தேசிய நெடுஞ்சாலையை விஸ்தாரணப்படுத்து பணி சாலையோரம் உள்ள கிராமங்கள், நகரங்களின் தினசரி வாழ்வில் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருப்பதை இந்த முறை நேரில் கண்டேன். என்ஹெச் 7 எனப்படும் கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலை அகலப்பாதையாக விரிவுபடுத்தபட்டிருக்கிறது.
நேற்றுவரை ஒடுங்கி இருந்த சாலையோரக் கிராமங்கள் இன்று சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டுள்ளன. மறுபக்கம் சாலையோரம் இருந்த வீடுகள், கிணறுகள். தோட்டங்கள் யாவும் காலி செய்யப்பட்டு அவசர அவசரமாக வணிக மையங்களுக்கான வேலைகள் நடைபெறுகின்றன.
சாலை மாற்றம் என் ஊரையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஆறேழு மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் விருதுநகர் சென்ற போது ஊரின் அமைப்பே தலைகீழாக மாறியிருந்தது. பிறந்ததில் இருந்து நான் பார்த்து வந்த ஊர் கடந்த சில வருடங்களுக்குள் தன் அத்தனை இயல்புகளையும் இழந்து தத்தளித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
வாழ்வு பலரையும் அவரவர் இருப்பிடங்களில் இருந்து பிடுங்கி எங்கெங்கோ நட்டிருக்கிறது. ஆனாலும் சொந்த ஊரின் நினைவுகள் பலருக்குள்ளும் தொலைதூர நட்சத்திரத்தைப் போல மினுங்கிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு ஊருக்கும் தனியானதொரு நிறமும், வாசமும். சுபாவமும், கோபமும் சந்தோஷமும் இருக்கின்றன. ஊரின் சுபாவம் தான் மனிதர்களின் செய்கைகளில், பேச்சில் ரத்தத்தில் கலந்து ஒடுகின்றது. ஊர் நம் மீது கொள்ளும் ஆளுமையை நாம் விரும்பினாலும் அழிக்க முடியாது. அது மேலோட்டமாக நம்முடைய பேச்சில், தோற்றத்திலிருந்து மறைந்திருக்கக் கூடும். ஆனால் சுவையில், நம் நினைவில், நம் கனவுகளில் எப்போதும் ஊர் இருந்து கொண்டேயிருக்கிறது.
மீன் தண்ணீருக்குள் சப்தம் இல்லாமல் நீந்துவது போல ஊரின் நினைவுகள் நமக்குள் எப்போதும் நீந்திக் கொண்டேயிருக்கின்றன. கண்களின் ஆழத்தில் பால்யத்திலிருந்து கண்ட காட்சிகள் மிதந்து கொண்டுதானிருக்கின்றன.
விருட்சத்தைப் போல வேர்விட்ட இடத்திலே தன் வாழ்வின் சகல அனுபவங்களையும் அறிந்து கொண்டு விடுகின்றவன் ஒரு விதத்தில் பாக்யவான். ஊரைப் பிரிந்து செல்கின்றவனோ தன் நினைவில் ஊரைப் பதியம் வைத்துக் கொண்டு ஏதோ நகரங்களில் வாழத் துவங்குகிறான்.
நான் பிறந்த விருதுநகர் ஊற்றைப் போல வெயில் சுரந்து கொண்டிருக்கக் கூடிய சிறுநகரம். நான் கோடையில் பிறந்தவன். கோடை எங்கள் தெருக்களில் வெக்கையை வாறி இறைக்கக் கூடியது. வீடுகளும் தெருக்களும் வெயிலில் நனைந்து உக்கிரமேறியிருக்கும். வெயில் எங்கள் உடலில், பேச்சில், உணவில் நிரம்பியிருக்கிறது. ஊரின் தெய்வம் கூட வெயில் உகந்த அம்மன் தான். தெய்வமும் வெயில் குடித்து சிவந்த கண்கள் கொண்டது தான்.
ஊரின் மேற்கில் ஒடுகிறது கௌசிகமாநதி. அது பேருக்குத் தான் நதி, உண்மையில் அது ஒரு கழிவுநீர் ஒடை. சாக்கடையும் கொசுக்களும் பன்றிகளும் தவிர அந்த நதியில் நான் நீரோட்டம் கண்டதில்லை. விருதுநகர்வாசிகள் ஆற்றை அறியாதவர்கள். தண்ணீருக்காக தட்டளியக்ககூடியவர்கள்.
பண்டிகை நாட்களுக்குக் காத்திருப்பது போல மழை பெய்வதற்காக வருடமெல்லாம் காத்திருப்பார்கள். மழை ஊரின் ஒருபக்கம் பெய்தால் மறுபக்கம் பெய்யாது. எப்போதும் நனையாத சில வீதிகள் ஊரிலிருக்கின்றன. என் பதின்வயதில் ஒரேயொரு முறை மழை அதிகமாகி சாலையில் வெள்ளம் போவதைக் கண்டிருக்கிறேன். மற்றபடி மழை குறைவான ஊர் .
அரிதாக மழைபெய்யும் போது ஆண்கள் மழையை வேடிக்கை பார்ப்பதும் பெண்கள் தண்ணீர் பிடிங்க தண்ணீர் பிடிங்க என்று சப்தமிடுவதையும் கேட்டிருக்கிறேன். இந்த பேதம் மிக முக்கியமானது. மழை தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு சேமிக்க வேண்டும் என்பது தான் பெண்களின் முதல்வேலையாக இருக்கும். ஆண்களைப் போல மழையை நின்று ரசிக்க வேண்டும் என்று தோன்றாது. மழை பெய்யும் நாளில் வீட்டு தூம்புவாயிலிருந்து கொட்டும் தண்ணீரை பிடிக்க எத்தனையோ முறை நனைந்திருக்கிறேன்
எல்லா ஊர்களும் மழைக்குப்பிறகு புதிய தோற்றம் கொண்டுவிடுகின்றன. அதிலும் பின்னிரவில் பெய்யும் மழை அலாதியானது. அது உறங்கும் மனிதர்களின் தூக்கத்தின் ஊடே ஈரமேற்றுகிறது. மழை வெறித்த இரவுகளில் தண்ணீர் தேங்கிய வீதிகளில் தனியே நடந்து அலைந்திருக்கிறேன். ஊர் அப்போது காலத்தின் வெகு தொலைவுக்குப் பின்னால் திரும்பிப் போனது போலிருக்கும்
எல்லா ஊர்களும் பகலில் ஒரு தோற்றமும் இரவில் ஒரு தோற்றமும் கொண்டுவிடுகின்றன. பகலில் பரபரப்பான வணிக நகரமாக தோன்றும் விருதுநகர் இரவில் சற்றே பெரிய கிராமம் என்ற சுபாவத்திற்கு தன்னை உருமாற்றிவிடுவதை கண்டிருக்கிறேன். இயல்பில் ஒரு சந்தையின் சுபாவம் அந்த நகருக்கு எப்போதும் உள்ளது.
விருதுநகர் என்றதும் என் மனதில் தோன்றுபவை. சிமெண்ட் ரோடு உள்ள தெருக்கள். சிறிதும் பெரியதுமான சந்துகளும் ஊதா நிறமுள்ள வீடுகளும். தொன்மை மறந்து நிற்கும் மூளிப்பட்டி அரண்மனை, பள்ளிவாசல் உள்ள முகமதியர் தெருக்கள். மிக அழகான தெப்பமும் அதன் நான்கு பக்கமும் உள்ள கடைவீதிகள், மிளகாய் வத்தல் கமிஷன் கடைகள். நல்லெண்ணெய் வியாபாரம், காய்கறிமார்க்கெட். மாரியம்மன் கோவில்.
செம்புழுதிபறக்கும் பொட்டல். அதன் அருகில் தகரம் அடித்து மூடி வைக்கபட்டுள்ள தேர். கோவில்யானை நிற்கும் யானை கொட்டாரம். சிறியதும் பெரியதுமாக உள்ள நூற்றுக்கும் அதிகமான பரோட்டா கடைகள். காரசேவு, கருப்பட்டிமிட்டாய்கடைகள். வெள்ளரிக்காய் விற்கும் கிராமத்து பெண்கள், பருத்திபால் விற்பவர்கள், பழரசக் கடைகள், அமிர்தராஜ் அப்சரா, சென்ட்ரல், ராஜலட்சுமி தியேட்டர், இரட்டை வால் கட்டி வரும் புலிவேஷக்காரர்களின் மகரநோன்பு, அக்னிச் சட்டி ஏந்தி வழிபடும் பங்குனிப்பொங்கல், பொருட்காட்சி. கயிறுகுத்து. வணிகக் குடும்பங்கள் விரும்பிச் சாப்பிடும் பக்கோடாவும் பால்சோறும். விடிய விடியத் திறந்து வைத்திருக்கும் நெடுஞ்சாலை உணவகங்கள்.
பருத்தி வியாபாரம் நடக்கும் பெரிய பஞ்சு பேட்டைகள், அங்குள்ள மரங்களில் அடைவதற்காக மாலைநேரத்தில் வந்து கூடும் நூற்றுக்கணக்கான பறவைகளின் கரையொலி. ஒரே இடத்தில் நாற்பது ஐம்பது தையல்கலைஞர்கள் வரிசையாக அமர்ந்து வேலை செய்யும் நீண்ட தையல்மால், கிழிந்த பருத்திசாக்குகளைத் தைத்து கொண்டிருக்கும் பஞ்சு பறக்கும் மாலைப்பேட்டை தெரு, நெருக்கடிக்குள்ளும் தனித்த அழகுள்ள காசுக்கடை பஜார்.
அகன்று இரண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்த மிக அமைதியான கல்லூரி சாலை. பைபாஸ் சாலையில் உள்ள கல்கிடங்கு, ஊரைச் சுற்றிலும் உள்ள திலா கிணறும் அரளிபூக்களும் உள்ள நந்தவனங்கள். தலைக்கு மேலாக எப்போதும் ஒளிரும் ஒரு முரட்டு சூரியன். எல்லையற்ற அலுமினிய நிற ஆகாசம். சிறிய நகரம் என்ற போதும் விருதுநகர் மிகத் தனித்துவமானது.
எறும்பைப் போல இந்த நகரின் இண்டுஇடுக்குகளில் அலைந்து திரிந்திருக்கிறேன். என் சுவாசகோளங்களில் இன்றும் அந்தப் புழுதி படிந்தேயிருக்கிறது. தெருக்களும் படித்த பள்ளியும் நண்பர்களின் வீடும், திரைஅரங்கங்களும் என் விருப்பதற்திற்குரியவையாக ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றன.
எனக்கு விருப்பமான இடம் விருதுநகரின் பேருந்து நிலையம். மிகச்சிறிய பேருந்து நிலையம் . பேருந்து உள்ளே நுழையும் போது புழுதி ஆள் உயரம் எழும்பும். .நண்பர்களுடன் இரவெல்லாம் ஏதோ பேசி விவாதித்து வீட்டிற்குப் போக மனதின்றி பேருந்து நிலையத்தின் தூசிபடிந்த தரையில் பல இரவுகள் உறங்கியிருக்கிறேன்.
பேருந்து நிலைய மனிதர்கள் என்று தனித்த ஒரு பிரிவே இருக்கிறார்கள். அவர்கள் பேருந்து நிலையத்தை தங்களது வசிப்பிடமாக, தொழில் இடமாக கொண்டவர்கள். கை சூம்பிப்போய் பிச்சை எடுக்கும் பெண், எப்போதும் உண்டியல் வசூல் பண்ணும் வயசாளி, கொய்யாபழம் விற்கும் பெண்கள். டீக்கடையில் காலை முதல் மாலை வரை வெங்காயம் வெட்டி குவிக்கும் பனியன் அணிந்த ஆள்.
கட்டணக்கழிப்பறையின் வசூல் பண்ணும் மெலிந்த ஆள். உறக்கமற்ற கண்களுடன் தேநீர் அருந்தும் வேசைகள், லாட்டரி விற்பவர்கள். கஞ்சா விற்பவர்கள், கண் தெரியாத பிச்சைக்கார பாடகன், பிக்பாக்கெட்டுகள், குடிகாரர்கள், உறங்க இடம் கிடைக்காதவர்கள், இப்படி நுற்றுக்கணக்கான அடிநிலை மனிதர்களின் உலகமாகயிருக்கிறது.
எனக்கு நண்பர்களாக இருந்தவர்கள் இவர்கள் தான். கிராமங்களில் இருந்து நகரை நோக்கி வரும் ஒவ்வொரு பேருந்தாக வேடிக்கை பார்ப்பது தான் எனது ஒரே பொழுது போக்கு. ஒவ்வொரு பேருந்திலிருந்தும் விதவிதமான முகங்கள் இறங்கி நகரினுள் போவதைக் கண்டிருக்கிறேன்.
நகரை நோக்கி வருகின்றவர்களில் ஒரு பகுதி நோயாளிகள். பொது மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக வருகின்றவர்கள். இன்னொரு பகுதி கடைகளில் சாமான்வாங்க வரும் சிறுவியாபாரிகள், மாணவர்கள். வேலைக்கு வருபவர்கள். ஆனால் இந்த நபர்களைத் தாண்டி ஒவ்வொரு பேருந்திலும் எந்த காரணமும் இல்லாமல் நகருக்கு வந்து இறங்கி பகல் முழுவதும் ஊரில் சுற்றியலையும் பலரையும் கண்டிருக்கிறேன்.
விருதுநகர் இரவிலும் முழுமையாக அடங்குவதேயில்லை. யாரோ சிலர் இரவிலும் வேலை செய்து கொண்டேயிருக்கிறார்கள். பின்னரவிலும் சில கடைகளின் உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. நடமாட்டத்தின் நிழல் தென்படுகிறது. பாதி உறக்கமும் பாதி விழிப்பும் கலந்த நகர் என்று தான் படுகிறது.
இன்னொரு இடம் தெப்பம். ஊரின் நடுவில் மிகப்பெரிய தெப்பமும் நான்கு பக்கமும் உள்ள கடைவீதிகளும் உள்ள அமைப்பு அழகானது. இந்தத் தெப்பத்திற்கு ஊரில் பெய்யும் மழை நீர் வந்து தேங்கிவிடும். இந்த நீரை எவரும் அசுத்தம் செய்வது கிடையாது. அது பல ஆயிரம் மக்களுக்கான குடிநீர். ஆனால் திருக்கார்த்திகை நாளில் மட்டும் தெப்பத்தில் நீந்திக் குளிக்க அனுமதிப்பார்கள்.
அன்று தெப்பத்தின் சுற்றுசுவர் முழுவதும் ஆயிரக்கணக்கில் அகல்விளக்குகள் எரிந்து கொண்டிருக்க நூற்றுக்கணக்கான சிறுவர்களும் பெரியவர்களும் நீந்திக் குளிப்பது மிக விசித்திரமாகயிருக்கும்.
தெப்பத்தின் ஒரு கரையில் இருந்து மறுகரை வரை போய்வருவது ஒரு சவால். அன்று ஒரு நாள் தெப்பம் தரும் மகிழ்ச்சிக்காக வருடம் முழுவதும் காத்திருப்பது சரி தான் என்று தோன்றுகிறது. அந்தத் தெப்பத்தின் படிகளில், சுவர்களில் அமர்ந்தபடியே எதைஎதையோ கனவு கண்டிருக்கிறேன். என் கனவின் உதிர்ந்த மலர்கள் இன்றும் கண்ணுக்கு தெரியாமல் அங்கே சிந்திக் கிடக்கின்றன.
இது போலவே விருதுநகரின் ரயில் நிலையமும் அதன் பிளாட்பாரங்களும் எனக்கு மிகவும் நெருக்கமானவை. பகல் நேரங்களில் அந்த பிளாட்பாரங்களில் யாருமே இருப்பதில்லை. அருகாமையில் உள்ள ரயில்வே காலனிக்கு செல்லும் ஒன்றிரண்டு ஆட்களையும் தொலைதூரத்தில் மேயும் ஆட்டுகுட்டிகளின் சப்தமும் தவிர ரயில் நிலையமே காலியாக இருக்கும். மிக நீண்ட ரயில் நிலையமது. எப்போதும் காற்று வீசிக் கொண்டேயிருக்கும்.
ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, காப்கா, புதுமைபித்தன், மௌனி, என உலகின் முக்கிய இலக்கிய படைப்புகள் அத்தனையும் ரயில் நிலையத்தின் நிழல் படிந்த தனிமையில் அமர்ந்தபடியே வாசித்திருக்கிறேன். இன்றைக்கும் ரயிலில் இறங்கி அந்த சிமெண்ட் பெஞ்சுகளைக் கண்டதும் மனது உவகை கொள்ளத் துவங்கிவிடுகிறது.
விருதுநகர் என்றதும் தமிழக மக்கள் நினைவில் தோன்றும் பெருந்தலைவர் காமராஜரை விருதுநகர்வாசிகள் அதிகம் கொண்டாடுவதில்லை என்பது தான் உண்மை. காமராஜரின் வீடு நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது. விருதுநகரில் வசிப்பவர்களில் அந்த நினைவில்லத்தை பார்த்தவர்கள் ஐம்பது சதவீதம் கூட இருக்கமாட்டார்கள்.
எந்த ஊர் காமராஜரை உருவாக்கி சந்தோஷம் கொண்டதோ, அதே ஊர் அவரைத் தேர்தலில் தோற்கடித்தது. இந்த முரணுக்கும் காரணம் ஊரின் சுபாவம் தானோ எனத் தோன்றுகிறது.
இன்றும் குடிநீருக்காக மக்கள் அலைந்தபடி தானிருக்கிறார்கள். புழுதி அப்படியே உள்ளது. சுவர்களில் கரியால் எழுதப்பட்ட விளம்பர வாசகங்கள் அழியாமல் அப்படியே காணப்படுகின்றன. பரோட்டாவின் சூடு இன்றும் குறையவில்லை. வெயில் இன்றும் ஊரை தன்கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கிறது. ஆனாலும் ஊர் நிறைய மாறியிருக்கிறது. நகரை விட்டு வெளியேறி அருகாமை கிராமங்களை நோக்கி செல்கையில் அடிவானம் வரை மௌனம் விரிந்து கிடக்கிறது. இந்த கிராமங்களில் வாழ்ந்து மறைந்தவர்களின் கதை உலகம் அறியாதது. ஒவ்வொரு முறை அதைக்கடக்கும் போது மண் புரண்டு திமிறும் குரல் கேட்டபடியே இருக்கிறது. எழுதப்பட வேண்டிய முக்கிய கதையது.
இன்றும் எழுத உட்கார்ந்த மறுநிமிசம் மனதில் வெக்கையை உமிழும் சூரியனும், செம்பழுப்பு நிற வீதிகளும், வாழ்வோடு சமர் செய்யும் மனிதர்களும் நினைவிலிருந்து பீறிட துவங்குகிறார்கள்.
ஊர் மனதில் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது.
Categories
- THE DOLL SHOW (3)
- Translation (2)
- அறிவிப்பு (1,611)
- அனுபவம் (134)
- ஆளுமை (81)
- இசை (22)
- இணையதளம் (23)
- இந்திய இலக்கியம் (4)
- இயற்கை (33)
- இலக்கியம் (656)
- உலக இலக்கியப் பேருரைகள் (7)
- ஊடகம் (1)
- எனக்குப் பிடித்த கதைகள் (39)
- எனது பரிந்துரைகள் (5)
- ஓவியங்கள் (25)
- ஓவியங்கள் (51)
- கட்டுரைகள் (7)
- கதைகள் செல்லும் பாதை (10)
- கல்வி (1)
- கல்வி (16)
- கவிஞனும் கவிதையும் (4)
- கவிதை (28)
- காந்தியின் நிழலில் (6)
- காமிக்ஸ் (7)
- காலைக் குறிப்புகள் (31)
- குறுங்கதை (132)
- குறும்படம் (13)
- சிறிய உண்மைகள் (6)
- சிறுகதை (100)
- சினிமா (463)
- சுழலும் பார்வைகள் (1)
- தனிமை கொண்டவர்கள் (1)
- திரை எழுத்து (4)
- நாடகம் (8)
- நாவல்கள் (1)
- நாவல்கள் (40)
- நினைவுகுறிப்பு (7)
- நுண்கலை (4)
- நுண்கலை (11)
- நூலக மனிதர்கள் (32)
- நேர்காணல் (4)
- படித்தவை (19)
- பயணங்கள் (21)
- பரிந்துரை (22)
- புகைப்படக்கலை (1)
- புத்தக கண்காட்சி2019 (2)
- புத்தக விமர்சனம் (54)
- புத்தகக் காட்சி தினங்கள் (4)
- பெயரற்ற மேகம் (2)
- மூத்தோர் பாடல் (4)
- மொழி (2)
- மொழியாக்கம் (19)
- வரலாறு (1)
- வரலாறு (4)
- வாசிப்பில் இன்று (1)
- விமர்சனம் (19)
- விளையாட்டு (2)
- ஷேக்ஸ்பியரின் உலகம் (1)