நூறுவருடங்களுக்கு முன்பான பழைய புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டவை இவை.
**
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள்
காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்)
* காலை 4.00 – 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி, நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை. * காலை 6.00 – 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோகினி, சுத்த தனயாசி. * காலை 8.00 – 10.00 தன்யாசி, அசாவேரி, சாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோகரி. * காலை 10.00 – 12.00 சுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன சாரங்கா, தர்பார். * பகல் 12.00 – 2.00 சுத்த பங்காளா, பூர்ண சந்திரிகா, கோகில திலகம், முகாரி, கெளடமல்லார். * பகல் 2.00 – 4.00 நாட்டைக்குறிஞ்சி, உசேனி, ரவிச்சந்திரிகா, வர்த்தனி, அம்சாநந்தி, மந்தாரி. * மாலை 4.00 – 6.00 பூர்வி கல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரசுவதி, சீலாங்கி, கல்யாணி. * மாலை 6.00 – 8.00 சங்கராபரணம், பைரவி, கரகரப்பிரியா, பைரவம், நாராயணி, அம்சதுவனி. கெளளை. * இரவு 8.00 – 10.00 காம்போதி, சண்முகப்பிரியா, தோடி, நடபைரவி, அரிகாம்போதி, கமாசு, ரஞ்சனி. * இரவு 10.00 – 12.00 சிம்மேந்திர மத்யமம், சாருகேசி, கீரவாணி, ரீதி கெளளை, ஆனந்தபைரவி, நீலாம்பரி, யதுகலகாம்போதி. * இரவு 12.00 – 2.00 அடாணா, கேதார கெளளை, பியாகடை, சாமா, வராளி, தர்மவதி. * இரவு 2.00 – 4.00 ஏமாவதி, இந்தோளம், கர்நாடக தேவகாந்தாரி, தசாவளி, பாகேசுவரி, மோகனம்.
விழாக்காலவீதிஉலாக்களில்கோயில்உள்ளும்வெளியிலும்இசைக்கவேண்டியமுறைகள்
* மண்டகப்படி தீபாராதனை.
1. தளிகை எடுத்துவர – மிஸ்ர மல்லாரி
2. தீபாரதனை நேரம் – தேவாரம், திருப்புகழ். * புறப்பாடு
1. புறப்பாடு முன் – நாட்டை
2. புறப்பாடு ஆனதும் – யாகசாலைவரை – திருபுடைதாள மன்னியில் மற்ற தாளங்களில் மல்லரிகள். * யாகசாலை தீபாராதனை நேரம் – ஒத்து, நாதசுரம், மிருதங்கம் மாத்திரம். * யாகசாலை முதல் கோபுரவாசல் வரை – திருபுடைதாள மல்லரி. * கோபுரவாசல் முதல் தேரடிவரை – இதர மல்லரிகளும் வர்ணமும். * தேரடியிலிருந்து தெற்குரதவீதி பாதி வரை – ராகம். * தெற்குரதவீதி பாதி முதல் மேலரதவீதி பாதி வரை – ராகம், பல்லவி. * மேலைரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை – கிர்த்தனைகள். * ஈசான்ய மூலை முதல் தேரடி வரை – தேவாரம், திருப்புகழ். * தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை – நட்டுமுட்டு, சின்னமேளம் ( அல்லது முகவீணை ) * கோயிலுக்குள் – துரிதகால திரிபுடைதாள மல்லரிகள். * தட்டு சுற்று நேரம் – தேவாரம், திருப்புகழ். * எதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது – எச்சரிக்கை.
இன்றுள்ள கோவில்களில் பெரும்பாலும் மின்சாரத்தில் தானாக இயங்கும் நாதஸ்வரம் பொருத்தபட்டிருக்கிறது. நாதஸ்வரம் வாசிப்பவர்களை திருமண விழாக்களில் காண்பது கூட அரிதாகிவிட்டது. இதை வாசிக்கும் போது கோவிலில் எவ்வளவு விஸ்தாரமான இசையொழுங்கு செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதை எதற்காக நாம் தவறவிட்டோம் என்று தான் புரியவேயில்லை.
**மஹாபலிபுரம் போவது எப்படி
சென்னையிலிருந்து தெற்கே செல்லுகின்ற இருப்புபாதை வழியாக செங்கற்பட்டு சென்றால் ஒன்பது மைல் துரத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் என்ற திவ்விய சேத்திரத்தை ஐட்கா வண்டிகள் மூலமாக சென்று அடையலாம். அவ்விடத்திலிருந்து ஒன்பது மைல் மேற்பட்டி ஜெட்காவிலேயே சென்றால் சரித்திர சம்பந்தம் உள்ள மஹாபலிபுரத்தை அடையலாம்.
இதற்கு சென்னையிலிருந்து செல்ல படகு வசதியும் உண்டு. பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக படகுகளில் செல்லலாம். இக்கால்வாயில் தண்ணீர் குறைவாக இருக்கும் என்பதால் படகுகள் தங்கு தடையின்றி செல்லமுடியாது. படகுகாரர்கள் அதிக வாடகை கேட்பது வேறு சிரமம்.
திருக்கழுகுன்றம் வழியாக ஜெட்காவில் செல்வதே உத்தமம். ஆனால் எட்டுமைல் தொலைவின் முன்பாக இறங்கி சமுத்திரத்தண்ணீரில் முழுகி சுமார் இரண்டு பர்லாங் தூரமுள்ள சேற்று நீரில் நடந்து செல்லவேண்டும். பிறகு பக்கிங்ஹாம் கால்வாயை தாண்ட வேண்டும். இவைகளை கடந்து அரை மைல் தூரம் நடந்து சென்றால் மஹாபலிபுரம் என்ற சிற்றூரை அடையலாம்.
இங்கே எருமை பன்னி முதலிய கால்நடைகளை வைத்து கொண்டு வாழ்கின்ற குடியானவர்கள் வசிக்கிறார்கள். நூறு வீடுகளுக்கு மேல் இல்லை. ஆறு பிராமணர்களுடைய வீடுகள் காணப்படுகின்றன. சில வீடுகள் எப்போதும் காலியாகவே இருக்கின்றன. இது சிற்ப சாஸ்திரத்திற்கு பெயர் போன ஊர் என்று அறியப்படுகிறது.
– நடேச சாஸ்திரியின் விவேகசிந்தாமணி. 1894 ஆண்டு.
***
கர்னாடக புகைவண்டி சிந்து
தென்னிந்திய ரயில்வே துவங்கப்பட்ட நாட்களில் ஆட்கள் அதில் பயணம் செய்ய தயங்கியாதல் ரயில்வே நிலையங்களில் ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் நடத்தபட்டிருக்கிறன. அது போலவே பயணிகளை சந்தோஷப்படுத்த ரயிலுக்குள்ளே கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்திருக்கின்றன. ரயிலை கொண்டாடி பாடப்பட்ட பாடல் இது.
தென்னிந்தியா ரெயில் பாரடி – பெண்ணே யிதுதெற்கே போகும் நேரடிசைதாப்பேட்டை ஸ்டேஷன் சார்ந்த பரங்கிமலைபயிலாகி ரெயில்வண்டி பார்மீதிலே போகும்பல்லாவரம் பாரு பக்கத்திலே வண்டலூருஎல்லாந்தங்கு கூடுவாஞ்சேரி யிதுபாருவிக்கிரவாண்டி விழுப்புரம் தாண்டிபக்கத்திலே பண்றொட்டி பண்புள்ள ஸ்டேஷனிதுநெல்லிக் குப்பமெனும் நேரான வூரிதுஅல்லல்கற்று திருப்பாதிரிப் புலியூரிதுபேடைமயிற் கண்ணாளே பிரியாதே செந்தேனேகூடலூர் ஸ்டேஷனை குறிப்பாக நீ பாருஆலப்பாக்க மிது அடுத்த பரங்கிபேட்டைகோலமுள்ள காயலார் குடிகளிலிருக்கிறார்–இப்படி ரயில் தூத்துக்குடி வரும்வரை உள்ள வழித்தடம் முழுமையாக ஒரே பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
**மதராஸ் டிராம்வே
இப்போது ஊர் கெட்டுக்கிடக்கிற கிடையில் டிராம்காரர்கள் கொஞ்சம் இருக்கிற ஸ்திதியைக் கவனித்து நடந்தால் நலமாகும். தினந்தோறும் காலை மாலைகளில் ஒரு வரையறையின்றி ஜனங்களை ஏற்றுகிறார்கள். இப்படி செய்வதினால் அசுத்தம் ஜாஸ்திபடுவதுடன் தொத்து வியாதியும் விருத்தியாக இடமாகும். ஆகையால் கூட்டம் அடையாமல் பார்க்க வேண்டும்
– சுதேசமித்திரன் உபதலையங்கம். 1898 ஆகஸ்ட் 27
**
சென்னையில் ஆகாய யாத்திரை
இந்தியாவெங்கும் பிரசித்தி பெற்ற ஸ்பென்சர் நமது சென்னைபுரிக்கு வந்து மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக்கூட்டின் துணையினாலே வரும்போது அதை விட்டு அதனோடு சேர்ந்தாற்போல மாட்டியிருந்த பாராசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக் கொண்டு தமக்கு சிறிதாயினும் அபாயமில்லாதபடி சேஷமமாக வந்திங்கினார். சற்றேறக்குறைய 3200 அடி உயரம் மட்டுந்தான் ஏறினார். இவர் இறங்கி வருகையில் இந்திரலோகத்திலிருந்து தேவ விமானம் வழியாக யாரோ தேவதை பூமிக்கு வந்திறங்குவது போலிருந்ததைக் கண்டு பல்லாயிரம் பிரஜைகள் அவருக்கு பல்லாண்டு பாடி ஆனந்தமடைந்தனர்.
–ஜனநாநந்தினி சென்னை 1891 மார்ச்.