட நேரடியாக அதை அனுமதிப்பதே முதன்மையானது என்பதையே சுட்டிக்காட்டுகிறது

மலை உச்சிக்கு

செல்வதிற்கு நிறைய பாதைகளிருக்கின்றன

ஆனால் முகட்டில்

நாம் அனைவரும் காண்பது

பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும்

ஒரேயொரு நிலவை தான்

என்ற இக்யூவின் கவிதை சுட்டுவது மனதின் உன்னதநிலையை, அங்கே ஒளிர்தலும் ஒருமையுமேயிருக்கிறது, வழிகள் உச்சியை நேர்க்கிச் செல்லும் அடையாளங்கள் மட்டுமே,  அதன்வழியே நாம் அடைவது எல்லையில்லாத பிரகாச்ம், அதை  உணர்த்துவது தான் பௌத்தம் ஞானம், உச்சியில் நாம் முடிவின்மைய காண்கிறோம், முடிவின்மையின் அடையாளம்  போலவே நிலவு இருக்கிறது, புத்தன் முழுநிலவைப்போல ஒளிர்கிறான், அவனிடம் பேதமேயில்லை என்று தான் பௌத்தம் கூறுகிறது,

வேட்கையின் முன்னால் தன்மை முழுமையான சமர்பணம் செய்து கொள்வதும் பௌத்த வழிமுறைகளில் ஒன்று தான்,  வேட்கைகளை அடக்கச் சொல்வதில்லை ஜென் மார்க்கம்,  வேட்கை என்பது மனதின் விசித்திரம், அதை அடக்கவோ விலக்கவோ வேண்டியதில்லை  கடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்கிறார் இக்யூ

ஜென்னை பரிசுத்தமான களங்கமேயில்லாத ஒன்றாக கருதவேண்டாம், அதற்குள்ளும் எதிர்நிலைகள் இருக்கின்றன, ஜென்னிற்கு நல்லது கெட்டது என்றோ. செய்யக்கூடியது, கூடாத்து என்றோ எதுவுமில்லை, ஆகவே ஜென்னை புனிதப்படுத்துவது என்பது கூட ஜென்னிற்கு எதிரான ஒன்றே என்ற இக்யூ பரத்தைகளுடன் விடுதியில் தங்கியபடியே குடித்து கவிதைகள் பாடி மகிழ்ந்திருக்கிறார்,

அதை பௌத்த சங்கங்கள் கண்டித்த்தோடு அவரது கவிதைகளை பொதுஅரங்கில் வாசிக்கவும் தடைசெய்தார்கள்,

ஒவ்வொரு ஜென் கவியும் ஒரு பொருளை தனது விழிப்புணர்வு தரிசனத்தின் அடையாளமாக கொள்கிறார்கள், இக்யூ காகத்தை தனது விழிப்புணர்வின் அடையாளமாக கொள்கிறார், வாயில்லாத  காகம் என்ற குறியீடு அவருடையது, தன்னை பார்த்து சிரிக்கும் காகத்தை கண்டே தனது முதல்விழிப்புணர்வு ஏற்பட்டது என்று சொல்லும் இக்யூ காகம் குறித்து சில முக்கியமான விதைகளை எழுதியிருக்கிறார், அதில் காகம் தூக்கி எறியப்படும் வீணான உணவுகளை உண்ணும் போதும் விழிப்புணர்வு பெற்ற ஒன்றாக இருப்பதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது

நாம் உண்கிறோம்  கழிக்கிறோம்

உறங்குகிறோம் விழித்தெழுகிறோம்

இதுதான் நம்உலகம்

இதன்பின்நான் செய்யவேண்டியெதெல்லாம்

சாவது மட்டுமே

என்ற இக்யூவின்  கவிதை வாழ்வின் அர்த்தமின்மையை கத்திவீசுவது போல வெட்டிக்காட்டுகிறது, விழிப்புணர்வே இல்லாமல் நாம் ஒன்று போல செய்த காரியத்தையே திரும்ப திரும்ப செய்வது வருவதையே கவிதை சுட்டிக்காட்டுகிறது,

இக்யூ குறிப்பிடும் சாவு மனித இறப்பை குறிப்பது அல்ல, மாறாக பழக்கங்களில் நாம் மேற்கொண்டு வரும் நடைமுறைகளில் இருந்து விடுபடுவதை என்றும் புரிந்து கொள்ளலாம், அது தன்னியல்பாக நடக்க வேண்டிய ஒன்று என்றும் இக்யூ சுட்டிக்காட்டுகிறார், அதற்காக நாம் அறிந்தவற்றிலிருந்து விடுபட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதே அவரது எண்ணம்

அந்த கல்லான புத்தன்

பறவை எச்சத்தை நன்றாக

அனுபவிக்கட்டும்

நான் என் மெலிந்த கைகளை வீசுகிறேன்

நீண்ட மலரொன்று

காற்றில் அசைவதைப் போல

என்ற இக்யூவின் குரலில் உறைந்து சம்பிரதமாகிப்போன பௌத்த நெறிமுறைகள் கைவிடப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் நீண்ட மலரொன்று காற்றில் அசைவதைப் போல தன்னியல்பாக தான் முன்நகர்ந்து போய்க் கொண்டிருப்பதின் ஆனந்தமும் பதிவாகியிருக்கிறது

நீண்ட மலரொன்று காற்றில் அசைவதை போன்ற என்ற உவமை அற்புதமான ஒன்று, அது சட்டென கவிதையினுள்ளிருந்து உயர்வான ஒரு மனக்காட்சியை உருவாக்கிவிடுகிறது

மனிதனேயில்லாத பிரபஞ்சம் போன்றிருந்த ஜென் கவிதையுலகை மனிதன் அன்றாட இச்சைகள் அழிக்கழிப்புகள் நெருக்கடிகளுடனே ஜென்னை அடைய முடியும் என்று தனது கவிதைகளின் வழியே பௌத்த தரிசனத்தை அறிமுகப்படுத்தியவர் இக்யூ, அதற்காகவே அவர் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறார்

••

0Shares
0