ஃபிலிப் லார்கின்

சொல்வனம் டிசம்பர் இதழில் கவிஞர் ஃபிலிப் லார்கின் பற்றி மிகச்சிறப்பான கட்டுரை ஒன்றை நம்பி எழுதியிருக்கிறார்

ஃபிலிப் லார்கின்: கவிதைகளை வாசித்திருக்கிறேன். Kingsley Amis உடனான அவரது நட்பு மற்றும் அவருக்கு எழுதிய கடிதங்களைப் படித்திருக்கிறேன். A Girl in Winter என்ற அவரது நாவல் நூலகத்தில் பணியாற்றும் கேதரின் வாழ்க்கையில் பனிரெண்டு மணிநேரங்களை விவரிக்கக்கூடியது.

லார்கினின் நேர்காணல் ஒன்றில் உங்களைப் போலவே நூலகராக வேலை செய்தவர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் என்று கேள்விகேட்பவர் சொல்லும் போது லார்கின் யார் போர்ஹெஸ் என்று கேட்கிறார். அந்தப் பதிலை என்னால் மறக்கமுடியாது. லார்கின் உரைநடையும் கவித்துவமானது.

நான் அறிந்தவரை லார்கின் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதற்கட்டுரை இதுவே. லார்க்கின் கவிதையுலகை அறிந்து கொள்வதுடன் நம்பியின் கவிதை வாசிப்பு மற்றும் புரிதலின் ஆழத்தையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

நம்பியின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கும் போது அவர் தன் கட்டுரைகளை ஒரு இசைக்கோர்வை போல உருவாக்குவதாக உணருகிறேன். காரணம் அது மையப்பொருளைச் சுற்றி மூன்று நான்கு இழைகளை ஒன்றிணைக்கிறது. சஞ்சரித்தலை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. கடினமான விஷயங்களை மிக எளிமையாகவும், எளிமையான விஷயங்களை ஆச்சரியமாகவும் மாற்றுகிறது.

ஒளியின் மீது நம்பிக்கு உள்ள விருப்பம் அவரது கட்டுரைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது. அது போலவே கவித்துவமான வெளிப்பாட்டின் ஊடாகப் பேச்சுவழக்கில் மொழிதலையும் அவரது கட்டுரைகளில் காணமுடிகிறது.

நம்பி எதிலும் ஒரு இயக்கத்தை விரும்புகிறார். இறுக்கமான விஷயங்களை நோக்கிச் செல்கிறார். இரண்டு குரல்கள் கொண்டதாகவே அவரது கட்டுரைகள் காணப்படுகின்றன. ஒரு குரல் படைப்பின் நுட்பங்களை ஆழ்ந்து வெளிப்படுத்துகிறது. மற்றொரு குரல் நடப்பு வாழ்வின். நிகழ்வின், சுய அனுபவங்களிலிருந்து வெளிப்படும் குரல். இந்தக் குரல் பல நேரங்களில் பரிகாசம் போல ஒலிக்கிறது. அல்லது வியப்படைகிறது. தன்னைச் சிறியோனாகக் கருதுகிறது.

ஆனால் படைப்பின் நுட்பத்தைப் பற்றிப் பேசும் குரலோ அபூர்வமான தருணங்களை, நிகழ்வுகளை ஒரு கண்டுபிடிப்பு போல ஆராய்ந்து முன்வைக்கிறது. இது போலவே நம்பியின் கட்டுரை இரு வேறு வயதுடையவர்கள் எழுதியது போலவும் எனக்குத் தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட வாசிப்பாகக் கூட இருக்கலாம்.

“The bottle is drunk out by one;

At two, the book is shut;

At three, the lovers lie apart,

Love and its commerce done;

And now the luminous watch-hands

Show after four o’clock,

Time of night when straying winds

Trouble the dark”

“ஒரு மணிக்குள் பாட்டில் பருகித் தீர்க்கப்படுகிறது;

இரண்டு மணிக்குப் புத்தகம் மூடி வைக்கப்படுகிறது;

மூன்று மணிக்கு, காதலர்கள் விலகிப் படுத்திருக்கிறார்கள்;

காதலும் அதன் கொள்ளல் கொடுத்தல்களும் ஆயிற்று;

ஒளிரும் கடிகாரக் கரங்கள் இப்போது

மணி நான்கு கடந்ததைக் காட்டுகின்றன,

இருளைத் தடுமாறச் செய்யும் தடம் புரள் காற்று

வீசி வரும் இரவின் அந்நேரம்”

என லார்க்கின் கவிதை ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தக் கவிதையில் Love and its commerce done; என்ற வரிக்குக் காதலும் அதன் கொள்ளல் கொடுத்தல்களும் ஆயிற்று; என மொழியாக்கம் செய்திருப்பது சிறப்பு.

எவ்வளவு அழகான வார்த்தைகள். கொள்ளல் கொடுத்தல் என்பதை இப்படி ஒரு இடத்தில் பயன்படுத்துவது அவரது தனித்துவம்.

இது போலவே Time of night when straying winds என்பதற்கு இருளைத் தடுமாறச் செய்யும் தடம் புரள் காற்று என மொழியாக்கம் செய்திருப்பது அசல் கவிதை வரி போலவே மாற்றுகிறது.

லார்கின் கவிதைகளை மட்டுமில்லை. நம்பியின் இந்தக் கட்டுரையினையும் புரிதலின் உன்னதம் என்றே சொல்வேன்

•••

0Shares
0