நேற்று புதுவையிலிருந்து எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொலைபேசியில் அழைத்தார். 98 வது வயதில் அண்டரெண்டப்பட்சி என்ற தனது புதிய கதையை எழுதியிருக்கிறார். நண்பர் இளவேனில் அதை வாசிப்பதற்காக எனக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார்.
அதைப் படித்துவிட்டீர்களா என ஆசையோடு கேட்டார்.
தனது முதல்கதையை பற்றித் தெரிந்து கொள்ளும் இளம் எழுத்தாளரின் குரலைப் போலிருந்தது.
இந்த ஊரடங்கு நெருக்கடிகள் எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. தைரியத்துடன். உற்சாகத்துடன் எழுத்தாளன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் போலிருந்தது அவரது உரையாடல்.
பெருமரங்களின் பலம் அவை மண்ணில் ஆழ வேர் ஊன்றி நிலைத்திருப்பதே. அது தான் கிராவின் பலமும். புதிய கதைகள் எழுத வேண்டும் என்ற அவரது வேட்கை எனக்கு மிகுந்த உத்வேகம் அளித்தது.
மனிதர்களை சந்திக்காமல் இருப்பது பெருந்துயரம். மனிதனுக்கு இன்னொரு மனிதன் தேவை. முகம் பார்த்துக் கொண்டாவது இருக்க வேண்டும். பேச்சு தானே மனிதனின் பலம். பேச்சுதுணை என்பது எவ்வளவு பெரிய விஷயம். இது போன்ற பெருந்தொற்று நோய்களை உலகம் கண்டிருக்கிறது. எல்லாவற்றையும் மனிதன் முறியடித்துவிடுவான் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு பேசினார்.
அது எழுத்தாளனின் குரல் மட்டுமில்லை. மண்ணை நேசிக்கும் விவசாயியின் குரல். வாழ்க்கையின் மீது எவ்வளவு பற்று கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளம்.
இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவின் வேறு மொழிகளில் அதன் படைப்பாளிகள், பல்துறை கலைஞர்கள் இவ்வளவு Zoom Meeting மற்றும் இணைய உரைகள், கலந்துரையாடல்கள் நிகழ்த்தவில்லை. தமிழில் தான் அபூர்வமாக நடந்து வருகிறது. வேறு மொழிகளில் விற்பன்னர்கள், துறை சார்ந்த பேராசிரியர்கள். ஒன்றிரண்டு படைப்பாளிகள் தான் இணையவழி உரையாற்றுகிறார்கள். அதுவும் கட்டணக்கூட்டம்.
தமிழில் நிறைய புத்தக அறிமுக உரைகள். காணொளி பகிர்வுகள் நடந்து வருகின்றன.
எனது நண்பர்களாக உள்ள வங்க மொழி மற்றும் அஸ்ஸாமிய படைப்பாளிகளிடம் பேசிய போது அவர்கள் அப்படி இங்கே எதுவும் நடக்கவில்லை என்றே சொன்னார்கள் என்றேன்.
சந்தோஷம் என்று சிரித்தார்.
அண்டரெண்டப் பட்சியின் உரையாடல் என்ற கதை சொல்லும் முறையில் மிக அழகான கதை ஒன்றை கிரா எழுதியிருக்கிறார். உயிரினங்களின் காம வேட்கை எப்படி உருவானது என்பதை அழகாகக் கதையின் வழியே எடுத்துப் பேசுகிறார். அதில் தான் எத்தனை கேலி, கிண்டல். புதிய தகவல்கள். பறவைகள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று கதையில் ஒரு வரி வருகிறது.
டால்ஸ்டாய் சிறுவர்களுக்குக் கதை சொல்வது போன்ற புகைப்படம் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். அப்படி தான் கிரா நமக்குக் கதை சொல்கிறார். இந்தக் கதையினை வாசிக்கையில் அவரது நினைவுகள் எவ்வளவு துல்லியமாக இருக்கின்றன என்று வியப்பு ஏற்படுகிறது. அடுத்து தான் எழுத இருக்கும் புதிய கதையைப் பற்றி விளக்கினார். கூடவே ஒரு கதை எழுதுவதற்காக எழுத்தாளன் எதையெல்லாம் சேகரிக்கிறான். அதில் எவ்வளவு பயன்படுத்திக் கொள்கிறான். எவ்வளவு மிச்சம் வைக்கிறான் என்பதைப் பற்றி புதிதாக எழுதிவருவதாகச் சொன்னார். நிச்சயம் இளம்படைப்பாளிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றேன்.
பேச்சு கிருஷ்ணர் பிறந்த மதுராவிற்கு அவர் சென்று வந்த நினைவுகளை பற்றியதாகத் திரும்பியது. மதுராவில் இருந்து பசுக்களுடன் தமிழகம் வந்த ஒருவனைப் பற்றிய கதையை விவரிக்கத் துவங்கினார். புத்தம் புதிய கதை. அறியாத நிகழ்வுகள். தன்னை மறந்து அவர் கதையை விவரிப்பது கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தது.
எழுத்தாளனின் உலகம் புதிய கதைகளுடன் கதை சார்ந்த உரையாடல்களுடன் தன்னை சுற்றிய மனிதர்களின் வாழ்க்கையை அவதானிப்பதுடன் இணைந்தது. அதை கிரா ஆழ்ந்து செயல்படுத்துகிறார்..
கிராவின் கையெழுத்திலே அவரது கதையை இளவேனில் அனுப்பியிருந்தார். அதில் கைக்காப்பி என்று முகப்பில் எழுதியிருக்கிறார் கிரா. எழுத்தாளனின் பிரதியை கைக்காப்பி என்பதே வழக்கம். அதில் அடித்தல் திருத்தல் இல்லை. கதையின் ஊடாக மாக்சிம் கார்க்கியின் கதை வந்து போகிறது. கதையை ஒரு ஊடகமாகவே கிரா பயன்படுத்துகிறார். ஊரும் மனிதர்களும் மாறாத அதன் வாழ்க்கை போராட்டங்களும் அவரது நினைவில் அப்படியே இருக்கின்றன.
இந்த ஊரடங்கு காலத்தில் புதிய படைப்பைத் தான் வெளியிட்டிருப்பது பற்றிய சந்தோஷம் அவரது பேச்சில் தெரிந்தது.
கிரா நம் காலத்தின் மகத்தான படைப்பாளி. மகாபாரத பீஷ்மரைப் போல தமிழ் இலக்கியத்தின் பிதாமகனாக விளங்குகிறவர்.
அவருக்கு ஞானபீடம் தரப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.
இந்த ஆண்டு அந்தக் கனவு நிறைவேற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
••