ஆயிரம் நினைவுகளின் வீடு

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பா ஜின் எழுதிய குடும்பம் என்ற நாவல் அலைகள் பதிப்பக வெளியீடாக 1999ல் வெளிவந்துள்ளது. இந்நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் நாமக்கல் சுப்ரமணியன். சிறந்த மொழியாக்கம்.

உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் இந்த நாவல் குறித்துத் தமிழில் அதிகம் விவாதிக்கப்படவில்லை. ஒன்றோ இரண்டோ விமர்சனம் வெளியாகியுள்ளது. ஆழ்ந்து வாசிக்கவும் பேசவும் வேண்டிய முக்கிய நாவலிது.

நவீன சீன இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் பா ஜின் 1920களில் ஒரு குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை வழியாக நான்கு தலைமுறைகளின் கதையை நாவலில் எழுதியிருக்கிறார்.

ஒருவகையில் இது அவரது சுயசரிதை. வசதியான சீனக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் என்பதால் அவர் தன்னுடைய குடும்ப வரலாற்றை நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

1932ல் வெளியான இந்த நாவலைச் சீனர்கள் இன்றும் கொண்டாடுகிறார்கள். இந்நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. நாடகமாகவும் ரேடியோ நாடகமாகவும் கல்லூரி பாடமாகவும் தொடர்ந்து வாசிக்கப்படுவதற்கும் கொண்டாடப்படுவதற்கும் முக்கியக் காரணம் இந்த நாவல் புரட்சிகரச் சிந்தனைகள் கொண்ட ஒரு இளைஞனை அடையாளப்படுத்துகிறது என்பதே. ஜூகு பழமைவாதம் பேசும் குடும்பத்திலிருந்து வெளியேறி சமூக மனிதனாக மாறுகிறான். ஆகவே அவனை அன்றைய இளைஞர்கள் மிகவும் நேசித்தார்கள். ஜூகு போல நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள்.

மே 4, 1919 இல் பெய்ஜிங்கில் மாணவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்பாராத விதமாக வன்முறை வெடித்தது, இந்தச் சம்பவம் சீனாவில் ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. இது குறித்து நாடு முழுவதும் பெரிய விவாதம் உருவானது. இதன் விளைவாகச் சீனாவில் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பு மேலோங்கியது. அத்துடன் ஆணாதிக்க மையமான சீன சமுதாயத்தின் அடிப்படை அலகுகள் மாற்றப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. இந்தப் பண்பாட்டு மாற்றத்தின் அதிர்வுகளையே பாஜின் தனது நாவலில் வெளிப்படுத்துகிறார்

ஒரு குடும்பத்தின் நூற்றாண்டு கால வரலாற்றைச் சொல்லும் நாவல்கள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் குடும்பத்தின் வீழ்ச்சியையும் அதனால் ஏற்பட்ட நெருக்கடிகளையும் விவரிக்கக்கூடியவை. பாஜினும் அப்படியான நாவலைத் தான் எழுதியிருக்கிறார்.

பாஜின் நாவல் ஐந்து முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. ஒன்று குடும்பத்தின் நிர்வாக முறை. குறிப்பாக அந்தப் பொறுப்பை வீட்டின் தலைமகன் ஏற்றுக் கொள்வதும் இதனால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளையும் பேசுகிறது.. இரண்டாவது வீட்டின் நம்பிக்கைகள். பெருமைகள். மரபுகள் சடங்குகள் பற்றியது. மூன்றாவது குடும்பத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம், பிரசவம். மரணம் மற்றும் புதிய மாற்றங்களை, கல்வியை, காதலைப் பெண்கள் சந்திக்கும் விதமும் அதன் பிரச்சனைகளையும் விவரிக்கிறது. நாலாவது அரசியல், மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் வீட்டிற்குள் நுழையும் விதம். அதைக் குடும்பம் எதிர்கொண்ட முறை பற்றியது. ஐந்தாவது அந்தக் குடும்பத்தின் வேலையாட்கள். பல்லக்குத்தூக்கிகள். சமையல் ஆட்கள் மற்றும் அவர்களின் சமூகநிலை பற்றியது.

ஒரு குடும்பம் சிதைகிறது என்ற எஸ்எல் பைரப்பாவின் நாவல் கர்நாடக கிராமமொன்றின் கணக்குப்பிள்ளை குடும்பத்தையும் அதன் வீழ்ச்சியினையும் விவரிக்கக் கூடியது. அந்தத் தலைப்பு பாஜின் நாவலுக்கும் பொருத்தமானது. சிதைவு தான் நாவலின் மையப்பொருள்.

பாஜின் நாவலில் தலைமுடியை சிறியதாக வெட்டிக் கொள்ள விரும்பும் பெண் புதுமையின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளைக் குடும்பம் எதிர்க்கிறது ஊர் கேலி செய்கிறது. அவளோ பெண்ணடிமை தனத்திற்கு எதிரான செயலாக இதை நினைக்கிறாள். இது போலவே பெண்களின் கல்வி பற்றிய பழமைவாத பார்வையும் விமர்சிக்கப்படுகிறது. பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒரே பள்ளியில் படிப்பது தவறானது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் இருபாலர் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள். எதிர்ப்பு உருவாகிறது. இந்த மாற்றங்கள் முதன்முறையாக எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதைப் பாஜின் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பாஜின் பாரீஸில் கல்வி பயிலுவதற்காகச் சென்ற நாட்களில் ஊரின் நினைப்பும் வீட்டின் நினைப்பும் தீராத ஏக்கமாக மாறவே இந்த நாவலை எழுதத் துவங்கியிருக்கிறார். 1932ல் இந்த நாவல் வெளியானது.

கூட்டுக்குடும்பத்தின் பெரியவர் காவோ தான் கதையின் மையம். அவரது பேரன்கள் ஜூக்சின், ஜூமின், ஜூகு மூவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது.

ஜூக்சின் தனது அத்தை மகள் மீயைக் காதலிக்கிறான். ஆனால் தந்தையின் விருப்பத்தின்படி ருஜூ என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். தந்தையின் இறப்பிற்குப் பிறகு வீட்டின் நிர்வாகம் அவனது கைகளுக்கு மாறுகிறது. தாத்தா அவனுக்கு வணிக நிறுவனம் ஒன்றில் வேலையும் ஒதுக்கித் தருகிறார். அந்த வேலையில் மூழ்கிப் போகும் ஜூக்சின் இழந்த காதலை நினைத்து எப்போதும் மனம் வருந்திக் கொண்டிருக்கிறான். அவனால் தாத்தாவை மீறிச் செயல்பட முடியவில்லை. ஜூக்சின் மனைவி பிரசவத்தில் இறந்து போகிறாள். கடைசிவரை ஜூக்சின் குடும்பக் கௌரவத்திற்காகப் பொய்யான வாழ்க்கையை வாழுகிறான்.

ஆனால் அவனது தம்பி ஜூமீன் உறவுக்காரப் பெண் குயினை நேசிக்கிறான்; இளையவன் ஜூகுவோடு சேர்ந்து மாணவருக்கான இதழ் ஒன்றை நடத்துகிறான், குடும்பத்தினர் அவனது காதலை ஏற்க மறுக்கும் போது ஜூகுவின் துணையால் அவளை அடைய முயல்கிறான். அவனது அரசியல் பார்வைகளை, போராட்டங்களைத் தாத்தா கண்டிக்கிறார்.

கடைசிப் பையன் ஜூகு குடும்பத்திலே வித்தியாசமானவன். வேலைக்காரர்கள் மற்றும் பல்லக்குத் தூக்குகளிடம் நெருக்கமாகப் பழகுகிறான். அன்பு செலுத்துகிறான். அரசியல் மாற்றத்தை நோக்கிய செயல்பாடுகளை முன்னெடுக்கிறான். இதனால் வீட்டின் உத்தரவுகளை அவன் பொருட்படுத்துவதில்லை. அடிமைகள் சுமக்கும் பல்லக்கில் ஏறிப் போவதை அவமானமாகக் கருதுகிறான்

அந்த வீட்டிலிருந்த பல்லக்கு தூக்குகளைப் பற்றியும் அவர்களின் ஒற்றுமை மற்றும் கடினமான வாழ்க்கை நிலையினையும் பாஜின் துல்லியமாக விவரித்திருக்கிறார். பணம் கிடைக்கிறது என்ற ஒரு காரணத்தால் அவர்கள் தங்கள் அடையாளங்களை மறந்து பல்லக்கு தூக்குகளாக வாழுகிறார்கள். நெருக்கடி எப்படி மனிதர்களை ஒன்று சேர்க்கிறது. எசமானிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள் என்கிறார் பாஜின்.

ஜூகு தன் வீட்டில் வேலை செய்யும் மிங் பெங் என்ற இளம்பெண்ணைக் காதலிக்கிறான். அதை விரும்பாத தாத்தா காவோ அவளை ஒரு வயதான ஆளுக்குத் திருமணம் செய்து வைக்க முயல்கிறார். அவள் இது பற்றி ஜூகுவிடம் பேச வரும் போது அவன் கண்டுகொள்ள மறுக்கிறான். இதனால் மனமுடைந்து மிங் பெங் தற்கொலை செய்து கொள்கிறாள்.

நாவலில் வரும் பெண்கள் அனைவரும் துயர வாழ்க்கையைத் தான் சந்திக்கிறார்கள். ருஜூ தன் கணவன் பழைய காதலியை நினைத்து ஏங்குவதை உணருகிறாள். அவளால் தன் கணவனின் மனதை மாற்ற இயலவில்லை. முடிவில் பிரசவத்தில் அவள் இறந்து போகிறாள். மிங்பெங் தற்கொலை செய்து கொள்கிறாள். திருமணம் அன்றைய சீனக்குடும்பங்களில் எவ்வளவு பெரிய நெருக்கடிகளை, பிரச்சனைகளைக் கொண்டுவந்திருக்கிறது என்பதை பாஜின் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்

ஜூக்சினின் சித்தப்பா விலைமகளுடன் சுற்றுகிறார். போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார். இப்படிக் கைமீறி நடக்கும் நிகழ்வுகளால் ஏற்பட்ட குடும்பத்தின் வீழ்ச்சியைக் காவோவால் ஏற்க முடியவில்லை. ஆனால் இந்த வீழ்ச்சியை அவரால் தடுக்கவும் இயலவில்லை. சூறைக்காற்றில் மணல் அடித்துச் செல்லப்படுவது போன்ற நிலையது.

காவோ ஒரு மறக்கமுடியாத மனிதர். குடும்பத்தின் கௌரவத்தை மட்டுமே முதன்மையாக நினைப்பவர். உறுதியானவர். மனதில் நினைப்பதை வெளியே காட்டிக் கொள்ளாதவர். கண்டிப்பானவர். ஆனால் அவருக்கும் மறுபக்கமிருக்கிறது. அது அவரது மரணப்படுக்கையில் வெளிப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் அவர் எல்லோரும் ஒன்று சேர்ந்து குடித்துச் சந்தோஷமாக உணவு அருந்தும் போது இந்த மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்காது என்பதை உணருகிறார்.

அவரது மரணத்தின் போது தனது தவறுகளை அவர் ஒத்துக் கொள்கிறார். தான் பழமைவாதம் பேசும் மனிதனில்லை என்று தெரிவிக்கிறார். மரணப்படுக்கையில் அவர் ஜூகுவை அழைத்து நல்லாசி கூறி அவனது செயல்பாடுகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கிறார் காவோ இறந்த பிறகு, ஜூகு வீட்டைவிட்டு வெளியேறி பீஜிங் சென்று பண்பாட்டுப் புரட்சிக்கான போராட்டத்தில் இணைய முடிவெடுக்கிறான்.

குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் தலைமுறை வேறுபாடுகள் மற்றும் அவர்களின் மாறுபட்ட மனப்பான்மையை நாவல் அழுத்தமாக விவரிக்கிறது

அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் பற்றிய செய்திகள் அந்தக் குடும்பத்தினுள் நுழையும் விதம் அழகானது. குறிப்பாக. அன்றைய நாளேடுகள். இதழ்கள் அதில் வெளியான கட்டுரைகள். அதை விவாதிக்கும் குடும்பத்தவரின் இயல்பு போன்றவற்றைப் பாஜின் சிறப்பாக விவரித்திருக்கிறார்

பராம்பரியமான ஒரு கூட்டுக்குடும்பம் ஏன் சிதைகிறது என்று ஆராய்ந்தால் அதன் பழமைவாத நம்பிக்கைகள் மற்றும் இறுக்கமான ஆணாதிக்கக் குணங்களாலும் தான் என்பது புரிகிறது.

இந்த குடும்பத்தில் மேலும் தங்கியிருப்பது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என்று ஜூகு நினைக்கிறான். அந்த மூச்சுத்திணறல் தனி ஒரு குடும்பத்தின் நிலையில்லை. அன்றைய சமூகத்தின் நிலை அதுவே.

தந்தை தான் குடும்பத்தின் அரசர். அவரது உத்தரவுகளுக்கு மறுபேச்சுக் கிடையாது. அவரது முடிவுகளை யாரும் கேள்விகேட்க முடியாது. தந்தையின் முடிவுகள் யாவும் அவரது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும். ஆனால் அதை யாரும் அவரிடம் சுட்டிக்காட்ட முடியாது. இந்த உண்மையைத் தான் பாஜின் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு குடும்ப வரலாற்றின் வழியே பழைய மரபுகளிலிருந்து விலகிச் சீனா எப்படிப் புதிய உலகில் நுழைந்தது என்பதைப் பாஜின் அழகாகச் சித்தரிக்கிறார். சீன சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஒரு நாவலின் வழியே நாம் நுண்மையாக அறிந்து கொள்ள முடிகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு.

•••

0Shares
0