அடோனிஸ்

Being a poet means that I have already written but that I have actually written nothing. Poetry is an act without a beginning or an end. It is really a promise of a beginning, a perpetual beginning. –Adonis


கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசி சுற்றுவரை வந்து தேர்வு செய்யப்படாமல் போன நம் காலத்தின் மிக முக்கிய நவீன அரபுக்கவி அடோனிஸ்.( Adonis) சிரியாவில் பிறந்து தற்போது பிரான்சில் வாழ்ந்து வருகிறார். அலி அகமது சையத் எனும் அடோனிஸ் நவீன அரபுக்கவிதையுலகின் தனித்துவமிக்க குரலாக விளங்குகிறார். கிரேக்க புராணத்தில் விளைச்சலின் கடவுளாக கருதப்படுவர் அடோனிஸ். அதையே தனது புனைப்பெயராக கொண்டிருக்கிறார்.


தனது அடையாளம் என்பது தனது கவிதையை போல தானே உருவாக்கி கொண்ட ஒன்று. நாடுகடத்தபட்ட கவிஞன் எழுதும் ஒவ்வொரு கவிதையும் அவனது அடையாளத்தை உருவாக்குகின்றன. கவிஞன் கவிதையின் வழியாகவே பிறக்கிறான். அந்த வகையில் நான் பல பிறவிகள் கொண்டவன் எனும் அடோனிஸ் அரசியல் கருத்துக்களை உரத்து சொல்லியதற்காக அரசின் கண்காணிப்பிற்கும் அடக்குமுறைக்கும் சிறை தண்டனைக்கும் உள்ளானவர்.
இவரது அல்கிதாப் என்ற நூல் சமகால இலக்கிய பிரதிகளில் மிக முக்கியமானது. கவிதையும் வரலாறும் சந்திக்கும் முக்கிய புள்ளியது.


அரசியல்காரணங்களுக்காக கொல்லப்பட்ட கவிஞர்கள், அடக்குமுறைகள், தனது கவிதை மூன்றையும் ஒன்றிணைத்து இந்த புத்தகத்தை அவர் வடிவமைத்திருக்கிறார். இன்றுள்ள அரபு சூழலில் இவரது கவிதைகள் தீவிரமான மாற்றுமுனைகளை சுட்டிக்காட்டுகின்றன.



குறிப்பாக மதம் சார்ந்த கட்டுபாடுகள் மற்றும் ஒடுக்குமுறைகளை பற்றி பேசும் போது அடோனிஸ் மதம் நிறுவனமானதை மட்டுமே தான் எதிர்த்து வருவதாகவும் அதே நேரம் தனிநபர்களின் மெய்தேடல் மதநிறுவனங்களுக்குள் அடங்காதது. அது ஒரு மனிதனின் அகப்பிரச்சனை. அதனை தான் நம்புகிறேன். புரிந்துகொள்கிறேன் என்றும் சொல்கிறார்.


 பதின்வயதில் முதன்முறையாக தான் ஒரு ஆண் என்று உணர்ந்த தருணத்தை பற்றி சொல்லும் போது தன் உடல் திடீரென தூக்கத்திலிருந்து விழித்து கொண்டு விட்டதை போல தான் உணர்ந்ததாகவும் அதுவரை இல்லாமல் பெண்கள் மிக நெருக்கமாகவும் வியப்பாகவும் தன் கண்ணில் பட்டதையும் எழுதுகிறார்.



அப்படி பெண்களின் மீதான மயக்கத்தில் அலைந்த போது ஒரு பெண் தன்னை கிராமத்தின் புறவெளிக்கு அழைத்து சென்று அவள் மீது தன்னை படுத்துக் கொள்ள செய்தபோது தான் ஒரு புல்வெளியின்மீது சயனித்து கிடப்பதை போல உணர்ந்ததாகவும், உடல் ஒரு உயிருள்ள தாவரம் என்பதை அன்று தான் முழுமையாக உணர்ந்து கொண்டதாகவும் அதன்பிறகு எங்காவது புல்வெளியை கண்டால் தனது உடல் தானே கிளர்ச்சி கொண்டுவிடுவதாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார் அடோனிஸ்.



சிரியாவின் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த அடோனிஸ் ஒராசியர் பள்ளியில் படித்தவர். முதன்முறையாக அருகாமை நகரில் உள்ள பள்ளிக்கு தனியே செல்லும் போது ஆற்றை கடந்து செல்ல வேண்டிய அவசியம் உண்டானது. ஆறு தாண்டி செல்பவர்கள் வீடு திரும்பாமல் போய்விடக்கூடும் என்று பயந்து போன அம்மா அவரிடம் பலமுறை அவர் வீடு திரும்பிவிட வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டினாள். அவரும் உடன் படிக்கும் இன்னொரு மாணவருமாக சுழித்தோடும் ஆற்றை கடந்து படிக்க சென்றார்கள்.  பள்ளி முடிந்து வீடு திரும்பி வந்த போது அம்மா தன்னை கட்டிக் கொண்டு அழுதார், அது நினைவில் ஈரம் மாறாமல் அப்படியே இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்



அந்த நாட்களில் சொற்களின் மீது விசேசமான விருப்பம் உண்டாக துவங்கியது. முதன்முறையாக ஒரு கவிதையை எழுதி அதை வாசித்தபோது சொல்ல முடியாத சந்தோஷம் ததும்பியது.


முப்பது நாற்பது வருசங்களுக்கு பிறகு தான் பிறந்த கிராமத்தை பார்க்க சென்ற போது அந்த ஊரில் தன் நினைவில் இருந்த காட்சிகள் எதுவுமேயில்லை. பல ஆண்டுகாலமாக புறக்கணிக்கபட்டு அந்த கிராமம் ஒரு புதைமேட்டினை போல இருந்தது.



அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டுவெளியேறியவர் என்பதால் அடோனிஸ் அவரது தந்தையின் மறைவிற்கு கூட கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் பலவருசத்தின் பிறகு அப்பாவின் புதைமேட்டினை கண்ட போது அது தன்னை உற்று கவனித்து கொண்டிருந்ததை தான் உணர்ந்ததாக குறிப்பிடுகிறார்



அரபு இலக்கியம் கற்பிக்கும் பேராசிரியராக அடோனிஸ் லெபனான் பல்கலைகழகத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது பாரீஸில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றிவருகிறார்.



கவிதையின் முக்கிய பணிகளில் ஒன்று வரலாற்றை மறுபரீசலனை அல்லது விசாரணை செய்வது. வரலாற்று பெருமைகளுக்காக கவிதைகள் ஒரு போதும் பூரிப்படைவதில்லை. மாறாக வரலாற்றை அது தொடரும் ஒரு நிகழ்வாக கணக்கில் எடுத்து கொள்கிறது. அதை எதிர்கொள்வதற்கான புள்ளியை உருவாக்க முயல்கிறது.


அரபு உலகின் மிக முக்கிய பிரச்சனை. அதன் கடந்தகால பெருமைகள். அதை நினைத்தே மயங்கி கிடப்பதை விடவும் சமகால அரசியல் மாற்றங்களை, அதன் வழி உருவான சுதந்திர உணர்வை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தனது கவிதைகள் வரலாற்றின் மறுதலிப்பிலிருந்தே உருவாகின்றன என்கிறார் அடோனிஸ்.



சிறிய கிராம வாழ்க்கையிலிருந்து இடம்பெயர்ந்து பாரீஸ் நகரிற்கு வந்த போது கண்ணை கட்டி விட்டது போலவே இருந்தது. ஒரு மழைநாளில் ஈபில் கோபுரத்தின் முன் நின்றபோது எலும்புகள்  கூட நடுங்குமளவு குளிர்ச்சி உடலில் ஏறியது. அந்த மழையோடு பாரீஸ் நகரின் வீதிகள், குறுகலான சந்துகளில் நடந்து அலைந்தார். எத்தனை கவிஞர்கள், கதைஞர்கள், வாழ்ந்த நகரமது. ஒவ்வொரு வீதியும் அதன் கடந்தகால நினைவுகளில் முழ்கிகிடப்பதை கண்டார் அடோனிஸ். அந்த மழைநாள் தனக்கு பாரீஸ் நகரின் அந்தரங்கங்களை அறிமுகம் செய்து வைத்தது அதன்பிறகு பாரீஸ் நகரம் எனது சொந்த ஊரைப்போலானது என்று புன்னகையுடன் நினைவு கொள்கிறார்.



கவிஞனின் கவனம் எப்போதும் சிறிய விஷயங்களில் தான் அதிகம் நிலை கொள்கிறது என்னும் அடோனிஸ் டோக்கியோ நகரிற்கு சென்ற போது அங்கு தான் தங்கியிருந்த அறையில் இருந்த தீப்பெட்டிகளின் அழகில் மயங்கி ஒரு நாளைக்குள் விதவிதமான நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டிகளை சேகரித்திருக்கிறார். அதை அரிய பொக்கிஷம் போல தனது வீடு திரும்புதலில் எடுத்து கொண்டுவந்து தனது நண்பர்களிடம் காட்டி அதிசயத்தார்.



ஐரோப்பா எப்போதுமே அரபு உலகை கண்காட்சி பொருளாகவே பார்த்து கொண்டிருக்கிறது. அதற்காகவே ஐரோப்பாவை தான் வெறுக்கிறேன். கிழக்கு மேற்கு என்று நிலவியல் ரீதியாக உலகை பிரித்து வைத்துக் கொண்டாலும் கவிதையின் வழியாக தான் உருவாக்கும் உலகில் அந்த அடையாளங்கள் எதுவுமில்லை. அதில் ஒரேயொரு மனிதனும் ஒரேயொரு உலகமும் மட்டுமே இருக்கிறார்கள் என்கிறார் அடோனிஸ்.


 


தையற்காரனே எனது காதல் கிழிந்து போய்விட்டது
தைத்து தர முடியுமா
காற்றை நூலாக்க முடிந்தால்
தைத்து தர இயலும்.
**
நான் சாத்தான் கடவுள் இருவரையும் விரும்புவதில்லை
இருவருமே தடுப்பு சுவர்கள்.
இவருமே என் கண்களை மூடச்செய்பவர்கள்.


என்பது  போன்ற பல நூறு சிறந்த கவிதை வரிகளின் வழியே தனித்த கவிஆளுமையாக இருப்பவர் அடோனிஸ்.



இவரது முக்கிய கவிதை தொகுதிகள்.


1.       Mihyar of Damascus


2.       A Time Between Ashes and Roses (Syracuse University Press, 2004)


3.       The Pages of Day and Night (2001)


4.       Transformations of the Lover (1982)


5.       The Book of the Five Poems (1980)


6.       The Blood of Adonis


 

0Shares
0