அஜந்தா கண்ணாடி.

புதிய சிறுகதை. ஜுலை 2022

அவன் கண்ணாடியை உடைத்தபோது மணி நான்கு இருபது.

பள்ளிவிட்டுத் திரும்பியதும் எதற்காக முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தான் என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் அலமாரியின் நடுத்தட்டில் சாய்த்து வைக்கப்பட்ட கண்ணாடி கைதவறி விழுந்து சில்லுசில்லாகச் சிதறியதைக் கண்டதும் பயத்துடன் குனிந்து எடுத்து ஒட்டவைக்க முயன்றான்.

உடைந்த சில்லுகளில் துண்டுதுண்டாக அவனது உருவம் காட்சியளித்தது விநோதமாக இருந்தது.

அம்மா வருவதற்குள் கண்ணாடியை ஒட்ட வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அடி வாங்கி முடியாது.

அம்மா மிளகாய் வத்தல் பொடி தயாரிக்கும் பேக்டரி ஒன்றில் வேலை செய்கிறாள். ஆறு மணிக்கு வேலைவிடுவார்கள். அவள் சேலை முழுவதும் வத்தல் நெடியிருக்கும். கிட்டப்போனால் தும்மல் வந்துவிடும். வத்தல் காரத்துல உடம்பு எரியுது என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள்.

வெறும் கண்ணாடி என்று அம்மா ஒருபோதும் சொல்லமாட்டாள். அஜந்தா கண்ணாடி என்றே சொல்லுவாள். அஜந்தா என்ற பெயர் கண்ணாடியின் பின்னால் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

காலை நேரம் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்ளும் போது மட்டுமே அம்மாவின் முகத்தில் சாந்தமிருக்கும். மற்ற நேரங்களில் சிடுசிடுப்பும் எரிச்சலும் ஆத்திரமுமாகவே இருப்பாள். கோபம் அதிகமாகிவிட்டால் தோசைக்கரண்டியாலே அடிப்பாள். இன்றைக்கு எதில் அடிக்கப்போகிறாளோ என்று பயமாக இருந்தது

காகிதத்தை ஒட்ட வைக்கப் பசை இருப்பதைப் போல எதை வைத்து கண்ணாடியை ஒட்டவைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அப்பா சைக்கிள் பஞ்சர் ஒட்டுவதற்காக வைத்திருந்த பசை ஒன்றைத் தேடிப்பிடித்து அதைக் கண்ணாடி சில்லில் தடவி ஒட்டவைத்துப் பார்த்தான். கண்ணாடி ஒட்டிக் கொள்ளவில்லை

இந்தக் கண்ணாடிக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் என்று எரிச்சலாக வந்தது. ஏதாவது மந்திரம் போட்டால் கண்ணாடி ஒட்டிக் கொள்ளும் என்று தோன்றியது. என்ன மந்திரம் போடுவது. வாய்க்கு வந்தபடி ஏதோ சொன்னான். உதடு சுழித்து அவன் மந்திரம் போடுவது ஒரு உடைந்த கண்ணாடி சில்லில் தெரிந்தது

கண்ணாடி ஒட்டிக் கொள்ளவில்லை.

ஒரு புறம் கோபமும் மறுபுறம் அடிவாங்கப்போகும் பயமும் ஒன்று சேர்ந்து கொண்டது. வீட்டின் பின்புறமிருந்த முருங்கை மரத்திலிருந்து ஒரு மைனா அவனைக் கேலி செய்வது போலச் சப்தமிட்டுக் கொண்டிருந்தது எரிச்சலை அதிகப்படுத்தியது.

இன்றைக்கு ஏன் பள்ளி மூன்று நாற்பதிற்கே விட்டது. ஏன் விளையாடப் போகாமல் நேராக வீடு திரும்பி வந்தோம் என்று பள்ளியின் மீதும் கோபமாக வந்தது.

எத்தனையோ நாள் கண்ணாடியை இப்படிக் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறோம் அப்போதெல்லாம் நழுவி உடையவில்லையே. இன்றைக்கு என்ன கேடு வந்துவிட்டது என்று ஆத்திரமாக இருந்தது.

உடைந்த கண்ணாடி துண்டுகளைப் பார்த்து எச்சில் துப்பினான். கண்ணாடி சில்லில் எச்சில் வழிந்தோடுவது அழகாக இருந்தது

அம்மா வருவதற்குள் கண்ணாடியை ஒட்டவைக்க முடியாது. பேசாமல் புதுக்கண்ணாடி ஒன்றை வாங்கி வந்து வைத்துவிட்டால் நல்லது என்ற யோசனை உருவானது

அஜந்தா கண்ணாடி என்ன விலையிருக்கும். காசிற்கு எங்கே போவது. அம்மா பருப்பு டப்பாவில் ரூபாயை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டிருக்கிறான். அதில் தேடினால் நிச்சயம் ரூபாய் கிடைக்கக் கூடும். ஒருவேளை அம்மா கண்டுபிடித்துவிட்டால் ஸ்கூலில் டிராயிங் நோட் வாங்கச் சொன்னார்கள் என்று பொய் சொல்லிவிடலாம் என்று நினைத்துக் கொண்டான்.

பருப்பு டப்பாவில் பத்து ரூபாய்த் தாள் ஒன்று கசங்கிய நிலையிலிருந்தது. அதை முகர்ந்து பார்த்தபோது பருப்பு வாசனை அடித்தது.

அவசரமாக வெளியே புறப்பட்டான், அவனது தங்கை பள்ளிவிட்டு வருவதற்குள் திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் பதைபதைப்பாக இருந்தது. உடைந்த கண்ணாடி சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டு போய் வேலிப்புதர்களுக்குள் வீசி எறிந்தான். வேலிப்புதரில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கோழி கண்ணாடி சில்லில் முகம் பார்த்தது

கதவைச் சாத்தி வெறுமனே தாழ்பாள் போட்டுவிட்டு பஜாரை நோக்கி நடந்த போது யாரோ தன் பின்னால் வருவது போலவே தோன்றியது. தவறு செய்யும் போதெல்லாம் உடல் கனமாகிவிடுவது அவனுக்கு மட்டும் தானா என்று குழப்பமாகயிருந்தது.

பஜாருக்குப் போகும்வழியில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாத வீடு ஏதாவது இருக்குமா என்று நினைத்துக் கொண்டான். அந்த நினைப்பு கண்ணாடி பார்க்காத ஆள் யாராவது இருப்பார்களா என்றும் மாறியது. ஒரு ஊரில் மொத்தம் எவ்வளவு கண்ணாடிகள் இருக்கும். இதுவரை எவ்வளவு கண்ணாடிகளை உடைத்திருப்பார்கள். இப்படிக் குழப்பமான யோசனைகளுடன் அவன் நடந்து கொண்டிருந்தான்.

ஜெசிந்தா டீச்சர் வீட்டில் அவர்கள் வளர்க்கும் கறுப்புப் பூனை ஒரு நாள் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறான். பூனை ஏன் முகம் பார்த்துக் கொள்கிறது எனப் புரியவில்லை

அவனது வகுப்பிற்கு வரும் நிர்மலா டீச்சர் தனது ஹேண்ட்பேக்கில் தங்கநிற மடக்கு கண்ணாடி வைத்திருப்பாள். வகுப்பு முடிந்து வெளியே போகும் போது அதில் தன்னைப் பார்த்துக் கொள்வாள்.

அதைப் பற்றி ஒரு நாள் எல்.ராணியும் திவ்யாவும் பேசிக் கொண்டிருந்ததை அவன் ஒட்டுக் கேட்டிருக்கிறான். டீச்சர் ரொம்ப ஸ்டைல் பண்றா என்று திட்டிக் கொண்டிருந்தார்கள். நிர்மலா டீச்சரை விடவும் ஜெசிந்தா டீச்சர் தான் அழகு என்றார்கள். அவனுக்கு என்னவோ இருவரையும் விடத் தங்க புஷ்பம் டீச்சர் தான் அழகியாகத் தோன்றினாள். பெண்கள் கண்ணுக்கு அழகு வேறாகத் தெரியும் போலும்.

எப்போது கண்ணாடி பார்த்தாலும் அவன் முகம் அவனுக்குப் பிடிக்காது. உர்னு கடுவான் மாதிரி இருக்கே என்பாள் தங்கை.

அம்மா தங்கைக்குத் தலை சீவி விடும்போது அவள் கையிலே கண்ணாடியைக் கொடுத்துவிட்டு அசையாமல் உட்காரு என்பாள். ஆனால் தங்கையால் அப்படியிருக்க முடியாது. அசைந்தபடியே இருப்பாள். இதற்காக அவளது தலையில் கொட்டு விழும். கன்னத்தில் குழி விழுகிறதா என்று தங்கை அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக் கொண்டேயிருப்பாள். சில நேரம் கண்ணாடியை கன்னத்தோடு ஒட்டவைத்துக் கொண்டு ரகசியம் போல ஏதோ பேசிக் கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறான்.

அவன் தலைசீவி விட்டு திருநீறு பூசிக் கொள்ளும் போது மட்டும் தான் கண்ணாடி பார்க்க அம்மா தருவாள். மற்ற நேரங்களில் ஆம்பளை புள்ளைக்கு எதுக்குக் கண்ணாடி என்று திட்டுவாள். இதெல்லாம் அவனுக்குக் குழப்பமான விஷயமாக இருந்தது.

மாலை நேரத்தின் சோம்பல் பஜாரின் மீதும் படிந்திருந்தது. கடந்து செல்லும் போது ஒரு கடையில் கல்லாவிற்கு எதிரே படுக்கை வசமாகக் கண்ணாடி மாட்டி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இன்னொரு கடையில் தலையாட்டி பொம்மை முன்பாகக் கண்ணாடி இருந்தது. என்னைப் பார் சிரி என்ற கழுதைப்படமும் கண்ணாடி ஒன்றும் சோமன் கடையில் தென்பட்டது. எல்லாக் கடைகளிலும் எதற்காகக் கண்ணாடி வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. கோவில் பிரகாரத்தில் கூட ஆள் உயரக் கண்ணாடி வைத்திருக்கிறார்கள். சாமி கூடக் கண்ணாடி பார்த்துக் கொள்கிறது.

மேற்கு பஜாரிலிருந்த நவாப் கடையில் கண்ணாடி விற்பதைக் கண்டிருக்கிறான். அந்தக் கடையில் தான் பபிள்கம், சாக்லேட், அன்ரூல்டு நோட், கண்ணாடி ஸ்கேல் எல்லாம் வாங்கியிருக்கிறான்.

அப்போது வட்டக்கண்ணாடி, மடக்கு கண்ணாடி போன்றவை ஒரு அலமாரியில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறான்.

அந்தக் கடையில் ஒரு முறை அருணாவின் மாமா சந்தனப்பவுடர் வாங்குவதைக் கண்டிருக்கிறான். அவர் பவுடர் டப்பாவின் மூடியை திருகி அவனது உள்ளங்கையில் பவுடரை தெளித்து முகர்ந்து பார்க்கச் சொன்னார். அந்த நறுமணத்தை மறக்கமுடியவேயில்லை. எப்போது நவாப் கடைக்குப் போனாலும் சந்தனப்பவுடர் நினைவிற்கு வந்துவிடும்

அன்றைக்கு அவன் நவாப் கடைக்குப் போன போது ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. அதை நவாப் கேட்கிறாரோ இல்லையோ கடை மூடும்வரை ஒடிக் கொண்டேயிருக்கும். ஆள் துணைக்கு ரேடியோவை வைத்திருக்கிறார் என்பான் முத்து.

நவாப் கடை சற்றே உயரமானது. பலகையில் ஏறி நின்று எக்கினால் தான் அவர் தெரிவார். அழுக்கடைந்த பனியன். சாயம் போன வேஷ்டி. வழுக்கைத் தலை. பெரிய உதடுகள். உப்பிய கன்னம். அவர் உருவத்திற்கும் குரலுக்கும் பொருத்தமே இருக்காது

அவன் எக்கி நின்று “நவாப்“ என்று சப்தமாகக் கூப்பிட்டான்.

ஏதோ நினைப்பில் நவாப் அக்குளைச் சொறிந்து கொண்டிருந்தார். அவனைக் கண்டதும் கையை நீட்டி “சாக்லேட்டா“ என்று கேட்டார்.

“இல்லை முகம் பார்க்குற கண்ணாடி வேணும்“ என்றான்.

“உடைச்சிட்டயா“ என்று கேட்டார் நவாப்

தனது முகத்திலே கண்ணாடியை உடைத்தவன் என்று எழுதியிருக்கிறதா. எப்படிப் பார்த்தவுடனே கண்டுபிடித்துவிட்டார் என்பது போல நினைத்தபடி பொய் சொன்னான்

“பூனை தள்ளிவிட்ருச்சி.. அதான் எங்கம்மா புதுக் கண்ணாடி வரச் சொல்லுச்சி“

நவாப் எழுந்து ஒரு கண்ணாடியை எடுத்து அவனிடம் நீட்டினார்

அதைத் திறந்து முகத்தைப் பார்த்தான். இறுக்கமான முகம். அவனுக்கே அவனைப் பார்க்க பிடிக்கவில்லை

“இது பெரிசா இருக்கு.. எனக்குச் சின்னதா வேணும்“

“இதுக்கும் சின்னது இல்லை. பாக்கெட் சைஸ் தரவா“

“அது வேணாம். அஜந்தா கண்ணாடி வேணும்.“

“நம்மகிட்ட கிடையாது.. சுப்ரமணிய சாமி கோவில் கிட்ட இருக்கிற வளையல்கடையில் கேளு“

அவரது பதிலை முழுவதும் கேட்பதற்குள் அவன் கோவில் கடைகளை நோக்கி நடக்கத் துவங்கியிருந்தான். கண்ணாடி விலை அதிகமாக இருந்தால் என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. சாலையில் சில நேரம் சில்லறை காசுகளைக் கண்டெடுத்திருக்கிறான். அப்படி ஒரு கண்ணாடி கண்டெடுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

மிட்டாய்கடையில் ஆள் உயரத்திற்குக் கருப்பட்டி மிட்டாய்களை அடுக்கி வைத்திருந்தார்கள். கடைக்கண்ணாடியில் மிட்டாய் தெரிந்த்து. லட்டு மிக்சர் கூடக் கண்ணாடி பார்த்துக் கொள்கிறதே என நினைத்தபடியே நடந்தான்.

அம்மாவோடு சில தடவை வளையல் கடைகளுக்குப் போயிருக்கிறான். எப்போதும் அம்மா பிளாஸ்டிக் வளையல்களைத் தான் வாங்குவாள். ஏன் தன்னைப் போன்ற பையன்கள் போட்டுக் கொள்ள வளையல் விற்பதில்லை என்று ஒருமுறை கடைக்காரனிடம் கேட்டிருக்கிறான். அப்படிக் கேட்டதற்காக அம்மா கடையில் வைத்தே அடித்தாள்

“அது ஒண்ணு தான் குறைச்சல். வளையல் போட்டு பூ வச்சிக்கோ ரொம்ப லட்சணமா இருக்கும்.“

அவனைப் போன்ற பையன்கள் அணிந்து கொள்வதற்கு ஒன்றுமே இல்லையா என்று ஆதங்கப்பட்டிருக்கிறான்.

அதைப்பற்றிப் பள்ளியில் பேசிக் கொண்டிருந்த போது சிக்ஸ்த் பி படிக்கும் சேகர் கூலிங்கிளாஸ் பசங்கள் மட்டும் தான் போடுவார்கள் என்று சொன்னான். கறுப்புக் கூலிங்கிளாஸ் ஒன்றை உடனே வாங்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அப்பாவிடம் கேட்டால் அதற்கும் அடிப்பார். ஆகவே அந்த ஆசையும் பறிபோய்விட்டது.

சுப்ரமணியசாமி கோவிலை ஒட்டி வரிசையாக நாலைந்து வளையல்கடைகள் இருந்தன. ஒரு கடைக்குள் போய் நின்று அஜந்தா கண்ணாடி இருக்கா என்று கேட்டான்

பச்சை சேலை கட்டிய மெலிந்த உருவம் கொண்ட ஒரு அக்கா நின்றிருந்தாள். அவள் நெற்றியில் கறுப்பாக ஒரு மச்சமிருந்தது. அவள் சலிப்பான குரலில் கேட்டாள்

“சின்னதா.. பெரிசா“..

பெரிய ஆள் போலச் சொன்னான்

“காட்டுங்க பார்க்கிறேன்“

அவள் ஒரு கண்ணாடியை எடுத்துக் காட்டினாள்

“கிழே போட்டா உடையாத கண்ணாடி வேணும்“ என்றான்

சிறிய புன்னகையோடு “கண்ணாடியை உடைச்சிட்டயா“ என்று கேட்டாள் அந்த அக்கா. அவளிடம் பொய் சொல்ல விரும்பாதவன் போலச் சொன்னான்

“கைதவறி கிழே விழுந்துருச்சி.“

“எல்லாக் கண்ணாடியும் கிழே விழுந்தா உடையத்தான் செய்யும்“ என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பு ஆறுதல் தருவதாக இருந்தது.

“இது அஜந்தா கண்ணாடியாக்கா“

“அதெல்லாம் இப்போ வர்றதில்லை. இது மணிமார்க் கண்ணாடி“

“எனக்கு அஜந்தா கண்ணாடி தான் வேணும்“

“இதுல முகம் பார்த்தா தெரியாதா“.

“அஜந்தா கண்ணாடி இல்லேன்னா.. நான் வேற கடையில பாத்துகிடுறேன்“ என்று பொய் கோபத்துடன் சொன்னான்

அவனது கோபத்தை ரசித்தவள் போலச் சொன்னாள்

“நாலாவது கடையில் கேட்டுப்பாரு“

அந்தக் கடையிலும் அஜந்தா கண்ணாடி கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் கடைக்காரரிடம் கேட்டான்.

“உடைஞ்ச கண்ணாடியை ஒட்ட வைக்க முடியுமா“

“கண்ணாடி உடைஞ்சா வீட்டுக்கு ஆகாது.. அதைக் குப்பைல தான் போடணும்“ என்றார்.

அதைக்கேட்டதும் அவனது பயம் மேலும் அதிகமானது. கண்ணாடி ஏன் இவ்வளவு மர்மமாக இருக்கிறது.

“பழைய கண்ணாடி எங்கேயாவது கிடைக்குமா“

“அதெல்லாம் யாரும் விலைக்குத் தரமாட்டாங்க“

“அப்போ நான் என்ன செய்றது“

“தேரடியை ஒட்டி பழைய சாமான் கடை இருக்கு,. அங்கே வேணும்னா கேளு “என்றார்

தேரடியை நோக்கி வேகமாக நடந்தான். நேரம் எவ்வளவு ஆகிறது என்று தெரியவில்லை. தங்கை வீடு வந்திருந்தால் இந்நேரம் கண்டுபிடித்திருப்பாள். எப்படி அவளுக்கு மட்டும் தான் செய்யும் எல்லாத் தவறுகளும் தெரிந்து விடுகிறதோ

அவன் அம்மாவிடம் அடி வாங்கும் போது அவள் சிரிக்க வேறு செய்வாள். ஆனால் அம்மா இல்லாத நேரங்களில் யண்ணே யண்ணே என்று உருகுவாள்.

ஜவகர் மைதானத்தைத் தாண்டும் போது அவனது பள்ளியில் படிக்கும் முகுந்தனும் பாஸ்கரும் கையில் ஒரு வயர்கூடையுடன் நின்றிருந்தார்கள்

“எங்கப்பா பாண்டிகடையில் பஜ்ஜி வாங்கிட்டு வரச்சொன்னார்“ என்றான் முகுந்தன்

பாஸ்கர் தான் ஏதோ பெரிய விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டவன் போலச் சொன்னான்

“கோவிலுக்குப் புது யானை வந்துருக்கு. பார்த்தியா.. “

எதையும் கேட்காதவன் போல நடந்து கொண்டிருந்தான். பாஸ்கரும் முகுந்தனும் வீட்டிற்குள் போவதற்குள் வாங்கிய பஜ்ஜியின் ஒரங்களை ரகசியமாகப் பிய்த்துத் தின்றுவிடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

பழைய சாமான் விற்கும் கடையின் முன்பு பிரம்பு நாற்காலி ஒன்றில் கிழவர் உட்கார்ந்திருந்தார். சட்டை அணிந்திருக்கவில்லை. டிராயர் மட்டுமே அணிந்திருந்தார். புருவங்கள் கூட அவருக்கு நரைத்திருந்தன. காவி படிந்த பற்கள். மயிர் அடர்ந்த நீண்ட கைகள்.

கடையில் கால் உடைந்த நாற்காலிகள். அழுக்கேறிய கதவுகள். நிறமிழந்த மரக்குதிரை பிளாஸ்டிக் பொம்மைகள். மாட்டின் கழுத்துமணிகள். ரிப்பேராகிப் போன ரேடியோ, உடைந்த டெலிபோன். நசுங்கிய சமையற் பாத்திரங்கள். பழைய பேண்ட். சட்டைகள்.. பழைய புத்தகங்கள். பீங்கான் கோப்பைகள். ஓடாத கடிகாரங்கள், என ஏதேதோ பொருட்கள் இருந்தன

“அஜந்தா கண்ணாடி இருக்கா“ என்று கடைக்காரரை நோக்கிக் கேட்டான்

“முகம் பார்க்கிற கண்ணாடியா“ என்று கேட்டார் கிழவர்

“ஆமாம்“ எனத் தலையசைத்தான்

“நான் கண்ணாடி பார்த்தே வருஷமாகுது. அந்தா.. அந்த மரப்பலகை பின்னாடி கண்ணாடி இருக்குதானு பாரு.. “

உள்ளே நடந்து மரப்பலகையை விலக்கி பார்த்தான். ஆள் உயரக் கண்ணாடி ஒன்று இருந்தது. ரசம் போன அந்தக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் போது வெட்கப்பட்டான்.

“ஐம்பது ரூபா குடுத்துட்டு கண்ணாடியை எடுத்துக் கோ “என்றார் கிழவர்

“எனக்கு அஜந்தா கண்ணாடி தான் வேணும்“

அதுக்கு நான் எங்க போறது. எந்தப் பொம்பளையும் முகம் பார்க்கிற கண்ணாடியை விக்கமாட்டா“ என்றார் கிழவர்

இனி என்ன செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை. இது போன்ற நேரத்தில் யாரும் உதவிக்கு வர மாட்டார்கள். வழிகாட்டமாட்டார்கள் என்பது அவனுக்கு வேதனையை அதிகப்படுத்தியது.

இப்படியே ஏதாவது ஒரு ஊருக்கு ஓடிப்போய்விட்டால் என்ன என்று கூடத் தோணியது.

சாலையில் போகிறவருகிறவர்கள் எல்லோர் மீதும் கோபம் அதிகமானது. இவர்கள் அத்தனை பேரும் கண்ணாடியில் முகம் பார்க்கிறவர்கள். வீட்டில் கண்ணாடி வைத்திருப்பவர்கள்.

என்ன செய்வது எனத் தெரியாமல் ஜவகர் மைதானத்தில் நின்று கொண்டிருந்தான். சற்று தள்ளி ஆட்டுக்கால் சூப் விற்பவன் கடையைத் தயார் செய்து கொண்டிருந்தான். கொய்யாப்பழம் விற்கும் தள்ளுவண்டி ஆள் சோர்வாக முக்காலியில் அமர்ந்திருந்தார். எச்சில் இலை ஒன்றை இழுத்துக் கொண்டு தெருநாய் ஒடிக் கொண்டிருந்தது. காலேஜ் பஸ் வந்து நின்று இளம்பெண் சோர்வாக இறங்கி நடந்து சென்றார்கள்.

வீட்டிற்குத் திரும்பப் போகப் பயமாக இருந்தது. கண்ணாடி தன்னைப் பழிவாங்கிவிட்டதோ என்று கூட நினைத்தான். தபால் அலுவலகச் சுவரில் ஒரு புறா தனியே அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது

கையில் இருக்கிற காசிற்குப் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குப் போய் அடி வாங்கிக் கொள்ள வேண்டியது தான் என்று திடீரெனத் தோணியது.

அப்படி நினைத்த மாத்திரம் பஜ்ஜியின் வாசனை மூக்கில் அடிப்பது போலிருந்தது. பாண்டி கடையில் மட்டும் பஜ்ஜிக்கு இரண்டு வகைச் சட்னி தருவார்கள். எவ்வளவு ருசியான பஜ்ஜி.

கண்ணாடி உடைந்ததற்காக மட்டுமில்லை. வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய்ப் பஜ்ஜி வாங்கித் தின்றதற்காகவும் அம்மா நிச்சயம் அடிப்பாள். வெறுமனே அடிவாங்குவதை விடவும் இப்படி ஆசைப்பட்டதை வாங்கித் தின்றுவிட்டு அடிவாங்கலாம் தானே

அவன் பாண்டி கடைக்குப் போனபோது எண்ணெய்ச் சட்டியில் பஜ்ஜிகள் மிதந்து கொண்டிருந்தன. அவை கண்சிமிட்டி அவனை அழைப்பது போலிருந்தது. சூடாக, இரண்டு பஜ்ஜிகள் வாழை இலையில் வைத்து வாங்கினான். அவனாகவே சட்னியை அள்ளி அள்ளி போட்டுக் கொண்டான். பின்பு சூட்டோடு பிய்த்துச் சாப்பிட்டான்

இரண்டு பஜ்ஜிகளை இவ்வளவு வேகமாக யாராலும் சாப்பிட முடியுமா என்று தெரியவில்லை. இன்னும் பத்துப் பஜ்ஜிகள் தின்றாலும் ஆசை தீராது. டவுசர் பையிலிருந்த பத்துரூபாயை எடுத்துக் கொடுத்து இன்னும் ரெண்டு பஜ்ஜி வேணும் என்றான். கடைஆள் ஒரு பஜ்ஜி மூணு ரூபாய் என்று சொல்லியபடியே ஒரு பஜ்ஜியை அவன் இலையில் வைத்துவிட்டு உதிர்ந்து கிடந்த பஜ்ஜி தூள்களை அள்ளி இலையில் போட்டார். எவ்வளவு பெருந்தன்மை என்று பட்டது.

இந்தப் பஜ்ஜியை மெதுவாகச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடியே ஒரு கடி கடித்தபோது அவனது அய்யா யாரோ ஒரு ஆளின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்து இறங்குவது கண்ணில் பட்டது. அப்படியே பஜ்ஜியை தூர எறிந்துவிட்டு அவரது கண்ணில் படாமல் வீட்டை நோக்கி ஓடினான்.

அவனது வீடு இருந்த தெருவிற்கு வந்தபோது அடிவாங்கப் போவதை நினைத்துக் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. நத்தை ஊர்ந்து செல்வது போல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வீட்டை நோக்கி நடந்தான்

கதவு திறந்து கிடந்தது.

உள்ளே இருந்து விளக்குமாற்றுடன் வெளியே வந்த தங்கை அவனை முறைத்தபடியே வெளியே சென்றாள்

அம்மா பாயில் சுருண்டு படுத்திருந்தாள். அருகில் சென்றபோது அவள் எதையோ நினைத்து விம்மி விம்மி அழுது கொண்டிருப்பது தெரிந்தது. எதற்காக அழுகிறாள். பேக்டரியில் ஏதாவது பிரச்சனையா. உடம்புக்கு முடியவில்லையா. அய்யாவோடு சண்டையா. எதுவும் புரியவில்லை. கன்னத்தில் கண்ணீர் வழியக் கலைந்த தலையுடன் சேலை நழுவிக்கிடக்க அம்மா சோர்ந்து கிடந்தாள்.

அவள் கண்ணில் படாமல் நடந்துபோய்ப் பையிலிருந்த ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சுவரோரமாக உட்கார்ந்து படிப்பது போல நடித்தான்

“யம்மா.. அண்ணன் வந்துட்டான்“ என்று தங்கை சப்தம் கொடுத்தாள்

புரண்டு படுத்த அம்மா வேதனையான குரலில் சொன்னாள்.

“தலைவலி தாங்க முடியலை.. முக்குகடையில் போய் டீ வாங்கிட்டு வா“

அவன் தலையாட்டினான். அம்மா சேலையில் முடிந்து வைத்திருந்த பணத்திலிருந்து பத்து ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அவசரமாக அவன் முக்கு கடையை நோக்கி நடந்தான்

தூக்குவாளியில் டீ வாங்கிக் கொண்டு வந்தபோது அம்மா எழுந்து உட்கார்ந்திருந்தாள். முகம் வீங்கியிருப்பது போலிருந்தது. மூக்கின் மீது ஒரு தலைமயிர் விழுந்துகிடந்தது.

அம்மா ஒரு டம்ளரில் பாதி டீயை ஊற்றிக்குடித்துவிட்டு மீதமிருந்ததை அவர்களுக்காகக் கொடுத்தாள். இருவரும் மீதமான டீயைக் குடித்தார்கள்.

டீ வாங்கிய தூக்குவாளியை கழுவுவதற்காகத் தங்கை எடுத்துச் சென்றாள். அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் சொன்னான்

“முகம் பாக்குற கண்ணாடியை உடைச்சிட்டேன். “

“போகுதுவிடு. அதுல பாத்து தான் நிறையப் போகுதாக்கும்“ என்றாள் அம்மா.

அவனால் நம்பமுடியவில்லை

“கைதவறி கிழே விழுந்து உடைஞ்சி போச்சு“ என்று விளக்கமாகச் சொன்னான்

“எல்லாம் நம்ம நேரம் “என்று அம்மா சலித்துக் கொண்டாள்.

இவ்வளவு தானா. இதற்குப் போயா இவ்வளவு பயந்தோம். வீட்டில் எதற்கு அடிப்பார்கள். எதை மன்னித்துவிடுவார்கள் என்று புரிந்து கொள்ள முடியவேயில்லை. ஒருவேளை அம்மா நாளைக்கு அடிப்பாளோ. அப்படித் திருவிழாவில் துப்பாக்கி வேண்டும் என்று கேட்டதற்கு என்றைக்கோ அடி கிடைத்ததே. அப்படிக் கிடைக்கக் கூடுமா.

ஆனால் அம்மா நடந்த்தை மன்னித்துவிட்டவளைப் போல எழுந்து சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு சமையல் செய்வதற்காகக் கூடையிலிருந்த வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தாள்.

நாளைக்கு அம்மா எதில் முகம் பார்ப்பாள் என்று கவலையாக இருந்தது.

அவனது தங்கை மட்டும் அருகில் வந்து கோபத்துடன் கேட்டாள்

“கண்ணாடியை உடைச்சிட்டா நான் எதைப் பார்த்து ஜடை பின்னுறது“

“சுவரைப் பார்த்து“ என்று கேலியாகச் சொன்னான்

“அதுல உன் முகரை தான் தெரியும்“ என்றாள் தங்கை

முகரை என்று அவள் சொன்னதை நினைத்து அவனும் சிரித்துக் கொண்டான்

••••

0Shares
0