ஹங்கேரியின் சிறிய நகரமென்றில் பள்ளி ஆசிரியராக இருக்கிறாள் அனா பாஷ். 150 வருடப் பாரம்பரியம் கொண்டது அப்பள்ளி. அங்கே இலக்கியம் பயிற்றுவிக்கும் அவளுக்கு நாடகம், கவிதையில் ஆர்வம் அதிகம். தனது வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் போது உறுதுணையாக உள்ள திரைப்படங்கள் மற்றும் பாடல்களையும் அறிமுகப்படுத்துகிறாள். பதின்ம வயதினரின் புரிதல்களை விரிவுபடுத்துவதிலும், ஆளுமையை வளர்ப்பதிலும் தனித்துவமிக்க ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறாள்.
ஒரு முறை தனது வகுப்பறையில் புகழ்பெற்ற கவிஞர் ஆர்தர் ரைம்போவின் கவிதைகளை அறிமுகம் செய்யும் அனா அவரைப் பற்றிய திரைப்படமான Total Eclipse யைப் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறாள். அதுவும் விருப்பமானவர்கள் பார்த்தால் போதும் இது வீட்டுப்பாடமில்லை என்றும் சொல்கிறாள்.
அவளது வகுப்பில் பயிலும் கூச்ச சுபாவமுள்ள விக்டர் என்ற மாணவன் இப்படத்தைத் தனது வீட்டில் ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவனது தந்தை இது மோசமான திரைப்படம். யார் உன்னைப் பார்க்கச் சொன்னது என்று விசாரிக்கிறார்.
ஆசிரியர் பரிந்துரை செய்தார் என்று விக்டர் சொன்னதும் ஆத்திரமான விக்டரின் தந்தை பள்ளிக்கு வருகை தந்து அனா மீது ஒரு புகார் அளிக்கிறார்.
அந்தப் புகாரில் ஒரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிய அந்தத் திரைப்படத்தை மாணவர்களுக்குச் சிபாரிசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அதற்காக அவள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்.
அனாவைத் தனது அறைக்கு வரவழைத்த பள்ளியின் முதல்வரான ஈவா நடந்தவற்றை விசாரணை செய்கிறாள். ரைம்போவின் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்காகவே அவரது வாழ்க்கையைப் பற்றிய திரைப்படத்தைப் பார்க்கச் சொன்னேன். இதில் தவறு ஒன்றுமில்லை என்று வாதிடுகிறாள் அனா.
அப்படியே இருந்தாலும் பெற்றோர் தலையிட்டுப் புகார் அளித்துள்ளதால் அவள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் முதல்வர். அனா அதை ஏற்க மறுக்கிறாள்.
இந்தப் பிரச்சனை மெல்லப் பெரியதாகிறது. பல்வேறு மாணவர்களின் பெற்றோர்களும் இதில் ஒன்று சேர்கிறார்கள். அனா மீது நிர்வாகத்தின் விசாரணை நடைபெறுகிறது. அவளுக்கு எதிராகச் சக ஆசிரியர்கள் ஒன்று சேருகிறார்கள். அவள் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறாள்.
தனது நோய்வாய்ப்பட்ட தாயைப் பராமரிக்கும் அனா தனியே வாழுகிறாள். வெளிநாட்டில் வசிக்கும் அவளது காதலன் அவளையும் அங்கே வந்துவிடும்படி அழைக்கிறான். ஆனால் அவளுக்குப் பள்ளி ஆசிரியர் வேலை பிடித்துள்ளதால் அதை விட்டுப் போக மனமின்றித் தொடருகிறாள்.
மாணவனின் தந்தையின் மூலம் உருவான பிரச்சனையைப் பற்றி அறிந்த அனாவின் காதலன் வேலையை விட்டுவிட்டு தன்னோடு வந்துவிடும்படி அழைக்கிறான். ஆனால் அதை அனா ஏற்கவில்லை.
பிரச்சனை மேலும் மேலும் சிக்கலாகி வருவதைத் தாங்க முடியாமல் அனா ஒரு நாள் விக்டரின் தந்தையைத் தேடி அவர்களின் வீட்டிற்குச் செல்கிறாள். நடந்த உண்மைகளை நேரடியாக விளக்க முற்படுகிறாள்.ஆனால் விக்டரின் தந்தை அதைப் புரிந்து கொள்ளவில்லை. அவள் ஒழுக்கமீறலுக்குத் துணை நிற்கிறாள் என்று சண்டைபோடுகிறார்.
அனாவின் மீதான விசாரணை எவ்வாறு முடிந்தது என்பதையே படம் இறுதிப்பகுதி விவரிக்கிறது.
ஆசிரியர்களின் மீதான அடக்குமுறையைப் பற்றிப் பேசும் இப்படம் ஹங்கேரியின் இன்றைய கல்விச்சூழல் எப்படியிருக்கிறது என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறது.
அனா வகுப்பறையில் கவிதை கற்றுத்தருவதில் படம் துவங்குகிறது. மாணவர்களுக்குப் பிடித்தமான ஆசிரியராக இருக்கிறாள். வகுப்பறையில் மாணவர்கள் நடந்து கொள்ளும்விதம் மிக இயல்பாக, உண்மையாகச் சித்தரிக்கபட்டுள்ளது. பிரச்சனை துவங்கியதும் மெல்ல சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்ட பூச்சியைப் போலாகிறாள் அனா. அவளைப் புரிந்து கொண்டு அவளுக்காகக் குரல் கொடுக்கும் ஆசிரியர் கதாபாத்திரம் சிறப்பானது.
“You’re paid to teach values. To set the right standards,” என்று ஒரு காட்சியில் ஆசிரியரைப் பார்த்து சொல்கிறார் விக்டரின் தந்தை. எந்த மதிப்பீடுகளைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். உங்களின் மோசமான, பிற்போக்குத்தனமான ஒழுக்கமதிப்பீடுகளை அவர்களும் பின்பற்ற வேண்டுமா, சுதந்திரமான, கலையுணர்வுமிக்க. உண்மையான சிந்தனை கொண்டவர்களாக உங்கள் பிள்ளைகள் வளர வேண்டாமா என்று அனா கேட்கிறாள். அதை விக்டரின் தந்தை புரிந்து கொள்ளவில்லை.
அவர் மட்டுமில்லை. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் இந்தப் பிரச்சனையைத் தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன. உண்மை அறியாத நகர மேயர் பள்ளிக்கான நிதி உதவியை நிறுத்திவிடுகிறார்.
பள்ளிக்குள் ரகசியமாகப் போதை மருந்து விற்பனை நடக்கிறது. அதைத் தடுக்க எவரும் முன்வரவில்லை. ஆனால் மாணவன் சுதந்திரமாகக் கவிதை அல்லது கவிஞனைப் பற்றித் தெரிந்து கொள்ள முற்படும் போது கலாச்சாரத் தணிக்கையாளராக அவனது தந்தையும் அவரைப் போன்ற பெற்றோர்களும் வந்து நிற்கிறார்கள்.
அனா தனது வேலையை இழப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை ஆனால் தன் மீதான குற்றசாட்டு தவறானது. அது ஆசிரியர்களின் செயல்பாட்டினை முடக்கக்கூடியது என்பதாலே தொடர்ந்து போராடுகிறாள்.
அனாவைச் சக ஆசிரியர்கள் நடத்தும் விதம். அவள் மீதான வெறுப்பு. விசாரணையின் போது முதல்வர் நடந்து கொள்ளும் முறை. விசாரணையில் அனா சொல்லும் பதில்கள் எனக் காட்சிகள் நிஜமாக உருவாக்கபட்டுள்ளன.
அனா தனது செயலில் தவறில்லை என்பதால் கடைசிவரை உறுதியாக இருக்கிறாள். விசாரணையை எதிர்கொள்கிறாள். தனது தரப்பினை தெளிவாக எடுத்துச் சொல்கிறாள். ஆனால் அவளை மட்டுமின்றி அவளை நேசிக்கும் மாணவர்களையும் பழிவாங்க முற்படுகிறது பள்ளி நிர்வாகம்
2017 இல் ருமேனியாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக் கொண்டு இப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் காடலின் மால்டோவாய், András Táborosi இன் நேர்த்தியான ஒளிப்பதிவும் Ágnes Krasznahorkaiன் நடிப்பும் சிறப்பானது.
வகுப்பறை சுதந்திரத்தின் விதிகளை யார் வரையறுப்பது என்ற கேள்வியை எழுப்புகிறது இப்படம். அது ஹங்கேரிக்கு மட்டுமான கேள்வியில்லை.
••