உலகைப் படம்பிடித்தல்.


அக்னேஸ் வர்தா பிரெஞ்சு சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் . உலக அளவில் புகழ்பெற்ற பெண் இயக்குனர். பெல்ஜியத்தில் பிறந்த இவர்  பெண்ணிய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

சிறந்த புகைப்படக்கலைஞரும் கலை வரலாற்று ஆய்வாளருமான இவர் சோர்போன் பல்கலைகழகத்திலிருந்து இலக்கியம் மற்றும் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

வார்தா தனது வாழ்க்கையை ஒரு புகைப்படக்கலைஞராகவே துவக்கினார்.  கேமிராவை ஒரு பேனாவை போல சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை பின்பற்றியவர் வார்தா.  இவரது திரைப்படங்கள் பரிசோதனை படங்களாகக் கருதப்படுகின்றன.   Cléo from 5 to 7, Vagabond , Jacquot de Nantes  போன்ற இவரது படங்கள் முக்கியமானவை

இவரும் JR  என்ற பிரபல புகைப்படக்கலைஞரும் இணைந்து உருவாக்கிய ஆவணப்படமே Faces Places.  மிக முக்கியமான ஆவணப்படமது.

பிரான்ஸ் முழுவதும் சுற்றி கண்ணில் தென்படும் மனிதர்களை புகைப்படம் எடுத்து அதை பிரம்மாண்டமானதொரு பிரிண்ட் போட்டு சுவரில் ஒட்டி காட்சிப்படுத்தும் பயணமே இந்த ஆவணப்படம்.

உலகை ஒரு திறந்தவெளிக் கலைக்கூடமாக உருமாற்ற வேண்டும். அதற்கு கலைப்பொருட்களை பொதுவெளியில் காட்சிக்கு வைக்க வேண்டும் என்பதே ஜேஆரின் எண்ணம். கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் எடுப்பதில் விற்பன்னரான ஜேஆர் புகைப்படம் எடுப்பதற்காக நிறைய பயணம் செய்திருக்கிறார். இவரது புகைப்படங்களின் தொகுப்பு தனி நூலாக வெளிவந்துள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காகவே பூத் போன்று உருவாக்கபட்ட வேன் ஒன்றில் இருவரும் பயணம் செய்கிறார்கள். கண்ணில் பட்ட சுவரினைத் தேர்வு செய்து அங்குள்ள மனிதர்களில் ஒருவரை அல்லது குழுவை அழைத்து புகைப்படம் எடுக்கிறார்கள்.. பிரம்மாண்டமான பிரண்ட் அவுட் கிடைக்கிறது.  அதை ஒவியம் போல அழகாக சுவரில் ஒட்டி  சந்தோஷப்படுத்துகிறார்கள்

கைவிடப்பட்ட. அழிந்த. சிதைந்த இடங்களை உயிருட்டும் செயல் போலிருக்கிறது இவர்களின் செயல்..

முகங்கள் கதை சொல்கின்றன. ஒவ்வொரு மனிதமுகமும் ஒரு ஒவியமே என்கிறார் வார்தா.

இந்த ஆவணப்படத்தின் வழியாக நாம் பிரான்ஸ் தேசத்தின் அழகை முழுவதுமாக காண்கிறோம். பருவகால மாற்றங்களுடன் இன்னமும் இயற்கையின் பசுமை  மாறாமல் ஒளிரும் கிராமப்புறங்களையும் ஆளற்ற கடற்கரையும் ஆற்றோட்டத்தையும்,  கைவிடப்பட்ட வீடுகளையும் காண்கிறோம்.  மரங்கள் அடர்ந்த சாலைகள் மிகவும் வசீகரமாகயிருக்கின்றன. ஆரவாரம். பரபரப்பு எதுவுமின்றி மனிதர்கள் வாழும் காட்சிகளைக் காணும் போது மனம் ஏங்குகிறது.

ஆவணப்படம் முழுவதும் இரண்டு புகைப்படக்கலைஞர்களும் இணைந்து பயணிக்கிறார்கள். ஒருவன் முதியவர். மற்றவர் இளைஞன். இருவரின் ரசனையும் வேறுவிதமானது. ஆகவே அவர்கள் புகைப்படம் எடுக்கும் விதமும் கோணமும் மாறுகின்றன. இருவருக்குள் ஏற்படும் அன்பும் நெருக்கமும் கோபமும் படத்தில் கவித்துவமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் தாயும் மகனும் ஒன்று சேர பயணிப்பது போலவேயிருக்கிறது.

முதுமையிலும் வார்தாவிடம் வெளிப்படும் கலைத்தேடல். நேர்த்தி, அழகுணர்வு நம்மை வியக்க வைக்கிறது.

மிக உயரமான இடமொன்றில் படியேற முடியாமல் வார்தா நின்றுவிடும் போது ஜேஆர் மட்டுமே மேலே செல்கிறான். அப்போது வார்தா சொல்கிறார்

“உன் கண்கள் வழியாக உலகை பார்த்துக் கொள்கிறேன்“

அந்த சொல் அவர்கள் உறவின் நெருக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இன்னொரு காட்சியில் ஒரு உணவகத்தில் வைத்து வர்தா கேட்கிறார்

“முதியவர்களை புரிந்து கொண்டு சிறப்பாக நடந்து கொள்கிறாய். இந்த பக்குவம் எப்படி வந்தது“

“என் பாட்டிக்கு வயது நூறு. அவர் இப்போதுமிருக்கிறார். அவர் தான் என்னை வளர்த்தார்“ என்கிறான் ஜேஆர்.

இருவரும் உடனே பாட்டியை தேடி பார்க்கப் போகிறார்கள். அந்த பாட்டி தன் பேரனை நினைத்து பெருமை கொள்ளும் காட்சி அற்புதம். பாட்டியின் கண்களில் வெளிப்படும் அன்பு நிகரற்றது.

இன்னொரு இடத்தில் ஒரு உணவகத்தில் வேலை செய்யும் அழகான இளம்பெண்ணைப் புகைப்படம் எடுக்க அழைக்கிறார்கள். எதற்காக புகைப்படம் என்று அவள் மறுக்கிறாள். இந்தச் சுவரில் ஒட்டுவதற்கு என உயரமான எதிர் சுவரைக் காட்டுகிறார்கள். அவள் தயக்கத்துடன் ஒத்துக் கொள்கிறாள். அவளை அழகாக படம் எடுத்து அந்தச் சுவரில் ஒட்டுகிறார்கள். ஊரே திரண்டு வேடிக்கை பார்க்கிறது. பலரும் அந்த புகைப்படத்தின் அடியில் நின்று செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். அந்த பெண் ஒரே நாளில் மிகவும் புகழ்பெற்றுவிடுகிறாள். அந்த புகழ் தன்னை கூச்சப்படுத்துகிறது என அந்த பெண் வெட்கத்துடன் கூறுகிறாள். அவளது இரண்டு பிள்ளைகள் தன் தாயின் பதினாறு அடி உயர புகைப்படத்தின் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டு அம்மா ஒரு அழகி என்கிறார்கள். கடைப்பெண் புகழ்பெற்றுவிட்டாள்.  இனி வேலைக்கு வேறு ஆளைத் தேட வேண்டியது தான் எனக் கடைக்காரன் செல்லமாக கோவித்துக் கொள்கிறான்

இன்னொரு இடத்தில் ஒரு விவசாயியைச் சந்தித்து புகைப்படம் எடுக்கிறார்கள். அவனுக்குச் சொந்தமாக 500 ஏக்கர் நிலமிருக்கிறது. அவன் ஒற்றை ஆளாக அந்த நிலத்தில் வேலை செய்கிறான். நிர்வகிக்கிறான். தனி நபராக டிராக்டரை வைத்துக் கொண்டு உழுது விதைக்கிறான். அறிவியல் தொழில்நுட்பம் விவசாயத்தை எளிதாக்கி விட்டது. தான் ஒரு டிராக்டர் டிரைவர் போல மட்டுமே உணர்வதாகச் சொல்கிறான். அவனை புகைப்படம் எடுத்து அவனது பண்ணைக்கிடங்கில் ஒட்டுகிறார்கள்.

நீ மிகவும் அழகாகயிருக்கிறாய் என்கிறார் வர்தா

புகைப்படம் எடுப்பதற்கு முன்பே நான் அழகு தான் என்று சொல்லி அந்த விவசாயி சிரிக்கிறான்

பயண வழியில் ஒரு தபால்காரனைச் சந்திக்கிறார்கள். அவன் தன்னை புகைப்படம் எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறான். அவனது படத்தை ஒரு வீட்டு ஜன்னலைத் திறப்பது போல ஒட்டுகிறார்கள். அவன் அதைப் பார்த்து பார்த்து மகிழ்கிறான்.

இன்னொரு ஊரில் ஆட்டுபண்ணை ஒன்றைப் பார்வையிடுகிறார்கள். ஆட்டினை இயந்திரம் பால்கறக்கிறது. ஆடுகளுக்குள் சண்டை வருகிறது. பெரிய ஆடு ஒன்றினை புகைப்படம் எடுத்து சுவரில் ஒட்டுகிறார்கள்.

வேறு ஒரு இடத்தில் 78 வயதான கிழவனைப் புகைப்படம் எடுத்து தரவே அவன் தனது இருப்பிடத்திற்கு அவர்களை அழைத்துப் போகிறான். தனியாக வாழ்வது சிரமமாக இல்லையா எனக்கேட்க. நான் தனியாக இல்லை. சூரியன் துணைக்கு இருக்கிறான் என தத்துவார்த்தமாகப் பேசுகிறான்

பெரிய பெரிய புகைப்படங்களை அவர்கள் சுவர்களில் ஒட்டி வைப்பதன் மூலம் உலகையே திறந்த வெளி புகைப்பட கண்காட்சியாக உருமாற்றுகிறார்கள்.

இந்தப் பயணத்தின் நடுவே கைவிடப்பட்ட ஊர் ஒன்றைக் கண்டடைகிறார்கள்.  அதன் பக்கத்தில் வசிப்பவர்களை ஒன்று திரட்டி அங்கே பெரிய விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்கிறார்கள். அந்த நிகழ்வின் போது விதவிதமான புகைப்படங்களை எடுக்கிறார்கள். அதில் ஒரு சிறுவன் தனது பிரம்மாண்டமான புகைப்படத்தை காணும் போது வியப்பில் கண்களை விரிக்கிறான்..

ஒரு தொழிற்சாலைக்குச் சென்று அதன் இரண்டு சுவர்களைத் தேர்வு செய்து அங்கு வேலை செய்பவர்களை இரு குழுவாகப் பிரித்துக் கொண்டு புகைப்படம் எடுக்கிறார்கள். பின்பு அந்த புகைப்படத்தை எதிரெதிராக சுவரில் ஒட்டி அழகு செய்கிறார்கள். அதைக் காணும்  ஊழியர்கள் அடையும் மகிழ்ச்சி நிகரற்றது

பயணத்தின் ஊடாக மறைந்த எழுத்தாளர் Nathalie Sarraute வீட்டிற்கு போகிறார்கள். பிரபல புகைப்படக்கலைஞர் Henri Cartier-Bresson கல்லறையை தேடிக்கண்டுபிடித்து அஞ்சலி செலுத்துகிறார்கள். தாங்கள் அங்கே வந்து போனதன் நினைவாக சிறுகல் ஒன்றை எடுத்து கல்லறை மீது வைக்கிறார் வார்தா. அவரது கண்கள் கலங்கியிருக்கின்றன. பிரஸானின் மேதமை பற்றி ஜேஆரிடம்  சொல்கிறாள்.

கடற்கரை ஒன்றில் ஒதுங்கியிருக்கும் போர் தடுப்பு அரண் ஒன்றின் மீது புகைப்படம் ஒட்ட இருவரும் விரும்புகிறார்கள். எந்தப் புகைப்படம் ஒட்டுவது என்ற சர்ச்சை எழுகிறது. தனது ஆரம்ப காலத்தில் மாடலாக இருந்து நிர்வாணப்புகைப்படங்களை எடுக்க உதவிய இளைஞனின் புகைப்படத்தை ஒட்டவேண்டும் என்கிறார் வார்தா. அதை ஜேஆர் மறுக்கிறான். பின்பு அவர்களே ஒரு படத்தைத் தேர்வு செய்து கடல்பின்வாங்கியுள்ள இடத்திற்குள் சென்று அரண் மீது ஒட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் திரும்பி வந்து பார்ப்பதற்குள் கடல் அந்தப் புகைப்படத்தை அழித்துவிட்டிருக்கிறது. வெறுமையை இருவரும் பதிவு செய்கிறார்கள்

துறைமுகம் ஒன்றுக்குச் செல்கிறார்கள். அங்கே பணியாற்றும் மூன்று ஊழியர்களின் மனைவியரைப் புகைப்படம் எடுத்து நுழைவாயிலில் காட்சியாக வைக்கிறார்கள். அந்த பெண்கள் அடையும் பரவசமும் சந்தோஷமும் அழகாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது

பிரான்ஸ் முழுவதும் சுற்றிப் புகைப்படம் எடுத்து முடிக்கும் தருணத்தில் ஜேஆர் தனது ஆசையை வெளிப்படுத்துகிறான். அது வார்தாவின் கண்களையும் கால்களையும் தனியே புகைப்படமாக்கி எதிலாவது ஒட்டவேண்டும் என்பது.

இதற்காக அவளது கால்களைப் படம் பிடிக்கிறான். சின்னஞ்சிறிய கால்கள். முதுமையில் அவை சுருங்கிய காட்டுகிழங்கு ஒன்றை போலவே தோன்றுகின்றன. கண்களைப் படம் பிடிக்கிறான். இந்த புகைப்படங்களை கூட்ஸ் ரயில் ஒன்றில் ஒட்டுகிறான். அந்த ரயில் புறப்படுகிறது

“நீங்கள் போகாத ஊருக்கு எல்லாம் உங்கள் கால்கள் போகயிருக்கின்றன. நீங்கள் பார்க்காத காட்சிகளை உங்கள் கண்கள் பார்க்க போகின்றன“ என்கிறான்.

வார்தா நெகிழ்ந்து போகிறார். தன்னை சந்தோஷப்படுத்திய அவனுக்கு ஒரு பரிசு தர விரும்பி அவனைத் தன்னோடு ரயிலில் பாரீஸ் அழைத்துப் போகிறார்

“எங்கே போகிறோம்“ என அவன் ரயிலில் கேட்கிறான்

“இயக்குனர் கோடார்ட்டின் வீட்டிற்கு“ என்கிறாள்.

அவனால் நம்பமுடியவில்லை.  அவனது ஆதர்சம் Jean-Luc Godard . பிரெஞ்சு சினிமாவின் கடவுள் என்றே அவரைக் கொண்டாடுகிறார்கள். கோடார்ட் தன்னுடைய நெருக்கமான நண்பர். அவரைப்பற்றி தான் சிறிய ஆவணப்படம் எடுத்திருக்கிறேன் என்கிறார் வார்தா

இருவரும் கோடார்ட்டை காண அவரது புதிய வீட்டிற்குப் போகிறார்கள். சரியான நேரத்திற்குப் போக வேண்டும் என அருகிலுள்ள காபிஷாப்பில் பதற்றத்துடன் காத்திருக்கிறார்கள்.

இயக்குனர் கோடார்ட் வீடு பூட்டியிருக்கிறது. அவர்களை சந்திக்க கோடார்ட் விரும்பவில்லை. நினைவில் எப்போதுமிருக்கிறாய் வார்தா,, தேடி வந்ததற்கு நன்றி என்று கண்ணாடியில் எழுதப்பட்டிருக்கிறது. ஏமாற்றமடைந்த வார்தா பலஆண்டுகள் கழித்து பார்க்க வந்தேன். அன்பிற்கு நன்றி. காண மறுத்ததிற்கு கண்டனம் என கண்ணாடியில் எழுதுகிறார். கூடவே தான் வாங்கி வந்த இனிப்பைக் கதவில் தொங்கவிடுகிறார்.

அங்கிருந்து புறப்பட்டு இருவரும் ஒரு ஏரியின் முன்பாக போய் அமருகிறார்கள்.

படம் முழுவதும் கறுப்பு கண்ணாடியை கழற்றாத  ஜேஆர் கடைசி காட்சியில் வார்தாவின் விருப்பத்திற்காக தனது கண்ணாடியை கழட்டி காட்டுகிறான். அழகான கண்கள் என்று பாராட்டுகிறாள்

இருவரும் ஏரியை பார்த்தபடியே அமர்ந்திருக்கிறார்கள். அலைகள் போவதும் வருவதுமாகயிருக்கின்றன

படம் நிறைவுபெறுகிறது.

மிகுந்த கவித்துவத்துடன் மனித முகம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இந்த ஆவணப்படம்.

புகைப்படங்கள் மனிதர்களைச் சந்தோஷப்படுத்துகின்றன. அதுவும் பிரம்மாண்டமான புகைப்படமாக தன்னை காணும் போது ஒருவன் வியப்படைகிறான். தன் உருவத்தை நம்பமுடியாமல் பார்க்கிறான். ரசிக்கிறான்

ஒரு நவீன நாவலை வாசிப்பதைப் போல புதிய அனுபவத்தை தந்தது இந்த ஆவணப்படம். பிரான்ஸ் தேசம் கலைகளை எவ்வளவு நேசிக்கிறது என்பதற்கு இப்படத்தில் பொதுமக்கள் காட்டும் ஒத்துழைப்பும் புரிந்து கொள்ளுவதும் சாட்சியமாகயிருக்கிறது.

புகைப்படக்கலைஞர்கள் அவசியம் காண வேண்டிய ஆவணப்படமது.

•••

0Shares
0