ஒரு படத்தின் தயாரிப்பாளர் அப்படம் உருவான விதம், இயக்குநர் எவ்வாறு தன்னை அணுகினார், படப்பிடிப்பில் என்ன நடந்தது, படம் வெளிவருதற்கு என்ன சிரமங்கள் ஏற்பட்டன, நடிகர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்கள் என்று வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதேயில்லை. பல நேரங்களில் படம் முடிவதற்குள் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை முற்றிவிடுவதுண்டு. வெற்றிப்படமாக அமைந்த போதும் இயக்குநர்கள் புறக்கணிக்கப்பட்டதே சினிமா உலகின் நியதி.
ஆனால் முதன்முறையாகச் சுரேஷ் ஜிந்தால் என்ற சத்யஜித்ரேயின் தயாரிப்பாளர் தான் எவ்வாறு ரேயை வைத்து Shatranj Ke Khilari படத்தை உருவாக்கினேன் என்பதை விரிவான புத்தகமாக எழுதியிருக்கிறார்.
My Adventures with Satyajit Ray: The Making of Shatranj Ke Khilari, என்ற இந்நூலில் சத்யஜித்ரேயிற்கும் அவருக்குமான அறிமுகம், கடிதத் தொடர்பு, படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகள், படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்கள், இயக்குநருடன் ஏற்பட்ட மோதல், அதைத் தொடர்ந்த கசப்பான அனுபவங்கள் மற்றும் வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கல்கள், திரைப்படவிழாவில் கிடைத்த பாராட்டுகள் என ஒளிவுமறைவின்றித் தனது அனுபவங்களைச் சுரேஷ் ஜிந்தால் பதிவு செய்திருக்கிறார்
இந்நூலிற்கு முன்னுரை எழுதியிருப்பவர் பிரபல பிரெஞ்சு திரைக்கதை ஆசிரியர் ழான் கிளாடே கேரியர். சத்யஜித் ரேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ட்ரூ ராபின்சன் ஒரு விரிவான அறிமுகவுரையை எழுதியிருக்கிறார்
அமெரிக்காவில் பொறியியல் படித்தவர் ஜிந்தால். ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த வசதியானவர். இந்தியா திரும்பியதும் கலைப்படங்களை உருவாக்க முனையும் கலைஞர்களை ஆதரிக்க வேண்டும் எனச் சினிமா தயாரிப்பில் இறங்கினார்.
இவரது தயாரிப்பில் வெளியான ரஜினிகாந்தா என்ற படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தனது ஆதர்ச இயக்குநரான சத்யஜித்ரேயை வைத்து ஒரு படம் உருவாக்க விரும்பினார்.
சத்யஜித் ரேயும் நீண்ட நாட்களாகவே இந்தியில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார்.
1974ல் தனது நண்பர் டினு ஆனந்த் மூலமாகக் கல்கத்தாவிலுள்ள ரேயின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார் ஜிந்தால். அப்போது பிரேம்சந்தின் சிறுகதையான சத்ரஞ் கி கிலாடி கதையைத் தான் படமாக்க விரும்புவதாக ரே தெரிவித்தார்.
சத்ரஞ்ச் கி கிலாடி கதையை அதற்கு முன்பு வரை சுரேஷ் கேள்விப்பட்டிருக்கவில்லை.
தன்னிடமிருந்த ஆங்கில மொழியாக்கப்பிரதியை அவரிடம் தந்த ரே அதைப் படித்துவிட்டு மறுநாள் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னதோடு ஒரு வேளை இக்கதை பிடிக்காவிட்டால் இதை நான் படமாக்கத் தேர்வு செய்து வைத்துள்ளதைப் பற்றி ஒருவரிடம் சொல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.
தன் அறைக்குச் சென்று இரவில் கதையைப் படித்து முடித்த சுரேஷ் அது தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று மறுநாள் முன்பணம் பணம் கொடுக்கப் போன போது அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் பழக்கம் எனக்குக் கிடையாது. முதலில் படத்தின் திரைக்கதையை எழுதி முடிக்கிறேன். அது உங்களுக்குப் பிடித்திருந்தால், அவ்வளவு பொருட்செலவில் படத்தை உருவாக்க முடியும் என்றால் அப்போது பணத்தைப் பற்றிப் பேசுவோம் என்று ரே முன்பணம் வாங்க மறுத்துவிட்டார்.
திரைக்கதையை உருவாக்குவதற்குச் சத்யஜித்ரே விரிவான ஆய்வினை மேற்கொண்டார். கதை லக்னோவில் நடக்கிறது. அதுவும் 1856ல் நடக்கிறது. ஆகவே அன்று இருந்த மாளிகைகள். மன்னரின் வாழ்க்கை முறை, வரலாற்றுப் பூர்வ நிகழ்வுகள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப் பற்றிய உண்மையான தகவல்கள் என்று டாக்டர் பட்டத்திற்கு ஆய்வு செய்வது போல விரிவாக ஆய்வினை மேற்கொண்டார் ரே.
இதற்காக ரே லண்டனில் உள்ள இந்திய அலுவலகத்தையும் பல்வேறு ஆய்வு நிலையங்களையும் பயன்படுத்தினார். லக்னோவில் ரேயின் மாமா இருந்த காரணத்தால் நேரில் சென்று கள ஆய்வு செய்தார். உள்ளுர் வரலாற்று ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடினார். ஒரு வருஷம் முழுமையாக ஆய்வு செய்த பிறகே திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார்.
திரைக்கதை ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. படப்பிடிப்பிற்காக உருதும் பெங்காலியும் தெரிந்த ஒரு எழுத்தாளரை உதவிக்கு வைத்துக் கொள்வதாக ரே சொல்லியிருந்தார்.
படப்பிடிப்பு துவங்கவே எட்டு மாதங்களுக்கும் மேலானது. இதற்கிடையில் முக்கியக் கதாபாத்திரமாக நடிக்கும் சஞ்சீவ் குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொரு கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் அம்ஜத்கான் விபத்தில் காயம்பட்டார். ஆகவே உடனடியாகப் படம் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்தப் படத்திற்கான ஆயுத்தப்பணிகளின் ஊடே ரே சென்னைக்கு வந்து பாலசரஸ்வதி பற்றிய ஆவணப்படத்தை இயக்குகிறார். அமெரிக்காவிற்குச் சென்று நார்டன் சொற்பொழிவிற்காக இரண்டுமாதங்கள் செலவிடத் திட்டமிடுகிறார். மாஸ்கோ திரைப்படவிழாவிற்குப் போய் வருவதற்கு ஒத்துக் கொள்கிறார். பரபரப்பான தனது வாழ்க்கைச் சூழலுக்கு நடுவே படிக்கவும் இசை கேட்கவும் ரே நேரம் ஒதுக்குகிறார் என்பதே அவரது சிறப்பு.
வினியோகஸ்தர்களின் விருப்பத்திற்காகப் படத்தில் ஹேமாமாலினியை சேர்த்துக் கொள்ள முடியுமா? படத்தை விற்பது எளிது என்று ஜிந்தால் சொன்னபோது, தன்னால் அப்படிச் செய்ய இயலாது. தன் படத்தில் வணிக நோக்கத்திற்காக எவரையும் நடிக்க வைக்க முடியாது என்று கறாராக ரே மறுத்துவிட்டார்.
ஷோலே படத்தில் வில்லான நடித்த அம்ஜத்கானை இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரமாக நடிக்க வைப்பது சரியா எனச் சுரேஷ் தயங்கிய போது. தனது கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று தான் தேர்வு செய்தேன். அவர் புகழ்பெற்ற நடிகர் என்பதற்காக இல்லை என்றார் ரே
ஆரம்பத்தில் சுரேஷ் ஜிந்தால் ரேயின் விருப்பப்படியே நடந்து கொண்டார். ஆனால் படம் துவங்கியதும் அவரது அணுகுமுறை முற்றிலும் மாறியது. தன்னை இதை விட யாரும் அவமதிக்க முடியாது. நெருக்கடி கொடுக்க முடியாது என்று மனம் நொந்து ரே கடிதம் எழுதியிருக்கிறார்.
அரங்கம் அமைக்கப் போதுமான பணம் தரப்படவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் வேலை செய்தவர்களுக்குப் பணம் தரவில்லை. தொழில்நுட்ப கலைஞர்கள் பணம் கேட்டு ரேயை தொந்தரவு செய்தார்கள்.
ஜிந்தால் தன்னிடம் பணமில்லை. கடன் வாங்கி வட்டி கட்டுகிறேன் என்று பேசி பணம் தர மறுத்தார். படப்பிடிப்பு தாமதமானது. கடன் வாங்கிப் படப்பிடிப்பு மறுபடியும் துவங்கியது. படப்பிடிப்பு குழு மோசமான விடுதியில் தங்க வைக்கப்பட்டது. நடிகர்களுக்குக் கூடப் பணம் தரப்படவில்லை
இத்தனை நெருக்கடிகளுக்குள்ளும் தான் விரும்பியபடியே தான் ரே படத்தை எடுத்தார். படப்பிடிப்புத் தளத்தில் இந்த விஷயங்கள் எதுவும் அவரைப் பாதித்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை. அறுபது நாட்களில் படம் முடிந்து போனது.
படத்தை விற்பதில் மறுபடியும் ஏகப்பட்ட குளறுபடிகள். படம் குறித்து வெளியான மோசமான விமர்சனங்கள் படத்தின் வசூலைப் பாதித்தன. ஆனால் திரைப்படவிழாக்களில் படம் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினார்கள். அந்த வெற்றியை வைத்துக் கொண்டு வெளிநாடுகளில் படத்தை விற்க பல்வகைத் தந்திரங்களை மேற்கொண்டார் ஜிந்தால்.
இனி ஒரு போதும் இந்திப்படம் எடுக்கமாட்டேன் என்று ஒதுங்கிக் கொள்ளும் அளவு பிரச்சனைகளைச் சந்தித்தார் ரே.
ஆனால் அவரது திரைப்படம் அவருக்கேயான அழகியலோடு வரலாற்றை மீள் உருவாக்கம் செய்திருக்கிறது
ஒரு கலைஞனாகச் சத்யஜித்ரேயை மிகவும் மதிக்கிறேன். அவர் நிகரற்ற ஆளுமை என்று சுரேஷ் ஜிந்தால் அவரைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
சர்வதேச அளவில் பெயரும் புகழும் கொண்ட ஒரு இயக்குநர் இந்தியில் படம் இயக்குவது என்றாலே இத்தனை பிரச்சனைகளா எனத் திகைக்கும்படி உண்மைகளை வெளியே பகிர்ந்திருக்கிறார் ஜிந்தால்
நூலின் கடைசி அத்தியாயத்தில் இத்தனை படங்கள் செய்து பெயரும் புகழும் பெற்றிருந்த போதும் சத்யஜித்ரே வாடகை வீட்டில் தான் குடியிருந்தார். அவர் சொந்த வீடு வாங்கவேயில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.
ஒவ்வொரு திரைப்பட உருவாக்கமும் ஒரு சாகசமே என்று ஒரு இடத்தில் ரே ஜிந்தாலிடம் கூறுகிறார்.
அதை வாசிக்கும் பட உருவாக்கம் என்பது வெறும் சாகசமில்லை. தன் உடலின் மீது சவுக்கால் அடித்துக் கொண்டு பிறரைச் சந்தோஷப்படுத்தும் கலைஞனின் செயல்பாடது என்றே தோன்றியது
