எனக்குப் பிடித்த கதைகள் 36

திருடன்ஜினிசிரோ தனிஜகி

ஜப்பானியச் சிறுகதை

ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட் தமிழில் : தி. இரா. மீனா

பல வருடங்களுக்கு முன்னால், டோக்யோ இம்பீரியல் பலகலைக்கழகத்தில் சேருவதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பள்ளி அது.

நானும் அறைக்கூட்டாளிகளும்மெழுகுவர்த்தி படிப்புஎன்கிற பெயரில் அதிக நேரம் செலவழிப்போம் (அதில் படிப்பது மிகக்குறைவாகத்தான் இருக்கும்). ஒரு நாள் இரவு, விளக்குகள் அணைந்து வெகு நேரத்திற்குப் பிறகும் நாங்கள் நால்வரும் மெழுவர்த்தியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசியபடி இருந்தோம்.

அந்த நாட்களில் மிகவும் குழப்பத்திற்கு உரியதாக இருந்த காதலைப் பற்றி நாங்கள் வெகு தீவிரமாக பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அது குற்றம் பற்றிய உரையாடலாக மாறி விட்டது. ஏமாற்றுதல், திருட்டு, கொலை என்று பேச்சு வேறு திசையில் திரும்பியது.

கொலைக் குற்றத்தைத்தான் நாம் மற்ற குற்றங்களைவிட அதிகமாகச் செய்கிறோம்,” என்று ஹிகுச்சி சொன்னான். அவன் ஒரு பேராசிரியரின் மகன். ”நான் ஒரு காலத்திலும் திருட மாட்டேன். என்னால் அதைச் செய்ய முடியாது. யாரிடம் வேண்டுமானாலும் என்னால் நண்பனாகப் பழக முடியும். ஆனால் திருடன் என்பது வித்தியாசமான ஓர் இனம்,” சொல்லும்போது அவனுடைய அழகான முகத்தில் ஒருவிதக் கருமை படர்ந்தது. அவனுடைய முகத்தின் சுருக்கம் வெறுப்பைக் காட்டியது.

இப்போதைய நாட்களில் நம் அறைகளில் திருட்டு அதிகம் நடப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அப்படியா?” என்று ஹிராட்டா எங்களுடைய அறைக் கூட்டாளியான நகுமாராவிடம் கேட்டான்.

ஆமாம். அதைச் செய்வது மாணவர்களில் ஒருவன்தான் என்று சொல்கிறார்கள்

எப்படி அவர்களுக்குத் தெரியும்?” நான் கேட்டேன்.

உம்அது பற்றி எனக்கு எல்லா விவரமும் தெரியாதுஅடிக்கடி நடப்பதால் உள் வேலையாகத்தான் இருக்க வேண்டும்,” நகுமாரா ரகசிய குரலில் சொல்லி நிறுத்தினான்.

அது மட்டுமில்லை. வடக்கு அறைப் பகுதியில் ஒரு மாணவன் தன் அறைக்குள் போனபோது உள்ளிருந்து யாரோ அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்களாம். மாணவனை அறைந்து விட்டு கீழே ஓடி விட்டானாம். அவனை விரட்டிக்கொண்டு ஓடியபோது இருட்டில் அவன் ஓடிய இடம் தெரியவில்லையாம். அவன் தன் அறைக்குத் திரும்பியபோது அவனுடைய பெட்டி திறந்து கிடந்ததாம். புத்தக அலமாரி குலைந்து இருந்ததாம். இது திருடன் வந்து போனதைக் காட்டுகிறது,” என்று ஹிகுச்சி விளக்கினான்.

அவன் முகத்தைப் பார்க்க முடிந்ததா?”

இல்லை. இவை எல்லாம் மிக வேகமாக நடந்து விட்டன. ஆனால் அவன் உடை அணிந்து இருந்த விதம் நம்மில் ஒருவர் போல இருந்ததாம். அவன் ஓடியபோது கோட்டை வைத்து தலையை மறைத்துக் கொண்டு ஓடி விட்டானாம். ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்தது. அவன் கோட்டில் விஸ்திரியா பூக்கொண்டை இருந்ததாம்.”

விஸ்திரியா பூவின் கொண்டையா? அதை வைத்துக் கொண்டு எதையும் உறுதியாக நிரூபிக்க முடியாது,” ஹிராட்டா சொன்னான். அவன் ஒரு நிமிடம் என்னைச் சந்தேகத்தோடு பார்த்ததாக நினைத்தேன். அது என்னுடைய கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். என் குடும்ப உடையின் அடையாளம் விஸ்திரியா பூக்கொண்டை என்பதால் என் முகம் அந்த நேரத்தில் வறட்சியானதாக உணர்ந்தேன். ஏனோ அந்த இரவில் நான் அந்த கோட் அணிந்திருக்கவில்லை.

அவன் நம்மில் ஒருவனாக இருந்தால் கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. நம்மிடையே ஒரு திருடன் இருக்கிறான் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்,” அந்த நேரத்தில் நான் பலவீனமாக உணர்ந்ததால் எனது சங்கடத்தை மறைத்துக் கொள்ள முயன்றேன்.

இல்லை. அவனை இன்னும் ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவார்கள்ஹிகுச்சி திடமாகச் சொன்னான். அவன் கண்கள் மின்னின. ”நான் சொல்வது ரகசியமாக இருக்கட்டும். டிரஸ்ஸிங் அறையில்தான் அவன் பெரும்பாலும் திருடுகிறான் என்று சோதனை செய்த காவல் குழுவினர் சொல்கின்றனர். ஒரு ஓட்டை வழியாக அவர்கள் நடப்பதை எல்லாம் கண்காணிக்கின்றனர்.”

? யார் இதை உனக்குச் சொன்னது?” நகுமாரா கேட்டான். “குழுவில் உள்ள ஒருவர்தான். ஆனால் யாரிடமும் இதைச் சொல்லி விடாதீர்கள்

உனக்கே இவ்வளவு தெரியும் என்றால், அந்தத் திருடனுக்கும் கண்டிப்பாக அதிகமாகவே தெரிந்திருக்கும்,” ஹிராட்டா வெறுப்பாகப் பார்த்தான்.

ஹிராட்டாவும், நானும் நல்ல உறவு நிலையில் இல்லை என்பதை நான் இங்கு சொல்லியாக வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பேருக்குத்தான் ஒன்றாக இருக்கிறோம். எப்போதுமே எங்களை நான்நாங்கள்என்றுதான் சொல்வேன். ஆனால் ஹிராட்டாவுக்கு என்னைப் பிடிக்காது. நான் எல்லோரும் நினைப்பது போல இல்லையாம். என்னை அவனுக்கு நன்றாகத் தெரியும் என்று வெறுப்பாக என் நண்பன் ஒருவரிடம் அவன் சொன்னானாம். ”எனக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் எப்போதும் எனக்கு நண்பனாக முடியாது. அவனுடன் நான் பழகுவது எல்லாம் இரக்கப்பட்டுத்தான்,” என்றும் சொன்னானாம்.

அவன் இதையெல்லாம் பேசியது என் முகத்துக்குப் பின்னால்தான். என்னிடம் எதையும் அவன் நேரடியாகச் சொல்லவில்லை. அவன் என்னை வெறுக்கிறான் என்பது மிக வெளிப்படையானது .எதற்கும் விளக்கம் கேட்பது எனக்கு பழக்கம் அல்ல. ”என்னிடம் குறை இருந்தால் அவன் அதைச் சொல்லி விட வேண்டும். என் குறை என்ன என்பதை அவன் எனக்கு சொல்லவில்லை என்பதோ அல்லது நான் அதற்குத் தகுதியானவன் இல்லை என்றோ அவன் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவனை நான் நண்பன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். அவ்வளவுதான்,” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அவன் என்னைப் பற்றிச் சொன்னது என்னைத் தனிமைப்படுத்தினாலும் அதற்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.

ஹிராட்டா கட்டுமஸ்தான தேகம் உடையவன். அவன் அழகை பள்ளியே பெருமையாக நினைக்கும். நான் மிக ஒல்லியானவன். அடிப்படையாகவே எங்களுக்குள் வேறுபாடுகள் உண்டு. நாங்கள் வெவ்வேறு உலகத்தில் இருப்பவர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். தவிர ஹிராட்டா ஒரு ஜூடோ கலைஞனும்கூட. ”ஜாக்கிரதை. நொறுக்கி விடுவேன்,” என்று அவன் தசைகளே சொல்வது போல இருக்கும். அவனைப் பற்றி நான் இப்படிச் சொல்வது என் கோழைத்தனம். அவனுடைய கட்டுமஸ்தான தேகம் கண்டு எனக்கு பயம். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு அற்பமான பெருமையோ, போலி கௌரவமோ கிடையாது. ”என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கும்வரை மற்றவனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவனைக் கண்டு வெறுக்கும் அவசியமும் எனக்கு இல்லை,” இந்த மாதிரியான மனநிலைக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதால் ஹிராட்டாவின் கர்வத்தை என்னால் சமாளிக்க முடிந்தது. அதனால்தான், “ஹிராட்டா என்னைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவனுடைய நல்ல கருத்துக்களை மதிக்கிறேன்,” என்று அந்தப் பையனிடம் சொல்ல முடிந்தது. நான் அதை நம்பினேன். என்னை பயந்தாங்கொள்ளியாக நான் நினைத்தது இல்லை. ஹிராட்டாவைப் பாராட்டும் அளவுக்கு எனக்கு நல்ல மனம் இருப்பதாக எனக்கு கர்வமும் ஏற்பட்டது.

விஸ்திரியா கொண்டை?” என்று கேட்டுவிட்டு அன்று இரவு ஹிராட்டா என்னைப் பார்த்த பார்வை நரம்பைச் சுண்ட வைத்தது. அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்? என் குடும்பத்தின் அடையாளம் விஸ்திரியா என்று அவனுக்குத் தெரியுமா? அல்லது என்னுடைய சிந்தனை அப்படி எல்லாம் என்னை யோசிக்க வைக்கிறதா? ஹிராட்டா என்னைச் சந்தேகப்பட்டால் நான் அந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வேன்? ”அந்தக் கொண்டை எனக்கும் இருப்பதால் நான் சந்தேகக் கோட்டிற்குள் வருகிறேன்,” என்று நகைச்சுவை போல இயல்பாக சிரித்துக் கொண்டு சொல்லலாம். மற்றவர்கள் என்னுடன் சேர்ந்து சிரித்தால் சரி. ஆனால் அவர்களில் ஒருவன் ஹிராட்டா என்று வைத்துக் கொள்ளலாம். இன்னும் தீவிரமாகச் சந்தேகப்படத் தொடங்கிவிட்டால்அப்புறம்? அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தால்ஐயோ! நான் யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிடக் கூடாது.

இந்த விஷயத்திற்காக இப்படி யோசிப்பது முட்டாள்தனம் என்று தோன்றினாலும் அந்தக் குறுகிய நேரத்தில் மனதில் இப்படித்தான் சிந்தனைகள் ஓடின.  ”இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அப்பாவி மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? ”இதையடுத்து ஒரு குற்றவாளியின் கவலையையும் தனிமையையும் நான் அனுபவித்தேன். ஒரு நிமிடம் முன்னால் வரை நான் அவர்களின் நண்பர்களில் ஒருவனாகவும், பள்ளியின் சிறந்த மாணவர்களில் ஒருவனாகவும் இருந்தேன். ஆனால்,இப்போது எனக்குள்ளேயே நான் ஒதுக்கப்பட்டவனாக இருக்கிறேன். இது அபத்தமானது, ஆனாலும் அவர்களை நம்பவைக்க முடியாதது என் இயலாமையாக இருந்தது. ஹிராட்டாவின் மனநிலை காரணமாக நான் குழம்பி இருந்தேன், அவனுக்குச் சமமானவனாக இருந்த போதிலும்.

திருடன் என்பவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன்தான்,”என்று ஹிகுச்சி பொதுவாகச் சொல்லி இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்து பயமுறுத்தின.

திருடன் என்பவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன் …” திருடன் ! எவ்வளவு வெறுக்கத்தக்க ஒரு பெயர்! என்னைப் பொறுத்தவரை இந்தச் சூழ்நிலையில் ஒரு அப்பாவி மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது தன் குற்றத்தை எல்லா வகையிலும் மறைக்க முயற்சி செய்வதும், அந்த எண்ணத்தை மனதில் இருந்து வெளியேற்றப் பாடுபடுவதும், யாரிடமும் அதைச் ஒப்புக் கொள்ள முடியாது என்பதும்தான். இப்போது நான் இந்த இருட்டால் மூடப்பட்டிருக்கிறேன். நான் சந்தேகத்திற்கு உரியவன் என்பதை நம்ப மறுத்தேன்; என் நெருங்கிய நண்பர்களிடம்கூட இதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாதது குறிந்து வருந்தினேன். ஹிகுச்சி என்னை நம்பியதும், காவலர் குழு சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டதும்தான் இந்த எண்ணத்திற்குக் காரணம். ”யாரிடமும் போய் இதைச் சொல்லாதே,” என்று அவன் சொன்னபோது சந்தோஷப்பட்டேன். ஆனால் நான் ஏன் சந்தோஷப்பட வேண்டும் என்று நினைத்தேன்? ஹிகுச்சி என்னைச் சந்தேகப்படவேயில்லை என்றாலும் எங்களிடம் அவன் சொன்னதற்காக காரணத்தைப் பற்றி யோசித்தேன்.

ஒழுக்கமான மனிதர்களுக்கும்கூட இந்த குற்ற எண்ணங்கள் வரலாம் என்று எனக்குத் தோன்றியது. ஒரு திருடன் என்ற கற்பனை எனக்கு மட்டும் வந்திருக்க முடியாது என்று நினைத்தேன். மற்றவர்களும் இது போல சங்கடத்தை அனுபவித்து இருக்கலாம். காவலர் ஹிகுச்சியிடம் மட்டும் ரகசியத்தைச் சொன்னதால் அவன் பெருமைக்கு உரியவனாக இருக்கலாம். எங்கள் நான்கு பேரில் அவன் அதிகமாக நம்பப்பட்டவன். ’மற்ற இனங்கள்வரிசையில் சேர்க்கப்படாதவன். அவன் நம்பப்படுவதற்குக் காரணம் அவன் பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவன். புகழ் பெற்ற பேராசிரியரின் மகன். எனவே அவனைப் பார்த்து நான் பொறாமைப்படுவதில் அர்த்தமில்லை. அவனுடைய சமுதாய அந்தஸ்து போலவே அவனுடைய நேர்மையான குணமும் காரணமாக இருக்கலாம். எனது பின்னணிநான் உதவித் தொகை பெற்றுப் படிக்கும் புத்திசாலி மாணவன், ஒரு ஏழை விவசாயியின் மகன் கலப்படமானவன். நான் திருடனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் முன்னால் ஒரு வித பயபக்தியோடு இருந்தாக வேண்டும். நாங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். அவனுடைய வெளிப்படையான பேச்சு, என் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கை ஆகியவை எங்களிடையே உள்ள இடைவெளியின் ஆழத்தை அதிகப்படுத்தியது. சிரிப்பது, வம்பு பேசுவது, நகைச்சுவையாகப் பேசுவது என்று எல்லாம் இருப்பதாக நாங்கள் காட்டிக் கொண்டாலும் எங்களிடையே இடைவெளி அதிகமானது. இதற்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

அதற்குப் பிறகுவிஸ்திரியகொண்டை உடைய கோட்டை அணிவதா, வேண்டாமா என்ற குழப்பமும் கவலையும் எனக்குள் அதிகரித்தன. நான் அதை அணிந்து கொண்டால் யாரும் கவனிக்காமல் போகலாம். ஆனால் ஒரு வேளை அவர்கள் என்னைப் பார்த்துவிட்டு, ” !அவன் அதை அணிந்து இருக்கிறான்! ” என்று சொல்லலாம். சிலர் சந்தேகப்படலாம், அல்லது என் மீது உள்ள சந்தேகத்தை மறைத்துக் கொள்ளலாம், அல்லது என்னை பார்த்து பரிதாபப்படலாம். நான் கோட்டை அணியாமல் ஒதுக்கி விட்டால் அது பெரிய தவறாகிவிடும். ஹிராட்டா மற்றும் ஹிகுச்சி மட்டும் இல்லாமல் மற்ற நண்பர்கள் மத்தியிலும் சங்கடத்திற்கு ஆளாவேன். என்னைச் சந்தேகப்படுவது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கும் அது துன்பத்தைத் தரும் என்பது கவலை அளித்தது. என்னுடைய நண்பர்களாக இருக்கிறவர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவது இடைவெளியை அதிகப்படுத்தும். திருட்டு கூட அசிங்கமானதில்லை. ஆனால் அது ஏற்படுத்தும் சந்தேகம் அசிங்கமானது. யாரும் என்னைத் திருடன் என்று நினைக்க மாட்டார்கள்; அது ஊர்ஜிதம் செய்யப்படாத வரை. என்னுடன் எப்போதும் போல பழையபடி பழகி, நெருக்கமாக இருப்பார்கள். என்னை நம்பக் கட்டாயப்படுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் நட்புக்கு என்ன அர்த்தம்?

திருடனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்தப் பாவச் செயல் நண்பனிடம் இருந்து திருடுவதைவிட மோசமானது; நட்பை அழிப்பது; சந்தேக விதையை விதைப்பது; இது திருடுவதைவிடக் கொடுமையானது. மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத திருடனாக நான் இருந்திருந்தால் நட்பு மங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ரகசியமாக திருடும்போதுகூட வெட்கப்படாமல் இருந்திருப்பேன். ஒரு திருடனின் அபிப்ராயத்தில் இருந்து பார்த்தால் இதுதான் அவன் மனப்போக்கு. ”நான் திருடுவேன் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் நண்பர்களை மதிப்பேன் என்பதும்,” இதுதான் உண்மைத் திருடனின் மனநிலை. ’அதுதான் வேறு இனத்தவனாகக்காட்டுகிறது. இந்த வகையில் நான் யோசிக்கும்போது எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாவதை உணர முடிந்தது. இது எனக்குத் தெரிவதற்கு முன்னாலே நான் முழுத் திருடன் ஆகி விட்டேன்.

ஒரு நாள் என் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு அந்த கோட்டை அணிந்து கொண்டு பள்ளி மைதானத்துக்குப் போனேன். நகுமாராவைப் பார்த்தேன். பேசிக் கொண்டே நடந்தோம்.

இன்னும் அந்தத் திருடனைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேள்விப்பட்டேன்,” என்றேன்.

ஆமாம்,” அவன் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்.

ஏன்? அவனைக் குளியல் அறையிலேயே அவர்களால் பிடிக்க முடியவில்லையா?”

அவன் அதற்குப் பிறகு அங்கு வருவதில்லையாம். மற்ற இடங்களில் நிறைய பொருட்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஹிகுச்சியை கூப்பிட்டு காவலர் கோபித்துக் கொண்டாராம். அவர்களின் திட்டத்தை அவன் வெளிப்படுத்திவிட்டதாக திட்டினார்களாம்

ஹிகுச்சி?” என் முகம் வெளிறுவதை என்னால் உணர முடிந்தது.

ஆமாம்…” அவன் வருத்தமாகச் சொன்னான். கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ”நீ என்னை மன்னிக்க வேண்டும். நான் உன்னிடம் சொல்லாமல் இதுவரை மறைத்து விட்டேன். ஆனால் நீ இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். நீ இதை விரும்ப மாட்டாய். காவலர் உன்னைச் சந்தேகிக்கிறார். எனக்கு அதைப் பற்றிப் பேசவே வெட்கமாக இருக்கிறது. நான் ஒரு நிமிடம்கூட உன்னை சந்தேகப்பட்டதில்லை. நான் உன்னை நம்புகிறேன். நான் உன்னை நம்புவதால்தான் உன்னிடம் சொல்கிறேன். நீ என்னைத் தப்பாக நினைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.”

என்னிடம் சொன்னதற்கு நன்றி. நான் உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்,” கண்ணீரை அடக்கிக் கொண்டேன். ’கடைசியாக வந்தே விட்டது!’ நான் பயந்த மாதிரியேஇந்த நாளைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.

உன்னிடம் சொல்லிவிட்டபிறகு சுமை இறங்கியது போல இருக்கிறது. நாம் இதைப் பற்றிப் பேசுவதை இத்தோடு நிறுத்தி விடலாம்,” என்னைச் சமாதானப்படுத்துவது போல நகுமாரா சொன்னான்.

இதைப் பற்றிப் பேச நமக்குப் பிடிக்கவில்லை என்பதால் நம் மனதில் இருந்து இதை அழித்து விடமுடியாது. என் மீது நீ வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. இதில் நான் மட்டும் அவமானப்படவில்லை. என் சினேகிதனான உனக்கும் அவமானம். நான் சந்தேகத்திற்கு உரியவனாக இருப்பதே நட்பிற்கு அவமானம்தான். என் மதிப்பை இழந்து விட்டேன் பார். இல்லையா? நீயும் என்னை வெறுத்து விடுவாய்”.

சத்தியமாக நான் உன்னை வெறுக்க மாட்டேன். எந்த அவமானத்தையும் நீ எனக்குத் தரவில்லை. ஹிகுச்சிக்கும்தான்காவலர் குழுவிடம் அவன் உனக்கு ஆதரவாகவே பேசியதாகச் சொன்னார்கள். உன்னைச் சந்தேகிப்பதற்கு முன்னால் அவன் தன்னையே சந்தேகித்துக் கொள்வேன் என்றும் சொன்னானாம்,” சிறிது விழிப்பு அடைந்தவனாக நகுமாரா பேசினான்.

ஆனால் அவர்கள் இன்னமும் என்னை சந்தேகிக்கின்றனர். இல்லையா? என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்வதில் பலனில்லை. உனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை என்னிடம் சொல்.நான் அப்படியாவது தெரிந்து கொள்கிறேன்

காவலருக்கு எல்லாவிதமான குறிப்புகளும் தெரியும். ஹிகுச்சி அன்று இரவு எல்லாவற்றையும் சொல்லிவிட்ட பிறகு எந்தத் திருட்டும் குளியல் அறையில் இல்லையாம். அதனால் அவர்கள் உன்னைச் சந்தேகப்படுகிறார்கள்.” தயக்கத்தோடு நகுமாரா விளக்கினான்.

ஆனால் என் ஒருவனிடம் மட்டும் அவன் அதைச் சொல்லவில்லையே!” நான் இதைச் சொல்லாவிட்டாலும் மனதில் இது உடனடியாக ஓடியது. இது என்னைத் தனிமையானவனாகவும், இழிவானவனாகவும் காட்டியது.

ஹிகுச்சி நம்மிடம் சொன்னது அவர்களுக்கு எப்படித் தெரியும்? அந்த இரவில் நாம் நால்வரும்தான் இருந்தோம். வேறு யாருக்கும் தெரியாது. நீயும், ஹிகுச்சியும் என்னை நம்பினால்..”

நீதான் இது பற்றி யோசிக்க வேண்டும். உனக்கு யாரென்று தெரியும். அவன் உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் அவனைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை,” நகுமாரா சொல்லி விட்டு இரக்கமாகப் பார்த்தான்.

திடீரென்று எனக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. ஹிராட்டாவின் கண்கள் என்னை ஊடுருவது போல உணர்ந்தேன்.

நீ அவனிடம் என்னைப் பற்றிப் பேசினாயா?”

ஆமாம்அது சுலபமானதில்லை என்று உனக்கும் தெரியும். நான் உங்கள் இருவருக்கும் நண்பன். நானும் ஹிகுச்சியும் நேற்று இரவு அவனுடன் நீண்ட நேரம் விவாதித்தோம். அவன் அந்த அறையைக் காலி செய்வதாகச் சொன்னான். ஒரு நண்பனுக்காக இன்னொரு நண்பனை நான் இழக்க வேண்டியதுதான்.”

நான் நகுமாராவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ”நீயும், ஹிகுச்சியும் என்னுடைய நண்பர்களாக இருப்பதில் எனக்குப் பெருமை. நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என் கண்களில் இருந்து நீர் வழிந்தது. நகுமாராவும் அழுதான். வாழ்க்கையில் முதல் முறையாக நான் மனிதர்களின் பரிவு உணர்வை அனுபவித்தேன். தனிமையான நிலையில் தவித்தபோது நான் தேடியது இதைத்தான். நான் எப்படிப்பட்ட கெட்ட திருடனாக இருந்தாலும் நகுமாராவிடம் இருந்து என்னால் எதையும் திருட முடியாது.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் உனக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கிறேன். என்னால் உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு அழிந்து போவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவன் என்னை நம்பாவிட்டாலும் நான் அவனை மதிக்கிறேன். அவன் என்னை விட எவ்வளவோ உயர்ந்தவன். மற்றவர்களைவிட அவன் நல்ல குணங்களை நான் அறிவேன். வெளியேற வேண்டும் என்றால் ஏன் நான் போகக் கூடாது? தயவு செய்து என்னைப் போக விடுங்கள். நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து இருங்கள். நான் தனியாக இருந்தாலும் கஷ்டப்பட மாட்டேன்,” என்றேன்.

நீ போக வேண்டிய அவசியமில்லை. அவனுடைய கருத்து எனக்குப் புரிகிறது. ஆனால் இப்போது நீதான் கஷ்டத்தில் இருப்பவன். அவன் அநியாயமாக இருக்கும்போது அவனுடன் நான் சேர மாட்டேன். நீ போனால் நாங்களும் போய் விடுவோம். அவன் எவ்வளவு பிடிவாதக்காரன் என்று உனக்குத் தெரியும். ஒரு முறை அவன் முடிவு செய்து விட்டால் அதிலிருந்து மாற மாட்டான். அவன் விருப்பப்படி செய்யட்டும். அவனுக்கு புத்தி வந்து மன்னிப்புக் கேட்கும்வரை நாம் காத்திருப்போம். அதற்கு நீண்ட காலம் ஆகாது.”

அவன் கண்டிப்பாக வந்து மன்னிப்புக் கேட்க மாட்டான். அவன் என்னை நிரந்தரமாக வெறுத்து விடுவான்”.

.”நான் அப்படி நினைக்கவில்லை. அவன் தன் பேச்சிலிருந்து மாற மாட்டான். அவன் பலமும்,பலவீனமும் அதுதான். தன் எண்ணம் தவறு என்று தெரிந்தால் அவன் மன்னிப்புக் கேட்டு நம்மோடு சேர்ந்து விடுவான். அது அவனிடம் எனக்குப் பிடித்த குணம்”. நான் ஹிராட்டாவிடம் கோபப்படுவதாக நினைத்து நகுமாரா சொன்னான்.

அப்படி அவன் வந்தால் நல்லது…” நான் பதில் சொன்னேன். ”அவன் உங்களிடம் வரலாம். ஆனால் திரும்பவும் என்னுடன் நட்பு வைத்துக் கொள்வான் என்று நான் நம்பவில்லைஆனால் நீ சொல்வது சரி. அவன் அன்புக்கு உரியவன். அவனுக்கு என்னையும் பிடித்திருந்தால்…”

நகுமாரா என் தோள் மீது கை போட்டான். நாங்கள் புல்வெளியில் நடந்து கொண்டிருந்தோம். அது மாலை நேரம். லேசாகப் பள்ளி மைதானத்தில் பனி படர்ந்திருந்த்து. முடிவில்லாத கடலால் சூழப்பட்ட தீவில் இருப்பது போல உணர்ந்தோம். இங்கும் அங்குமாகப் போய்க் கொண்டு இருந்த மாணவர்கள் என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி நடந்தனர். அவர்களுக்கும் தெரியும். அதனால் என்னை ஒதுக்குகின்றனர் என்று நினைத்தேன். மிகத் தனியாக உணர்ந்தேன்.

அந்த இரவில் ஹிராட்டா தன் மனநிலையை மாற்றிக் கொண்டான் போலும். அறையைக் காலி செய்யவில்லை. ஆனால் ஹிகுச்சி, நகுமாராவிடம் கூட அவன் பேசவில்லை. இந்த மாதிரி நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவது எனக்கு சரியாகத் தெரியவில்லை. என் நண்பர்களின் அன்புக்கு மதிப்பு தர வேண்டும். நான் போனால் அது என்னை இன்னும் அதிக குற்றவாளியாகக் காட்டும். இன்னும் சிறிது காலம் நான் காத்திருக்க வேண்டும்.

கவலைப்படாதே, திருடனைப் பிடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்,” இரண்டு நண்பர்களும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தனர். மேலும் ஒரு வாரம் ஆனது. திருட்டு வழக்கம் போல நடந்து கொண்டிருந்தது. கடைசியில் நகுமாரா, ஹிகுச்சியின் பணம், சில புத்தகங்கள் ஆகியவையும் திருடு போயின.

.. உங்களுடையதும் திருட்டு போயிற்றா?ஆனால் இனி எதுவும் காணாமல் போகாது என்று நான் நினைக்கிறேன்,” என்று ஹிராட்டா கேலியாகச் சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது.

இரவு உணவுக்குப் பிறகு எப்போதும் நகுமாராவும், ஹிகுச்சியும் நூலகத்திற்குப் போவார்கள். நானும் ஹிராட்டாவும் மட்டும் அறையில் இருப்போம். எனக்கு இது சங்கடமாக இருக்கும். அதனால் நான் மாலை நேரங்களில் நூலகத்திற்கோ அல்லது நடைப் பயிற்சி செய்யவோ போய் விடுவதுண்டு. ஒரு நாள் இரவு ஒன்பதரை மணி அளவில் நான் எங்கள் அறைக்கு வந்தேன். அதிசயமாக ஹிராட்டா அங்கு இல்லை. மற்றவர்களும் இல்லை. எங்களுடைய படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தேன். ஹிராட்டாவின் மேஜை அருகே போனேன். மேஜையைத் திறந்து தேடினேன். சில நாட்களுக்கு முன்னால் அவன் வீட்டில் இருந்து வந்த கவரில் பத்துயென் மணியார்டர் இருந்தது. அதில் ஒன்றை எடுத்து என் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு மேஜையை மூடினேன். ஹாலுக்கு வந்தேன். டென்னிஸ் மைதானத்தின் குறுக்கே போய் முற்றத்தை அடைந்தேன். வெறுமையாக இருந்த இருட்டுப் பகுதிக்குப் போனேன். நான் திருடும் பொருட்களைப் பத்திரமாகப் புதைத்து வைப்பது அங்குதான். அந்த நேரத்தில் யாரோதிருடன்என்று கத்தினார்கள். பின்னால் இருந்து பாய்ந்து என்னைக் கீழே தள்ளி தலையில் அடித்தார்கள். அது ஹிராட்டா.

எல்லோரும் வாருங்கள் ..வாருங்கள் உன் சட்டைப் பையில் என்ன இருக்கிறது, காட்டு!”

சரி. சரி. நீ கூச்சல் போட வேண்டாம். நான் உன் மணியார்டரைத் திருடி விட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். நீ அதைக் கேட்டால் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். நீ எங்கு கூட்டிக் கொண்டு போனாலும் வருகிறேன். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டோம். இல்லையா? உனக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?” நான் அமைதியாக அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னேன்.

ஹிராட்டா ஒரு நிமிடம் தயங்கினான். அடுத்த நிமிடம் என் முகத்தில் தொடர்ந்து குத்தினான். ஏனோ எனக்கு வலிக்கவில்லை. இவ்வளவு நாட்களாக எனக்குள் இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது.

நீ எனக்குப் போட்ட வலையில் நான் சிக்கிக் கொண்ட பிறகு என்னை நீ அடிப்பதால் எந்தப் பலனும் இல்லை. நீ என்னைப் பற்றிய கருத்தில் உறுதியாக இருந்ததால்தான் நான் இந்த தவறைச் செய்தேன். ஏன் இவனிடம் இருந்து திருடக் கூடாது என்று நினைத்தேன். நீ என்னைக் கண்டுபிடித்து விட்டாய். அவ்வளவுதான். பின்னொரு நாள் நாம் இதைப் பற்றி நினைத்து சேர்ந்து சிரிக்கலாம்

நான் ஹிராட்டாவின் கையை இயல்பாகக் குலுக்கினேன். ஆனால் அவன் என் சட்டைக் காலரைப் பிடித்து எங்கள் அறைக்கு இழுத்துக் கொண்டு போனான். அந்தச் சமயத்தில் மட்டும்தான் அவன் என் கண்களுக்கு கீழானவனாகத் தெரிந்தான்.

நான் திருடனைப் பிடித்துவிட்டேன். அவன் என்னைப் பிடித்தான் என்று நீங்கள் சொல்ல முடியாது,” என்னை நகுமாரா, ஹிகுச்சியின் முன்னால் கீழே தள்ளினான். இந்த குழப்பத்தைப் பார்த்து அங்கு உள்ள மாணவர்கள் கூடி விட்டனர்.

ஹிராட்டா சொல்வது சரிதான்,” நான் தரையில் இருந்து எழுந்து நண்பர்களைப் பார்த்துச் சொன்னேன். ”நான் திருடன்தான்,” எப்போதும் பேசுவது போல பேச முயற்சி செய்தேன். ஆனால் என் முகம் வெளிறி விட்டது.

நீங்கள் என்னை வெறுக்கலாம். அல்லது என்னைப் பார்த்து வெட்கப்படலாம்நீங்கள் உண்மையானவர்கள். ஆனால் எளிதில் ஏமாறக் கூடியவர்கள். நான் திரும்பத் திரும்ப உங்களிடம் உண்மையைச் சொன்னேனே? நான் நீங்கள் நினைப்பது போல இல்லை, ஹிராட்டாதான் உண்மையானவன் என்றுகூடச் சொன்னேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஹிராட்டாவுடன் திரும்ப நட்பு வைத்துக் கொண்டாலும் அவன் என்னோடு பேச மாட்டான் என்றுகூடச் சொன்னேன். ஹிராட்டா எவ்வளவு நல்லவன் என்று மற்றவர்களைவிட எனக்குத் தெரியும் என்றும் சொன்னேன். நான் உங்களிடம் பொய் சொன்னதில்லை அல்லவா? நான் ஏன் உங்களிடம் வந்து இந்த உண்மையைச் சொல்லவில்லை என்று நீங்கள் கேட்கலாம். நான் உங்களை ஏமாற்றியதாக நினைக்கலாம். ஆனால் என்னுடைய நிலையில் இருந்து பாருங்கள். திருடுவதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியாது. என்னால் உங்களை ஏமாற்ற முடியாது. மன்னியுங்கள், அதனால்தான் மறைமுகமாகச் சொன்னேன். இதைவிட என்னால் உண்மையாக இருந்திருக்க முடியாது. என் குறிப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது உங்கள் தவறுதான். நான் வக்கிரமானவன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் உங்களிடம் உண்மையாகவே இருந்திருக்கிறேன். நான் உண்மையானவன் என்றால் ஏன் திருட்டை விட்டு விடக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது சரியான கேள்வியில்லை. நான் திருடனாகவே பிறந்தவன். சில சந்தர்ப்பங்களில் நான் உங்களிடம் என்னால் முடிந்தவரை உண்மையானவனாக இருந்திருக்கிறேன். அதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது. னசாட்சி என்னை வருத்தியதால் ஹிராட்டா அறையை விட்டு வெளியேற வேண்டாம், நான் போகிறேன் என்று உங்களிடம் சொல்லவில்லையா? நான் உங்களை முட்டாளாக்கவில்லை. எல்லாவற்றையும் நான் உங்கள் நலத்திற்காகத்தான் செய்ய விரும்பினேன். நான் உங்களிடம் இருந்து திருடியது உண்மைதான், ஆனால் நான் உங்கள் சினேகிதன் என்பதும் உண்மைதான். எனக்கு உங்கள் நட்பு வேண்டும். திருடனுக்கும் உணர்வு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

நகுமாராவும் ஹிகுச்சியும் அமைதியாக நின்றனர். ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

என்ன தைரியம் இவனுக்கு என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு என்னைப் புரியாது. நீங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் புரியாது,” நான் என் கசப்பை அடக்கிக் கொள்ளப் பார்த்தேன். ”நான் உங்கள் சினேகிதன் என்பதால் எச்சரிக்கவும் செய்கிறேன். கடைசி முறையாக இப்படி நடக்கிறது என்று நினைக்காதீர்கள். நீங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. இருவரும் சுலபமாக ஏமாறக்கூடிய குணத்தால் ஒரு திருடனோடு சினேகிதம் கொண்டீர்கள். படிப்பில் உங்களுக்கு அதிக மார்க்குகள் கிடைக்கலாம். வளர்ந்து பெரியவர்களாகி வாழ்க்கைக்குள் போகும்போது உங்களுக்குப் பிரச்னைகள் வரலாம்ஆனால் ஹிராட்டா உங்களைவிட கெட்டிக்காரன். அவனை முட்டாளாக்க முடியாது!”

நான் ஹிராட்டாவைப் புகழ்ந்தபோது அவன் முகம் இறுக்கமாக இருந்தது. வேறு எங்கோ பார்த்தபடி இருந்தான்.

அதற்குப் பிறகு பல வருடங்கள் கழிந்து விட்டன. நான் முழுத் திருடனாகி விட்டேன். பல தடவைகள் சிறைக்குப் போயிருக்கிறேன். இன்னமும் என்னால் அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை. குறிப்பாக ஹிராட்டாஒவ்வொரு முறை நான் திருடும்போதும் அவன் முகம் கண்ணுக்கு முன்னால் வரும். ’நான் சந்தேகப் பட்டது போல,’ என்று இகழ்ச்சியாகப் பார்த்தபடி, சொல்வது போல. அவன் மன உறுதி உடைய உண்மையான மனிதன். ஆனால் இந்த உலகம் புதிரானது. மிகவும் எளியவனான ஹிகுச்சி சிக்கலில் சுலபமாக மாட்டிக் கொள்வான் என்று நான் சொன்ன அந்த ஜோசியம் பொய்த்து விட்டது. அவன் தன் தந்தையின் செல்வாக்கால் பல நாடுகளுக்குப் பயணம் செய்தான். டாக்ட்ரேட் பட்டம் வாங்கி விட்டான். ஹிராட்டா என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. வாழ்க்கை யாராலும் கணிக்க முடியாதது என்று சொல்வது உண்மைதான்.

நான் வாசகர்களுக்கு இங்கு சொல்லி இருப்பதெல்லாம் உண்மைதான். ஒரு வார்த்தைகூட இங்கு பொய்யில்லை. நகுமாரா, ஹிகுச்சி ஆகியவர்களின் மனசாட்சி என் போன்ற திருடனின் மனதில் கண்டிப்பாக நிற்கும்.

நீங்கள் என்னை நம்பாமலும் போகலாம். நீங்கள் என் வகையைச் சேர்ந்தவராக இருந்தால்

———————-

Thanks : https://padhaakai.com/2016/07/10/the-thief/

0Shares
0