ஆஸ்கார் நாயகன் ரஹ்மான்.

நான் தொலைக்காட்சி பார்ப்பவனில்லை. ஒரு நாளைக்கு பத்து நிமிசடங்கள் பார்ப்பதே அபூர்வம். பல மாதங்கள் ஒரு நாள் கூட தொலைக்காட்சி பார்க்காமலே கழிந்திருக்கிறது.  என் மனஇயல்பிற்கு தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருப்பது ஏனோ ஒத்துவருவதில்லை.


யாராவது நண்பர்கள் பார்க்கும்படி சிபாரிசு செய்தால் ஒரு சில நிகழ்ச்சியை பார்ப்பேன். செய்திகள் அல்லது என்டிவி அரசியல் விமர்சனங்களை எப்போதாவது பார்ப்பதுண்டு. அது போல எங்காவது வெளியூர்களில் தங்கும் நாட்களில் இரவெல்லாம் அனிமல் பிளானெட், அல்லது நேஷனல் ஷியாகிரபி பார்த்து கொண்டிருப்பேன். மற்றபடி என் தினசரி உலகம் புத்தகம், பயணம், இணையம், சினிமா,  நண்பர்கள் வட்டம் என்று சிறியது.


நேற்றுகாலை ஆறுமணிக்கு எல்லாம் எழுந்து டிவியின் முன்னால் போய் உட்கார்ந்த போது வீடே அதிசயமாக பார்த்தது. தொடர்ச்சியாக நான்குமணி நேரம் தொலைக்காட்சி பார்த்தது நேற்று தான். அதுவும் ஆஸ்கார் பரிசளிப்பு விழா என்பதால். அதிலும் குறிப்பாக ரஹ்மான் விருது பெறுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு தான் முக்கிய காரணம்.


ஏ, ஆர். ரஹ்மானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இரவு அவரது வீட்டில் சந்தித்திருக்கிறேன். அவருக்கு நெருக்கமான லண்டனை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். மழையோடு கூடிய இரவு. பதினோறு மணியை கடந்திருக்கும். வீட்டின் வரவேற்பறையில் அவர் முதன்முதலாக வாசித்த கீபோர்டை அழகாக கண்ணாடி சட்டம் அணிவித்து பாதுகாத்து வருகிறார். வீடெங்கும் விருதுகள், மெல்லிய குரலில் எதையே ஹம் செய்தபடியே வெள்ளை நிற ஜிப்பா அணிந்தபடியே மிக இயல்பாக அருகில் வந்து பேசினார்.


ரஹ்மானிடம் உள்ளார்ந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அது அவரது மிக குறைவான பேச்சிலும் கூட தெளிவாக உணர முடிகிறது. அவர் எதையும் உடனே மறுப்பதில்லை, மாறாக அவர் தான் யோசிப்பதாக சொல்கிறார். அது போலவே தனது இசை மற்றும் தான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் பற்றி அதிகம் விவாதிப்பதுமில்லை.


ஹிந்தி படங்களின் பொதுவான இசைபோக்கு மற்றும் இன்று உலகெங்கும் மாறிவரும் இசை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அன்றைய உரையாடலில் ஸ்லம் டாக் மில்லியனர் என்ற படத்திற்கு தான் இசையமைத்திருப்பது பற்றி அவராக தெரிவித்தார். அதை காண ஆவலாக இருப்பதாக தெரிவித்தோம்,


அரைமணி நேரம் அந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கும். அதற்குள் அவரை காண்பதற்கான காத்திருப்போர் பட்டியல் வெளியே நீண்டு கொண்டே போனது. அவரது உலகம் இரவில் தான் பூரணமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மும்பையில் இருந்து மதியம் வந்திறங்கி உறங்கி விட்டு தற்போது தான் எழுந்து இருப்பதாகவும் பின்னிரவில் திரும்பவும் மும்பை போக இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்த பயணங்கள் பற்றி உற்சாகமாக பேசினார்


நாங்கள் விடைபெற்று வெளியே வந்த போது மழை விடாமல் பெய்து கொண்டேயிருந்தது. அவர் வீடு உள்ள கோடம்பாக்கத்தின் மிக சிறிய வீதியில் இரண்டு பக்கமும் விதவிதமான கார்கள் நின்று கொண்டிருந்தன. மழைக்குள்ளாகவே ஹிந்தி திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குனர் ஒருவர் இறங்கி நனைந்தபடியே நின்று கொண்டிருந்தார். ஒரு நிமிசம் அதை காணும் போது பெருமையாக இருந்தது. மொத்த இந்திய சினிமாவை தன் இசையால் வசமாக்கி வைத்திருக்கிறாரே என்று நினைத்தபடியே அங்கிருந்து புறப்பட்டோம்.


அருகில் சென்று ஒரு காபி ஷாப்பில் நீண்ட நேரம் ரஹ்மான் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். ரஹ்மானுக்கு லண்டனில் உள்ள இசை ரசிகர்கள் மற்றும் இசையுலக மரியாதைகள் பற்றி நண்பர் நிறைய சொல்லிக் கொண்டிருந்தார். அன்றிரவு நல்லமழை.


வீடு திரும்பும் போது நண்பர் ரஹ்மான் இசையமைத்த ஆடா (Ada) என்ற படத்தின் குறுந்தகட்டினை தந்து கேட்க சொன்னார். விடாத மழையோடு அந்த படத்தின் பத்து பாடல்களையும் இரவெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன் சிறப்பான பாடல்கள் குறிப்பாக Meherbaan என்ற ரஹ்மானின் பாடல் வெகு அற்புதமாக இருந்தது.



மழை வெறித்த விடிகாலையை வேடிக்கை பார்த்தபடியே நானாக காபி போட்டு கையில் எடுத்தபடியே வாசலில் வந்து நின்றபோது வானில் ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. சிறுவனை போல அந்த விமானத்தை பார்த்தபடியே இதில் தான் ரஹ்மான் மும்பை போய்க் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கே சிரிப்பாக வந்தது.


**


நேற்று ரஹ்மான் ஆஸ்கார் வாங்கிய சந்தோஷத்தை பலரும் என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக திரைத்துறையை சேர்ந்த அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் பலரும் உற்சாகத்துடன் அவரை பற்றிய நினைவுகளை பேசிக் கொண்டிருந்தார்கள்.


உயிர்மை இதழில் இருந்து மனுஷ்யபுத்திரன் மிகுந்த சந்தோஷத்துடன் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்துள்ளதை பார்த்தீர்களா என்று கேட்டார்.


கொண்டாட்டம் என்பதை நாம் பெரும்பாலும் மறந்தே போய்விட்டோம். பிரச்சனைகள், சச்சரவுகள் சண்டைகள் அக்கபோர்களில் தான் அதிகம் பேர் ஈடுபடுகிறார்கள். நாம் கொண்டாட வேண்டிய நல்ல தருணம் இது என்று சொன்னேன். அவரும் உற்சாகமாக தானும் அப்படியே உணர்வதாக சொன்னார்.


ஆஸ்காரின் 81 வருட சரித்திரத்தில் அந்த மேடையில் ஒலித்த முதல் தமிழ்குரல் ரஹ்மானுடையது. அது என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது என்றும் சொன்னேன்.


ரஹ்மானை வாழ்த்தும் சிறிய குறிப்பு எழுதி தர முடியுமா உயிர்மையில் வெளியிடலாம் என்று கேட்டார்


காலை பதினோறு மணிக்கு இந்த குறிப்பை அவருக்கு அனுப்பி வைத்தேன்.


இரவு முழுவதும் ரஹ்மானை வாழ்த்தும் நண்பர்களுடன் பேசி சிரித்து கொண்டாடி வீடு திரும்பினேன்.


உயிர்மை இதழில் வெளியாக உள்ள ரஹ்மாûனை பற்றிய சிறிய குறிப்பு இது


**
Music is enough for a lifetime, but a lifetime is not enough for musicSergei Rachmaninov


எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ரஹ்மான் ஆஸ்கார் விருதை கையில் வாங்கியபடியே தமிழில் சொல்லிய நிமிசம் என்னை அறியாமல் கண்கள் ததும்ப துவங்கியது. அது ரஹ்மான் வாங்கிய விருது மட்டுமல்ல. இத்தனை வருடங்களாக இந்திய சினிமா கண்டு கொண்டிருந்த கனவை ரஹ்மான் நிறைவேற்றி காட்டியுள்ளார் என்ற உச்ச சந்தோஷத்தின் வெளிப்பாடு.


எண்பத்தியோறு வருட ஆஸ்கார் நிகழ்வில் முதன்முறையாக ஒரு தமிழ்குரல் ஒலித்திருக்கிறது. அதுவும் மிகுந்த தன்னடக்கமான குரல். தமிழ் மக்கள் என்றும் பெருமைபட்டுக்  கொள்ள கூடிய நிரந்தர கௌரவத்தை ரஹ்மான் சாதித்து காட்டியிருக்கிறார்.


எவ்வளவு நீண்ட பயணம். எத்தனை நாள் கனவு.  விளம்பர படங்களுக்கான இசையமைப்பில் துவங்கி தமிழ் ஹிந்தி என திரையிசையில் சாதனைகள் புரிந்து  லண்டன் ட்ரீம்ஸ், வந்தேமாதரம் என்று புதிய இசை உருவாக்கங்களில் தன்னுடைய தனித்துவமான இசைத்திறனை வெளிப்படுத்தி இன்று ஹாலிவுட் திரையுலகின் உயர்ந்த பீடத்தில் ரஹ்மான் விருதுடன் நின்றபோது நம் காலத்தின் நாயகன்  இவர் என்று மனது கொண்டாடுகிறது.


1977ல் இருந்து இந்தியா ஆண்டு தோறும் ஆஸ்கார் விருதிற்கு படங்களை அனுப்பியபடியே உள்ளது. அதில் மதர் இந்தியா, சலாம்பாம்பே, லகான் இந்த மூன்று படங்கள் தான் இதுவரை ஆஸ்கார் விருதில் கலந்து கொண்டன. ஆனால் எந்த படமும் விருது பெறவில்லை. தெய்வமகன் துவங்கி நாயகன், ஹேராம், என தமிழ் படங்கள் ஆஸ்கார் பரிசீலனைக்கு சிபாரிசு செய்யப்பட்ட போதும் அவை ஆஸ்கார் விருதின் இறுதி பட்டியலுக்கே வரமுடியவில்லை.


சத்யஜித் ரே , ஷியாம் பெனகல்  சேகர் கபூர் என உலக சினிமாவில் விருதுகள் பெற்ற இயக்குனர்களின் படங்கள் கூட ஆஸ்கார் விருதில் கலந்து கொள்ள முடிந்ததில்லை. சத்யஜித்ரேயை கௌரவிக்க சிறப்பு ஆஸ்கார் அளிக்கபட்டது. ஆனால் அதை அவரால் நேரடியாக பெற இயலவில்லை.


ஆனால் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக முதன்முறையாக இரண்டு விருதிற்கு சிபாரிசு செய்யப்பட்டு இரண்டையும் வென்றிருக்கிறார். இது அவரது இனிமேல் வரப்போகும் பல வெற்றிகளுக்கான முன் அறிவிப்பு என்று கொள்ளலாம். இன்னொரு வகையில் இந்தியப்படங்களின் மீது உலகின் கவனம் குவிவதற்கு இந்திய விருது திறவுகோலாகி உள்ளது.



சென்னையின் கோடம்பாக்கத்தில் சின்னஞ்சிறு வீதியொன்றில் வசித்தபடியே உலகின் எல்லா உயரங்களையும் தன் தொடர்ந்த உழைப்பால், தனித்துவமான இசைத்திறனின் வழியே அடைய முடியும் என்பதையே ரஹ்மானின் வெற்றி அறிவிக்கிறது. உலக சினிமா அரங்கிற்கு  தமிழ், இந்திய சினிமாவை கொண்டு செல்ல விரும்பும் இளைஞர் பலருக்கும் இந்த வெற்றி மிகப்பெரிய உத்வேகத்தையும், நம்பிக்கையும் தந்திருக்கிறது.


இன்று அதிகாலையில் தொலைக்காட்சியின் முன்பு ரஹ்மானுக்கு பரிசு கிடைத்துவிட வேண்டும் என்று நடுங்கும் விரல்களை மறைத்தபடியே இந்திய மக்கள் மனம் நிறைந்து பிரார்த்தனை செய்தார்கள். அது ஒரு திரைப்படத்தில் இசை அமைத்ததிற்கு விருது கிடைக்க போகிறது என்பதற்காக அல்ல. தங்களின் சொந்த அடையாளமாக, நம்பிக்கையாக , சாதனை நட்சத்திரமாக உள்ள ஒருவனை உலகம் அங்கீகாரம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் பெருங்கனவுமே ஆகும். அந்தக் கனவு இன்று நனவாகி உள்ளது.


ரஹ்மானின் வெற்றியை முன் அறிவிப்பது போல ஆஸ்காரின் சிறந்த சவுண்ட் மிக்சிங்கிற்கான விருது ரசூல் பூக்குட்டிக்கு கிடைத்தது. கேரளாவின் சிறிய கிராமத்தில் பிறந்து பூனா திரைப்படக்கல்லூரியில் பயின்று மும்பை திரையுலகின் முன்னணி ஒலிப்பதிவாளராக பணியாற்றி வரும் ரசூல் பூக்குட்டி ஆஸ்கார் விருதை கையில் வாங்கியபடியே இந்திய மக்களுக்கு நன்றி சொன்னார்.


அவரது கண்களில் இருந்த ஈரம் இந்திய சினிமாவின் இத்தனை ஆண்டுகால ஆதங்கம் என்பதை வெளிப்படுத்தியது. அதிநவீன தொழில்நுட்பங்கள் வளர்த்துவிட்ட சூழலில் இந்திய தொழில் நுட்பகலைஞர் ஒருவர் மும்பையில் அத்தகைய உச்சதொழில்நுட்பங்கள் கிடைக்காமலே ஆகச்சிறந்த ஒலிச்சேர்க்கையை உருவாக்கி காட்டியிருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம்.


சிறந்த பாடலுக்கான விருதை ரஹ்மானுடன் பகிர்ந்து கொண்டவர் குல்சார். ஹிந்தி திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை. சிறந்த பாடலாசியர் மட்டுமின்றி, திரைக்கதை, இயக்கம் என்று சாதனைகள் நிகழ்த்தியவர். மூன்று முறை தேசிய விருது பெற்றவர். சிறந்த உருது கவிஞர். தற்போது ஜெய்கோ பாடலுக்காக அவர் ஆஸ்கார் விருதை பெற்றிருக்கிறார். 


81 வது ஆஸ்கார் விருது இந்திய மக்களால் ஒருபோதும் மறக்கமுடியாதது. அது ரஹ்மான் குல்சார் ரசூல்பூக்குட்டி என்று இந்திய சினிமாவின் ஆளுமைகளை உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த கூட்டணிக்கு நிறைந்த வாழ்த்துகள்.


டிராகுலா படத்தில் ஒரு காட்சி உள்ளது. சிந்தும் கண்ணீர் துளி ஒன்றை தன் மாயத்தால் வைரமாக்கி காட்டுவான் டிராகுலா. இசையின் உயர்ந்த இயல்பும் அதுவே.


 தன் இசையால் உலகை வென்றுள்ள ரஹ்மானை இந்தியாவின் பெருமை எனக் கொண்டாடுவோம். தமிழ் மக்களும் தமிழ் சினிமாவும் நம்மவர் ரஹ்மான் என்று வாழ்த்தி மகிழ்வோம்.


ஜெய் ஹோ ரஹ்மான்.


**
 


 

0Shares
0