புதிய சிறுகதை. 2024
சண்டிகரிலிருந்த அவனது வீட்டுப் படியில் அப்பா உட்கார்ந்திருந்தார்.

குமார் அவரை எதிர்ப்பார்க்கவில்லை. மதுரையில் இருந்த அப்பா எதற்காகத் திடீரென வந்து நிற்கிறார் என்று புரியவும் இல்லை.
தனது பைக்கை மரத்தடியில் நிறுத்திவிட்டு புன்சிரிப்புடன் அப்பாவை நோக்கி நடந்தான்.
அவனைப் பார்த்தவுடன் அப்பா எழுந்து கொண்டபடி கையில் வைத்திருந்த காய்ந்த கொய்யா இலையை வீசி எறிந்தார். ஒடிசலான உருவம். தலை முழுவதும் நரைத்துவிட்டது. எப்போதும் அணிவது போலக் கோடு போட்ட சட்டை. அடர்பச்சை நிற பேண்ட். கையில் அதே எச்.எம்.டி.வாட்ச். அகலமான பிரேம் கொண்ட மூக்கு கண்ணாடி.
“ஊர்ல இருந்து எப்போ வந்தீங்க. வர்றதாச் சொல்லவே இல்லை.. “
“ நாலுமணிக்கு வந்தேன்.. திடீர்னு தோணிச்சி.. கிளம்பி வந்துட்டேன். “
“ இங்க வந்தவுடனே எனக்குப் போன் பண்ணியிருக்கலாம்லே“
“வீடு பூட்டியிருந்தது. உனக்குப் போன் பண்ணி தொந்தரவு பண்ண வேணாம்னு. வாசல்லயே உட்கார்ந்துட்டேன். “
“ஏன்பா. கூப்பிட்டிருந்தா உடனே வந்துருப்பேனே. பக்கத்துல தான் பேக்டரி“
“அதனாலே என்னப்பா.. நேரம் போனதே தெரியலை. ஸ்கூல் விட்டு பசங்க சைக்கிள்ல போறதை பாத்துகிட்டே இருந்துட்டேன். எதிரே இருக்கக் காலனியில நிறைய வீடு இருக்கும் போல“
“நானூறு வீடு இருக்கு “
அப்பாவின் வலதுசெருப்பில் ஒருபக்கம் தேய்ந்து போயிருப்பது அவன் கண்ணில் பட்டது.
“ உள்ளே வாங்கப்பா“ என்றபடியே தனது வீட்டுக்கதவைத் திறந்தான். அவன் கெமிக்கல் என்ஜினியராக வேலை செய்து கொண்டிருக்கும் லோர்மா கம்பெனியே அந்த வீட்டை அவன் வசிப்பதற்காகக் கொடுத்திருந்தது.

அது ஜேம்ஸ் கார்ட்லிட்ஜ் என்ற பிரிட்டிஷ் அதிகாரி வசித்த பழங்காலத்துவீடு, வெண்கலக் குமிழ்கள் கொண்ட பெரிய கதவுகள் . சிவப்பு வண்ண சுவரில் பெயர் தெரியாத ஒவியன் வரைந்த குதிரை ஒவியம். பெல்ஜியம் லாந்தர் விளக்குகள். ஆறு அறைகள். அதில் இரண்டு அறைகளில் பெரிய கட்டில்கள் இருந்தன. சமையற்கட்டிற்குள் ஒரு குடும்பமே வசிக்கலாம். அவ்வளவு பெரியது. குளியல் தொட்டி கொண்ட குளியல் அறை. வீட்டைச் சுற்றி மலர் தோட்டம்.
அந்த வீட்டின் ஒரேயொரு அறையை மட்டும் தான் குமார் பயன்படுத்தினான். அந்த அறையில் யானை உருவம் செதுக்கப்பட்ட மரக்கட்டில். மடக்கு கைப்பிடிள்ள நாற்காலி. ஆறுஅடுக்குக் கொண்ட அலமாரி. பெரிய ஜன்னல்கள். அந்த வீட்டிற்குள் வந்தவுடன் சில நூற்றாண்டுகள் பின்னால் போய்விட்டது போலவே உணருவான்.
“இவ்வளவு பெரிய வீட்டில் ஏன் தனியா இருக்கிறாய். கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தானே“ என்று அவனது உயரதிகாரி பிஸ்வாஸ் கேட்பது வழக்கம்.
“வீட்டில் நிறைய அறைகள் இருக்கிறது என்பதற்காக யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா என்ன“.
உண்மையில் அவனுக்குக் கல்யாண ஆசையே வரவில்லை. என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் நாட்களில் அவனோடு படித்த வசுந்தராவை ரகசியமாகக் காதலித்தான். அவளிடம் கடைசிவரை சொல்லவேயில்லை. மேற்படிப்பிற்காக அவள் அமெரிக்கா போய்விட்டாள். அங்கேயே ஒருவனைத் திருமணமும் செய்து கொண்டுவிட்டாள். அதைக் காதல் தோல்வி என்று சொல்ல முடியாது. நிராசை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அதன்பிறகு எப்போதாவது அம்மா அவனது திருமணத்தைப் பற்றிக் கேட்பாள். அவன் “கொஞ்சம் டைம் குடும்மா. சொல்றேன்“ என்பதை நிரந்தரப் பதிலாக வைத்திருந்தான்
இன்றைக்கு அப்பாவை வீட்டுவாசலில் பார்த்தவுடன் ஒருவேளை தனது திருமணம் பற்றிப் பேசத்தான் வந்திருக்கிறாரோ என்றும் அவனுக்குத் தோன்றியது. யாராவது உறவினர் வீட்டுப் பெண்ணைப் பார்த்துவைத்திருப்பார்கள். நேரில் பேசி முடிவு செய்ய வந்திருக்ககூடும் என நினைத்துக் கொண்டான்.
பிரம்மாண்டமாக இருந்த கதவுகளைத் தள்ளித்திறந்து அப்பா ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்
“ரொம்பப் பெரிய பங்களாவா இருக்கு“..
“கம்பெனியோடது. “ என்றான் குமார்
அவனது பதவி. சம்பளம் பற்றி அப்பா கேட்பார் என்று குமார் எதிர்பார்த்தான். ஆனால் அப்பா எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
இந்த இரண்டரை வருஷத்தில் ஊரிலிருந்து யாரும் அவனைத் தேடி வரவில்லை. செல்போன் வந்துவிட்டபிறகு யாரும் கடிதம் எழுதுவதுமில்லை. அம்மா தினமும் ஒருமுறை போன் செய்வாள். வருஷத்திற்கு ஒன்றிரண்டு முறை அவன் ஊருக்குப் போய்வருவான். மற்றபடி அவன் தன்னைச் சண்டிகர்வாசியாக நினைக்கத் துவங்கி நீண்ட நாட்களாகிவிட்டது
இன்றைக்கு அப்பாவின் எதிர்பாராத வருகை அவனை மகிழ்ச்சிப்படுத்தியது.
எதற்காக வந்திருக்கிறார் என்ற காரணத்தை அவரே சொல்லுவார் என்று காத்திருந்தான். ஆனால் அப்பா அதைப் பற்றிப் பேசவேயில்லை.
ஹாலில் இருந்த மரநாற்காலியில் அப்பா அமர்ந்து கொண்டபடியே
“வீட்டில டிவி இல்லையாப்பா“ என்று கேட்டார்.
“லேப்டாப் இருக்கிறதாலே டிவி தேவையில்லைப்பா“ என்றான்.
“பனிக்காலத்துல ரொம்பக் குளிரும்லே“ என்று கேட்டார்.
ஆமாம் என்று தலையாட்டினான்.
அப்பா தனது பையிலிருந்து கட்டம்போட்ட நீலநிற லுங்கி ஒன்றை வெளியே எடுத்து அணிந்து கொண்டார். அரைக்கை பனியனும் லுங்கியுமாக இருக்கும் அவரது தோற்றம் ஊரில் இருப்பது போன்ற நெருக்கத்தை ஏற்படுத்தியது. சட்டென மதுரையில் தனது வீட்டில் இருப்பது போலவே குமார் உணர்ந்தான்.
“டீ போடவா“ என்று கேட்டான் குமார்
அப்பா தலையசைத்தார். பிரிட்ஜில் இருந்த பால்பாக்கெட்டை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குள் அவன் போவதை அப்பா பார்த்துக் கொண்டேயிருந்தார். இஞ்சி டீ தயார் செய்தான். அப்பா அதை ருசித்துக் குடித்தார்.
ஒருவேளை அம்மாவிற்கு ஏதாவது உடல்நலக்குறைவா. அதைப்பற்றிப் பேச தான் வந்திருக்கிறாரா, வீட்டில் ஏதாவது பணத்தேவையா, எதற்காக வந்திருக்கக் கூடும் என்று யோசித்தபடியே டீயைக் குடித்தான்
“நீ சண்டிகர் வந்து இரண்டு வருஷம் இருக்கும்லே“ என்று கேட்டார் அப்பா
“இரண்டரை வருஷம் ஆகுதுப்பா.. வேலையில ப்ரோமோஷன் வந்துருச்சி.. இங்கேயே செட்டில் ஆகிற வேண்டியது தான்“
“நல்ல ஊரா தான் இருக்கு.. எங்க பார்த்தாலும் மரங்கள். அமைதியான ஊர். அட்ரஸை சொன்னதும் ஆட்டோக்காரன் கரெக்டா வீட்டுவாசல்ல கொண்டு வந்துவிட்டுட்டான்.“என்றபடியே வெளிவாசலை ஒட்டி பளுப்பு நிற நாய் வந்து நிற்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.
“நைட் என்ன சாப்பிடுறீங்க.. சப்பாத்தி பண்ணவா“ என்று கேட்டான் குமார்
“நீயா சமைக்கிறே“ என்று வியப்போடு கேட்டார் அப்பா
“நைட் மட்டும் சமைச்சிகிடுறேன். மற்ற ரெண்டு வேளையும் ஆபீஸ் கேண்டியன்“.
“அம்மாவை வேணும்னா.. இங்கே அனுப்பி வைக்கவா“ என்று கேட்டார் அப்பா
“அப்போ நீங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவீங்க. நானே சமாளிச்சிகிடுவேன். “
“காய்கறி எல்லாம் கிடைக்குதா“
“பக்கத்துல மார்க்கெட் இருக்கு. எல்லாக் காய்கறிகளும் கிடைக்கும். அவசரத்துக்குப் போன்ல ஆர்டர் பண்ணினா வீட்டுக்கே கொண்டுவந்து தருவாங்க “
அப்பா சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடக் கூடியவர். அம்மா அசைவம் சாப்பிடுவார். அம்மாவிற்காக மீனும் கோழியும் அப்பா வாங்கி வருவதுண்டு. சமைத்து தனியே சாப்பிட பிடிக்காமல் குமாரையும் அசைவம் சாப்பிட பழக்கிவிட்டாள் அம்மா.
“நான் போயி காய்கறி வாங்கிட்டு வரட்டா“ என்று கேட்டார் அப்பா
“நீங்க இருங்க. நான் போயிட்டு வர்றேன்“ என்றபடியே சமையல் அறைக்குள் போய்த் துணிப்பை ஒன்றை எடுத்துக் கொண்டான்.
அப்பாவிற்காகச் சமைக்கப் போகிறோம் என்பது விநோதமான உணர்வாக இருந்தது. இத்தனை வருஷங்களில் ஒரு முறை கூட அவன் அப்பாவிற்காகச் சமைத்ததில்லை. அம்மா திருப்பதிக்கு போன நாளில் கூட அவர்கள் ஹோட்டலில் தான் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள். அப்பாவிற்குச் சமைக்கத் தெரியாது.
இன்று அப்பாவிற்காகச் சமைப்பது என்பது அவனை மகிழ்ச்சிப்படுத்தியது. ஏதாவது இனிப்புச் செய்து கொடுக்கலாமே என்றும் மனதிற்குள் தோன்றியது.

பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது அப்பா தானும் உடன் வருவதாக நின்றிருந்தார். பைக்கில் அவரையும் அழைத்துக் கொண்டு காய்கறி மார்க்கெட் நோக்கி செல்ல ஆரம்பித்தான். அவனது மனது அப்பாவிற்காகச் சமைத்தலைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.
சமையல் அறையில் அம்மா முந்திரிபருப்பு. ஏலக்காய் டப்பாவை எடுக்கிறார் என்றால் வந்திருக்கும் விருந்தினர் முக்கியமானவர் என்று அர்த்தம். ரவா டப்பாவை எடுத்தால் அவசர விருந்தினர். காலையில் போய்விடுவார் என்று புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வகைப் பாயாசம் செய்தால் அப்பாவின் பிறந்தநாள் என்று அர்த்தம். கொத்தவரங்காயும் துவையலும் என்றால் பிடிக்காதவர் வந்திருக்கிறார் என்று பொருள். இப்படி அம்மா தனது சமையலின் வழியே மனிதர்களை மதிப்பிட்டிருந்தாள்.விருப்பமானவர்களுக்கு ருசியான உணவை சமைத்து தருவதன் வழியே மட்டுமே தனது அன்பினை காட்ட முடியும் என அம்மா நம்பினாள்.
அம்மா எது சமைப்பதாக இருந்தாலும் அப்பாவிற்குப் பிடிக்குமா, பிடிக்காதா என்று யோசித்துவிட்டு தான் செய்வாள். அவளுக்காக அப்பா முட்டையும் மீனும் வாங்கித் தருவதை குற்றவுணர்வோடு தான் ஏற்றுக் கொள்வாள். அது ஏன் என்று குமாருக்குப் புரியாது.
இன்றைக்கு அப்பாவிற்குச் சமைக்கப்போகிறோம் என்றால் அம்மாவாக மாறிவிட்டோம் என்று குமார் நினைத்துக் கொண்டான். அம்மாவைப் போலவே தன்னாலும் அப்பாவைக் கவனித்துக் கொள்ள முடியும் என்று காட்ட வேண்டும். அவல் பாயாசம் செய்யலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
தந்தையிடம் மகள் கொள்ளும் நெருக்கம் போலப் பையன்களால் ஒரு போதும் நெருக்கமாக இருக்க முடியாது. ஆனால் சமைப்பதன் வழியே அந்த நெருக்கத்தைப் பையனாலும் உருவாக்க முடியும். உணவு என்பது ஒரு மொழி. உலகம் முழுவதும் புரிந்து கொள்ளப்படும் மொழி.
சிறுவனைப் போலச் சாலையில் இருந்த துணிக்கடைகளை அப்பா வேடிக்கை பார்த்தபடியே வந்தார். சாம்ராஜ் மார்க்கெட் இருந்த வீதியில் பைக் நிறுத்த முடியாது என்பதால் ஏடிஎம் ஒன்றின் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு அவர்கள் நடந்தார்கள்.
••
அவன் கோவையில் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த நாட்களில் மாதம் ஒருமுறை அப்பா அவனைக் காணுவதற்காக ஹாஸ்டலுக்கு வருவார். அவனை நகருக்குள் அழைத்துக் கொண்டு போய்ச் சோப். டூத்பேஸ்ட், தின்பண்டங்கள் வாங்கித் தருவார். பின்பு ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலுக்கு அழைத்துப் போய்ச் சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஐஸ்கிரீம் வாங்கித் தருவார்.
“இதற்காக ஏன் ஊரிலிருந்து வர வேண்டும்“ என்று மறுத்து சொல்லி யிருக்கிறான்
“அது என் சந்தோஷத்துக்காக“ என்பார் அப்பா.
அப்பா அவனைத் திட்டியதோ, அடித்ததோ கிடையாது. ஞாயிற்றுகிழமைகளில் அவனை அழைத்துக் கொண்டு நூலகத்திற்குப் போவார். ஊரில் ஏதாவது இலக்கியக் கூட்டங்கள் நடந்தால் அழைத்துக் கொண்டு போய்க் கேட்க வைப்பார். வாரம் சனிக்கிழமை இரவு தவறாமல் அன்சாரி கடைக்கு அழைத்துப் போய்ப் பரோட்டா வாங்கித் தருவார். அவன் பேஸ்கட் பால் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்த நாட்களில் அவர் நாலரை மணிக்கே எழுந்து அவனை எழுப்பிவிடுவார். விளையாடி முடித்து அவன் வீடு வருவதற்குள் மைதானத்திற்கே பிளாஸ்கில் ஹார்லிக்ஸ் கொண்டுவந்து நின்றிருப்பார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவனுக்காக ஒரு பர்ஸ் வாங்கிக் கொடுத்தார். அதில் நூறு ரூபாய் ஒன்றும் ஐந்து பத்து ரூபாய்களும் இருந்தன. அதன் பிறகான வருஷங்களில் அவன் அறியாமல் அடிக்கடி பர்ஸில் அப்பா பணம் வைத்து விடுவது உண்டு.
அம்மா தான் கணக்கு கேட்பாள். வீணாகச் செலவு செய்யாதே என்று கண்டிப்பாள். அம்மா சினிமா பார்க்க விரும்பாதவள். ஆகவே அவனும் அப்பாவும் தான் சினிமாவிற்குப் போவார்கள். படம் ஒடிக் கொண்டிருக்கும் போது அப்பா அவன் முகத்தைப் பார்த்தபடி இருப்பதை உணர்ந்திருக்கிறான். மழை நாளில் ஒருமுறை கூட அவன் நனைந்ததில்லை. ஸ்கூல் கேட்டில் அப்பா குடையோடு நின்றிருப்பார். அவனது நோட்டிற்குக் காக்கி அட்டை போட்டு தருவது. அறிவியல் நோட்டில் படங்கள் வரைந்து தருவது எல்லாமும் அப்பாவின் வேலை.
என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு ஆறு மாத காலம் சென்னையில் வேலை செய்தான். பின்பு சண்டிகரில் வேலை கிடைத்துப் புறப்படத் தயார் ஆகும் நாளில் அம்மா சொன்னாள்
“உன்னைவிட்டுட்டு உங்கப்பா எப்படி இருக்கப்போறாருனு தெரியலை“
அது நிஜம். ஆனால் அப்பா தனது தவிப்பைக் காட்டிக் கொள்ளாமல் “நினைச்சா. பிளைட்ல வந்துறப்போறான். இல்லாட்டி நான் சண்டிகர் போயிடப் போறேன்“ என்று சொன்னார்.
அவன் சண்டிகர் போன நாளிலிருந்து அப்பா அம்மா இருவரையும் அங்கே வரும்படி அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் வரவில்லை. பொங்கல். ஊர் திருவிழா என்று அவன் இரண்டு மூன்று முறை ஊருக்கு வந்து போனான். அவன் சண்டிகர் வந்தபிறகு அப்பாவை, ஊரை மறந்து போனான் என்பதே உண்மை.
கெமிக்கல் பேக்டரியில் இருந்து வேலை முடிந்து வீடு திரும்பிய இரவுகளில் அம்மாவை நினைத்துக் கொள்வான். விடுமுறை நாளில் அம்மாவிற்குப் போன் பண்ணி நீண்ட நேரம் பேசுவான். அப்போதும் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் அப்பாவிடம் பேச எதுவுமிருக்காது. படித்து முடித்த கடிதம் ஒன்றைப் போல அப்பா இருப்பதாகத் தோன்றும்.
இன்று அப்பா திடீரெனச் சண்டிகர் வந்து நின்றது அவனுக்குப் பிடித்திருந்தது. பஜாரில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அவனது மகிழ்ச்சியின் வண்ணங்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.
••
காய்கறி மார்க்கெட்டில் அப்பா தனக்குப் பிடித்த வெண்டைக்காய்களை வாங்கினார்.
“சண்டிகர் வெண்டைக்காய் நம்ம ஊர் காய் மாதிரியே இருக்கு“ என்று வியந்தார்.
பெரிய வெங்காயம். காலிஃபிளவர், கேரட், உருளைகிழங்கு, பச்சைமிளகாய். தேங்காய். எனத் தேவையானவற்றை அவன் வாங்கிக் கொண்டான். அப்பா ஒரு கேரட்டை கடித்துத் தின்றபடியே நடந்து வந்தது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. சாலையைக் கடந்து எதிர்வரிசையில் இருந்த பலசரக்குக் கடையில் கோதுமை மாவு. சிவப்பு அவல், நெய், முந்திரி, ஏலக்காய் என வாங்கினான்.
அப்பா பணம் கொடுப்பதற்காகத் தனது பர்ஸை எடுத்தார். அதற்குள் முந்திக் கொண்டு அவன் பணம் கொடுத்தான். அதைப் பார்த்து அப்பா சிரித்துக் கொண்டார்.
திரும்பி வரும் போது வேறு பாதை வழியாகப் பைக்கை செலுத்தினான். அப்பா ஊரை ரசித்தபடியே வந்தார். வழியில் ஒரு கடையில் ஆனந்தவிகடன் கிடைக்கும் என்பதால் பைக்கை நிறுத்தி அப்பா படிப்பதற்காக விகடன் வாங்கினான்.
“நம்ம ஊர்காரங்க கடையா“ என்று அப்பா கேட்டார்
“ஆமாம்பா. திண்டுக்கல்காரங்க, இந்த ஏரியாவுல நிறைய தமிழ் குடும்பம் இருக்கு. “ என்றான்.
வீட்டிற்குள் வந்தவுடன் சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்தான்
கடாயில் நெய் ஊற்றி முந்திரி வறுத்தான். பின்பு அவலை வறுத்து தனியே வைத்தான். தண்ணீரை சுட வைத்துவிட்டு மிக்ஸியில் முந்திரி பருப்பினை பொடி பண்ணினான். சுட வைத்த தண்ணீரில் அவல் சேர்த்து கிளறி .மூன்று நிமிடம் கழித்துப் பால், சேர்த்து நன்கு கொதிக்க விட்டான். கடைசியாக முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கும் போது வாசனை கமகமவென வந்தது. ஒரு ஸ்பூனில் பாயாசத்தை எடுத்து ருசி பார்த்தான். இனிப்பு குறைவாகத் தோன்றவே கொஞ்சம் சீனி சேர்த்துக் கொண்டான். பாயாசம் தயரானது. இன்னொரு அடுப்பில் கேரட். காலிபிளவர் மசாலா செய்ய ஆரம்பித்தான்.
அவன் சமைத்து முடிக்கும்வரை அப்பா வார இதழ் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். அவனும் அப்பாவும் சாப்பிட உட்கார்ந்தபோது பாயாசத்தைக் கண்டதும் அப்பாவின் முகம் மலர்ந்தது.
“பாயாசம் எல்லாம் எதுக்குப்பா“ என்றார்
“திடீர் பாயாசம்“ என்று சொல்லிச் சிரித்தான் குமார்
“ஆபீஸ் விட்டுவந்த உன்னை ரெஸ்ட் எடுக்கவிடாம நிறைய வேலை கொடுத்துட்டேன்“ என்றார் அப்பா
“அதெல்லாமில்லைப்பா“ என்றபடியே பீங்கான் கிண்ணத்தில் பாயாசம் கொடுத்தான். அப்பாவிற்குப் பாயாசம் பிடித்திருப்பது அவரது முகத்திலே தெரிந்தது. மெலிதான சப்பாத்தி ஒன்றை அவரது தட்டில் போட்டான். கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து சாப்பிட்டபடியே “டேஸ்டா இருக்கு.. உங்கம்மாட்ட சொன்னா சந்தோஷப்படுவா“ என்றார்.
அப்பாவிற்காக அவன் சமைத்து தருவதை அம்மா பார்க்க வேண்டும் என்றே அவனும் விரும்பினான். அப்பா பச்சை வெங்காயம் சாப்பிடுவதில் விருப்பம் கொண்டவர் என்பதால் நிறைய ஆனியன் சிலைஸ் வெட்டி வைத்திருந்தான். அதை இனிப்பு சாப்பிடுவது போல ஆசையாக அப்பா கடித்துத் தின்றார்
“நம்ம ஊருக்கு வர்றது ஆந்திரா வெங்காயம். இது காரம் கம்மியா ருசியா இருக்கு“ என்றார்.
சாப்பிட்டு முடிந்த பிறகாவது அப்பா எதற்காக வந்திருக்கிறார் என்பதைச் சொல்லுவார் எனக் காத்திருந்தான். அவர் அதைப்பற்றிப் பேசவேயில்லை. ரயில் பயணத்தில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்
“ஏதாவது முக்கியமான விஷயமாப்பா“ என்று நேரடியாகவே கேட்டான்.
“சும்மாதான்பா வந்தேன். வயசாகிருச்சில்லே. திடீர்னு மனசுல ஏதோ தோணுச்சி. கிளம்பி வந்துட்டேன். “
மனதிற்குள் எதையோ நினைக்கிறார். ஆனால் சொல்ல விரும்பவில்லை என்று புரிந்தது. வளர்ந்த பிள்ளைகளிடம் வெளிப்படையாக பேசுவதற்கு எந்த தந்தையும் விரும்புவதில்லை. அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது எப்படி சாத்தியம். அம்மாவைப் போல நேரடியாக கேட்கவோ, கோபத்தை காட்டவோ வேண்டியது தானே. ஆனால் அப்பாவால் அப்படி நடந்து கொள்ள முடியாது.
“அம்மாவையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்லே“
“வந்திருந்தா.. உன் சாப்பாடு கிடைச்சிருக்காதுல்லே“ என்று சொல்லி புன்னகைத்தார். அந்தத் தருணத்தில் அப்பா யாரோ போலத் தெரிந்தார். அம்மா வந்திருந்தால் அவனைச் சமையற்கட்டின் பக்கம் விட்டிருக்கமாட்டாள்.
“உங்க ஹெல்த் எப்படிப்பா இருக்கு“ என்று கேட்டான்
“ரெகுலரா வாக்கிங் போறேன். பிரஷர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு மாத்திரை போட்டுகிடுறேன்.. “ என்று சொன்னார் அப்பா.
“நீங்க ரெண்டு பேரும் இங்கேயே என்கூடவே வந்து இருக்கலாம்லே“
“அது சரிப்படாதுப்பா.. இது உன் ஊரு.. உன்வீடு. என் ஊரைவிட்டு என்னாலே வர முடியாது. ஒரே உடம்புன்னாலும் கை ரெண்டுக்கும் இடைவெளி இருக்குல்லே.. “ என்றார்
அப்பா படுப்பதற்காக ஒரு அறையில் இருந்த கட்டிலை தயார் செய்தான். அப்பா உறங்கும் போது வெறும் மேலோடு தான் படுத்துக் கொள்வார். இங்கே குளிராக இருக்கும் என்பதால் அப்படிப் படுக்கக் கூடாது, கம்பளியை போர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னான்.
“நீ காலைல ஆபீஸ்க்கு எத்தனை மணிக்குப் போகணும்“ என்று கேட்டார் அப்பா
“ஆறரை மணிக்கு. நீங்க தூங்குங்க. நான் ஆபீஸ் போயிட்டு டிபன் கொடுத்து அனுப்புறேன். சாப்பிடுங்க. விஜயகுமார்னு எங்க ஆபீஸ்ல தஞ்சாவூர் பையன் வேலை செய்றான். அவனை அனுப்பி வைக்குறேன். அவன் ஊரை சுற்றிக்காட்டுவான். நான் சாயங்காலம் வந்துருறேன்“.
“அதெல்லாம் எதுக்குப்பா. நானா ஊரை சுற்றிபார்த்துகிடுவேன். யாரையும் அனுப்ப வேண்டாம். வீட்டு சாவியை எங்கே வச்சிட்டு போறதுனு மட்டும் சொல்லு“
“பூந்தொட்டிக்குள்ளே போட்டுட்டு போயிடுங்க“.
“ஊர்ல இருந்து உனக்காக ஒண்ணும் வாங்காம வந்துட்டேன். “ என்று வருத்தமான குரலில் சொன்னார் அப்பா
“நான் என்ன சின்னபையனா“ என்று கேட்டான் குமார்
அப்பா பதில் சொல்லவில்லை. ஆனால் அவர் தலையசைப்பில் சிறுவன் தான் என்பது போலிருந்தது.
••

அலாரம் வைத்து நாலு மணிக்கு குமார் எழுந்து கொண்டான். டீ தயார் செய்து குடித்தான். வெந்நீரில் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டான். அப்பா படுத்திருந்த அறைக்கதவை லேசாகத் தள்ளி திறந்த போது கம்பளிக்குள் சுருண்டு அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். அப்பா செய்வது போலவே அவரது பர்ஸில் கொஞ்சம் பணத்தைச் சொருகி வைத்தான். பின்பு கதவை மூடிவிட்டு அவன் பைக்கை தள்ளிக் கொண்டு சாலைக்குப் போய் ஸ்டார்ட் செய்தான். பனிப்புகைக்குள் அவனது பைக் சென்றது
••
அன்று மாலை அவன் வீடு திரும்பி வரும் போது சிந்தி ஸ்வீட்ஸில் ஜிலேபி கராச்சி அல்வா வாங்கி வந்தான். அப்பா தனியாக ஊர் சுற்றிவிட்டுத் திரும்பியிருந்தார்.
“ரொம்ப அழகான ஊருப்பா. ராக் கார்டன் பார்த்தேன். இஸ்கான் மந்திர். பாலிகா பஜார், படேல் மார்க்கெட் எல்லாம் பார்த்தேன். சீக்கியர்கள் எல்லாம் அன்பா நடந்துகிடுறாங்க. “
இரண்டு ஆண்டுகளில் அவனே சண்டிகரின் ஒன்றிரண்டு இடங்களுக்குத் தான் போய்ப் பார்த்திருக்கிறான். மற்றபடி சினிமா பார்க்க மால்களுக்குப் போனதுண்டு. ஒருமுறை மொகல் கார்டன், பாலிகா பஜார் போயிருக்கிறான். ஆபீஸ். வீடு. ரயில் நிலையம் நண்பர்களின் வீடு என அவனது உலகம் சிறியதே.
“ நேத்து நைட் நல்லா தூங்கிட்டேன். மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்துல உன்னைக் கையைபிடிச்சி கூட்டிட்டுப் போறது மாதிரி ஒரு கனா. ஒவ்வொரு தூணா தொட்டுகிட்டே நீ ஒடுறே. பிரகாரத்துல ஒரு ஆள் கிடையாது.. உன் பின்னாடியே நான் ஒடி வந்தேன்… “
நேரில் நடந்த ஒன்றை விவரிப்பது போல ஆசையாக அப்பா விவரித்துக் கொண்டிருந்தார். அதைக்கேட்கும் அவனுக்குத் தான் சிறுவனாகிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த நேரம் மனதில் தந்தை என்பதே நினைவுகளால் வாழும் மனிதன் தானோ என்று தோன்றியது.
அன்றிரவு அப்பாவும் அவனும் சாகர்ரத்னா என்ற பஞ்சாபி உணவகம் ஒன்றுக்கு சாப்பிடப் போனார்கள்.
“நீ நான்வெஜ் சாப்பிடுப்பா“ என்றார் அப்பா
“இது ரொம்பப் பாப்புலரான வெஜிடேரியன் ஹோட்டல். டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். “
அப்பா தன்முன்னே வைக்கபட்ட விதவிதமான உணவுவகைகளைக் கூச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்
“இவ்வளவு எதுக்குப்பா“ என்றார்.
“ஒவ்வொண்ணா டேஸ்ட் பண்ணி பாருங்க“ என்றான் குமார். தயக்கத்துடன் ஒவ்வொன்றிலும் கொஞ்சம் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்
“நாம தான் எல்லாத்தையும் காலி பண்ணனும்“ என்றான் குமார். அதைக் கேட்டு அப்பா சிரித்தார்.
சிறுவயதில் அன்சாரி கடையில் அப்பா இப்படி அவனிடம் சொன்னது நினைவில் வந்து போனது. அதே சொற்கள்.
சாப்பிடும் போது குமார் அப்பாவிடம் கேட்டான்
“நீங்க ஏன்பா என்னைக் கோவிச்சிகிட்டதே கிடையாது“
“உன்னை எதுக்குப்பா கோவிச்சிகிடணும்“ என்று அப்பா பதிலுக்குக் கேட்டார்
“நான் நிறையத் தப்புப் பண்ணியிருக்கேன். பொய் சொல்லியிருக்கேன். “
“அதான் உனக்கே தெரியுதுல்லே. பிறகு நான் ஏன் கோவிச்சிகிடணும்“
“நீங்க என்னைப் பார்க்க சும்மா வந்தேனு சொன்னதை என்னாலே நம்ப முடியலை. ஏன்கிட்ட ஏதாவது சொல்லணுப்பா.. “ என நேரடியாக அவர் வந்த காரணத்தைக் கேட்டான்
“நான் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு. நீ என்ன சின்னப்பையனா.. “
“என் கல்யாணத்தைப் பற்றி அம்மா கேட்டுகிட்டே இருக்காங்க. “
“அவ அப்படித்தான்.. உனக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசை. ஆனா கல்யாணம் எல்லாம் உன் விருப்பபடி தான் நடக்கணும்.. உனக்கு எப்போ மனசு வருதோ. அப்போ பண்ணிக்கோ. “.
“நான் ஒரு பஞ்சாபி பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிடப் போறேனு அம்மா கிட்ட பொய் சொன்னேன். அம்மா கோவிச்சிகிட்டாங்க“
“அப்படி பண்ணிகிட்டாலும் தப்பு இல்லைப்பா.. உன் ஆசை தான் எங்களுக்கு முக்கியம்“.
“நீங்க என்னை ரொம்பச் சுதந்திரமா வளர்த்துட்டீங்க. அதனாலே உங்களை விட்டு நான் ரொம்ப விலகியிருக்கேன்பா. நிறைய விஷயங்களை உங்ககிட்ட பேச முடியலை“
“நீ சொல்லித் தான் தெரியணும்னு இல்லைப்பா. எனக்கே உன் மனசு புரியும்“ என்றார் அப்பா.
பேச்சிற்காகக் கூடவா ஆதங்கப்படவோ, சண்டையிடவோ கூடாது எதற்காக அப்பா இவ்வளவு நிதானமாக இருக்கிறார். நடந்து கொள்கிறார் எனக் குமாருக்கு எரிச்சலாக வந்தது
“உங்களுக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். ஆனா என்ன செய்றதுனு தெரியலை“ என்றான் குமார்
“ இந்த மனசோட எப்பவும் இருந்தா போதும்பா.. எங்களுக்கு ஒண்ணும் செய்ய வேணாம். எனக்குத் தான் பென்சன் வருதே.. எங்களுக்கு என்ன செலவு சொல்லு“ என்றார்
“அம்மாவை அழைச்சிட்டு பத்ரிநாத், கேதாரிநாத் டூர் போயிட்டு வர்றீங்கன்னா சொல்லுங்க. ஏற்பாடு பண்ணுறேன்“
“அவளுக்கு முட்டிவலி ஜாஸ்தி ஆகிருச்சி. அவளைக் கூட்டிட்டு எங்க போறது. நாங்க இந்தியாவைச் சுற்றி பார்த்து என்ன ஆகப்போகுது.. எங்களுக்குப் பக்கத்துல இருக்கத் திருச்செந்தூர் கோவிலுக்குப் போறதுக்கே முடியலை“
“உங்களுக்கு எதுலயும் ஆசை கிடையாதாப்பா“
“ஒரே ஆசை தான் இருந்துச்சி நீ படிச்சி நல்லா வரணும்னு. அதான் நிறைவேறிருச்சில்லே“
“அம்மாவுக்கு ஆயிரம் ஆசை இருக்குப்பா.. பேரன் பேத்தி கல்யாணம் வரைக்கும் கனவு கண்டுகிட்டு இருக்காங்க. “
“அவ பாவம் “ என்றார் அப்பா
“மதுரைல அம்மாவும் நீங்களுமா தனியா இருக்கிறது கஷ்டமா இருக்கா“
“இத்தனை வருஷமா அப்படித் தானே இருந்தோம். இதுல என்ன கஷ்டம். உனக்குத் தான் தனியா இருக்கிறது கஷ்டம் “
“நான் சமாளிச்சிகிடுறேன். “
“அது எனக்கே தெரியும். “ என்று சொன்னார்.
பேச்சை எப்படித் தொடருவது எனத் தெரியாமல் அவரது தட்டில் இன்னொரு ரொட்டியை எடுத்து வைத்தான்
“எனக்கு போதும்பா. பிறகு நைட் தூக்கம் வராம போயிடும்“
“நாளைக்கு எங்க கெமிக்கல் பேக்டரியை பாக்க கூட்டிட்டு போறேன்“ என்றான் குமார்
“நானே கேட்கணும் நினைச்சிட்டு இருந்தேன்“ என்றார் அப்பா
கைகழுவுவதற்காகச் சென்ற போது அம்மாவிடம் பேச வேண்டும் போலக் குமாருக்கு தோன்றியது. வாஷ்பேஷின் அருகே நின்றபடியே அம்மாவிற்குப் போன் செய்தான். ஹோட்டலில் சாப்பிட்ட விதவிதமான உணவுவகைகளைப் பற்றி அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்
அம்மா சிரித்தபடியே “உங்கப்பா சந்தோஷமா இருந்தா சரிப்பா“ என்றான்.
“நீயும் வந்துருக்கலாம்லே“ என்றான் குமார்
“அதுக்கென்ன உன் கல்யாணத்துக்கு வர்றேன்“ என்றாள் அம்மா. அதைக்கேட்டு குமார் சிரித்தான். இது போன்ற பெற்றோர்கள் தனக்குக் கிடைத்திருக்கிறார். இந்த உலகில் தான் ஒரு அதிர்ஷ்டசாலி என உணர்ந்தான் குமார்
போனை வைக்கும் முன்பாக அம்மா சொன்னாள்
“கொஞ்ச நாளாவே உங்கப்பா எதையோ நினைச்சி கவலைப்பட்டுகிட்டே இருக்காரு.. நான் கேட்டா சொல்ல மாட்டேங்குறார். “
“அப்படி எல்லாம் இல்லம்மா. சந்தோஷமா தான் இருக்கார்“
“அவர் மனசில இருக்கிற எதையும் வெளியே சொல்ல மாட்டார்றா.. நீ தான் என்னனு கேளு“
“ஒண்ணுக்குப் பத்து தடவை கேட்டுட்டேன். நல்லா தான் இருக்கேனு சொல்றார்“
“உன்னை பாத்தா அவருக்கு எல்லாம் சரியாகிரும். “.. என்று சொல்லி முடிக்கும் போது அம்மா அவளை அறியாமல் உடைந்து அழுதாள். அம்மாவை எப்படிச் சமாதானம் செய்வது எனத் தெரியவில்லை. அம்மா போனை வைத்துவிட்டாள். மறுபடியும் அவன் கையைக் கழுவினான். தண்ணீர் கையில் படும்போது ஏற்படும் குளிர்ச்சி மனதிற்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
அப்பா எதை நினைத்து கவலைப்படுகிறார். ஏன் அதைச் சொல்ல மறுக்கிறார் என யோசித்தபடியே அப்பா அமர்ந்திருந்த இடத்தை நோக்கி சென்றான். அவன் வருவதற்குள் சாப்பாட்டிற்கான பணத்தை அப்பா கொடுத்திருந்தார்
“ஏன்பா நான் தருவேன்லே“ என்றான்
“அதனாலே என்னப்பா“ என்று அப்பா சிரித்தார். வெளியே வந்தபோது அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படி நடக்கக் கூச்சமாகவும் இருந்தது. அப்பாவும் அவனும் பைக்கில் வீடு திரும்பி வரும்வரை பேசிக் கொள்ளவில்லை.
வீட்டிற்கு வந்தவுடன் அப்பா தனது படுக்கைக்குச் சென்றுவிட்டார். குமார் அலுவலக வேலையை லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அறைக்கதவை தள்ளும் சப்தம் கேட்டுத் திரும்பிய போது அப்பா நின்று கொண்டிருந்தார்
“என்னப்பா“
“நாளைக்கு நான் ஊருக்கு கிளம்புறேன். பஸ்ல டெல்லி போயி அங்கேயிருந்து டிரைன்ல சென்னைக்குப் போயிடுறேன்“. என்றார்
“அதுக்குள்ளே என்ன அவசரம். ஒரு வாரமாவது இருங்கப்பா. சிம்லா போயிட்டு வரலாம். “
“உன்னை பாக்கணும்னு தோணிச்சி. வந்தேன்.. பாத்துட்டேன். நான் கிளம்புறேன்“ என்றார்
“அப்போ கார்ல டெல்லி கொண்டு போய் விடச் சொல்றேன். அங்கேயிருந்து மதுரைக்குப் பிளைட் டிக்கெட் போடுறேன். “
“நிறைய செலவு ஆகும்பா.. எனக்கு எதுக்கு.. இவ்வளவு செலவு. நான் டிரைன்ல போயிடுறேன்“
அவனுக்குக் கோபம் வந்தது.
“நீங்க பிளைட்ல தான் போறீங்க..செலவை பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். “
அப்பா அவனது கோபத்தைக் கண்டு சிரித்தார். பின்பு அவன் அருகில் வந்து நின்று “ டிக்கெட் போடுறதுல பாதிக் காசாவது நான் தர்றேன்“ என்றார்.
அவரை என்ன செய்வது என்று குமாருக்குப் புரியவில்லை.
“நீங்க படுத்துக்கோங்க.. லீவு போட்டுட்டு நானே டெல்லி கூட்டிட்டு போயி. உங்களைப் பிளைட்ல அனுப்பி வைக்குறேன்“
“சரிப்பா“ என்றார் அப்பா.
அப்படி அப்பா சொன்னவிதம் சிறுவயதில் அவன் சொன்னது போலவே இருந்தது.
••