சீன எழுத்தாளரான ஷாங் சியான் லியாங்கின் இரண்டு கதைகளை உடலும் உணர்வும் என்ற பெயரில் கணேஷ் மொழியாக்கம் செய்திருக்கிறார். சவுத் ஆசியன் புக்ஸ் 1992ல் வெளியிட்டுள்ளது.
இதில் கைப்பு ஊற்று என்றொரு சிறுகதையிருக்கிறது. அக்கதை லாரி ஒட்டுநரால் சொல்லப்படுகிறது. பத்திரிக்கையாளர் ஒருவர் பாலைவனத்தினைக் கடந்து செல்லும் பயணத்தின் போது லாரியில் பயணிக்கிறார். அப்போது லாரியின் ஒட்டுநர் தனது கடந்தகாலக் கதையைச் சொல்லத் துவங்குகிறார். நீண்ட தூரப் பயணங்களின் போது லாரி ஒட்டுநர்கள் பேச்சுத்துணைக்கு ஏங்குவதைப் பற்றியும் அவர்கள் மனம் திறந்து தனது கடந்தகாலத்தை வெளிப்படுத்துவதையும் கதை சிறப்பாகச் சித்தரிக்கிறது.
லாரி டிரைவர் ஹேனான் பகுதியைச் சேர்ந்தவர். தனது இளமைக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை விவரிக்கிறார். அதில் அவர் சந்தித்த இரண்டு பெண்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். அது அவரது காதல் கதையாக மாறுகிறது. தனது காதலை அவர் உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லும் விதம் அழகாக உள்ளது.
கதையின் முடிவில் எந்த சுகத்தையும் தராத தன்னை காதலித்த பெண்ணைப் பற்றிச் சொல்லும் போது கைப்பு ஊற்றைப் பருகியவர் பாக்கியசாலிகள். என் மனைவி அப்படியானவள் என்கிறார். கதையின் ஒரு இடத்தில் மனைவி நம் வாழ்க்கையில் எப்படியிருக்கிறோம் என்பதை விடவும் யாருடன் இருக்கிறோம் என்பது முக்கியமானது என்கிறாள். நம்மை நேசிப்பவருடன் வாழும் வாழ்க்கை மகத்தானது என்பதை ஒட்டுநரின் பதிலால் அறிந்து கொள்கிறோம்.
எழுதப்படாத தனது காதல் நினைவுகளை தனது மகன் ஒரு கதையாக எழுத விரும்புவதாகவும் ஒட்டுநர் தெரிவிக்கிறார். இந்தக் கதை திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பிலுள்ள முதல் கதை குறுநாவல் போலச் சற்றே பெரியது. தந்தைக்கும் மகனுக்குமான உறவைப் பேசும் கதையது. இரண்டும் சிறப்பான கதைகளே.