உறுபசி நாவல் பற்றி

உறுபசி நாவல் பற்றி சரவணன் என்ற வாசகர் எழுதியுள்ள விமர்சனக்குறிப்பு.

••

உறுபசி. படித்து முடித்தவுடன் இதை எழுதுகிறேன். சம்பத் என்னும் நண்பனை , அவன் இறப்பின் பின் நினைவுகளின் வழி மீண்டும் தொட்டு மீண்டு வரும் மூன்று நண்பர்கள் பற்றியது. எப்போதும் இறப்பு ஒருவரின் நினைவுகளை கிளர்ந்து எழ செய்பவையே. அந்த வகையில் சம்பத்துடன் விருப்பமற்று தொடர்பில் இருக்கும் அவர்களுக்கு , அவன் வாழ்வின் மேல் ஒரு கசப்பும் அசூயையும்  உள்ளது. இந்த கசப்பு , புற சூழல் எதிலும் கட்டுப்படாமல் வாழும் அவன் வாழ்வின் மேல் உள்ள பொறாமையின் வழியே உருவாகி வருகிறது. ஆனால் அவனோ யதார்த்த வாழ்வின் தோல்வியை மறைக்க தன் கட்டற்ற எண்ணங்களின் வழியே சுதந்திரமான வாழ்வை வாழ்வதாக காட்டி கொள்கிறான்.

சம்பத்   தன் தங்கையின் இறப்பே, தன்னை சமமற்றவனாக மாற்றியதாக நினைகிக்கிறான். அந்த இறப்பே தன்னை தன் குடும்பத்திலிருந்து பிரித்து விட்டதாக எண்ணுகிறான். அது ஒரு குற்ற உணர்வு போல் வாழ்வு முழுதும் அவனை பின்தொடர்கிறது. குளத்திலும் , ஆற்றிலும் முழுமையாக நின்று குளிக்கும் போது மட்டும் அந்த குற்ற உணர்வு இல்லாமல் போகிறான்.அவன் தங்கை இறப்பின்  போதே  கடவுள் நம்ம்பிக்கை அற்றவனாக ஆகி விடுகிறான் என்று தோன்றுகிறது. பின் கல்லூரி அந்த விதையை பெரும் மரமாக்கிறது.

வாழ்வை சரியாய் வாழ்கிறோம் என்று எண்ணும் இந்த 3 பேருக்கும், சம்பத் அடையும் வீழ்ச்சி நடுக்கத்தையும் , பயத்தையும் தருகிறது. அவனை அவர்கள் சந்திப்பதே அவனிடத்தில் தங்களை பொருத்தி பார்க்க தான் என்று தெரிகிறது. எல்லாம் சரியாய் இருந்தும் , நம்மை விட சிந்தனையில் உயர்ந்தவனாக இருந்தும் அவன் எப்படி வீழ்ந்தான் என்று பேசவே அந்த பயணம் கொள்கிறார்கள், எனும் போது தமிழ் இலக்கியம் மேல் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் கற்ற இவர்கள் , சந்தர்ப்பங்களையும் , வாய்ப்புகளையும் பயன்படுத்தி நிலைபெற்று விட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை அவர்களிடத்தில் எப்போதும் இருக்கிறது. புது யுகத்தில் தமிழ் கல்வியின் வீழ்ச்சியை சம்பத் மூலம் உணர்த்தும் வகையில் கூட இந்த நாவலை எடுத்து கொள்ளலாம்.

மேலும் மணியின் வாழ்வை முழுதுமாக சொல்லும் மூலம் அது கிட்டத்தட்ட சம்பத்தின் உலகம் போலே உள்ளது , அவனும் யாழினியை நினைத்து அலைபாய்கிறான். விதிவிலக்ககாக அவன் தட்டையான சிந்தனை உள்ள ஒரு சாமன்யனாக வாழ்கிறான் என்பதாலே , சம்பத்தின் வாழ்க்கை அவனுக்கு ஆச்சர்யமூட்டுகிறது. கல்லூரி காலத்தில் யாழினியின் தோழனாக , திராவிட இயக்க போராளியாக, போராட்டங்கள் மூலம்  சிறை செல்லும் மாணவனாக ஒரு கதாநாயகனை போல் வாழ்கிறான். பின் அவன் சந்திக்கும் போது சந்தோஷமான ஒரு வணிக பிரதிநிதியாக நட்டு , போல்ட் விற்று கொண்டிருக்கிறான். 42 வயதிலும் அவனாக விரும்பி திருமணம் செய்து கொண்டு வாழ்கிறான். இதெல்லாம் மணியினால் ஜீரணிக்க முடியவில்லை என்பதாலே , அவன் கோவத்தில் தன் தந்தையை அடிக்கும் செயலை கண்டித்து கடிதம் எழுதி அவன்  தொடர்பை துண்டிக்க துடிக்கிறான். நிச்சயம் மணியும் தன் தந்தையை அடிக்க வேண்டும் என தன் வாழ்நாள் முழுதும் நினைத்து கொண்டே இருந்திருப்பான். மேலும் அவனால் ஒரு அணிலை கூட தன் விருப்பதிற்க்காக வீட்டில் வைத்து கொள்ள முடியாத போதாமையை, முற்றிலும் தோற்று போன ஒருவனுக்காக எந்த குற்றமும் இல்லாமல் வாழும் ஜெயந்தியை பார்த்து பொறாமை கொண்டிருப்பான். அதனாலே மணி அவன் இறப்பை தன் இயலாமையால் நிறைத்து அழுது கொண்டே இருக்கிறான்.

அழகர் உருவாக்கும் சம்பத் தன் பொருளாதார நிலையை எப்போதும் தோல்வியாக காட்டி கொள்ள விழையாத. ஆனால் அந்த தாழ்வு மனப்பான்மையை மறைக்க அழகரை உண்மை கொண்டு குத்தி காயப்படுத்தும் ஒருவனாக இருக்கிறான். திராவிட இயக்க குடுமத்தில் இருக்கும் அவனுக்கு சம்பத் கல்லூரியில் அடையும் பெயர் என்பது தாங்கி கொள்ள முடியாதையாகவே இருந்திருக்கும். எனவே தான் அவன் கல்லூரியை விட்டு மேடை பேச்சாளனாக மாறும் போது வந்து வாழ்த்துகிறான். அவனுக்கு தெரியும் இந்த இடம் தான் அவன் வீழ்ச்சியின் துவக்கம் என்று. அவனை  ரயில் நிலையத்தில் தனியாக காக்க வைத்து விட்டு செல்லும் போது அவனுக்கு தெரியும் அவன் ஆத்திரமடைவான் என்று அதனாலே , தன்  கையில் உள்ள பணத்தில் இரவுணவும் , பழமும் வாங்கி வந்து ,தன் செயலின் மூலம் அவனை கீழிறக்க நினைக்கிறான். டெல்லியில் அவனை சந்திக்கும் போதும் , வீடற்றவர்களை பார்த்து இவர்கள் மென் உணர்வினால் தான் இப்படி வாழ்கிறார்கள் என்றும், குகை மனிதனை போல் கோரை பற்களை உருவாக்கி கொண்டால் இந்த அடிமட்ட வாழ்க்கையிலிருந்து வெளிய வரலாம் என்று கூறுவது , அழகரை பார்த்து சொல்வது போலவே இருந்திருக்கும் அவனுக்கு. என்றாவது ஒரு நாள் சம்பத் அந்த கோரை  பற்களோடு தன்னை சந்திப்பான்  என்று அவன் அறிந்திருப்பான். அழகர் தன் மனைவியோடு ஆங்கில திரைப்படம் ஒன்றிற்கு வந்திருக்கும் போது , சம்பத் அப்படி ஒரு கூறிய பற்களோடு அவனை சந்திக்கிறான். ஒரு வேசியோடு அந்த திரைப்படம் வரும் அவன் ,அவளை அவர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களை தன் பல்லின் கூர் நுனிக்கொண்டு கிழிக்கிறான். அழகரின் மனைவியை பற்றி அவனிடத்தில் விசாரிக்கும் மொழியிலும் அந்த கூர்மை இருந்து கொண்டே இருக்கிறது. அப்போது  சம்பத் வாழ்வின் மிக பெரிய வெற்றியை அடைந்த பெருமிதத்தை அடைந்திருப்பான். இதனாலே அழகர் ஜெயந்தியை பற்றி ராமதுரையிடம் சந்தேகமாக கேட்டகிறான் , காரணம் அழகர் ராமதுரையை சம்பத்தின் இடத்தில வைத்து பார்க்கிறான். அவர்களின் நெருக்கத்தை அவன் அறிவான். சம்பத் அகம் திறந்து பேசும் ஒருவனாக இருந்தால் அது ராமதுரையாக மட்டுமே இருக்கும் என்று அழகர் அறிவான். அதனாலே அவன் அவனையையும் , சம்பத்தின்  மனைவியையும் இணைத்து சந்தேகிக்கிறான்.மனிதனிடத்தில் எப்போதும் கோரை பற்கள் மறைந்திருக்கின்றன.

பணம் மட்டுமே, சந்தர்ப்பங்களை உருவாக்கி தருகிறது. அதுவே ஒருவனை உயர் நிலைக்கு செல்ல வைக்கிறது. அதனாலே அழகர் இந்த வாழ்வை அடைந்திருக்கிறான். அழகர் உண்மையில் சம்பத்தை சந்திக்க விரும்புவது அவன் தோல்விகளை கண்டு மகிழ்வுற அன்றி நிச்சயமாக வேறில்லை. ஏனென்றால் அவனுக்கு தெரியும் அவன் கரும்பு சாறு விற்று பிழைக்க வேண்டிய ஒருவனல்ல என்று. ஆனாலும் சம்பத் அவனிடத்தில் எப்போதும் தன்னை அவனை விட உயர்ந்தவன் என்ற இடத்திலே வைத்து அணுகுகிறான் அவன் இறப்பு வரை.

ராமதுரை மட்டுமே சம்பத்தை முழுதும் அறிந்த நண்பனாக உள்ளான். அவனே சம்பத் இறக்க வேண்டும் என்றும், அதன் பின் செய்ய்ய வேண்டியதை பற்றியும் சிந்தித்து கொண்டிருந்தான். அதை ஒரு கடமையாய் போல் செய்து முடித்தான். எல்லாம் முடிந்து அந்த பெரு மழையின் நனைப்பில் அவனுள் இருந்த சம்பத்தை மொத்த நினைவுகள் கொண்டும் மீட்டுஎடுத்த போது, எதையும் முழுதும் வாழாமல் தோற்று போய் இறந்த நண்பனை நினைத்து பெருங்குரலெடுத்து அழுகிறான். தன்  வாழ்வு முழுதும் சம்பத்தை நினைவில் நிறுத்தி கொள்ள இருப்பவன் ராமதுரை மட்டுமே.

சம்பத் அவனுக்குள் ஒருவனாக உள்ளான். அதை அறிந்தவள் ஜெயந்தி மட்டும். அவன் தன்னை ஒரு தோல்வியின் மனிதன் என்றே நினைத்து கொள்கிறான். முழு சோம்பேறியான ஒருவன் , அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்வின் பெரு மாற்றம் நிகழ்ந்து விடும் என்று நம்பி கொண்டிருக்கும் ஒருவன். கட்டற்ற காமம் கொண்ட ஒரு சராசரியன். மரணத்தை பற்றி எப்போதும் சிந்தித்து கொண்டிருக்கும் , அந்த முடிவை மட்டும் விரும்புவனாக உள்ளான். இதெல்லாம் மீறி அவனிடத்தில் ஒரு அறஉணர்ச்சி உள்ளது. அதே அவனை புற உலகின் போலி வாழ்வுக்குள் செல்லாமல் தடுக்கிறது. எனவே தான் அவன் பிழை திருத்தும் இடத்திலுருந்தும், செடிகளை விற்பதை மறுத்தும் செல்கிறான். அவன் மொத்த தோல்விக்கும் அவன் சொல்லும் ஒரு பாடலே காரணமாய் இருக்கலாம். ஜெயந்தி அவனிடத்தில் எதோ ஒரு உண்மை உள்ளது என்று நம்பினாள்.அந்த உண்மையினாலே அவனை விட்டு விலகாமல் மரணம் வரை துணை நிர்கிறாள்.

அப்படி ஒரு பெண் இருக்கிறாளா என்று பார்பதற்க்காகவே யாழினி சம்பத்தின் மரணத்திற்கு வருகிறாள். காரணம் அவள் ஜெயந்தி அறிந்தவைகளை , முன்னரே அறிந்தவள் . அதனாலே அவனை அவள் விட்டு விலகி சென்றாள், குறள் நெறி போல் இளைஞர்கள் வாழ வேண்டும் என்று சொல்லி. அவளுக்கு தெரியும் சம்பத் அவன் வாழ்வு முழுதும் தன்னை போல் ஒரு பெண்ணை தேடி அலைவான் என்று. அதனாலே அவன் அவளிடத்தில் மட்டும் கடிதம் எழுதுகிறான்.

உறுபசி வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை பற்றி இன்னொருவர் கொண்டுள்ள மதிப்புகளின் உண்மையை , ஒரே ஒரு மனிதனை பற்றி வெவ்வேறு கோணங்கள் கொண்டுள்ள ஐந்து  நபர்களின் பார்வையில் சொல்லி . சொல்பவர்களின் மதிப்பை நமக்கு ஆடி போல் காட்டுகிறது. எப்போதும் மனிதன் பிறரை கொண்டே தன்னை மதிப்பிடுகிறான்.

மிக சிறந்த படைப்பை அளித்த எஸ்.ரா. அவர்களுக்கு நன்றிகள்

••

0Shares
0