உலோக விலங்குகள்

ஒவ்வொரு நாய்க்கும் அதன் இரவென்பதுண்டு

-அய்யப்ப பணிக்கர்

அவனது வீட்டின் வரவேற்பறை விலங்குகளால் நிரம்பியிருக்கிறது.

விலங்குகள், வெண்கலம், எஃகு, பித்தளையில் வார்க்கப்பட்டவை..

அமைதியாக இருக்க அவை பழக்கப்படுத்தப்பட்டிருப்பினும்,

நேற்றிரவில் பெரும் அமளியை ஏற்படுத்திவிட்டன.

நேற்று நாய்களின் முறை.

ஒன்றின் குரைப்பு மற்றவைகளைத் தூண்டிவிட்டது.

அதைக் கேட்டு நரிகள் அமைதியற்று ஊளையிடத் தொடங்குகின்றன.

பித்தளைச் சிங்கம் கர்ஜிக்க எழுந்தது.

பாடப் புத்தகங்களில் கர்ஜனை என்பதே சொல்;

முயற்சித்து, ஆனால் சளியிருப்பதால், கைவிட்டுத்

தானாகவே கூண்டுக்குத் திரும்பிவிட்டது.

கச்சேரி முடிந்து பாடகர்கள் அமைதியான போது

நானும் கண்ணயர்ந்து விட்டேன்,

ஆனால் குரைக்க முடியவில்லை.

இப்போதைக்கு இவ்வளவுதான், இது போதாதா.

அய்யப்ப பணிக்கரின் இந்த மலையாளக் கவிதையை  ஆங்கிலம் வழியாக தி.இரா.மீனா மொழியாக்கம் செய்திருக்கிறார். பதாகை இணைய இதழில் வெளியாகியிருக்கிறது.

வரவேற்பறைப் பொருட்களாக உள்ள விலங்குகள் அசைவுறும் தருணமொன்றைக் கவிதை பதிவு செய்துள்ளது. உண்மையில் இது உறைந்து போனவற்றை உயிர்ப்பிக்கும் செயல்பாடு. எல்லாவற்றுக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டு தானே.

வரவேற்பறையில் உள்ள கலைப்பொருட்கள் யாவும் இப்படிக் காலத்தில் ஆழ்ந்து உறைந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானிலிருந்து ஒரு தவளை பொம்மையை வாங்கி வந்திருந்தேன். பாஷோவின் நினைவாக அந்த் தவளைக்கே பாஷோ என்று பெயர் வைத்திருந்தேன். தாவும் நிலையிலுள்ள தவளைப் பொம்மை. மிக அழகாகச் செய்திருந்தார்கள் வரவேற்பறை அலமாரியின் கண்ணாடிக்குள் அந்தத் தவளை உறைந்து போயிருந்தது. சமீபமாக அதை வெளியே எடுத்துத் துடைக்கும் போது அதன் கண்கள் அசைவது போல உணர்ந்தேன். அதே உணர்வினைத் தான் இந்தக் கவிதையை வாசிக்கும் போது ஏற்பட்டது.

இந்த உலோக விலங்குகள் அமைதியாக இருக்க பழக்கபடுத்தபட்டிருக்கின்றன என்கிறார் பணிக்கர். இது செயற்கையான நிசப்தம்.

குழந்தைகள் கைப்பட்டவுடன் இது போன்ற பொம்மைகள் கண்விழித்துக் கொள்வது வழக்கம். சிறார்களால் பொம்மைகளுடன் உரையாடவும் விளையாடவும் முடியும். பெரியவர்களுக்கு அது வெறும் காட்சிப்பொருள் மட்டுமே

கவிதையில் எதிர்பாராத ஒரு கணத்தில் இந்த விலங்குகள் குரல் எழுப்பி அடங்குகின்றன. அதிலும் சிங்கம் பாவம் சளிப் பிடித்திருப்பதால் கர்ஜிக்க முடியவில்லை. அதிகாரமில்லாத நிலையைத் தான் அது வெளிப்படுத்துகிறது. கவிதை சொல்பவன் தன்னால் குரைக்க முடியவில்லை என்கிறான். இந்த அங்கதம் தான் கவிதையின் தனித்துவம்.

நாய்குரைப்பு ஒரு பழக்கம். எதிர்வினை. பசுவய்யா நடுநசி நாய்கள் என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். அதிலும் இந்த குரைப்பின் தொடர்ச்சி சுட்டிக்காட்டப்படுகிறது.

அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் படத்தில் இது போலப் பதுமைகள் உயிர்பெற்று வரும் காட்சியிருக்கிறது. இந்தக் கவிதையினை வாசிக்கும் போது அந்தக் காட்சி மனதில் தோன்றி மறைந்தது.

தி.இரா.மீனா மிக அழகாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

0Shares
0