இருபத்திநான்கு கண்கள்.

1954ல் வெளியான அகிரா குரசேவாவின் செவன் சாமுராய் படத்தோடு போட்டியிட்டு பல்வேறு திரைப்படவிழாக்களில் விருதுகளை வென்ற திரைப்படம் Twenty-four Eyes. கினோஷிதா இயக்கியது. பெண் எழுத்தாளர் சாகே சுபோய் எழுதிய நாவலினை மையமாக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய சினிமா என்றாலே சாமுராய் படங்கள் என்ற பொதுப்புத்தியிலிருந்து முற்றிலும் மாறுபட்டபடமிது. ஓசுவின் திரைப்படங்கள் ஜப்பானின் ஆன்மாவை பிரதிபலிப்பதாக இருந்தன. அது போலவே கினோஷிதா இயக்கிய படங்களும் இலக்கியப்பிரதிகளின் ஒப்பற்ற திரைப்படைப்பாக விளங்குகின்றன

ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவு பற்றிய படங்களில் இதுவே உலகின் மிகச்சிறந்த படமாகக் கருதப்படுகிறது. மீண்டும் இந்தப் படத்தை அப்படியே மறு உருவாக்கம் செய்தால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும்.

ஜப்பானில் நடக்கும் கதை என்றாலும் படம் நம் பள்ளி நினைவுகளின் சாட்சியம் போலவேயிருக்கிறது. உலகெங்கும் ஒன்று போலத் தானே மாணவர்கள் நடந்து கொள்கிறார்கள். பிடித்தமான ஆசிரியர் மீது அன்பு செலுத்துகிறார்கள்.

எனது வாசகர் இளங்கோ தனது பிள்ளைகளுக்கு லட்சுமி, சிவராமன் எனத் தனது ஆசிரியர் பெயர்களை வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு ஆசிரியர்கள் மீது மரியாதையும் அன்பும் கொண்டிருக்கிறார். என் மனைவி படித்த தமிழ் ஆசிரியரிடம் தான் என் மகனும் படித்தான். இப்படி ஆசிரியர்களோடு உள்ள உறவு என்றும் தொடரக்கூடியது.

ஆசிரியர் கண்ணோட்டத்தில் மாணவர்களின் உலகையும் மாணவர்கள் பார்வையில் ஆசிரியரின் வாழ்க்கையையும் இந்தப்படம் விவரிக்கிறது. காலவோட்டம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் எவ்வாறு உருமாற்றுகிறது என்பதை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்..

1928 ஆம் ஆண்டு ஏப்ரல் காலையில் ஜப்பானியத் தீவான ஷோடோஷிமாவின் குக்கிராமத்தில் புதிய பள்ளி ஆசிரியரின் வருகைக்காக மாணவர்கள் காத்திருப்பதில் படம் துவங்குகிறது. இயக்குநர் கினோஷிதா ஜப்பானிய நாட்டுப்புறப் பாடல்களையும் அழகிய நிலப்பரப்பு காட்சிகளையும் பயன்படுத்திப் படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.

ஹிசாகோ ஓஷி என்ற உற்சாகமான இளம் பெண் தனது சைக்கிளில் பள்ளியை நோக்கி வருகிறாள். அந்தக் காட்சி கிராமப்புறத்து மனிதர்களுக்கு ஆச்சரியமாக தோன்றுகிறது.  டீச்சரின் மேற்கத்திய உடையையும் அவள் ஸ்டைலாகச் சைக்கிள் ஒட்டிக் கொண்டு வருவதையும் எரிச்சலோடு பார்க்கிறார்கள். ஓஷியோ வழியில் சந்திக்கும் விவசாயிகள் மீனவர்கள் என அனைவருக்கும் தன் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தபடியே பள்ளியை நோக்கி செல்கிறார். பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் கூட நகரவாசி போல உடையணிந்துள்ள டீச்சரைப் பிடிக்கவில்லை.

ஒன்றாம் வகுப்பு ஆசிரியராக ஓஷி பணியில் சேருகிறார். அந்த வகுப்பில் ஏழு மாணவிகள் மற்றும் ஐந்து மாணவர்கள் எனப் பனிரெண்டு பேர் படிக்கிறார்கள்.

““The day I began teaching was also the first day of school for those twelve kids. They looked so small and anxious. Those twenty-four eyes looking up at me were so adorable. I don’t want those adorable eyes to ever lose their sparkle.”என்று ஓஷி குறிப்பிடுகிறார்.

ஆர்வமும் சந்தோஷமும் கொண்ட அந்த மாணவர்களின் இருபத்திநான்கு கண்களின் வழியே தான் படம் விரிவடைகிறது.

புதிய ஆசிரியர் என்பதால் அவள் புதுவகையான கற்பித்தல் முறையைக் கையாளுகிறாள். மாணவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் அன்பைப் பெறுகிறாள். வகுப்பிலுள்ள மாணவர்களின் பெயர்களைக் கேட்டுப் பதிவேட்டில் பதிவு செய்யும் காட்சியிலே அவளது தனித்துவம் புரிந்துவிடுகிறது. அவள் மாணவர்களால் நேசிக்கப்படுகிறாள். மாணவர்களுடன் ஒன்று சேர்ந்து ரயில் விளையாட்டு விளையாடுகிறாள்.

தொலைவிலுள்ள அவளது வீட்டிலிருந்து சைக்கிளில் கிளம்பி அவள் பள்ளிக்கு வரும் போது, வழியிலே மாணவர்கள் அவளை வரவேற்றுக் கையசைக்கிறார்கள். மாணவர்கள் மீது அவள் காட்டும் அன்பின் காரணமாக உள்ளூர் மக்கள் அவளை ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு நாள் கடற்கரையில் விளையாட்டின் போது மாணவர்களை அவளை ஒரு குழியில் தள்ளிவிடவே அவளது கால் பிசகி விடுகிறது. இதனால் அவள் வீட்டில் சிகிட்சை எடுத்துக் கொண்டு ஒய்வெடுக்கிறாள். தங்கள் தவற்றை உணர்ந்த மாணவர்கள் டீச்சரின் வீடு தேடிச் செல்கிறார்கள். சாலை வழியாக அவர்கள் டீச்சரின் வீட்டை தேடிச் செல்வது அபூர்வமான காட்சி. ஓஷி மாணவர்களின் அன்பை அறிந்து நெகிழ்ந்து போய்விடுகிறாள் தன் வீட்டில் அவர்களுக்கு நல்ல உணவளித்து மகிழ்ச்சிப்படுத்துகிறாள்..

ஓஷியின் அன்பைப் புரிந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அவளுக்குக் காய்கறிகள், பழங்கள், தானியத்தைப் பரிசாகத் தருகிறார்கள். கால் உடைந்த நிலையில் அவளால் பள்ளியில் பணியாற்ற முடியாமல் போகிறது. கடைசியாக ஒருமுறை மாணவர்களைச் சந்திக்க அவள் படகில் பயணித்து பள்ளிக்கு வருகிறாள். மாணவர்களால் அவளது பிரிவைத் தாங்கமுடியவில்லை. அவளுக்குப் பதிலாக வேறு புதிய ஆசிரியர் பொறுப்பு ஏற்க போவதாகத் தலைமை ஆசிரியர் சொல்கிறார். ஆண்டுகள் கடக்கிறது.

ஓஷி தன் வீட்டின் அருகிலுள்ள புதிய பள்ளி ஒன்றில் பணிக்குச் செல்கிறாள். அவளிடம் ஒன்றாம் வகுப்பு படித்த மாணவர்கள் வளர்ந்தவர்களாக மேல்நிலைப்படிப்பிற்காக அவளது வகுப்பிற்கு மீண்டும் வருகிறார்கள். ஓஷி திருமணம் செய்து கொள்ளப்போவது மாணவர்களுக்குச் சந்தோஷம் அளிக்கிறது.

பனிரெண்டு வயதான மாட்சுவின் தாய் இறந்துவிடவே அவள் படித்தது போதும் என்று வீட்டில் படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் சில மாணவர்களின் எதிர்காலம் திசைமாறிப் போகிறது. வசதியில்லாத ஒரு மாணவிக்கு அவள் ஒரு டிபன்பாக்ஸ் பரிசாக அளிப்பது முக்கியமான காட்சி.

1931 மஞ்சூரியா மீதான படையெடுப்பு மற்றும் 1932 ஆம் ஆண்டு ஷாங்காய் மீதான தாக்குதல் என ஜப்பான் யுத்தத்தில் ஈடுபடுகிறது.

ஒரு நாள் ஓஷியோடு வேலை செய்யும் ஆசிரியர் கடோகா காவலர்களால் கைது செய்யப்படுகிறார். போருக்கு எதிரான புத்தகம் ஒன்றை ஒஷி மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டாள் என ஒரு நாள் பள்ளி முதல்வர் கோவித்துக் கொள்கிறார். இந்த நிலையில் ஓஷி ராணுவத்தின் செயல்பாடுகள் தவறானவை என்று பகிரங்கமாக வாதிடுகிறாள். ஆசிரியர்களின் வேலை என்பது அரசிற்கு விசுவாசமாக நடந்து கொள்வது. ஆகவே தடைசெய்யப்பட்ட புத்தகங்களை எரித்துவிட வேண்டும் என்கிறார் பள்ளியின் முதல்வர். அதை அவள் ஏற்க மறுக்கிறாள். இதன் காரணமாக அவள் ஒரு போராளி போலச் சக ஆசிரியர்களால் சித்தரிக்கப்படுகிறாள்

ஓஷி ஒரு கப்பல் பொறியியலாளரைத் திருமணம் செய்து கொள்கிறாள். புதிய வாழ்க்கையைத் துவங்குகிறாள். ஒசியும் அவளது மாணவர்களும் தகாமாட்சுவில் உள்ள ரிட்சுரின் பூங்காவிற்கும், கோன்பிரா ஆலயத்திற்கும் ஒரு களப்பயணத்தை மேற்கொள்கின்றார்கள்.

மாணவர்களின் குடும்பச் சூழல் மற்றும் தேசத்தின் யுத்தம் காரணமாக எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்ப்பிணியான ஓஷி வேலையை விட்டு விலகுகிறாள். மாணவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து போகிறார்கள்

அவளிடம் படித்த ஒரு மாணவிக்குத் திருமணமாகிறது. ஓஷிக்கும் மூன்று குழந்தைகள் பிறக்கிறார்கள். மாணவர்களில் சிலர் ராணுவத்திற்குச் சென்றுவிடுகிறார்கள். ஒரு மாணவியின் குடும்பம் நொடித்துப் போகிறது. மற்றொரு மாணவியோ உணவகத்தில் வேலை செய்கிறான். திடீரென ஓஷியின் கணவர் கொல்லப்படுகிறார். அவள் நிலை குலைந்து போகிறாள்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானின் சரணடைகிறது. ஒருநாள். ஓஷியின் மகள் யட்சு மரத்திலிருந்து விழுந்து இறந்துவிடுகிறாள். மாணவர்களின் வாழ்க்கை போலவே ஆசிரியரின் வாழ்க்கையும் வீழ்ச்சியைச் சந்திக்கிறது.

1946ல் மீண்டும் ஓஷி ஆசிரியராகத் தான் ஒன்றாம் வகுப்பு எடுத்த அதே பள்ளிக்குச் செல்கிறார். இப்போது அவரது வகுப்பில் அவளிடம் படித்த மாணவர்களில், இறந்த கோட்டோவின் தங்கை மாகோடோவும்; சிசாடோ, மாட்சுவின் மகள்; மற்றும் மிசாகோவின் மகள் கட்சுகோ. ஆகியோர் படிக்கிறார்கள். தான் ஒன்றாம் வகுப்பில் கண்ட மாணவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி அவர்களின் பிள்ளைகள் தன்னிடமே படிப்பது ஓஷியை நெகிழ வைக்கிறது.

அவளிடம் படித்த மாணவர்களில் சிலர் யுத்தகளத்தில் இறந்து போகிறார்கள். அந்த மாணவர்களின் கண்களை அவளால் மறக்கமுடியவில்லை. தனது ஆசிரியரை மீண்டும் அந்த மாணவர்கள் சந்தித்து அவளுக்கு ஒரு விருந்து தருகிறார்கள். அதன் தொடர்ச்சியான காட்சிகளைக் கண்ணீர் கசியாமல் காணமுடியாது.

மெலோடிராமா என எளிதாக நாம் இன்று இதுபோன்ற படத்தை எளிதாக ஒதுக்கிவிட முடியும். ஆனால் இந்த மெலோடிராமாவில் இருக்கும் உண்மை என்றும் மாறாதது.

படம் ஆசிரியர் மாணவர் உறவை மட்டும் பேசவில்லை. மரபான கற்றல் முறைக்கும் நவீன கற்றல் முறைகளுக்குமான வித்தியாசத்தைப் படம் சுட்டிக்காட்டுகிறது. ஓஷி நீண்ட தூரத்திலிருந்து வருவதால் சைக்கிளைப் பயன்படுத்துகிறாள். அதுவும் தவணை முறையில் வாங்கிய சைக்கிள். ஜப்பானிய ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருந்தது. வீட்டுச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதையும் படம் விவரிக்கிறது.

இது போலவே கிராமப்புற மாணவர்களின் குடும்பச் சூழல். குறிப்பாக மாணவிகள் வீட்டுப்பொறுப்புக் காரணமாகப் படிப்பைத் துறப்பது. வறுமையான நிலை. கிராமப்புற விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்க்கை துயரங்கள் ஆகியவற்றையும் படம் சுட்டிக்காட்டுகிறது.

வெளிப்படையாகஓஷி ராணுவத்தின் செயல்பாடுகளைக் கண்டிக்கிறாள். ஆசிரியர்களின் சமூக பொறுப்புணர்வைப் படம் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஓஷியின் அம்மா நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்து அவள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றே சொல்கிறாள். இதனால் தான் வீட்டின் பக்கத்திலுள்ள புதிய பள்ளிக்கு இடம் மாறுகிறாள் ஓஷி.

எளிமையும் கலைத்தன்மையும் மிக்க இது போன்ற படங்கள் மீள் உருவாக்கம் செய்யப்படுதல் வேண்டும்.

துடிப்பான கண்களுடன் முதல் வகுப்பில் நாம் காணும் அந்தச் சிறுவர்களை வாழ்க்கை ஏன் இப்படி அலைக்கழிக்கப் படுகிறது. அன்பு வழிகாட்டும் ஆசிரியரின் வாழ்க்கையிலும் சந்தோஷமில்லை. உலகம் கருணையற்றதாக நடந்த கொள்ளும் போது ஆசிரியரான ஓஷி தன் மாணவர்களுக்கு நல்லது நடக்கட்டும் என்று ஆசி கூறி அனுப்பி வைக்கிறாள். அவ்வளவு தான் அவளால் செய்ய முடியும். வாழ்க்கை மாணவர்களின் கனவுகளைச் சூறையாடுகிறது. மறக்கமுடியாத அந்த இருபத்திநான்கு கண்கள் இந்த உலகைக் கேள்வி கேட்கின்றன. காலம் எத்தனையோ மாற்றங்களை உருவாக்குகிறது. ஆனால் ஆசிரியர் மீது மாணவர்கள் காட்டும் நேசம் மாறுவதேயில்லை. தான் படித்த ஆசிரியரிடம் தன் மகளைப் படிக்க அனுப்பி வைப்பது தொடரும் உறவின் அடையாளமே.

••

0Shares
0