அரையும் குறையும்

மோகன் ராகேஷ் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர். இந்தி இலக்கியத்தில் புதிய கதை இயக்கத்தை உருவாக்கியவர். சிறந்த நாடகாசிரியர். இவரது நாடகங்கள் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவை. சிறுகதைகள், நாவல், பயணக்கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர். பஞசாப்பில் பிறந்த இவர் ஆங்கில இலக்கியம் கற்றவர்.

இவரது ஆதே ஆதுரே என்ற நாடகம் தமிழில் அரையும் குறையும் என்று சரஸ்வதி ராம் நாத் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தி நாடகவுலகில் புகழ்பெற்ற இந்நாடகம் நடுத்தரவர்க்க குடும்பத்தின் சிக்கல்களை, மனநிலையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக வேலையின்மை ஏற்படுத்தும் நெருக்கடியும், போலியான பாவனையுடன் விருந்தினரை உபசரிக்கும் விதமும். வேலையில்லாத அப்பாவிற்கு வீட்டில் கிடைக்கும் அவமதிப்பும். நவீன உலகில் ஆசைகளைப் பின்தொடரும் பிள்ளைகளும் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நாடகத்தின் ஒரு காட்சியில் இளம்பெண் சிறிய இடத்திற்குள் ஒரே காற்றினைப் பலரும் சுவாசித்துக் கொண்டு வாழுவது மூச்சடைக்க வைக்கிறது. இதனால் மனதிற்குள் எப்போதும் ஒரு பலூன் ஊதிப் பெரியதாகிக் கொண்டேயிருக்கிறது. யாராவது ஏதாவது சொன்னால் உடனே கோபம் வந்துவிடுவதற்கு. காரணம் அந்தப் பலூன் வெடிக்கத் துடிப்பதே என்கிறாள்.

இன்னொரு காட்சியில் வீட்டிற்கு வரும் அம்மாவின் உயர் அலுவலரின் பொய்யான நடிப்பையும், அபத்தமான பேச்சையும் மகனும் மகளும் கேலி செய்கிறார்கள். ஒரு வேலை வாங்குவதற்காக இவ்வளவு மோசமாக வேஷம் போட வேண்டுமா என்று அம்மாவைத் திட்டுகிறார்கள். அந்த அதிகாரியின் பேச்சும் நடத்தையும் அபத்த நகைச்சுவையாக விவரிக்கப்படுகிறது

இவர்களின் வாழ்க்கை கானலைத் துரத்திப் போனது போலவே தான் அமைந்திருக்கிறது. எதுவும் திருப்தியாக இல்லை. பணமும் உடல்நலமும் பிரச்சனைகள் அற்ற வாழ்க்கையும் இருந்தாலும் ஏதோவொன்று குறைகிறது. அது என்னவென்று சுட்டிக்காட்ட முடியாதபடி மனது குழம்பியிருக்கிறது என்று ஒரு இடத்தில் சொல்லிக் காட்டுகிறாள் மகள். அது தனிநபரின் பிரச்சனையில்லை. நடுத்தர வர்க்க குடும்பங்களின் பொதுப்பிரச்சனை.

எல்லா ஆண்களும் ஒன்று போன்றவர்களே. அவர்கள் பெண்களைத் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு விலகிப்போய்விடுவார்கள் என்று இன்னொரு இடத்தில் சாவித்திரி சொல்கிறாள். அது அவளது ஏமாற்றமான உறவின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

பெற்றோர்களின் சண்டையும் குழப்பமும் பிள்ளைகளை எந்த அளவு பாதிக்கும் என்பதற்குக் கின்னியும் அசோக்கும் உதாரணமாக இருக்கிறார்கள். அவர்கள் நவீன உலகில் தங்கள் அடையாளங்கள் குறித்து யோசிக்கிறார்கள். கவலைப்படுகிறார்கள். நடுத்தரவர்க்க வாழ்விலிருந்து தப்பிவிட முயற்சிக்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாடகம் இன்றும் பொருத்தமாகவே உள்ளது. தொழில்நுட்ப சாதனங்களின் வருகையும் பொருளாதார வளர்ச்சியும் இன்றைய நடுத்தர வர்க்க குடும்பத்தின் அடையாளத்தை மாற்றியிருந்தாலும் அக்குடும்பத்தின் ஆதார பிரச்சனைகள் மோகன் ராகேஷ் சுட்டிக்காட்டுவதிலிருந்து மாறிவிடவில்லை.

மோகன் ராகேஷ் நாடகங்கள் நூல் இப்போது மறுபதிப்பில் இல்லை. இந்நூல் வாசகர் வட்ட வெளியீடாக 1974ல் வெளியாகியிருக்கிறது. தற்போது எங்காவது பழைய புத்தகக் கடைகளில் கிடைத்தால் உண்டு.

நவீன நாடகங்கள் பார்ப்பதற்கே குறைவான நபர்கள் உள்ள சூழலில் நாடகப் புத்தகங்களை யார் தேடி வாசிக்கப் போகிறார்கள். எழுபதுகளில் நவீன நாடக முயற்சிகள் தீவிரமாக உருவான சூழலில் இந்த நாடகநூல் மிகவும் கவனம் பெற்றிருக்கிறது. இன்றும் இந்த நாடகங்கள் புதிய வடிவில் நிகழ்த்தப்படுவதற்கான தேவையிருக்கிறது. மோகன் ராகேஷ் நாடகங்கள் ஆங்கிலத்தில் வாசிக்க கிடைக்கின்றன. இந்த நாடகத்தின் ஆங்கில மொழியாக்கம் “Halfway House” என வெளியாகியுள்ளது.

வாசகர் வட்ட வெளியீடுகள் பதிப்புத் துறையின் முன்னோடி சாதனைகள். இந்நூலும் அத்தனை அழகாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

0Shares
0