அழியா நினைவுகள்.

மகாகவி தாகூர் குறித்துப் புதிய திரைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

Thinking of Him என்ற இப்படத்தை இயக்கியிருப்பவர் பாப்லோ செசார். .அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற இயக்குனர். பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்தோ அர்ஜென்டினா கூட்டுத் தயாரிப்பாக வெளியாகியுள்ள இப்படம் 2018ல் வெளிவந்துள்ளது.

1924ம் ஆண்டுத் தாகூர் பெருநாட்டின் அழைப்பை ஏற்றுப் பயணம் செய்தார். பயணத்தின் போது எதிர்பாராமல் உடல் நலமற்றுப் போகவே அர்ஜென்டினாவில் சில மாதங்கள் தங்கி ஒய்வு பெற்றார்.

அர்ஜென்டினா அகாடமி ஆஃப் லெட்டர்ஸ் அமைப்பின் முதல் பெண் உறுப்பினராக இருந்தவர் கவிஞர் விக்டோரியா ஒகம்போ, 1924 ல் ப்யூனஸ் அயர்ஸ் விஜயத்தின் போது தாகூரைத் தனது விருந்தினராக ஏற்று உபசரித்துத் தங்கிக் கொள்ள வசதிகள் செய்து கொடுத்தார்.

விக்டோரியா ஒகம்பே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மகாத்மா காந்தி மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் தாகூரின் கீதாஞ்சலியைப் பிரெஞ்சு மொழியாக்கத்தில் வாசித்திருக்கிறார்.

ஆகவே தாகூரை தன் விருந்தினர் இல்லத்திலே தங்க வைத்துக் கொண்டார். அப்போது தாகூருக்கு வயது 66. ஒகம்பேயின் வயது 30

ஒகம்பேயின் இயற்கை எழில் நிரம்பிய வீடு தாகூரிற்கு மிகவும் பிடித்துப் போனது. விக்டோரியாவின் பெயரை விஜயா என்று தாகூர் மாற்றி அழைத்தார். அவர்களுக்குள் நல்ல நட்பு உருவானது. ஒகம்பே தாகூரை தனது மானசீக குருவாகக் கொண்டார்.  பின்னாளில் அவர் எழுதிய கவிதைகளில் தாகூரின் பாதிப்பைக் காண முடிகிறது. தாகூரும் தனது சில கவிதைகளை விக்டோரியா ஒகம்பேயிற்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந்தியா திரும்பிய பிறகும் ஒகம்பேயுடன் தாகூரின் கடிதத் தொடர்பு நீடித்தது. தாகூரின் கவிதைகளை ஒகம்பே ஸ்பானிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  தாகூர் தனது ஒவியங்களைப் பாரீஸில் காட்சிக்கு வைப்பதற்கு ஒகம்பே தான் முக்கியக் காரணம். அவரே எல்லா ஏற்பாடுகளையும் செய்து உதவினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பாரீஸில் சந்தித்துக் கொண்டார்கள். தாகூர் பற்றி ஒகம்பே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதுவே படத்தின் ஆதாரப்புள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக கோவாவில் நடைபெறும் சர்வதே திரைப்படவிழாவிற்கு ஜுரியாக வந்த பாப்லோ செசாருக்கு இந்தியப்பண்பாடு மற்றும் இலக்கியத்தின் மீது பெரும் மரியாதை உருவானது.

பிறகு ஊர் திரும்பியதும் தற்செயலாக அர்ஜென்டினாவில் இந்தியத்தூதுவராகப் பணியாற்றிய ரங்கராஜ் விஸ்வநாதனைச் சந்தித்துப் பேச நேர்ந்த்து. அவர் தாகூர் பற்றிய படத்தை எடுக்க எல்லா உதவிகளையும் செய்வதாகக் கூறவே இப்படம் உருவாக்கும் கனவு துவங்கியிருக்கிறது.

ரங்கராஜ் விஸ்வநாதன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்திய ஆட்சிப்பணியில் பல ஆண்டுகள் வெளிநாடுகளில் பணியாற்றியவர். தேர்ந்த இலக்கிய ஆர்வலர். அவரது முன்னெடுப்பே இப்படம் உருவாக முக்கியக் காரணம்.

Thinking of Him படம் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று பெலிக்ஸ் என்ற பள்ளி ஆசிரியரின் இந்தியப்பயணம். மற்றொன்று 1924ல் தாகூர் ப்யூனஸ் அயர்ஸ் வந்த நாட்களைப் பற்றியது.  இப்படத்தில் தாகூராக நடித்திருப்பவர் விக்டர் பானர்ஜி , எலிநோரா வொக்ஸ்லர் ஒகம்போவாக நடித்துள்ளார்

தாகூரைப் பற்றி சத்யஜித் ரே இயக்கிய ஆவணப்படம் உருவாக்கிய தாக்கத்தில் பாதியைக் கூட இப்படம் உருவாக்கவில்லை.

தாகூரின் வாழ்க்கை சார்ந்த முக்கிய நிகழ்வை ஆவணப்படுத்தியுள்ளது என்பதற்காக இதைப் பார்க்கலாம்

0Shares
0