கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது யாரும் எழுதுவதில்லை கர்னலுக்கு குறுநாவலில் சேவற்சண்டையைப் பற்றி எழுதியிருக்கிறார். அதில் வரும் கர்னல் மார்க்வெஸின் தாத்தா நிகோலாஸ் ரிக்கார்டோவின் மறுவடிவம் என்றொரு குறிப்பை வாசித்திருக்கிறேன். காளைச் சண்டையைப் பற்றி ஹெமிங்வே எழுதியதைப் போலச் சேவற்சண்டையைப் பற்றிச் சிறப்பாக எழுதியவர் மார்க்வெஸ்.

எனது பால்ய வயதில் எனது கிராமத்திலும். சுற்றியுள்ள ஊர்களிலும் சேவற்சண்டை நடப்பதைக் கண்டிருக்கிறேன். சண்டைச்சேவல்களை வளர்த்தவர்களையும் அறிவேன். சேவல் வளர்க்க விரும்பிய வசதியானவர்கள் அதனைக் கோவிந்தன் என்பவரின் பொறுப்பில் வளர்க்க விடுவதைக் கண்டிருக்கிறேன்.
கோவிந்தன் சேவலை கிணற்றில் நீந்தவிட்டுப் பயிற்சி தருவார். சேவலுக்கென விசேச உணவு தயாரித்துத் தருவார். அவர் தோளில் தான் சேவல் எப்போதுமிருக்கும்
சேவற்சண்டையில் புகழ்பெற்றவன் ஊமைத்துரை என்பார்கள். அவரது சேவல்களின் வீரம் பற்றிய பாடலைக் கூடப் பால்யத்தில் கேட்டிருக்கிறேன். மார்க்வெஸின் கதையை வாசித்த போது அது உள்ளூர் நிகழ்வையும் அது தொடர்பான மனிதர்களையும் நினைவுபடுத்தியது.

எங்கோ கொலம்பியாவில் நடைபெறும் அந்தக் கதையும் கரிசல் நிலத்திலுள்ள எனது ஊரின் நிகழ்வுகளும் வேறுவேறில்லை என்று உணர்ந்தேன்.
தனது துல்லியமான நினைவுகளின் வழியே மார்க்வெஸ் சேவற்சண்டையினைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
அந்தக் குறுநாவலில் சண்டைச்சேவலை சிறுவர்கள் வேடிக்கை பார்க்கும் காட்சியொன்று இடம்பெற்றுள்ளது.
அதில் சேவலைச் சமையலறைக்குள் கொண்டு சென்று கைப்பிடி சோளத்தை அதன் முன்னை போடுகிறார்கள் .வேலியில் இருந்த ஒரு துளை வழியாக ஒரு சிறார்கள் உள்ளே நுழைந்து சேவலைச் சுற்றி அமர்ந்து, அதனை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
அப்போது கர்னல் கோபித்துக் கொண்டு நீங்கள் இதனைத் தொடர்ந்து இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் சேவல் சோர்வடைந்துவிடும் என்கிறார்
இதே சொற்களை அப்படியே கோவிந்தன் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். சண்டைச் சேவலை வெளியாட்கள் கையால் தொடுவதையோ, தூக்குவதையோ அவர் விரும்ப மாட்டார். சேவலை எங்கே வைத்து சண்டைக்குப் பழக்குகிறார் என்பதும் ரகசியமாக இருக்கும். ஒவ்வொரு சேவலும் ஒரு அடிமுறையில் சிறப்பாக விளங்கும்.
துணையெழுத்தில் சேவற்சண்டை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். சண்டைச் சேவல் வளர்ப்பவர்கள் பற்றிக் கற்பனைச்சேவல் என்றொரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன். சண்டைச் சேவலை வளர்ப்பவர்களின் உலகம் பற்றி விரிவான நாவல் எழுத வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.

16ம் நூற்றாண்டில் ஸ்பானியர்களால் அறிமுகப்படுத்தபட்ட சேவற்சண்டை கொலம்பியாவில் மிகவும் புகழ்பெற்றது. அங்கே தற்போது பத்தாயிரம் சேவற்சண்டை களங்கள் இயங்கி வருகின்றன. பெரும் சூதாட்டமாகக் கருதப்படும் இந்த விளையாட்டு சார்ந்து ஐந்து லட்சம் பேர் இயங்குகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். ஆனால் தற்போது சேவற்சண்டையை நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டிருக்கிறது
சேவல்களை ஒன்றோடொன்று மோதவிடும் வழக்கம் தென்கிழக்கு ஆசியாவில் தோன்றி பாரசீகர்களால் கிரேக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்கிறார்கள். இடைக்காலத்தில் ஐரோப்பாவில் பரவியது. பண்டைய சிரியர்கள் சண்டைச் சேவலை தெய்வமாக வழிபட்டார்கள். சுமத்ராவில், சண்டைச் சேவலுக்கென ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
.ஜூலியஸ் சீசர் ரோமை சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபட வழிநடத்தினார். அவரே சேவல்களை வளர்த்துச் சண்டையில் ஈடுபடுத்தியிருக்கிறார். சேவற்சண்டை புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் மதகுருமார்கள் கூட இந்த விளையாட்டில் கலந்து கொண்டார்கள். தேவாலய வளாகங்கள் கூடச் சேவல் சண்டைக் களமாகப் பயன்படுத்தப்பட்டன.
சண்டைச் சேவலை அமெரிக்காவின் தேசிய சின்னமாக ஆக்கும் முயற்சி நடந்தது என்றும் அமெரிக்கக் கழுகிடம் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றது என்கிறார்கள்..
1835ல் அயர்லாந்திலும் பிரிட்டனிலும் சேவல் சண்டை தடை செய்யப்பட்டது. இந்தியாவிலும் 1960ல் சேவற்சண்டை தடை செய்யப்பட்டது. ஆயினும் இன்றும் தைப்பொங்கலை ஒட்டி கிராமப்புறங்களில் சேவற்சண்டை தொடர்ந்து நடந்து வரவே செய்கிறது.
இந்தக் குறுநாவலில் தனது சேவலை யாராலும் ஜெயிக்க முடியாது என்று கர்னல் நினைக்கிறார். கதையோட்டம் சேவற்சண்டையை மையம் கொண்டதில்லை. அது தனது ஓய்வூதியத்திற்காகக் காத்திருக்கும் கர்னலின் வாழ்க்கையைப் பேசுகிறது. அதே நேரம் அவரது விருப்பத்திற்குரிய சேவற்சண்டையைப் பற்றியதாகவும் எழுதப்பட்டிருக்கிறது
ஒன்பது மாதங்களுக்கு முன்பு, சேவல் சண்டை களத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது கர்னலின் மகன் அகஸ்டின் கொல்லப்படுகிறான். வயதான கர்னலின் தற்போதைய நிலை மிகவும் வறுமையானது. அவரது மனைவி கோப்பையில் கடைசிக் கரண்டி காபித்தூளைக் கொட்டி காபி தயாரிக்கிறார். தங்கள் வறுமையைப் பற்றிப் பக்கத்து வீட்டாருக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, கற்கள் நிரம்பிய ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்குகிறார்கள்
அகஸ்டினுக்கு சேவல் சண்டை மிகவும் பிடிக்கும் அவன் தனது விருப்பத்திற்குரிய சண்டைச் சேவலைப் பெற்றோரிடம் விட்டுச் செல்கிறான். கர்னலின் மனைவி அந்தச் சேவலை விற்கும்படி அவரை வற்புறுத்துகிறாள், ஆனால் கர்னல் அவள் பேச்சைக் கேட்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, அந்தச் சண்டைச் சேவல் மகனின் நினைவாக மட்டுமல்லாமல், வரவிருக்கும் சேவல் சண்டைகளில் பெரிய பரிசைப் பெறுவதற்கான கடைசி நம்பிக்கையாகவும் இருக்கிறது.
அவரது சேவல் பிய்ந்த கொண்டையும், வீங்கிய தோலும், வளைந்த கால்களும் கொண்டிருக்கிறது. கர்னலைப் போலவே அதுவும் போராடிக் கொண்டிருந்தது, ஆனாலும் அனைத்தையும் மீறி சண்டைக்குத் தயாராக இருந்தது
கர்னல் அந்தச் சேவலை விற்க வேண்டாம் என்று உறுதியாக முடிவு செய்து, தன் மனைவியிடம் தெரிவிக்கும் போது தன்னையும், சண்டையிடும் அந்தப் சேவலையும் எதனாலும் வெல்ல முடியாது என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
சேவலை விற்பது என்பது கடந்தகால நினைவுகளை விற்பது போன்றதே என்று கர்னல் நினைப்பது முக்கியமானது.
தனது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலிலும் சேவற்சண்டையை மார்க்வெஸ் விவரித்துள்ளார். அதில் ப்ரூடென்சியோ அகுய்லரின் சேவலை ஜோஸ் அர்காதியோ புவெந்தியாவின் சேவல் வென்றுவிடுகிறது. இதனால் அவமதிப்பு அடைந்த அகுய்லார் அர்காதியோவின் ஆண்மையைக் குறித்துப் பரிகாசம் செய்யவே இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுகிறது. அதில் அகுய்லெர் கொல்லப்படுகிறான். அந்தக் குற்றவுணர்வு அர்காதியோவிடம் மேலோங்குகிறது. இறந்தபின்பும் அகுய்லெர் தாகத்தில் தண்ணீர் கேட்டு அலைகிறான்.
தங்களுக்குப் பன்றிவால் உள்ள குழந்தை பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த உர்சுலா அகுய்லெரின் மரணத்தால் பாதிக்கபடுகிறாள். அந்தக் குடும்பத்தின் இடப்பெயர்விற்கு இந்த நிகழ்வே காரணமாகிறது.
சண்டைச்சேவலின் எதிர்பாராத தாக்குதல் போன்று மார்க்வெஸின் வாழ்விலும் ஒரு நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. அது அவருக்கும் எழுத்தாளர் மரியோ வர்கஸ் யோசாவிற்கும் நடந்த சண்டை. அதில் மார்க்வெஸின் முகத்தில் யோசா குத்துவிட்டது. இருவரும் நெருக்கமான நண்பர்கள். மார்க்வெஸின் படைப்புகள் குறித்து யோசா விரிவான ஆய்வு நூல் எழுதியிருக்கிறார்.

மெக்சிகோ நகரில் 1976-ஆம் ஆண்டுப் பிப்ரவரி 12-ஆம் தேதி மார்க்வெஸ் தனது மனைவியோடு “லா ஒடிசியா டி லாஸ் ஆண்டிஸ்” என்ற ஆவணப்படத்தின் திரையிடல் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற போது அங்கே எதிர்பாராமல் யோசாவைச் சந்தித்தார். இருவரும் நல்ல நண்பர்கள். இருவரது குடும்பமும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்கள்.
தனது நண்பனைக் கட்டிக் கொள்ள ஆசையாக மார்க்வெஸ் அருகில் சென்றார் ஆனால் கோபத்திலிருந்த யோசா என் மனைவியை அடைய முயன்றதற்காக வாங்கிக் கொள் என்று மார்க்வெஸின் முகத்தில் ஒங்கிக் குத்தினார். அந்தக் குத்து கண்ணில் பட்டு மூக்கு கண்ணாடி உடைந்து ரத்தம் பீறிட்டது.

மரியா வர்கஸ் யோசாவிற்கு நிறையக் காதலிகள். ஒரு கப்பல் பயணத்தில் அழகான ஸ்வீடிஷ் பெண்ணைச் சந்தித்துக் காதல்வயப்பட்டு உடனே அவளுடன் வாழத்துவங்கிவிட்டார். அவருக்கு முன்னதாகப் பேட்ரீஷியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருந்தது. ஸ்வீடிஷ் காதலியோடு அவர் வாழ்ந்த நாட்களில் பேட்ரீஷியாவை சந்தித்துக் குடும்ப நண்பர் என்ற முறையில் மார்க்வெஸ் ஆறுதல் கூறியிருக்கிறார். யோசாவை விவாகரத்து செய்யும் படி மார்க்வெஸ் மற்றும் அவரது மனைவி வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஸ்விடீஷ் பெண்ணின் காதல் கசந்துவிடவே யோசா அவளை விட்டுப் பிரிந்துவிட்டார்
வர்காஸ் யோசாவின் அப்பட்டமான கள்ள உறவுக்குப் பிறகும், அவரும் பேட்ரீஷியாவும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். அப்போது பிரிந்திருந்த காலத்தில் தன்மீது மார்க்வெஸிற்கு ஆசையிருந்ததாகப் பேட்ரீஷியா கூறினார். அந்தக் கோபமே இந்தச் சண்டைக்குக் காரணம் என்கிறார்கள்
யோசாவின் மனைவியோடு தனக்கு எந்த உறவுமில்லை. அவளுக்கு அப்படி ஒரு ரகசிய ஆசையிருந்தது உண்மை. ஆனால் அதனைத் தான் ஏற்கவில்லை என்று மார்க்வெஸ் மறுத்திருக்கிறார்
இந்தத் தாக்குதலின் போது உடனிருந்த மார்க்வெஸின் மனைவி மெர்சிடிஸ் யோசா ஒரு பொய்யர். அவர் சொல்வது அவதூறு. மார்க்வெஸ் மீது பொறாமை கொண்டு இப்படி நடந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
இந்தச் சண்டையின் உண்மையான காரணம் இருவருக்குள்ளும் உருவாகி இருந்த அரசியல் வேறுபாடு மற்றும் கண்ணோட்டங்கள். மார்க்வெஸ் அடைந்த சர்வதேசப் புகழ் இன்னொரு காரணம் இவற்றை மறைத்துக் கொண்டு தனது மனைவி சொன்ன புகாருக்காக மார்க்வெஸை தாக்கியதாக யோசா நாடகம் ஆடினார் என்கிறார்கள்.
காயம்பட்ட கண்ணைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என மார்க்வெஸ் ரோட்ரிகோ மோயா என்ற புகைப்படக்கலைஞரை தேடிப் போய்ப் போட்டோ எடுத்திருக்கிறார். சண்டையின் சாட்சியமான அந்தப் புகைப்படம் மோயோவிடம் பாதுகாக்கப்பட்டு வந்தது.. மார்க்வெஸின் எண்பதாவது வயதில் அந்தப் புகைப்படம் மிகப்பெரிய விலைக்கு விற்கபட்டது.
இந்தச் சண்டைக்குப் பிறகு 2010 வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் நோபல் பரிசு பெற்றார்கள். இருவரும் சர்வதேச அளவில் கொண்டாடப்படும் படைப்பாளியானார்கள். இந்தச் சம்பவம் குறித்து ஒரு பத்திரிக்கையாளர் எழுத முயன்ற போது யோசா அதனை எழுத வேண்டாம் என்று தடுத்து நிறுத்திவிட்டார்.
முப்பது ஆண்டுகளுக்குப் பின்பு, கார்சியா மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் 40வது பதிப்பிற்கு வர்காஸ் யோசா முன்னுரை எழுதினார். இருவரும் ஒன்றாகப் பொது நிகழ்வில் கலந்து கொண்டார்கள். பழைய கசப்பு விலகியிருந்தது. ஆனால் மறையவில்லை.

மார்க்வெஸின் மரணத்திற்குப் பின்பு அவருக்கு இன்னொரு மனைவியும் அந்த உறவில் பிறந்த மகள் ஒருத்தியும் இருப்பது தெரியவந்தது. இந்த உண்மையை அவரது மனைவியான மெர்சிடிஸ் தன் வாழ்நாளில் அறிந்திருக்கவில்லை. தனது மகள் இந்திரா கேடோவை ரகசியமாக மார்க்வெஸ் வளர்ந்திருக்கிறார். மெர்சிடிஸ் மறைவின்பின்பு தற்போது அவளைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக மார்க்வெஸின் பையன்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

யோசாவின் வாழ்க்கையை விடவும் மார்க்வெஸின் வாழ்வில் தான் ரகசியங்கள் அதிகமிருந்தன. இருவரும் எழுத்தை விடவும் விந்தையான சொந்த வாழ்க்கையைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சண்டைக்கு உலகம் அறிந்த காரணத்தைத் தாண்டி வேறு ஏதேனும் இருந்தால் கூட ஆச்சரியமில்லை.
••