அழகே அழகு

சில திரையிசைப் பாடல்கள் கேட்ட முதல்நாளில் இருந்து இன்று வரை அதன் ஈர்ப்பை அப்படியே வைத்திருக்கின்றன, அதில் ஒன்று ராஜபார்வை படத்தில் இடம் பெற்ற ஜேசுதாஸ் பாடியுள்ள அழகே அழகு தேவதை பாடல்

கவியரசர்  கண்ணதாசன் எழுதிய இப்பாடல் பாதாதி கேசம் பெண்ணை வர்ணிக்கும் மரபில் உருவானது, பாடலை ரசித்து அழகாக எழுதியிருக்கிறார் கவியரசர், எளிமையும், வியப்பும் ஒருங்கே கொண்ட பாடலது, கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் மனதில் ஒரு பெண்உருவம் தோன்றி பாடல் கேட்பவரை தன்வசமாக்குகிறது,

ராஜபார்வை தமிழ்சினிமாவில் முக்கியமான ஒரு படம், இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதிதுபுதிதாக ஆச்சரியங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. இன்று வெளியாகியிருக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக எப்படி உருவாக்கினார் கமல்ஹாசன் என்று வியப்பாகவே உள்ளது

வேறுமாநிலங்களில் இருந்து நடிகைகளை மட்டுமே தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்து கொண்டிருந்த சூழலில் ராஜபார்வையில் இடம்பெற்ற கலைஞர்களின் பட்டியலைப் பாருங்கள், படத்தின் இயக்குனர் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த சிங்கிதம் சீனிவாசராவ், ஒளிப்பதிவாளர் வங்காளத்தைச் சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் பரூண் முகர்ஜி, முக்கியக் கதாபாத்திரமொன்றில் நடித்திருப்பவர் தெலுங்கு தமிழ் திரைப்படங்களின் முக்கியத் தயாரிப்பாளரும், நடிகருமான எல்.வி.பிரசாத், இன்னொரு முக்கியக் கதாபாத்திரம்  கேரளாவைச் சேர்ந்த  K.P.A.C. லலிதா, இவர் இயக்குனர் பரதனின் மனைவி.

மாதவியின் அப்பாவாக நடித்திருப்பவர் ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஏவி.தனுஷ்கோடி, இவர்  அமெரிக்கத் தூதரகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர், சிறந்த ஒவியர், ஜெர்மனியில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்ப்புகள் செய்திருப்பவர், படத்தின் உயிரோட்டமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா, இவர்களுடன் கண்ணதாசன், வைரமுத்து இருவரின் அற்புதமான பாடல்கள், இப்படி படத்தின் உருவாக்கத்தில் இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகள் பலரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள், ஆனால் படம் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை, அதற்கான முக்கிய காரணம் கமல்ஹாசனின் நூறாவது படம் என்பது குறித்து அவரது ரசிகர்கள் மிதமிஞ்சிய எதிர்ப்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள், அதை நிறைவேற்றி வணிகவெற்றி பெறுவதைவிடவும் தனக்கு விருப்பமான ஒரு கதையை, விருப்பமான தொழில்நுட்பக்குழுவினரைக் கொண்டு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கமல்ஹாசன்  இப்படத்தைத்  தயாரித்திருந்தார்,

இசையை மையமாகக் கொண்ட படமாக அமைந்ததோடு சம்பிரதாயமான காதல்காட்சிகள், சண்டைகள், திடீர் திருப்பங்கள் எதுவுமில்லாமல் மாறுபட்ட கதைசொல்லும்முறையை கொண்டிருந்ததை அன்றைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்கு காரணம் அன்று தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருந்த பொது ரசனை,

1981களில்  மாறுபட்ட காதல்கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தன, அதில் பன்னீர்புஷ்பங்க்ள், பாலைவனச்சோலை, இன்று போய் நாளை வா, அலைகள் ஒய்வதில்லை ஆகிய நான்கு படங்களும் நான்குவிதமான காதல்கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்லி வணிகரீதியாக வெற்றி பெற்றன, இந்த ஆண்டு வெளியான மகேந்திரன் இயக்கிய நண்டு புதிய கதைக்களனோடு  வெளியானது, ஆனால் படம் வணிக வெற்றியை பெறவில்லை, அது போன்ற ஒரு சூழலே ராஜபார்வைக்கும் நேர்ந்த்து,

அழகே அழகு தேவதை பாடல் படமாக்கபட்டுள்ள விதம் சிறப்பானது, கேமிரா நகர்வதற்கு போதுமான அளவு கூட இல்லாத ஒரே வீடு, அதற்குள் முழுப்பாடலும் எடுக்கபட்டிருக்கிறது, ஆடம்பரமில்லை, பகட்டான ஆடை அணிகள் இல்லை, மாதவியின் கிளர்ச்சியூட்டும் அழகு தான் பாடலின் மையப்புள்ளி. பாடல் இடம் பெறும் சூழல் கதையின் போக்கில் ஒரு முக்கியத் தருணம். பாடலின் துவக்கமும் முடிவும் அதைக் கதையோடு சேர்ந்த பாடலாகப் பொருந்த வைக்கிறது,

இப்படத்தில் திரைப்படப் பின்னணி இசை சேர்க்கும் குழுவில் உள்ள பார்வையற்ற வயலின் இசைக்கலைஞராக கமல்ஹாசன் நடித்திருக்கிறார்,  கதை எழுதுவதற்காக அவரைச் சந்திக்கும் மாதவி அவரோடு நெருங்கிப் பழகத் துவங்குகிறார், இவரும் ஒருநாள் சமையல் செய்கிறார்கள், சமையல் புத்தகத்தை பார்த்துச் சமைக்க முற்படும் போது எதிர்பாராத விதமாக சமையல்பொருள்களை மாதவி மீது கொட்டிவிடுகிறார் கமல், அவள் குளித்துவிட்டு ஈரத்தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டவராக அமர்ந்திருக்கையில் அவளது அழகை வியந்து பாடுவதாகவே இப்பாடல் இடம் பெற்றுள்ளது

அழகே அழகு, தேவதை என்ற மூன்று வார்த்தைகளில் அவளது அழகின் மீதான லயப்பு முழுமையாக வெளிப்பட்டுவிடுகிறது, அதிலும் அழகு என்று உச்சரிக்கும் போது ஏற்படும் சிலிரிப்பு பின்வரும் தேவதை என்ற சொல்லின் வழியே நிறைவு அடைகிறது,

ராஜபார்வை முழுவதும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் தான், குறிப்பாக பார்வையற்றோர் பள்ளியில் நடைபெறும் வயலின் இசை நிகழ்வில் அவர் அமைத்துள்ள இசைக்கோர்வை உலகத்தரமானது, இப்பாடலின் துவக்கத்தில் ஜேசுதாஸின் ஹம்மிங் மயக்ககூடியது,

ஒவியத்தின் மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம், அவரது படங்களில் ஒவியர்கள் கதாபாத்திரமாக வருவதுண்டு, அவரே அன்பே சிவத்தில் ஒவியராக நடித்திருக்கிறார், காதலா காதலாவிலும் ஒவியம் வரைபவராக பிரபுதேவா சித்தரிக்கபடுவார், விருமாண்டியிலும் ஒரு ஒவியர் முக்கிய சம்பவங்களின் சாட்சியாக இருப்பார், இப்பாடலில் மாதவி  சித்திரம் வரைந்து கொண்டிருக்க அவரது ஒவ்வொரு அங்கமாக தொட்டுணர்ந்து கமல்ஹாசன் பாடுகிறார்,

தனது அழகைப்பற்றி பாடுவதை உள்ளுற ரசித்தபடியே அவரைசீண்டிக் கொண்டிருக்கிறார் மாதவி, குறிப்பாக பட்டன் அணியாத மேல்சட்டையுடன் உள்ள கமலின் உணர்ச்சிபாவங்களும், அவரது தலையில் செல்லமாகத் தட்டி விளையாட்டுகாட்டும் மாதவியின் நளினமும் காதல்வசப்பட்ட அவர்களின் நெருக்கத்தை தெளிவாக காட்சிபடுத்தியிருக்கின்றன

படியில் அமர்ந்திருந்த மாதவியைக் காணவில்லை என்று கமல் தேடும்போது அவரது விரலைப்பற்றி பல்லிடுக்கில் வைத்துக் கடிக்கும் அவரது குறும்புதனமும் விடுபடாத விரலோடு ததும்பும் மனமயக்கத்தில் அந்த இதழ்களை தொட்டு அறிந்து அவர் பாடுகிறார்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்

மின்னுகின்றன

சேர்ந்த பல்லின் வரிசையாவும்

முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ

தேன்குழல் விரல்களோ

ஒரு அஙகம் கைகள் அறியாதது

அறைக்குள்ளாகவே பாடல் படமாக்கபட்டுள்ளது, ஆனால் மாறுபட்ட கோணங்கள், உணர்ச்சிநிலைகள், ஊடல் என அந்தரங்க நெருக்கத்தை தருகிறது இப்பாடல், அதற்கு முக்கிய காரணம் இளையராஜாவின் நேர்த்தியான இசையும் யேசுதாஸின் மென்மையான குரலும் பருண் முகர்ஜியின் கவித்துவமான ஒளிப்பதிவும், நடனமில்லாமல் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கமல் மற்றும் மாதவியின் நடிப்புமே, இவையே பாடலின் வெற்றிக்கான முதன்மைக் காரணங்கள்

ராஜபார்வை படத்தில் குறிப்பிட்டுள்ள சொல்ல வேண்டிய மூவர், தாத்தாவாக நடித்துள்ள எல்வி பிரசாத், இவர் பிரசாத் ஸ்டுடியோவின் அதிபர், தெலுங்கில் நடிகராக அறிமுமாகி முக்கியத் தமிழ் தெலுங்கு தயாரிப்பாளராக பல புகழ்பெற்ற படங்களை உருவாக்கியவர், படத்தில் அவரது கதாபாத்திரம் வித்தியாசமானது, தனது பேத்தியின் காதலுக்காக அவர் நடந்து கொள்ளும விதம், இரவில் சாலையில் நிற்கும்  கமலிடம் பெர்த்டே வாழ்த்து சொல்லும் அன்பு, மாதவியின் காதலைப்பற்றி முன்பே தெரியுமா எனக் கோபத்துடன் கேட்கும் மகனிடம் தடுமாற்றதுடன் சமாளிக்கும் பாங்கு, இறுதிக் காட்சியில் தேவாலயத்தில் இருந்து காதலர்களை சேர்த்து வைக்கும் போது வெளிப்படும் அவரது உறுதியான மனப்போக்கு யாவும்  அவரை மறக்கமுடியாத ஒரு நடிகராக மாற்றிவிடுகின்றன,

இது போன்ற பாத்திரப்படைப்புகள் இன்று தமிழ் சினிமாவில் நிறைய வந்துவிட்டன, ஆனால் ராஜபார்வை தான் அதன் முதல்முயற்சி, அதற்கு முந்திய ஆண்டுகளில் வயதானவர்கள் என்றாலே ஒரே மெலோடிராமாவாக இருக்கும், அதைத் தூக்கிப்போட்டுவிட்டு புதியதொரு கதாபாத்திரமாக எல்விபிரசாத்தின் தாத்தா ரோல் உருவாக்கபட்டிருக்கிறது

இது போலவே படத்தில் தனித்து பாராட்ட இன்னொரு கலைஞர் ஏவி தனுஷ்கோடி, ஆங்கிலப்பேராசிரியராக சில ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இருபது ஆண்டுகள் அமெரிக்க தூதரகத்தில் பொருளதாரப்பிரிவில் ஆலோசகராக பணியாற்றியவர், ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர், தேர்ந்த ஒவியர், மொழிபெயர்ப்பாளர், இவர் மாதவியின் தந்தையாக நடித்திருக்கிறார், 

படபடப்பும், முன்கோபமும் கொண்ட கதாபாத்திரமது, அவரது கார் வி.கே.ராமசாமி காரோடு மோதும் போது ஏற்படும் கோபம், வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட கமல்ஹாசனிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் விதம், மகளிடம் கோபத்தில் கத்தும் போது ஏற்படும் உணர்ச்சிவேகம், பெண்கேட்டு வந்த கமல்ஹாசன் முன்பாக அப்பாவியாக கேட்கும் இயல்பு, இரவில் குடித்துவிட்டு தன்வீட்டின் முன்பு கலாட்டா  செய்யும் கமல் கோஷ்டியைக் கண்டு ஏற்படும் ஆத்திரம் என்று தனுஷ்கோடி சிறப்பாக நடித்திருக்கிறார், இவ்வளவு தேர்ந்த நடிகர் ஏன் தமிழ்சினிமாவால் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போனார் என்பது ஆதங்கமாகவே உள்ளது,

இது போலவே கமலின் சிற்றன்னையாக வரும் K.P.A.C. லலிதா, அரியதொரு கதாபாத்திரம், வழக்கமான சித்தி போல கொடுமைக்காரியாக அவர் சித்தரிக்கபட்ட போதும் வீடு தேடிவந்து அவர் கமலிடம் பேசும் முறையும், அவருக்காக விகேராமசாமியிடம் பெண் கேட்பதும், போலீஸில் இருந்து மகனை மீட்டுவந்து காட்டும் அக்கறையும், மாதவி வீட்டில் போய் பேசும் கம்பீரமும், தான் விரும்பிய பெண்ணை கமல் ஒத்துக் கொள்ள மறுக்கும் போது காட்டும் ஆதங்கமும் என K.P.A.C. லலிதா தேர்ந்த நடிகை என்பதை நிருபணம் செய்திருக்கிறார், அவருக்கும் கமலிற்குமான உரையாடல்கள் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன,

எண்பதுகளில் வெளியான மலையாளத்திரைப்படங்களின் அழகியலை ஒத்தே ராஜபார்வை உருவாக்க்பட்டிருக்கிறது,  மொத்தபடத்திலும் பத்தே கதாபாத்திரங்கள், அதிலும் நான்கு பேர் தான் முக்கியமானவர்கள்,  அவர்களை சுற்றியே படம் இயங்குகிறது. சம்பிரதாயமான காட்சிகள் என ஒன்று கூட கிடையாது, கமல் குடியிருக்கும் வீடு, அவரது ஒலிப்பதிவு கூடம், பார்வையற்றோர் பள்ளி யாவும் மிக இயல்பாக, யதார்த்தமான பின்புலமாக உருவாக்கபட்டிருக்கிறது,

1980 ஆண்டு சாய் பரஞ்சிபே ஸ்பார்ஷ் என்றொரு படத்தை இயக்கினார், இதில் நஸ்ருதீன்ஷா பார்வையற்றவராக நடித்திருக்கிறார், இப்படத்திற்கு ராஜபார்வைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன, இரண்டிலும்  முக்கியக் கதாபாத்திரங்கள் மற்றவர்களிடம் இருந்து உதவியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், blind need help not pity or charity என்பதே இருவரது எண்ணமும்,

இரண்டிலும் பார்வையற்றோர் பள்ளி முக்கியக் களமாக உள்ளது,  ஸ்பார்ஷ் படத்தில்  ஷபனா ஆஸ்மி கதாநாயகியாக நடித்திருக்கிறார், அவரது தோற்றம் மற்றும் கேசத்தை வாறிவிடும் இயல்பு ஆகியவை போலவே மாதவியின் தோற்றமும் உள்ளது,

ஸ்பார்ஷ் படத்தில் ஒரு நாள் ஷபனா ஆஸ்மியின் பாடலை தற்செயலாக கேட்ட நஸ்ரூதீன் ஷா அவரைத் தனது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாட்டு கற்றுதரும்படியான சேவைக்கு அழைக்கிறார், விதவையான ஷபனா ஆஸ்மி தயங்கி ஏற்றுக் கொள்கிறார், இருவரும் பேசிப்பழகி ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள், ஷபனாவைக் காதலிக்கத் துவங்குகிறார்  நஸ்ரூதீன் ஷா, அவர்களது திருமணம் நிச்சயக்கபடுகிறது, ஆனால் கருத்துவேறுபாடால் திருமணம் நின்று போகிறது, ஷபனா முன்பு போலவே பார்வையற்றோர் பள்ளியில் பாடல் சொல்லிக் கொடுத்தபடியே தனது நாட்களை கழிக்கிறார், முடிவில் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்,

இப்படத்தின் கதையும் ராஜபார்வையின் கதையும் வேறுபட்டவை, ஒருவேளை ஸ்பார்ஷ் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் காரணமாக கமல் ராஜபார்வையை உருவாக்கியிருக்க்கூடும், நஸ்ரூதீன் ஷாவிற்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது, ஆனால் தமிழ் சினிமாவில் அதன்முன்புவரை இப்படியொரு கதாபாத்திரம் உருவாக்கபடவில்லை,

ஒரு நடிகராக கமலின் இன்னொரு உயரிய பரிமாணம் இப்படத்தில் வெளிப்பட்டுள்ளது, வழக்கமான டுயட்டுகள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை, படம் முழுவதும் பார்வையற்றவரின் மொழியாக இசையே உள்ளது, அம்மாவிடம் கமல் வயலினில் பேசும் காட்சியில் மாஸ்ட்ரோ இளையராஜாவின் இசை விளையாடுகிறது, பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் மாவிலை பாதமோ என்ற உவமை கண்ணதாசனின் கற்பனையை கொண்டாட வைக்கிறது, அவ்வகையில் இப்பாடல் அழகே அழகு என்று தான் சொல்ல வேண்டும்

••

ஹாலிவுட் திரையுலகில் வூடிஆலன் ஒரு கலக்க்கார இயக்குனர், எதையெல்லாம் அமெரிக்க மக்கள் வெளிப்படையாகப் பேசத்தயங்குகிறார்களோ அவற்றைத் தனது படங்களின் வழியே நேரடியாகப் பேசக்கூடியவர், அமெரிக்க கலாச்சார வாழ்வின் பொய்மைகளை நகைச்சுவையாக வெளிப்படுத்தகூடியவர், செக்ஸ், பாலிடிக்ஸ், ஆர்ட்ஸ் என்று ஒவ்வொரு துறையிலும் அமெரிக்க மக்களின் ரசனையும் ஈடுபாடு எப்படி உருவாக்கபடுகிறது என்பதை இவரைப் போல பகடி செய்தவர் எவருமில்லை, ஒருவகையில் அமெரிக்க மத்திய தர வாழ்க்கையின் மனசாட்சியை போல வாழ்பவர், சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,  எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

ரிச்சர்ட் சீகெல் என்ற பத்திரிக்கையாளர் இவரை ஒரு நீண்ட நேர்காணல் நடத்தியிருக்கிறார், அது தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றது, அந்த நிகழ்வின் தொகுப்பு போல உருவாக்கபட்ட புத்தகமே WOODY ALLEN: A LIFE IN FILM.  இதில் வூடி ஆலன் தனது திரைப்படங்களின் உருவாக்கம் மற்றும் அதன் பின்புலமாக உள்ள தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சுவாரஸ்யமான புத்தகமிது, வூடி ஆலனின் படங்கள் இரண்டு தலைமுறையாக இன்றும் அதே வசீகரத்துடன் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகின்றன,

வூடிஆலனின் நகைச்சுவை உணர்வு பிரபலமானது, அவரது வசனங்கள் ஹாலிவுட்டில் அடிக்கடி மேற்கோள்களாக சொல்லப்படுபவை,

அவரது புகழ்பெற்ற ஒரு வசனம்

The difference between sex and death is, with death you can do it alone and nobody’s going to make fun of you.

சமீபத்தில் வூடி ஆலன் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் “Midnight in paris” , இப்படம் இலக்கியவாதிகளின் காலத்திற்குள் பிரவேசிக்கும் கனவுப்பயணம் பற்றியது, பாரீஸ் நகரைப்பற்றி ஹெமிங்வே எழுதியுள்ள குறிப்புகளை முன்வைத்து உருவாக்கபட்ட ஒரு மாயச்சித்திரம் எனலாம்

கில் பென்டெர் ஒரு எழுத்தாளர். அவன் தனது ஆதர்ச நாவலை முடிக்க முடியாமல் சிரமப்படுகிறான், அப்போது தனக்கு நிச்சயமான பெண்ணுட்ன்  பாரீஸ் செல்ல நேர்கிறது.

கலைகளின்  கூடாரமான பாரீஸ் அவனை மிகவும் ஈர்த்துவிடுகிறது,  அவனது காதலியின் குடும்பமோ ஆடம்பரமும் பகட்டும் கொண்டது, அவர்களின் இரவு விருந்தில் கலந்து கொள்ள விருப்பமற்று வெளியேறிப் போகிறான் கில்,

இரவு  பன்னிரண்டு மணி அடிக்கும்போது ஒரு கார் அருகில் வந்து நிற்கிறது. அது பழங்காலத்து கார், அதிலிருந்து பழங்கால பாணியில் உடை அணிந்த சிலர் இறங்கி கில்லை தங்களுடன் வரும்படி 1920ம் வருசத்திற்கு அழைத்துப் போகிறார்கள், காலம் புரண்டு பின்னால் போகிறது

1920களில் பாரீஸ் ஒவியம் இலக்கியம் கவிதை இசை என்று ஒரே கேளிக்கையாக இருக்கிறது, அங்கே கில் தனது ஆதர்ச எழுத்தாளர் ஹெமிங்வேயை சந்திக்கிறான்,  அவர் நீ என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய் என்று அன்போடு விசாரிக்கிறார், கில் தனது கதையைச் சொல்கிறான்,  அவனுக்கு எழுத்தாளர் கிர்ட்ரூட் ஸ்டெயினை அறிமுகம் செய்து வைப்பதாக ஹெமிங்வே சொல்கிறார், கில்லால் நம்பவே முடியவில்லை, அவன் ஹோட்டலுக்கு போய் தனது நாவலின் பிரதியை எடுத்துவரப்போகிறான், வெளியே வந்து பார்த்தால் காலம் புரண்டு மீண்டும் 2010ம் ஆண்டாக உள்ளது, 

மறுநாளும்  இது போல இன்னொரு காலப்பயணம் ஏற்படுகிறது, இம்முறை அவன் பாப்லோ பிகாசைவைச் சந்திக்கிறான், பிகாசோவின் காதலி ஆட்ரியானாவுக்கு கில்லை பிடித்துப் போய்விடவே அவர்கள் காதலிக்க துவங்குகிறார்கள், இந்த காலமயக்கத்தால் இன்றுள்ள காதலியோடு அவனால் இயல்பாக பழகமுடியவில்லை, மனம் கடந்தகாலத்திற்குள் பிரவேசிக்கவே ஆசை கொள்கிறது,

இதற்கிடையில் அவன் ஒரு பழைய புத்தகக் கடையில் ஆட்ரியானாவின் டைரியைக் கண்டடைகிறான், அதில் அவள் ஒரு அமெரிக்க எழுத்தாளனை காதலித்த விபரங்கள் உள்ளது, அவனால் நம்பவே முடியவில்லை, அது எப்படி சாத்தியமானது என்ற புதிரோடு அவளை மறுபடி சந்திக்க தனது கடந்த காலப்பயணத்திற்காக காத்திருக்கிறான்,

மறுபடி ஒரு பயணம் சாத்தியமாகிறது. கில் ஆட்ரியானை சந்திக்கிறான், அவளோ அவனை ஒரு குதிரை வண்டியில் 1890களுக்கு அழைத்துப் போய்விடுகிறாள், அது எட்கர் ஆலன் போ வசித்த  காலம், அங்கேயே நாம் தங்கிவிடலாம் என்கிறாள், 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தைவிடவும் இலக்கியத்தின் வழியே நம் நினைவில் பதிந்து போயிருக்கும் காலமே ஆதர்சமான ஒன்று, அது நம்மை பல்வேறு காலங்களில் வாழ வைக்கிறது, நாம் நாவலின் வழியே இன்னொரு காலத்திற்குள் சென்று வசிக்கிறோம், இலக்கிய வாசிப்பு என்பது நம்மை பல உலகங்களில் வாழ வைப்பது என்பதை கில் உணர்ந்து கொள்கிறான்,

இலக்கியவாதிகளை முக்கியக் கதாபாத்திரமாக கொண்ட இக் காதல் கதையில் காலத்தின் முன்பின்னாகச் சென்றுவரும் கதாபாத்திரங்களின் வழியே கலையின் உயர்தன்மையை அடையாளப்படுத்துகிறார் வூடி ஆலன், படத்தின் முடிவு மிகுந்த கவித்துவமானது, இது போன்ற கனவுத்தன்மை கொண்ட திரைப்படத்தை உருவாக்கி வெற்றி  காண்பது வூடி ஆலனால் மட்டுமே சாத்தியமான ஒன்று,

••

(உயிர்மையில் வெளியாகி வரும் பறவைக்கோணம் பத்தியில் இடம்பெற்றது)

0Shares
0