அனுபவங்களும் அறிவாற்றலும்.

சச்சிதானந்தன் சுகிர்தராஜா இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கட்டுரைகளைக் காலச்சுவடு மற்றும் காலம் இதழ்களில் படித்திருக்கிறேன்.

அந்தக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அப்படியே நியூயார்க்கரிலோ அல்லது தி கார்டியன் இதழிலோ வெளியிட்டிருப்பார்கள். அபாரமான எழுத்து. குறிப்பாக அவரது புலமை மற்றும் எழுத்து நடை வியப்பூட்டக்கூடியது. மெல்லிய கேலியோடு ஒன்றைச் சொல்லும் விதத்தில் கொஞ்சம் அசோகமித்ரனின் சாயல் இருக்கிறது.

அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்கு முக்கியக் காரணம் அவரும் ஒரு புத்தக விரும்பி.

இலக்கியம், கலை, மொழி, பண்பாடு, வரலாறு எனப் பல்வேறு துறை சார்ந்து படிக்கக் கூடியவர். படித்த புத்தகங்கள் மற்றும் சர்வதேச இலக்கியப் போக்குகள், விருதுகள் குறித்துச் சிறப்பாக எழுதுகிறவர். அவரது தமிழ் புலமையும் நிகரற்றது.

இங்கிலாந்தின் அரசியல், பண்பாடு பற்றிய கட்டுரையாக இருந்தாலும் சமகால ஆங்கிலப் படைப்புகள், விருதுகள் பற்றிய கட்டுரையாக இருந்தாலும் அவர் குறிப்பிடும் அரிய தகவல்கள் மற்றும் புத்தகங்கள் அவரது ஆழ்ந்த வாசிப்பின் வெளிப்பாடு என்றே சொல்வேன்.

நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு 2021ல் வெளியானது. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். இதனை 2023ல் ஒரு புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். மூன்று முறை படித்துவிட்டேன். ஆனாலும் பழைய புத்தகமாகவில்லை. இப்போதும் அதிலுள்ள ஏதாவது ஒரு கட்டுரையை ரசித்துப் படிக்கிறேன்.

இதில் 23 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்படும் புத்தகங்களின் பெயர்களை மட்டும் தனியே வரிசைப்படுத்தினால் நிச்சயம் நூறுக்கும் அதிகமாகயிருக்கும். அத்தனையும் அபூர்வமான புத்தகங்கள்.

ஆறுதல் அணங்குகள் பற்றிய கட்டுரையில் ஜப்பானிய சுகப்பெண்களைப் பற்றியும் அவர்களின் பின்னுள்ள கசப்பான வரலாற்று உண்மைகளையும் எழுதியிருக்கிறார்.

இது போன்றதே ஆக்ஸ்போர்ட் அகராதி உருவான விதம் பற்றிய கட்டுரை. அதில் குறிப்பிடப்படும் The Professor and the Madman என்ற புத்தகத்தை முன்பே படித்திருக்கிறேன்.

அகராதியியல் குறித்த சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் அந்தக் கட்டுரையில் “அகராதிகளின் ஆக்கமே ஒரு காலனியச் செயல்பாடு தான். நாடுகள், மக்களுக்குப் பதிலாக வார்த்தைகள் காலனியமாக்கபடுகின்றன“ என்று குறிப்பிடுகிறார். இந்தப் பார்வையே அவரை முக்கியமானவராக்குகிறது.  

ஆங்கில அகராதியை உருவாக்கும் போது சொற்களஞ்சியப் பணியில் ஈடுபட்ட பெண்களின் பங்களிப்பு பற்றியும், ஜான்சன் அகராதியில் அவருடன் இணைந்து பணியாற்றிய ஹெஸ்டர் பியோசி என்ற பெண்ணைப் பற்றியும்  குறிப்பிடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆண்களின் பெயரிலே அகராதிகள் வெளியானதன் பின்னுள்ள அரசியலைச் சுட்டிக்காட்டுகிறார்

அசோகமித்ரனை சந்தித்த நிகழ்வைப் பற்றிய கட்டுரையில் வெளிப்படும் அவரது கேலியின் சிறிய உதாரணமிது

“சும்மா தான் வந்தேன்’ என்பது யாழ்ப்பாணத் தமிழரின் கலாசாரக் கூறுபாடுகளில் ஒன்று. இந்தச் சொல் சார்ந்த உத்தியின் தாற்பரியத்தை மானிடவியலாளர்கள் கட்டயம் ஆராய வேண்டும்“

No One writes Back என்ற கொரிய நாவலை பற்றிய அறிமுகத்தில் இரண்டு பக்கத்திற்குள்ளாக நாவலின் சாரத்தைத் தெளிவாக விளக்கிவிடுகிறார். பல்கலைகழகத்தில் இவரிடம் பாடம் கற்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இந்தத் தொகுப்பிலுள்ள எழுத்துத் திருட்டு பற்றிய கட்டுரையும் இருபெண்கள் இரு நாவல்கள் கட்டுரையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

எழுத்தாளர்கள். இலக்கிய வாசகர்கள் இவரது எல்லா நூல்களையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் புரட்டும் போது விருப்பமான பேராசிரியரிடம் பாடம் கற்பது போன்ற மகிழ்ச்சி உருவாகும் என்பது உறுதி.

0Shares
0