அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல்

புதிய சிறுகதை

டாக்டர் மோகன் தங்கையா தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு இரண்டாம் முறையாகப் பிள்ளையார் கோவில் தெரு வரை போய் வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாகத் துவங்கியிருந்த அன்பரசன் கிளினிக் வெளியே முப்பது நாற்பது பேருக்கும் மேலாகக் காத்திருந்தார்கள்.

மணி ஐந்தாகியிருந்த போதும் இன்னமும் டாக்டர் வரவில்லை. ஒருவேளை ராயல் ஹாஸ்பிடலில் இருப்பாரோ என்னவோ.

பெட்டிக்கடையினை ஒட்டித் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மருத்துவமனை வெளியே காத்திருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி என்ன அன்பரசனிடம் யாரும் செய்யாத சிகிட்சை இருக்கிறது என இப்படிக் காத்துக்கிடக்கிறார்கள் என்று எரிச்சலாக வந்தது.

டாக்டர் அன்பரசன் எம்.டி என்ற அந்தப் பெயர் பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இவ்வளவு தான் விளம்பரம். இதுவே மக்களை இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.

அவர் முதன்முறையாக மேட்டுத் தெருவின் கடைசியில் கிளினிக் ஆரம்பித்தபோது இதைவிடவும் பெரிய பெயர்பலகை செய்து மாட்டியிருந்தார். கிளினிக் ஆரம்பித்த நாளில் இரண்டே பேஷண்டுகள். வெறும் எண்பது ரூபாய் வருவாய்.

இந்த முப்பது வருஷங்களில் அவர் ஆறு இடங்களுக்குக் கிளினிக்கை மாற்றிவிட்டார். ஆனால் அவரிடம் நோயாளிகள் வரவேயில்லை. ராசியில்லாத டாக்டர் என்ற பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது.

அன்பரசன் வெறும் பொடிப் பையன். கிளினிக் ஆரம்பித்து ஆறு மாதக்காலத்திற்குள் நோயாளிகள் வரிசை கட்டி நிற்கிறார்கள். எப்படியும் ஒரு நாளைக்கு முப்பதாயிரத்திற்கும் குறையாமல் வருமானம் வரும். இது தவிர இரண்டு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவராக வேறு வேலை செய்கிறான். சம்பாத்தியம் கொட்டத்தான் செய்கிறது. நிச்சயம் அடுத்த வருஷம் இவன் பெரிய கிளினிக் வைத்துவிடுவான் என்று அவருக்குப் பொறாமையாக இருந்தது

அந்தப் பொறாமையை அவர் மறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தெரிந்தவர்களிடம் வெளிப்படையாகவே பேசினார். வம்பு பேசுவதற்கு வயதா என்ன. ஆனால் வெறுமனே பொறாமைப்பட்டு என்ன ஆகிவிடப்போகிறது

இவனைப் போல இளம் மருத்துவர்கள் பலர் நகரில் முளைத்துவிட்டார்கள். மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உருவாகிவிட்டன. டாக்டர்கள் தான் ஊரில் அதிக நிலத்தை, வீடுகளை விலைக்கு வாங்குகிறார்கள்.

ஆனால் தன்னைப் போல முப்பது ஆண்டுகாலமாக மருத்துவமனை நடத்திக் கொண்டிருக்கும் சாதாரண எம்பிபிஎஸ் டாக்டர்களின் கதி. ஒரு நாளைக்குப் பத்து நோயாளிகள் வந்தாலே அதிர்ஷடம். சில நாட்கள் காலை ஏழு மணிக்கு கிளினிக் வந்தால் பனிரெண்டு மணி வரை ஒரு ஆள் கூட வருவதில்லை. இதில் எதற்காகக் கிளினிக்கை திறந்து வைத்து உட்கார்ந்திருக்க வேணடும்.

நேரத்தை கடத்துவதற்காகவே நாலு நியூஸ் பேப்பர்கள் வாங்கிப்போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். காலை கிளினிக் வந்தவுடன் அந்தப் பேப்பர்களை வரி விடாமல் படிப்பார். நர்ஸ் மேகலா தன் அறையினுள் உட்கார்ந்து ஸ்ரீராமஜெயம் எழுதிக் கொண்டிருப்பாள். மருந்துக் கம்பெனி பிரநிதிகள் சிலர் அவரைத் தேடி வருவதுண்டு. அவர்களும் கூட அன்பரசனைப் பற்றித் தான் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள்

நேற்று கூட ஒரு விற்பனை பிரதிநிதி அவரிடம் சொன்னான்

“ எக்ஸ் எம்எல்ஏ முத்துசாமி விஷயம் கேள்விபட்டீங்களா டாக்டர். அப்பல்லோ வரைக்குப் போய்க் கைவிட்ட கேஸ். ஆனால் அன்பரசன் நாலு நாள்ல குணமாக்கிட்டார். முத்துசாமியோட மகன் ஒரு தட்டு நிறைய ஐநூறு ரூபாயை வச்சி கொண்டுவந்து டாக்டர் கால்ல கொட்டியிருக்கானு சொல்றாங்க. எல்லாம் கைராசி“

“நல்ல டாக்டர்னு சொல்லு நான் ஏத்துகிடுறேன். அது என்ன கைராசி முகராசினு.. கைராசின்னா மருந்து குடுக்காமல் குணமாக்கச் சொல்லு பாப்போம். இதெல்லாம் வெறும் ஹம்பக்“.

“அப்படியில்லை டாக்டர். நீங்க ரொம்ப சீனியர். மெடிகல் ஜேர்னல்ல கூட ஆர்டிகிள் எழுதுறீங்க. ஆனா இங்கே கூட்டம் வருதா. நாம எவ்வளவு பெரிய டாக்டரா இருந்தாலும் அதிர்ஷடம் கூட இருக்கணும்“

“அதெல்லாம் முட்டாள்தனம். இந்த மக்களைத் திருத்த முடியாது“

“அன்பரசன் கிட்ட போயி குணமாகாதவங்களே கிடையாது. அதுக்கு என்ன சொல்றீங்க“

“அது எல்லாம் பொய். அவன் என்ன கடவுளா. பத்துப் பேருக்கு வைத்தியம் பாத்தால் ரெண்டு பேருக்குக் குணமாகாமல் தான் போகும். அது வெளியே தெரியாது. இதெல்லாம் வெறும் மவுத்டாக்“

“மவுத்டாக் சும்மா வந்துராது டாக்டர்.. அன்பரசனோட அப்பா நாடார் ஸ்கூல்ல வாத்தியாராம். அன்பரன் அக்காவும் டாக்டராம். லண்டன்ல வேலை பாக்குதாம்  அன்பரசன் ரொம்ப சிம்பிளா பழகுறார் .“

“இதை எல்லாம் ஏன்கிட்ட ஏன்பா சொல்றே. நான் கேட்டனா. யாரு எப்படிப் போனா எனக்கு என்ன. “

“கோபால்சாமி டாக்டர் இடத்தைப் பிடிச்சிருவார்னு பேசிகிடுறாங்க“

“பிடிச்சா பிடிக்கட்டும்… நீ கிளம்பு“ என்று அந்த மருத்துவிற்பனை பிரதிநிதியை துரத்தி அனுப்பினார்

மருத்துவத்திற்கும் ராசிக்கும் என்ன தொடர்பிருக்கிறது. அன்பரசன் எழுதும் அதே மருந்தை தான் தானும் எழுதப்போகிறோம். ஆனால் அவனிடம் போகிறவர்கள் கைராசியான டாக்டர் என்கிறார்கள். தன்னைத் தேடி ஒருவரும் வருவதில்லை. இது என்ன முட்டாள்தனம்.

இவ்வளவிற்கும் தான் படித்த அதே மருத்துவக் கல்லூரியில் தான் அன்பரசனும் படித்திருக்கிறான். தன் மகள் வயது தானிருக்கும். இவன் வயதில தானே கனவுகளுடன் நாம் கிளினிக் துவங்கினோம். அவன் ஜெயிப்பது நம்மை ஏன் தொந்தரவு செய்கிறது.

அன்பரசனுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்குத் தொடர்ந்து தோன்றியபடியே இருந்தது. அன்பரசன் கிளினிக் இருந்த ரோட்டில் பள்ளம் தோண்டி விட்டால் நோயாளிகள் வருவது குறைந்துவிடும் எனக் கிருஷ்ணதாஸ் மூலம் ஏற்பாடு செய்தார்.

தோண்டிப்போட்ட குழியைத் தாண்டி ஆட்கள் வர சிரமப்பட்டார்கள். அன்பரசனின் பைக் கூட வரமுடியவில்லை. அந்தக் குழியை மூடும்வரை தற்காலிகமாக ஏஞ்சல் லேப்பில் நோயாளிகளைப் பார்ப்பது என அன்பரன் முடிவு செய்யவே அங்கே கூட்டம் நிரம்பியது. லேபிற்கும் வருமானம் கூடியது. சில நாட்களில் கவுன்சிலர் தலையிட்டு உடனே அந்தக் குழியினை மூடியதோடு தார் போட்டு ரோட்டினையும் சரி செய்து கொடுத்துவிட்டார்

இதன்பிறகு அன்பரசன் கிளினிக் இருந்த இடத்து உரிமையாளரிடம் வாடகையை உயர்த்திக் கேட்க வைப்பது. முனிசிபாலிடிக்குப் புகார் அனுப்பி வைப்பது எனப் பலவிதங்களில் முயன்று பார்த்தார். எதுவும் அவனது வளர்ச்சியைத் தடுக்கவில்லை. அதிர்ஷ்டம் அவன் பக்கம் தான் எப்போதுமிருந்தது

••.

ஏதோ ஒரு சக்தி தனக்கு எதிராக வேலை செய்கிறது என்று மோகன் உறுதியாக நம்பினார். அது என்னவென்று தான் அறிந்து கொள்ள முடியவில்லை

அதிர்ஷடம் ஏன் தன்னை நெருங்கவேயில்லை. இத்தனை வருஷமாகக் காத்துகிடக்கிறோமோ, அதற்குக் கருணையே கிடையாதா.

ஏழு ஆண்டுகள் காத்திருந்தால் நிச்சயம் அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் என்பார்களே. தான் முப்பது ஆண்டுகளாகக் காத்திருந்தும் அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல் கூடத் தன் மீது படவில்லையே என அவருக்குக் குழப்பமாக இருந்தது

••

மோகனின் சிறுவயதில் அந்த ஊரில் மொத்தமே நான்கு டாக்டர்கள் தான் இருந்தார்கள். அதிலும் கோபால்சாமி டாக்டர் தான் ரொம்பவும் பிரபலம்.. அவரது கிளினிக்கின் மரப்பெஞ்சில் எப்போதும் நோயாளிகள் காத்துகிடப்பார்கள். சுற்றிலும் இருந்த கிராமங்களிலிருந்து அவரைத் தேடியே வருவார்கள். அவரும் கிராமவாசிகளிடம் கறாராகப் பணம் கேட்பதில்லை. சிலருக்கு இலவசமாகவே அறுவை சிகிட்சை கூடச் செய்திருக்கிறார்.

கோபால்சாமி மருத்துவமனைக்குப் போனால் பூச்சிமருந்து குடித்தவர்களைப் பிழைக்க வைத்துவிடுவார் என்றொரு நம்பிக்கையிருநத்து. அது உண்மையும் தான். கணவனோடு சண்டையிட்டுக் கொண்டு பூச்சி மருந்து குடித்த பெண்கள். கடன் தொல்லையால் பாலிடால் குடித்தவர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

ஐந்தே படுக்கைகள் கொண்ட அவரது மருத்துவமனை சில வருஷங்களில் நான்கு மாடி கொண்டதாக மாறிவிட்டது. காலை ஆறு மணி முதல் இரவு பத்தரை வரை கோபால்சாமி கிளினிக்கில் இருப்பார். இரவு கிளம்பும் போது அவரே தனது கறுப்பு நிற அம்பாசிடர் காரை ஒட்டிக் கொண்டு போவார். பிரௌண் கலர் லெதர் பை ஒன்றை கையில் கொண்டு எடுத்துக் கொண்டு வெளியே வருவார். அந்தப் பை நிறைய அன்றைய வருமானம் இருக்கும்.

ஒரு ரூபாய் நோட்டுகளைப் போட்டு வைக்கத் தனியே ஒரு மரப்பெட்டி வைத்திருத்தார் என்பார்கள். அது உண்மை. மோகனே பார்த்திருக்கிறார். டாக்டரின் நாற்காலியை ஒட்டி அந்த மரப்பெட்டி நிறைய ஒரு ரூபாய்கள் குவிந்து கிடக்கும்.

வஉசி நகரில் டாக்டர் டென்னிஸ் கோர்ட், நீச்சல் குளத்துடன் பெரிய பங்களா கட்டி திறப்பு விழா செய்தபோது ஊரே திரண்டு போனது.

அவரைப் பார்த்து தான் மோகனின் அய்யா தன் மகனை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். அதற்காக ஒருதடவை கோபால்சாமியிடம் மகனை அழைத்துப் போய் ஆலோசனை கேட்டு வந்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு மோகனுக்குள் அப்படித் தான் உருவானது. வேர்விடத் துவங்கியது.

மருத்துவக் கல்லூரி முடித்தவுடன் பயிற்சி காலத்தில் மட்டுமே பொதுமருத்துவமனையில் வேலை செய்தார். பின்பு ஒரு ஆண்டுக் காலம் கோபால்சாமி மருத்துவமனையிலே இளம் மருத்துவராக வேலை செய்தார். அதன்பிறகு தனியே கிளினிக் ஆரம்பித்துவிட்டார்

அந்த நாட்களில் மோகனுக்கு இந்த ஒரே கனவு தான் டாக்டர் கோபால்சாமியின் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது. ஆனால் அது இத்தனை ஆண்டுகள் கடந்தும் நடக்கவில்லை. கோபால்சாமி இறந்து அவரது மகன் கிளினிக்கை நடத்த ஆரம்பித்து அவனாலும் அந்த இடத்தைத் தக்கவைக்க இயலவில்லை. இனி அப்படி ஒரு மருத்துவரால் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியாது. அந்தக் காலம் இனி திரும்பி வராது.

••

இந்த முப்பது வருஷங்களில் ஊர் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. புதிய அரசியல் தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். புதிது புதிதாகப் பள்ளிக்கூடங்கள் வந்துவிட்டன. பழைய சினிமா தியேட்டர் எதுவும் தற்போதில்லை. கார்களும் பைக்கும் மிக அதிகமாகிவிட்டது. அவரைப் போல அந்தக் கால எம்பிபிஎஸ் டாக்டர்கள் நாலைந்து பேர் மட்டுமே இன்றிருக்கிறார்கள்.

இப்போது யார் வெறும் எம்பிபிஎஸ் படித்துவிட்டு கிளினிக் நடத்துகிறார்கள். எல்லாம் எம்டி. எம்எஸ். இன்னும் எத்தனையோ வெளிநாட்டுப் படிப்புகள். நட்சத்திர விடுதிகளைப் போல அறைகள் கொண்ட மருத்துவமனைகள் வந்துவிட்டன. நோயாளிகள் முன்பை விடப் பெருகியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தன்னைப் போன்ற சாதாரண டாக்டர்களைத் தேடி வருவதில்லை. மதிப்பதில்லை.

புதிதாகக் கிளினிக் ஆரம்பித்த காலத்தில் விளம்பரத்திற்காகச் சினிமா தியேட்டரில சிலைடு போடச் செய்தார். காந்தி மைதானத்தில் பெரிய விளம்பரப் பலகை வைத்தார். பொருட்காட்சிக்கு வந்த சினிமா நடிகர் ஒருவரை நண்பர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து போட்டோ எடுத்து மாட்டினார். இது எல்லாம் அவருக்கே வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால் இதனால் ஒரு பலனும் ஏற்படவில்லை.

ஒரு மருத்துவரின் விதியை அதிர்ஷடம் எழுதுவதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.

கிளினிக் புகழ்பெற வேண்டும் என்பதற்காக நாள் தவறாமல் முருகன் கோவிலுக்குப் போய் வந்தார். வாரம் ஒரு நாள் ஆஞ்சநேயரை வழிபட்டார். பல்வேறு ஜோதிடங்கள் பார்த்தார். பொட்டல்பட்டியில் ஒரு சித்தர் இருக்கிறார் என்று தேடிப்போய் அவரிடம் ஆசி பெற்று வந்தார். அவரது ஆலோசனையின் படி மருத்துவமனையில் கிழக்கு பார்த்த அறையில் அமர்ந்து கொண்டார். ஆனால் நோயாளிகள் அவரைத் தேடி வரவில்லை

டாக்டர் மோகனின் அய்யா காய்கறிமார்க்கெட்டில் தேங்காய் மண்டி வைத்திருந்தார். கம்பத்தில் நாலைந்து தென்னந்தோப்புகளைக் குத்தகைக்கு எடுத்திருந்தார். மகன் கிளினிக் வைத்தும் வருமானம் இல்லையே என்ற வேதனை அவருக்குள் அதிகமாக இருந்தது.

தன் மகனை டாக்டராகப் படிக்க வைத்த பணத்தைத் திரும்ப எப்படி எடுப்பது. என்ற கவலை அவரை அரித்துக் கொண்டிருந்தது எப்போது டாக்டர் கோபால்சாமி போலப் பங்களா கட்டுவது. எப்போது வீடு கடைகள் என்று வாங்கிப் போடுவது என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் கிளினிக் மூடும் நேரம் அவர் மருத்துவமனைக்கு வந்து அன்றைக்கு எவ்வளவு வருமானம் என்று மோகனிடம் கேட்பார்.

அதைச் சொல்வதற்கே மோகனுக்கு எரிச்சலாக இருக்கும். தயங்கி தயங்கிச் சொல்வார்.

“கரண்ட் செலவுக்குக் கூட உன்னாலே சம்பாதிக்க முடியலை. பேசாமல் துபாய்க்கு வேலைக்குப் போயிடு. நல்ல சம்பளமாவது கிடைக்கும்“ என்பார் அய்யா

அதைக்கேட்கும் போதெல்லாம் மோகனுக்குத் தனது தோல்வியின் கசப்பு தலைக்கு ஏறும்.

“கிளினிக்கை திறந்து வச்சித் தான் உட்கார முடியும். ரோட்டில நின்று போறவர்றவங்களை ஆள்பிடிக்க முடியாதுல்லே“ என்று கோபமாகச் சொல்லுவார்

“உனக்கு பின்னாடி ஆரம்பிச்ச லாரன்ஸ் டாக்டர் மகன் கிளினிக்ல கூட்டத்தைப் பாரு “

“அது ஆர்த்தோ கிளினிக்“

“அப்போ அதுக்குப் படிச்சிருக்க வேண்டியது தானே“

“நான் படிச்சதுக்கு வைத்தியம் செய்தால் போதும்“

“நான் உன்னை டாக்டருக்கு படிக்க வைச்சது சம்பாத்தியம் பண்ண. அதைச் செய்ய முடியலைண்ணா.. பேசாம இழுத்துமூடிட்டு என் கூடத் தேங்காய் மண்டிக்கு வந்து சேரு. அதுல இதை விட வருமானம் ஜாஸ்தி ‘“

என்று மோகனின் முகத்திற்கு நேராகவே அய்யா சொல்லுவார். அவர் அப்படித்தான். எதையும் மறைத்து பேசுவதேயில்லை.

திருமணம் செய்து கொண்டால் அவரது தோஷம் நீங்கி கிளினிக் புகழ்பெற்றுவிடும் என்ற யோசனையை யார் சொன்னது எனத்தெரியவில்லை. ஆனால் மோகனின் அய்யா அதை உறுதியாக நம்பினார். முடிந்தால் டாக்டர் மகளைத் தேடி திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று அலைந்தார்.

டாக்டர் மகளை விடவும் பெரிய இடத்தில் பெண் கிடைத்தது. சாந்தாவின் அப்பா ஒரு பட்டாசுத் தொழிற்சாலை வைத்திருந்தார். ஒரே மகள். பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தாள். சிவகாசியில் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு கல்யாண மண்டபம் இருந்தது. இருநூறு பவுன் நகையும் அம்பாசிடர் காரும் கொடைக்கானலில் ஒரு வீடும், லட்ச ரூபாய் ரொக்கமும் தருவதாக ஒத்துக் கொண்டார்கள்.

“டாக்டருக்கு படிக்க வைத்ததிற்கு இது ஒன்று தான் பலன் “என்றார் மோகனின் அய்யா

மோகனுக்குத் தன்னோடு படித்த அழகான பெண்களோடு ஒப்பிடும் போது குள்ளமாக, தலையாட்டி பொம்மை போல உடல் கொண்டிருந்த சாந்தாவைப் பிடிக்கவில்லை. ஆனால் மாமனார் தயவிருந்தால் நிச்சயம் பெரிய மருத்துவமனை துவங்கிவிடலாம் என்று நினைத்துத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்

அவருக்குக் கோட் தைப்பதற்காக மெட்ராஸிற்கு விமானத்தில் அழைத்துக் கொண்டு போனார்கள். திருமண மண்டப வாசலில் சீதனமாகப் புதுக்கார் நின்றிருந்தது. அவரது திருமணத்தை மிகப்பெரியதாக நடத்தினார்கள்.

திருமண வாழ்க்கையால் அவரது உடம்பில் சதை போட்டதைத் தவிர வேறு பெரிய மாற்றம் எதுவும் உருவாகிவிடவில்லை. தனது புதுக்காரை கிளினிக் முன்னால் நிறுத்த இடமில்லை என்பதற்காகக் கிளினிக்கை இரண்டாவது கேட்டை ஒட்டிய வீதிக்கு மாற்றினார்.

புதிய மருத்துவமனைக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் மாமனாரே செய்து கொடுத்தார். வாடகை கட்டிடம் என்றாலும் பெரிய பெரிய அறைகள் கொண்டதாக இருந்தது. மோகன் அமர்ந்து கொள்ளும் சுழல் நாற்காலியை விசேசமாகச் செய்திருந்தார்கள். நோயாளிகள் காத்திருக்கும் வரவேற்பறையில் கறுப்பு வெள்ளை டிவி கூட வாங்கிப் பொருந்தினார்கள். பெரிய மீன் தொட்டி ஒன்றும் வைக்கபட்டிருந்தது. வெளிச்சுவரில் என்னைப் பார். சிரி என்ற கழுதையின் படம கொண்ட திருஷ்டி போட்டோ ஒட்டப்பட்டிருந்தது.

கிளினிக் ஆரம்பித்த நான்காம் நாள் மாலை புதுக்குடியிலிருந்து ஒரு சிறுமியை ஆம்புலன்ஸில் கொண்டு வந்திருந்தார்கள்.. சிறுமி மூச்சிரைப்பில் துடித்துக் கொண்டிருந்தாள்

கிளினிக்கில் சிறுமியை பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக ஒரு நரம்பு ஊசி போட்டார். பின்பு ட்ரிப்ஸில் மருந்து கலந்து போட செய்தார். இரண்டு மணி நேரத்திற்குள் அந்தச் சிறுமி இறந்து விட்டாள்

கிளினிக்கில் ஏற்பட்ட முதல் மரணம். சிறுமியின் தாயும் தகப்பனும் அழுது கூச்சலிட்டார்கள். ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து சண்டையிட்டார்கள்.. டாக்டரின் தவறான சிகிட்சையே காரணம் என்று ஒருவர் சப்தமிட்டார். ஆத்திரத்தில் ஒருவன் கிளினிக்கில் இருந்த மீன்தொட்டியை உடைத்துப் போட்டான். அந்தச் சிறுமியின் உடலைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு பெரிய பஞ்சாயத்தே நடந்தேறியது. அன்றிலிருந்து தான் அவர் ராசியில்லாத டாக்டர் என்ற பெயர் உருவாகத் துவங்கியது. அது எப்படியோ வளர்ந்து உறுதியாகிவிட்டது.

சிறுமியைக் காப்பாற்ற தன்னால் ஆன சிகிட்சைகளைச் சரியாகத் தானே செய்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது. எங்கே ராசி வந்து சேருகிறது என அவர் நிறைய நாட்கள் யோசித்திருக்கிறார்

ராசியில்லாத மருத்துவர் என்று பெயர் வாங்கிவிட்டால் அதை நீக்குவது எளிதானதில்லை போலும்.

••

இனி இந்த மக்கள் எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும். தனக்குச் சாப்பாட்டு பிரச்சனையில்லை. மாமனார் கொடுத்த சொத்து இருக்கிறது. காரும் வசதியான வீடுமிருக்கிறது. இனி மருத்துவராகப் புகழ்பெறாமல் போனால் என்ன நஷ்டம் என்ற முடிவிற்கு வந்திருந்தார்

இதனால் சில நாட்கள் காலைக்காட்சி சினிமாவிற்குப் போய்விடுவார். ஒரு சில நாட்கள் தியானம் கற்பது எனத் தபோவனத்திற்குப் போய்த் தங்கி வருவார். நர்சரி கார்டனில் ஆர்வம் கொண்டு ஒரு இடத்தை வாங்கிச் செடி வளர்க்கச் செய்தார். எதைச் செய்த போதும் மனதில் அந்தக் கசப்பு குமட்டிக் கொண்டேயிருந்தது. தனது தோல்வியை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தன்னால் பணத்தையும் சம்பாதிக்க முடியவில்லை. பெயரையும் சம்பாதிக்க முடியவில்லை.

தன்னால் முடியாத விஷயத்தை யார் யாரோ எளிதாகச் சாதித்துவிடுகிறார்கள். அது தான் தாங்கமுடியாத வெறுப்பாக உள்ளது. அதுவும் இந்த அன்பரசன் வந்தபிறகு அவரால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. அங்கே எவ்வளவு நோயாளி வருகிறார்கள். எவ்வளவு வருமானம் வருகிறது என்பதைப் பற்றியே சதா நினைத்துக் கொண்டிருந்தார்.

பிடிக்காத விஷயம் மண்டைக்குள் புகுந்துவிட்டால் அதை வெளியேற்றுவது கஷ்டம். எந்த மாத்திரையாலும் மனதிலிருக்கும் பொறாமையை அகற்றமுடியாது தானே

••

நர்ஸ் மேகலா எட்டு மணிக்குக் கிளம்பிப் போன பிறகு மோகன் மட்டுமே கிளினிக்கில் இருந்தார். செல்போனில் வீடியோ கேம் ஆடுவது தான் நேரத்தைக் கொல்லும் வழி. சோன்பப்டி விற்பவன் வெளியே மணியோசையுடன் போகும் சப்தம் கேட்டது. வாங்கிச் சாப்பிடலாம் என்ற ஆசை தோன்றியது. ஆனால் வெளியே போக மனதின்றி வீடியோ கேம் ஆடிக் கொண்டிருந்தார். விளையாட்டில் அடையும் வெற்றித் தற்காலிமாக அவரை மகிழச் செய்து கொண்டிருந்தது.

இரவு பத்தரை மணிக்கு அவர் கிளினிக்கை மூடும் நேரம் வாசலில் யாரோ வந்து நிற்பது போலிருந்தது. திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தார்

வாசலில் டாக்டர் அன்பரன் நின்றிருந்தான். அவனது கையில் ஒரு கட்டைப் பை இருந்தது.

இவன் எதற்குத் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்பது போலக் குழப்பத்துடன் ஏறிட்டு பார்த்துக் கொண்டிருந்தார்

“டாக்டர் கிளம்பியாச்சா“ எனப் புன்சிரிப்போடு கேட்டான்

அந்தச் சிரிப்புத் தன்னை ஏளனம் செய்வது போலவே மோகன் உணர்ந்தார்

“இல்லை. ஒரு பேஷண்ட் வீட்டுக்குப் போய்ச் செக் பண்ணணும்“ என்றார்

“எனக்கு ஐந்து நிமிசம் போதும்“ என்றபடியே தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு சில்வர்தட்டினை வெளியே வைத்தான். பிறகு பையிலிருந்த ஆப்பிள் ஆரஞ்சு பழங்களை  எடுத்து வைத்து அதன்மீது. ஒரு ஸ்வீட் பாக்கெட்டினை வைத்தான். பிறகு மஞ்சள் தடவிய கல்யாணப் பத்திரிக்கை ஒன்றை அதன் மேல் வைத்து அவரிடம் நீட்டியபடியே சொன்னான்

“எனக்குக் கல்யாணம். மார்ச் 10, மதுரையில் வச்சிருக்கேன். நீங்க அவசியம் குடும்பத்துடன் வந்து வாழ்த்தணும் டாக்டர்“

அதை வாங்கிக் கொள்வதா, வேண்டாமா எனப் புரியாமல் திகைத்து நின்றார்

அவன் தட்டை நீட்டிக் கொண்டேயிருந்தான். அவர் அதைத் தன் கையில் வாங்கியதும் அவன் சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்து வணங்கினான்

மோகன் எதுவும் பேசவில்லை. அவனைத் தொட்டு எழுப்பி விட்டார்

அவன் மாறாத புன்முறுவலோடு “நீங்க எல்லாம் சீனியர். உங்களோட ஆசீர்வாதம் இருந்தா தான் நான் நல்லா வரமுடியும்“ என்றான்

எதுவும் தெரியாதவர் போல மோகன் கேட்டார்

“எப்படி போகுது கிளினிக்“

“பரவாயில்லை டாக்டர். உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா.. எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க. “

அந்தக் கல்யாணத்திற்குத் தன்னால் வரமுடியாது என்று முகத்திற்கு நேராகச் சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் அதை வெளிக்காட்ட முடியவில்லை. அன்பரசன் அவரிடமிருந்து விடைபெற்றுப் போனபிறகு அவர் கல்யாணப் பத்திரிக்கையைப் பிரித்துப் பார்க்காமலே கிழித்துப் போட்டார்.

பின்பு அந்தத் தட்டில் இருந்த ஸ்வீட் பாக்ஸ், பழங்களை அப்படியே எடுத்துக் கொண்டு வெளியே நடந்தார். சாலை இருண்டிருந்தது.

தந்திக் கம்பத்தை ஒட்டிய சாக்கடையில் கொண்டு போய் அந்தச் சில்வர் தட்டினை வீசி எறிந்தார். ஆப்பிள் பழங்கள் சாக்கடைகள் விழுந்தன. ஸ்வீட் பாக்ஸ் மட்டும் பாதித் திறந்து அதிலிருந்த சில லட்டுகள் வெளியே விழுந்துகிடந்தன

ஆத்திரத்துடன் அந்த லட்டினைக் காலால் ஒங்கி எத்தினார். புழுதியோடு லட்டுச் சிதறிப்போனது.

“கல்யாணம் ஒரு கேடு“ என்று சொல்லியபடியே சாக்கடையை நோக்கி காறி உமிழ்ந்தார்.

பிறகு தனது கிளினிக்கைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தார். ஸ்கூட்டரில் வீடு போய்ச் சேரும்வரை அவரது மனதில் விவரிக்க முடியாத சந்தோஷம் நிரம்பியிருந்தது.

•••

0Shares
0