உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை

 

சிறுகதை

பிரபவ வருடம்

சித்திரை இரண்டாம் நாள்

முகாம். திருவாவடுதுறை ,

தேவரீர் பண்டிதமணி துரைச்சாமி முதலியார் சமூகத்திற்கு,

தங்கள் அடிப்பொடியான் வலசைஏகாம்பரநாதன் எழுதும் மடல்

திருப்புல்லணி பால்வண்ணசாமி எழுதிய பசுபதி விளக்கம் நுாலில் அடிக்குறிப்பாக இடம்பெற்றிருந்த ஆற்காடு ரத்னசாமி முதலியாரால் எழுதப்பட்டதாக சொல்லபடும் (ஒரு வேளை தழுவி எழுதப்பட்டதாக கூட இருக்கலாம் ) உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை என்ற நுாலை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளவேண்டி நான் கடந்த சில மாதங்களாக திருவாவடுதுறை சந்நிதானத்தில் உள்ள சரஸ்வதி நுாலகத்தில் காலம் கழித்து வருகிறேன். இந்த நுாலை பற்றி மெய்ஞானவிளக்கவுரையில் குமரேசஅடிகள் குறிப்பிடுவதை தவிர வேறு எந்த தகவலையும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. மேலசிவபுரி தமிழ்பாடசாலையில் தாங்கள் தமிழ்பணியாற்றிய போது தங்களிடம் சிவஞானபோதத்திற்கு பொருள்விளக்கம் கேட்டு நான் வந்திருந்ததை தாங்கள் மறந்திருக்க மாட்டார்கள். சிவஞானபோதத்திற்கு தாங்கள் காட்டிய வழி தான் இன்று என்னை திருவாவடுதுறை வரை கொண்டுவந்து சேர்ந்திருக்கிறது. கொளத்துார்தேசிகரின் சைவசித்தாந்த வழிகாட்டியில் இது குறித்த சங்கேதமாக சில வாசகங்கள் இடம்பெற்றிருந்த போதும் மூலநுாலைப்பற்றிய விபரங்கள் தெளிவாகயில்லை.

**

சூளைமேட்டிலிருந்த நவஜோதி அச்சகத்தில் 1906ம் வருடம் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ள இந்த புத்தகம் வெளியாகியுள்ளது என்ற குறிப்பை சாமிநாத சர்மா பட்டியல் ஒன்றில் கூட பார்வையிட நேர்ந்தது, இதை பற்றிவிசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது வித்வான் சாமிநாத சர்மாவை சந்திக்கும் பேறு கிடைக்கவில்லை, ஆனால் அவரது நேர்வழி மாணாக்கர் கனகசபாபதியின் வீட்டை கண்டுபிடித்தறிந்து உசாவிய போது அவர் தான் பலவருடகாலம் சாமிநாத சர்மாவிற்கு படியெடுத்து தரும் பணியில் இருந்ததால் இப்புத்தகம் குறித்து கேள்வியுற்றிருப்பதாகவும் சர்மாவும் மேற்படி நுாலை வாசிக்க வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தாகவும் தெரிவித்தார். சூளைமேட்டில் உள்ள சிவன்கோவில் தெருவில் தான் நவஜோதி அச்சகம் இருந்ததாக அவர் தெரிவித்தபடி நான் அச்சகவிலாசத்தை பெற்றுக்கொண்டு நேரில் விசாரித்து வரலாமென்று சென்றிருந்தேன்.

சூளைமேட்டில் அதே இடத்தில் நவஜோதி அச்சகம் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களிடம் இந்த நுாலைப்பற்றி விசாரித்த போது அதன் உரிமையாளர் தாங்கள் பனிரெண்டுவருடமாகவே இந்த அச்சகத்தை வாங்கி நடத்திவருவதாகவும் அதற்கு முன்பாக அச்சக உரிமையாளராகயிருந்த சிவனொளி குடும்பத்தில் சில விபரீத சம்பவங்கள் நடந்து போனதால் அவர்கள் சென்னையை விட்டு திரும்பவும் தங்களது பூர்வீக ஊரான வந்தவாசிக்கு போய்விட்டதாகவும் ஒருவேளை அங்கே சென்று விசாரித்தால் இந்த நுாலை பற்றிய விபரம் தெரியக்கூடும் என்றார். நான் வந்தவாசியில் அவர்களது விலாசம் கிடைக்குமா என கேட்டதற்கு சரியான விலாசமாகயில்லை ஆனால் அவர்கள் வீட்டின் அருகே ஒரு தேவார பாடசாலையிருந்தாக சொல்லியிருக்கிறார்கள் என்றார். நான் நவஜோதி அச்சகத்தில் அச்சேறிய வேறு ஏதாவது தமிழ் நுால்கள் இருக்ககூடுமா என்று கேட்டதற்கு அச்சகத்தில் இருந்த புத்தகங்கள் யாவற்றிற்கும் வீட்டிலிருந்த பெண்மணி தீவைத்து கொளுத்தியதில் யாவும் எரிந்து போய்விட்டதாகவும் இது தான் அந்த வீட்டில் முதலாக நடந்த துர்சம்பவம் என்று சொல்லியதோடு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அவசரமாக ரசீதுகள் அடித்துக் கொண்டிருப்பதால் இரவு திரும்பி வருவதாகயிருந்தால் தனக்கு தெரிந்த விபரங்களை சொல்வதாக உரிமையாளர் கோலப்பன் சொல்லியிருந்தார். நான் வந்தவாசிக்கு சென்று விசாரித்துவிட்டு திரும்பிவரும் போது அவரை பார்ப்பதாக சொல்லியடி ரயில்கெடிக்கு சென்றேன்

வந்தவாசி மிகசிறிய ஊராகயிருந்தது. சமணசமயத்தை சார்ந்த குடும்பங்கள் அதிகமிருப்பதாக வாசித்திருக்கிறேன். தேவாரப்பாடசாலையை கண்டுபிடிப்பது எளிதாகவேயிருந்தது. ஆனால் அதை ஒட்டிய வீட்டில் யாருமேயில்லை. வீடு இடிந்து நிலைகதவு கூட பிடுங்கி போகப்பட்டிருந்தது. துார்ந்து போயிருந்த ஒரு கிணற்றை தவிர வேறு எதுவும் அங்கேயில்லை ஒரு வேளை அருகில் இருக்க கூடுமோ என்று தேடியபோது இரண்டு வீடுகள் தள்ளி முதுகுன்றத்தில் தபால்துறையில் வேலைசெய்யும் குமாஸ்தா சேதுப்பிள்ளையின் வீடு இருந்தது. அவர்கள் சிவனொளியின் குடும்பம் சூளைமேட்டில் குடியிருப்பதாகவும் அவரது வீட்டில் சில துர்சம்பங்கள் நடந்து போய்விட்டதால் வேறு இடத்திற்கு மாறி போயிருக்க கூடுமென்றார்கள்.

சேதுப்பிள்ளையின் தாயார் மிகுந்த அன்போடு எனக்கு உப்பிட்ட கூழும் வெங்காயமும் தந்து சாப்பிடச் சொன்னார். சேதுப்பிள்ளையின் தாயாருக்கு சிவனொயின் மனைவி ஒன்றுவிட்ட தங்கை முறை வரக்கூடியவள் தான் என்றும் சிவனொளி ஒன்று சொல்லிக் கொள்கிறமாதிரி பண்டிதர் இல்லை என்றும் அவருக்கு கொஞ்சம் சித்தகலக்கம் இருந்ததாகவும் சில வேளைகளில் அதைப்பற்றி வீட்டு பெண்கள் பேசிக் கொண்டதாகவும் சொன்னார். நம்பமுடியாமல் நான் சிவனொளிக்கு சித்தம் பேதலித்திருந்திருந்தா என்று கேட்டேன். சில நேரம் அச்சாகிவந்த சில புத்தகங்களை படித்து சிவனொளி அழுது கொண்டிருப்பதை பார்த்திருப்பதாக பெண்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றும் சேதுப்பிள்ளையின் தாயார் சொன்னாள்.

நான் கூழை குடித்துவிட்டு சிவனொளியின் மனைவி தான் அச்சகத்தில் தீவைத்துவிட்டதாக பேசிக்கொள்கிறார்களே என்று கேட்டேன். சேதுவின் தாயார் குழப்பத்துடன் அப்படியெல்லாமிருக்காது அந்த மனுசன் அபாண்டமாக பழியை போட்டிருக்கிறான். அவரே கொளுத்திவிட்டிருப்பான். அச்சகத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் போட வேண்டுமென்ற போது சீராக கொண்டுவந்திருந்த அட்டிகையை கழட்டி கொடுத்தவள் பூரணவல்லி, அவள் தீவைத்திருக்க மாட்டாள், இத்தனைக்கும் அவளது தகப்பனார் சப்ஜட்ஜாகயிருந்தவர், கல்விமான் என்று சொல்லிக் கொண்டே போனாள். சிவனொளியின் வீட்டார் சூளைமேட்டில் குடியிருக்கவில்லை என்றும் நான் ஒரு புத்தகத்திற்காக அவர்களை தேடியலைவதாகவும் சொன்னேன்.

புறப்படும் சமயத்தில் சேதுவின் தாயார் ஒரேயொரு சம்பவத்தை கேள்விபட்டதாகவும் அது நிஜம் தானா என்று தனக்கு தெரியாது என்றும் சொன்னார். இச்சம்பவமாவது

சிவனொளிக்கு ஆறு பெண்பிள்ளைகளும் இரண்டு பையன்களுமிருந்தார்கள். ஒன்பதாவதாக ஒரு பெண்சிசுவை பிரவசித்து குருதிப்போக்கு அதிகமாகி இத்துப்போன உடலோடு படுக்கையில் கிடந்தாள் பூரணவல்லி. குழந்தையும் லிர்க்கைப்போலிருந்தது. முன்கட்டில் அச்சகமும் பின்கட்டில் வீடுமிருந்தது. அநேகமாக பிரசவமாகி ஆறாம் நாளோ என்னவோ, அச்சகத்திற்கு வெண்பாபுலி பிச்சையாபிள்ளை தனது பரிவாரங்களுடன் வந்திருந்தார். திருக்குறளுக்கு தான் புதிதாக எழுதிய உரையை சீடர்களுக்கு வாசித்துகாட்டுவதற்காக அழைத்து வந்திருந்தார். அச்சகத்தில் இருந்த சிவனொளிக்கு பிச்சையாபிள்ளையை விசேசமாக உபசரிக்க முடியாதபடிக்கு வீட்டில் சுககேடாகியிருக்கிறாளே என்று ஆத்திரமாகயிருந்தது. வெற்றிலை சீவலும், அதிசரமும், சீங்குழலும் தட்டில் கொண்டுவந்து வைத்தபடி சிவனொளியின் மூத்தபெண் அடுப்படிக்கும் அச்சகத்தின் முகப்பறைக்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

காலையிலிருந்தே குழந்தையின் அழுகை சப்தம் கேட்டபடியிருந்தது. பிச்சையாபிள்ளை அதிசரத்தினை பற்றிய சிலேடைபாடல் ஒன்றை கட்டிக்கொண்டிருந்தார். குழந்தையின் அழுகை சிவனொளியின் காதுகளை துளையிடுவதை போல கேட்டுக் கொண்டேயிருந்திருக்க வேண்டும். கோபத்துடன் எழுந்து உள்ளே போய் அவள் படுத்திருந்த அறையை சாவியால் பூட்டி சாவியை துாக்கி பரணில் எறிந்துவிட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து கொண்டார். மதியம் வீட்டிலே விருந்துக்கும் ஏற்பாடிகியிருந்தது. கறிவேப்பிலை பொடியை வெண்பாபுலி சாதத்தில் போட்டபடியே வெந்த சோற்றிற்கும், மூடனுக்குமாக ஒப்புமையை பற்றிய ஒருபாடலை புனைந்தார். இரவுவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு யாவரும் திருப்பருத்திக்குன்றம் செல்வதாக வண்டியை அமர்த்துக் கொண்டு புறப்பட்டார்கள் சிவனொளியின் கடைசிமகன் பரணில் ஏறி சாவியை தேடியெடுத்து அறையின் கதவை திறந்துவிட்டான். அறையிலிருந்த வெளிச்சத் துடைத்து எறியப்பட்டிருந்தது. மூத்தமகள் நற்பின்னை பூண்டுகஞ்சி கொண்டு போய் தாயாரிடம் கொடுத்தபோது அம்மா கட்டிலில் இருந்து அவளை திரும்பி பார்க்கவேயில்லை. பிள்ளையை யாரும் துாக்கவும் விட மறுத்துவிட்டாள். அதன்பிறகு பூரணவல்லடி குளிப்பதற்கோ, சாப்பிடுவதற்கு என எதற்கும் மறுக்க துவங்கினாள். பிள்ளைகள் அவளை இழுத்துவந்து சாப்பிடச் செய்தார்கள். குழந்தை அழுவதாக ஒலியெழுப்பினால் உடனே அவள் தன்விரலை குழந்தையின் வாயில்கொடுத்து அழுகையை அடக்கிவிடுவாள்.

சிவனொளியிடம் பேச்சே அற்றுப்போனது. அவர் சில சமயம் அந்த அறைக்குள் நுழைந்த போது அவள் தன்பற்களை நரநரவென கடிப்பதை கேட்டிருக்கிறார். அதை கேட்டதும் அவருக்கு மிகுந்த ஆத்திரமாகவரும், அறையிலிருந்த இருளை போலவே அவளும் உருமாறிக்கொண்டு வருவதாக நினைத்தபடி அவசரமாக வெளியே வந்துவிடுவார். ஒரு இரவு அவர் அச்சகவேலையாட்களை அனுப்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்திருந்த போது அவசர அவசரமாக வெளியே எழுந்து போன பூரணவல்லி புத்தககட்டுகளின் மீது சூடவில்லைகளை கொளுத்தி போட்டுவிட்டு அவை தீபற்றி எரிவதை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்இமைக்கும் நேரத்தில் காகிதங்கள் எரியத்துவங்கி புகை வீடெங்கும் நிரம்பியது. சிவனொளி ஒடிவருவதற்குள் நெருப்பு அச்சுகாகிதங்களில் பற்றி எரியத்துவங்கியது. இரவு முழுவதும் நெருப்பை அணைக்க முடியவேயில்லை. சிவனொளி தன்மனைவியை ஒங்கிஒங்கியறைந்தார். பிள்ளைகள் தகப்பனுக்கும் தாயாருக்குமான மூர்க்கமான சண்டையை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது நடந்த சில நாட்களுக்கு பிறகு பூரணவல்லிக்கு பித்தம் தலைக்கேறிவிட்டதாக காளஹஸ்திக்கு சிட்சைக்கு அனுப்பிவிட்டார்கள். அதுவரைக்கும் தான் தனக்கு தெரியும் என்றாள் சேதுவின் தாயார்

வேதனையாகயிருந்தது. திரும்பவும் அந்த அச்சகத்திற்கு போய் விசாரிக்க மனம் ஒப்பவில்லை. அதனால் நான் ஊர் திரும்பிவிட்டேன். அதன் பிறகு தான் மேலகரத்திலிருந்த சிவசுப்ரமணிய ஒதுவாரை பற்றி கேள்விபட்டேன். அவர்கரதலைபாடமாக தேவாரத்தை அறிந்து வைத்திருந்தவர். ஒருவேளை அவருக்கு மேற்படி நுாலைப்பற்றிய விபரங்கள் தெரிந்திருக்ககூடும் என்று அவரை சந்திப்பதற்காக சென்றேன்.

நான் நினைத்திருந்த உருவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை. காய்ந்த வாழையிலை போன்று மெலிந்துபோன உடலுடன் ஒற்றை தட்டுவேஷ்டி கட்டியபடி காடுடையார்கோவிலில் தான் ஒதுவாராகயிருப்பதாக தெரிவித்தார். எனது பெயரை மறந்துவிட்டவரை போல அடிக்கொரு தரம் கேட்டுக் கொண்டார். நான் ஏகாம்பரநாதன் என்று சொன்னதும் ஏகாம்பரத்தின் விளக்கமென்ன என்று தெரியுமா என்று கேட்டார். நான் அவர் சொல்லி கேட்க சித்தமாகயிருப்பதாக தெரிவித்தேன்.

ஆமிரம் என்ற வடசொல் மாமரத்தை குறிக்கும் ஏக ஆமிரம் என்பது ஏகாமிரமாகி பின்னர் ஏகாம்பரம் என திரிந்திருக்கின்றது. கச்சிஏகம்பம் என்று தேவாரத்தில் பாடப்பெற்ற திருக்கோவிலில் பழமையாக மாமரம் இருப்பதை பார்த்திருக்கீறீர்களா ? கம்பை என்னும் வேகவதியாற்றை அடுத்துள்ளமையால் ஏகம்பம் என்ற பெயர் பெற்றிருக்கவும் கூடும் என்றார். நான் ஆச்சரியத்துடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் பத்தொன்பதாவது தலைமுறையாக தான் ஒதுவாராகயிருப்பதாக சொல்லியபடி எதற்காக இந்த நுாலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்டார். நான் மிகுந்த சங்கோஜத்துடன் மனதில் ஒரு சந்தேகம் அதை தெளிவு பெறுவதற்காக அலைந்து கொண்டிருப்பதாக சொன்னேன். ஆச்சரியத்துடன் அவர் சந்தேகத்தில் ஒன்று இரண்டு என்று பேதமிருக்கிறதா என்ன ? சந்தேகம் ஒரு காட்டை போன்றது ஒன்றுக்குள் ஒன்று விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கும். சந்தேகத்தை தீர்த்துவிடக்கூடாது. இத்தனை வருடமாக தேவாரம் பாடும் எனக்கு இருக்கும் சந்தேகங்களை நீங்கள் கேட்டால் பயந்து போய்விடுவீர்கள். சில நேரங்களில் எனக்கு தேவாரப் பாடல்கள் யாவும் நானே புனைந்தது போலதானிருக்கிறது. ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் எல்லாம் வெறும் பெயர் தானே ?. ஈசனுக்கு ஆயிரம் பெயர் இருப்பது போல இதுவும் ஒரு மயக்கம் தானோ என்னவோ ? நான் அவரது நிழலை போல ஒடுக்கத்துடன் கூடவே நடந்து வந்தேன்.

இருவரும் வீடு வந்து சேர்ந்த போது அவர் தன்னிடம் ஒன்றிரண்டு ஏடுகளை தவிர வேறு எதுவும் கிடையாது என்றும் தனக்கு அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை பிடிக்கவில்லை. காகிதங்கள் வெள்ளைகாரர்கள் மலம் துடைக்க பயன்படுத்துகிறார்கள் என்று தனக்கு தெரியும் என்றார். நான் அது வேறுவகையான காகிதம் என்றேன். ஒதுவார் அதைக் கேட்டுக்கொண்டதாக தெரியவில்லை. புன்சிரிப்போடு நான் தேடிவந்த புத்தகத்தின் பெயரை திரும்பவும் கேட்டார். உலகம் ஒரு பெரிய எழுத்துகதை என்று சொன்னேன். அவர் திண்ணையில் சாய்ந்தபடியே பனையோலை விசிறியால் வீசிக்கொண்டு விரலால் ஏதோ கணக்கு போட்டார். பிறகு வெற்றிலை சாற்றை துப்பிவிட்டு என் நினைவில் அப்படியொரு புத்தகம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இது புத்தகமல்ல ஒரு சங்கேதம் என்றே தெரிகிறது. எதற்கும் தேவாரஏட்டில் கயிறுசாத்திபார்த்து சொல்வதாக சொல்லியபடி தன்வீட்டிலிருந்த தேவாரஏடுகளை எடுத்துவந்து கண்ணை மூடிக்கொண்டு கயிற்றை ஊடேஇழுத்து ஒரு ஏட்டை தனியே பிரித்து வாசித்தார். ஞானசம்பந்தரின் பாடல் ஒன்று வந்தது. அவர்பாடலை பண்ணோடு பாடியபடி நீங்கள் தேடிவந்த நுால் திருவெண்காட்டில் இருக்ககூடும் என்றார். நான் எனது சந்தேகத்தின் சுமையை உடல் முழுவதும் ஏந்திக் கொண்டபடி அவரிடமிருந்து வீடு திரும்பினேன்.

இரண்டு மாதகாலம் அந்த நுாலை மறந்துவிட்டு நித்யகாரியங்களில் ஈடுபடவேண்டும் என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன். இந்த நுால் ஒரு சங்கேதம் என்று ஒதுவார் சொன்னது மிகவும் சரியானதாகவேயிருந்தது. நானாக மனதில் அந்த நுாலினை பற்றி சில கற்பனைகளை உருவாக்க ஆரம்பித்தேன். சிலவேளைகளில் அந்தக் கற்பனையில் உருவான பாடல்களை தொகுத்து எழுத துவங்கினேன். சில நாட்கள் தொடர்ந்தாற் போல இந்த நுாலைப்பற்றிய எண்ணங்கள் உருவாகும், அப்போது சில காட்சி ரூபத்திலும் சில தெளிவற்றும் மனதில் தோன்றும். நான் ரகசியமாக அந்த காட்சிகளையும் கருத்துக்களையும் காகிதத்தில் எழுதிவரத்துவங்கினேன். ஆறேழு மாதங்களுக்கு பிறகு நான் எழுதியிருந்த காகிதங்களை ஒன்று சேர்த்து பார்க்கும் போது அது சிறிய நுால்வடிவிலிருந்தது. அந்த நுாலிற்கும் உலகம் ஒரு பெரிய எழுத்துகதை என்று தலைப்பிட்டு நல்லுாரில் உள்ள அச்சகம் ஒன்றில் அச்சிற்கும் கொடுத்து வந்தேன். அச்சு கோர்க்கும் போது அருகிலே இருந்து பார்க்கவேண்டும் என்று ஆசையாகயிருக்கும். ஆனாலும் தினமும் மாலையில் நல்லுாருக்கு போய் அச்சகத்தில் வேலை நடைபெறுகிறதா என்று பார்த்துக் கொண்டு மட்டும் வருவேன். ஒரு இரவில் உறக்கத்தில் யாரோ சொல்வது போல கேட்டது.

தேவாரப்பாடல்கள் எல்லாம் நான் எழுதியது போல தானிருக்கிறது. எல்லாம் வெறும் பெயர்கள் தானே ?

பயத்துடன் கண் விழித்து எழுந்து கொண்டேன். ஒதுவார் சொன்னதை தான் நான் செய்திருக்கிறேனா ? இப்போதே போய் அச்சடிக்க கொடுத்த புத்தகத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு விடியும்வரைக்கும் பொறுமையில்லாமல் நல்லுாருக்கு புறப்பட்டேன். நான் போய்சேர்ந்த போது விடிகாலையாகியிருந்தது. நல்லுாரிலிருந்த அருமருந்துடையார் கோவில் திறந்திருந்தது. கோவிலினுள் நுழையும் போது தேவாரப்பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. பிரகாரத்தில் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தேன். காலைவெளிச்சம் படர்ந்து வருவது போல அப்பாடல் கோவிலின் பிரகாரத்தில் மெதுவாக ஒளியை உண்டாக்கி கொண்டிருந்தது. தேவாரம் ஒரு பாடல் அல்ல ஒரு ஜோதி அல்லது ஒளிப்பிரவாகம் என்று மனதில் தோன்றியது. நெடுநேரம் பிரகாரத்திலே நின்றிருந்தேன். தேவாரத்தை பாடிய மனிதன் போய்விட்டிருக்ககூடும். ஆனால் கோவிலின் கற்துாண்களில் அப்பாடலின் ரீங்காரம் ஒளிந்திருந்தது. ஒதுவாரின் குரல்கேட்டுகேட்டு சாந்தம் கொண்டிருந்த கோவில்கற்களை பார்க்கும் போது மனதில் இதுவரையில்லாத ஒரு பேரமைதி உண்டானது. கல்யானை ஒன்றின் காதை நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மனது அதை விட்டு அகலவேயில்லை. யானையின் சிரிப்பு எப்படியிருக்கும் என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன். மடைப்பள்ளிக்காரர்களில் ஒருவன் எனக்கு திருவமுது தந்தபோது தான் தன்னுணர்வு பெற்றேன். தையல் இலையை பிரகாரத்திலே வைத்துவிட்டு அச்சகத்திற்கு விரைந்து சென்றேன்.

அன்று மாலையோடு அச்சுகோர்ப்பு முடிவதாகயிருந்தது. நான் அதுவரை செய்த வேலைக்குரிய கூலியை தருவதாக சொல்லியபடி எனது கைப்பிரதியை வாங்கிக் கொண்டுவீடு திரும்பினேன். எனக்கு சந்தேகமாகயிருந்தது. ஒருவேளை நான் எழுதியது தான் அந்த புத்தகமா. ? சில நாட்களில் அதை வீட்டில் வைத்திருக்கவே அச்சமுண்டாகியது. அதை வேண்டுமென்றே கோவிலின் தலவிருட்சத்தினடியில் சுருட்டிவைத்துவிட்டு வந்தேன். யாரோ ஒருவன் அதை எடுத்துப் போய் படிக்க கூடுமல்லவா ? அவன் இதுதான் உலகம் ஒரு பெரிய எழுத்துபுத்தகம் என்று படிக்ககூடுமானால் அதன் மூலப்புத்தகத்தை விடவும் எனது நுால் முக்கியமானதாகிவிடுமல்லவா ? மனதில் சந்தோஷமும் ஏமாற்றிவிட்டோமோ என்ற குற்றஉணர்ச்சியும் ஒன்றாக தோன்றியது. நான் சில நாட்கள் இதற்காகவே வெளியூர் பயணத்திற்கு ஆயுத்தமானேன்.

தற்செயலாகவா அல்லது திட்டமிட்டுதான் வந்தேனா என்று தெரியாமல் திருவெண்காட்டிற்கு வந்திருந்தேன். திருவெண்காட்டுபதிகம் எனக்கு விருப்பமானது.. பாடல்பெற்ற ஸ்தலத்தில் அமர்ந்து கொண்டு மனதை வேறுகாரியங்களுக்கு பழக்கப்படுத்த முயற்சித்தேன். அப்போது என் அருகில் அமர்ந்தபடி வில்வகாய் ஒன்றை கையில் வைத்தபடியிருந்தவர் என்னை பார்த்து சிரித்தபடி உலகம் ஒரு பெரிய எழுத்து கதைதானா ? என்று கேட்டார். நான் பயத்துடன் உங்களுக்கு அதைப்பற்றி தெரியுமா என்று கேட்டேன். மனது உடலின் உள்ளேயிருப்பதில்லை. அது உடலுக்கு வெளிளேயிருக்கிறது தெரியுமா என்றார். நம்பமுடியாமல் நிஜமாகவா ? என்றேன். காற்று உடலுக்குள் சென்றுவெளியேறி வருவதை நம்புகிறாயா ? அப்படியானால் மனமும் அது போல உள்ளும் வெளியும் சென்றுவரக்கூடியது ஒரிடத்தில் நிரந்தரமாகதங்காதது என்றால் நம்பமாட்டாயா என்று கேட்டார்

எனது குழப்பம் உலகத்தால் பெரிதாக்கபட்டுக் கொண்டேயிருந்தது. நான் என்ன செய்வது என்று அவரிடம் கேட்டேன். அவர் வில்வகாயை என்னிடம் கொடுத்துவிட்டு சிரித்தபடியே கோவிலை விட்டு வெளியேறி நடந்தார். நான் வில்வகாயுடன் கோவிலை விட்டுவெளியே வந்த போது மாலையாகியிருந்தது. இரண்டுமூன்று நாட்கள்திருவெண்காட்டிலேயிருந்தேன். மனது மெதுவாக அடங்க துவங்கியது. பிறகு ஊர் திரும்பினேன்.

வழியெல்லாம் நான் எதற்காக ஒரு நுாலைதேடி அலைக்கழிக்கபடுபவனாக உருமாறினேன் என்பதை பற்றியே நினைத்துக் கொண்டு வந்தேன். எனது ஊரில் சரவணக்குளம் என்று ஒரு குளமிருக்கிறது. அதில் எப்போதும் கலங்கிய நிலையில் தண்ணீர் இருக்கும். அதன் கரையில் ஒருவாகைமரமிருந்தது. ஒரு காலத்தில் பெரிய குளமாகயிருந்திருக்க கூடும். நான் சிறுவனாகயிருந்த போது அது இடிந்து துார்ந்து கிடந்தது. குளத்தை சுற்றி அடர்ந்திருந்த செடிகொடிகளில் எதையாவது பறிப்பதற்காக நான் செல்வேன். ஒரு நாள் அரளிப்பூவை பறித்து கையில் வைத்துக் கொண்டு வரும் போது ஒரு ஆள் என்னைப் பெயர் சொல்லி கூப்பிட்டான்.

அவனை நான் முன்னதாக அறிந்திருக்கவில்லை. அவன் அருகில் போனதும் சிரித்தபடியே உனக்கு நெல்லிக்காய் பிடிக்குமா என்று கேட்டான். பிடிக்கும் என்று சொன்னேன். அவன் எதற்காக பிடிக்கும் என்று கேட்டான். நான் நெல்லிக்காயை தின்றபிறகு தண்ணீர்குடித்தால் இனிப்பாகயிருக்கும் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே நாக்கில் இனித்துக் கொண்டேயிருக்கும் இன்னொரு பொருளை கொடுத்தால் தின்று பார்ப்பாயா என்று கேட்டார். நான் சரியென்று சொன்னேன். அவர் என்னை அருகில் இழுத்து காதில் ஒரு பாடலை சொன்னார். அப்பாடலை எப்படி பிரித்து பொருள் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி தந்தார். ஆச்சரியமாகயிருந்தது. அப்பாடலை ஒவ்வொரு விதத்தில் பிரிக்கும் போது ஒரு அர்த்தம் தந்ததோடு நாவில் அறியாத ஒரு சுவை நிறைவது போலவேயிருந்தது. வீட்டிற்கு திரும்பி பலமுறை அப்பாடலை பிரித்து பிரித்து மனதிற்குள்ளாக பாடினேன். அன்றைக்கு காரணமில்லாமலே எனக்கு சிரிப்புவந்து கொண்டிருந்தது. பிறகு எப்போது தனிமையிலிருந்தாலும் அப்பாடலை நாவு உருட்டத் துவங்கிவிடும். மனதில் சந்தோஷம் நிரம்பும். அதன் பிறகு பித்தேறியது போல நான் யார்யாரோ எழுதிய பாடல்களை, நுாற்களை வாசிக்க துவங்கினேன். மனதில் ஆசை அடங்கவேயில்லை.

என் கதையை நான் விஸ்தாரமாக தங்களிடம் முன்னதாகவே சொல்லியிருக்கிறேன். இப்போது நினைவு படுத்த வேண்டிய காரணம். நான் திருவெண்காட்டிலிருந்து ஊர்திரும்பி சில நாட்களுக்கு பிறகு எனது கனவில் நான் சிறுவயதில் சந்தித்த மனிதன் வந்தார். என்னிடம் நீ அடுத்த வெள்ளிகிழமை திருச்சுழிக்கு சென்றால் அங்கே சிவப்பு பை கொண்டுவரும் ஒருவன் உன்னை சந்திப்பான் அதை வாங்கிகொண்டு வந்துவிடு உனக்கு தெளிவு கிடைக்கும் என்றார். நான் அவர் சொன்னநாளில் திருச்சுழிக்கு சென்றேன். கனவில் சொன்னது போலவே ஒருவன் என் எதிரில் வந்து சிவப்பு பையை என்னிடம் தந்துவிட்டு சென்றார். வீடுதிரும்பும் வரை அதில் என்ன இருக்கிறது என்றே பார்க்கவில்லை. இரவில் பிரித்து பார்த்த போது அதனுள் தலைப்பிடப்படாத ஒரு நுால் இருந்தது. ஆனால் அது என்ன மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ்போலவும் சில நேரங்களில் வெறும் குறிகளாலும் நிரம்பியிருந்தது. அதை எப்படி வாசிப்பது என்று தெரியவில்லை. முன்னும் பின்னும் புரட்டியபடியிருந்தேன். சில நாட்கள் பிறகு இன்னொரு கனவு வந்தது. அக்கனவில் அதே ஆள் திரும்பவும் என்னிடம் தோன்றி நீ அழகர்கோவிலுக்கு போ.. உன்னை யார் கூப்பிட்டு இந்த புத்தகம்பற்றி கேட்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துபடிக்க சொல், நீதேடும் நுாலை கண்டடைவாய் என்றார். நான் அதன்பிறகு பலமுறை அழகர்கோவிலுக்கு போய்வந்தேன். யாரும் என்னிடம் பேசவேயில்லை.

ஒரு நாளில் சுனையருகேயிருக்கும் மண்டபத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு ஆள் என் முதுகை தட்டி எத்தனை நாட்களாக இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன் என்கிறாயே ? எங்கே அந்த புத்தகம் என்றார். எனக்கு வியப்பாகயிருந்தது. பலமுறை இதே ஆளை பார்த்திருக்கிறேன் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியதேயில்லை. பதட்டத்துடன் பையிலிருந்த புத்தகத்தை அவர் கையில் கொடுத்தேன்.. அவர் தனக்கு எழுதப்படிக்கதெரியாது நான் இதை என்ன செய்வது என்றார். நான் குழப்பத்துடன் உங்களுக்கு படிக்க தெரியும் என்றார்களே என்றேன். அவர் அப்படியா சொன்னார். அப்போ கொடு படித்து பார்க்கலாம் என வாங்கி ஒரு பாடலை பாடினார். அதன் அர்த்ததை சொல்லாமலே சபாஷ் என்றபடி புத்தகத்தை என்னிடம் கொடுத்துவிட்டு எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று கேட்டார். நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். ஒரேயொரு வாசனை சோப் வேண்டும், வாங்கித் தரமுடியுமா என்றார். நான் மதுரையிலிருந்து வாங்கிவந்து தருவதாக சொன்னேன். அவர் தான் ஒரு ஹோட்டலில் வேலை செய்வதாக சொல்லியபடி கடந்து போய்விட்டார்.

ஒரு முறையல்ல இருபத்திநான்கு முறை வெவ்வேறு வாசனை சோப்புகள் வாங்கி தந்துவிட்டேன். ஆறேழு மாதமாகியும் அவர் எனக்கு புத்தகத்தை வாசித்துகாட்டவேயில்லை. ஒரு நாள் நான் கோபமடைந்து கத்தியதும் அவர் ஆத்திரத்துடன் அந்த புத்தகத்தை வாங்கி என் கண் எதிரிலே கழிவுநீர்குட்டையில் துாக்கி எறிந்தார். நான் சப்தமாக அழுதேவிட்டேன். அவர் என்னை பற்றிய கவனமேயின்றி திரும்பவும் தன்வேலையை கவனிக்க சென்றுவிட்டார். நான் அவரை மறுமுறை பார்த்த போது அவர் நான்வைத்திருந்தது உண்மையான புத்தகமல்ல. என்றதோடு புத்தகத்தில் இருப்பது எதுவும் உண்மையுமல்ல என்றார். அவரை நான் என்ன செய்வது என்று தெரியமால் வீடு திரும்பினேன்.

இதுவரை தங்களிடம் சொல்லாத ஒரு சேதியை இங்கே குறிப்பிட வேண்டியதிருக்கிறது எனக்கு பதினான்கு வயதிலே திருமணம் நடந்துவிட்டது. நான் மாமனாரின் வீட்டில் தான் இருந்துவருகிறேன். எனது சமீபத்திய செயல்கள் அவர்களை வெகுவாக பாதித்திருக்க வேண்டும் எனது வீட்டிற்கு நான் திரும்பிவந்த நாளில் எனது மாமனார் மிகுந்த ரெளத்திரம் கொண்டவராக என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார். நான் அவமானத்தாலும்., இனி என்ன செய்வது என்று தெரியாமலும் வெளியேறினேன். சில நாட்கள் அதே ஊரில் திரிந்தேன் . பிறகு எப்படியாவது அந்த பெரிய எழுத்து கதையை திரும்பவும் அடைந்தே தீர்வது என்று தேடி திரிய ஆரம்பித்தேன்.

எனக்கு இந்த உலகத்தை புலன்களால் மட்டும் அறிவது போதுமானதாகயில்லை. உலகம் பெரிய எழுத்து கதை என்ற நுால் உலகை புலனுக்கு அப்பால் அறிந்து கொள்வதை பற்றியதாகயிருக்க கூடும் என்று எனக்கு ஒரு ஐயமிருக்கிறது.

இப்போது எனது வயது நாற்பதை கடந்து விட்டிருக்கிறது. இந்த நுாலகத்தில் உள்ள ஒரு லட்சத்து பதினாயிரம் பிரதிகளில் அந்த நுால் இருக்ககூடுமா என்று ஐயமாகவேயிருக்கிறது. உண்மையில் அப்படியொரு நுால் வெளியாகியிருக்கிறதா அல்லது என்னை போலவே பலரும்அடைந்த ஒரு அனுபவம் தான் அப்படியொரு கற்பனைபுத்தகமாக குறிப்பிடப்படுகிறதா ? என்னால் இதை பற்றி எவ்விதத்திலும் முடிவுசெய்ய முடியவில்லை. தாங்கள் பல்கலை நுாற்களை கற்றறிந்த மேதை. தாங்கள் தான் இதற்கு விடைதர வேண்டும். தாங்கள் பதில் அனுப்பும் நாள்வரை நான் ஆதின நுாலகத்தில் தான் தங்கியிருப்பேன்.

தாங்கள் தங்களது மாணாக்கனுக்கு வழிகாட்டி உதவிசெய்யவேண்டும் என்று தாழ்பணிந்துகேட்டுக் கொள்கிறேன். உங்கள் பதிலில் தான் எனது எதிர்காலம் அடங்கியுள்ளது.

என்றும் தங்கள் பாதம்பணிந்த

ஏகாம்பரநாதன்

***

நன்றி:திண்ணை

0Shares
0