என்ன விளையாடுவது?


கோடை விடுமுறை துவங்கியது முதல் என் பையன்களுக்கு உள்ள தீராத கேள்வி என்ன விளையாடுவது, யாரோடு விளையாடுவது.?


 
பள்ளிநாட்களில் விளையாட்டு என்பது ஒரு மணி நேர மகிழ்ச்சி அவ்வளவே. ஆனால் கோடை விடுமுறையின் முப்பது நாற்பது நாட்களை  எப்படிக் கழிப்பது என்பதே என்ன விளையாடுவது என்ற கேள்வியாக மாறி நிற்கிறது. இந்த கேள்விக்கு என்னிடம் உள்ள பதில் பயணம். கோடை முழுவதையும் ஊர் ஊராக பயணம் செல்வதில் கழிக்கலாம் என்பதே என் விருப்பம்.


ஆழ்ந்து யோசித்தால் இது  எளிமையான கேள்வியல்ல. நான் அனுபவித்த ஒன்றை என் பையன் இழந்துவிட்டான் என்பதை சுட்டும் கேள்வியது.


எனது கோடை விடுமுறையில் சாப்பிட நேரமில்லாதபடி விளையாட்டுகள் நீண்டுகொண்டிருந்தது. தெருவே கூடி விளையாடிக் கொண்டிருப்போம். வெளியூரில் இருந்து வரும் பையன்கள், உள்ளுர் பையன்கள் என்று பேதமில்லாமல் கலந்து கிட்டி, நீச்சல், எறிபந்து, பம்பரம் கோலி கள்ளன் போலீஸ், ரயில் விளையாட்டு, கதை பேசுதல், கிறுகிறுவானம், மீன்பிடிக்க போவது, மரமேறுவது, தண்டவாளத்தில் நாணயங்களை வைத்து ரயில் ஏறி வட்டமாக்கியதும்  அதை சுற்றுவது,


சிகரெட் அட்டை சேகரித்து விளையாடுவது, பச்ச குதிரை, கிளியந்தட்டு, கல்லா மண்ணா, கபடி, வைக்கோல் போர் ஏறி குதிப்பது, சினிமா பெயர் சொல்லி விளையாடுவது. ஊஞ்சல், செதுக்கு முத்து,கால்பந்தாட்டம், கவண்கல் எறிந்து குருவி அடிப்பது, ஒணான் பிடித்து மூக்கு பொடி போட்டு ஆட வைப்பது, மாட்டுவண்டியில் சீசா விளையாடுவது, பல்லிமுட்டை தேடி கொண்டு வருவது, வீட்டில் திரை கட்டி பொம்மாலட்டம் காட்டுவது, சைக்கிள் டயரை உருட்டி விளையாடுவது, வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டுவது. என எத்தனையோ விளையாட்டுகள்.


ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து யாராவது தேடி வந்து இழுத்து போகும்வரை விளையாடுவோம். இரவில் விளையாடி அலுத்து வீதியிலே உறங்கியதும் உண்டு. ஆனால் இன்றுள்ள சிறுவர்களுக்கு தெரிந்த முதல் விளையாட்டு கிரிக்கெட். அதற்கு விளையாட்டு மைதானம், ஆட்கள் என்று வேண்டும். இருந்தாலும் கிடைத்த இடத்தில் மூன்று பேர் நாலு பேர் சேர்ந்துகிரிக்கெட் ஆடுகிறார்கள்.


மற்ற நேரம் வீடியோ கேம்ஸ். கேம்ஸ்டேஷன் பிளே ஸ்டேஷன் என்று விதவிதமான வீடியோ கேம்  வந்துவிட்டன அதில் பெரும்பான்மை விளையாட்டுகள் வன்முறையும் துப்பாக்கி சண்டைகளுமே. அது போராடித்தால் இணையம் வழியான ஆன்லைன் விளையாட்டுகள்.



மிக அரிதாகவே வீட்டிலிருந்து வெளியேறி போகிறார்கள். உறவுகள் சுருங்கியும் அறுபட்டும் போன நகர வாழ்வில் இவர்களுக்கான மாற்று வெளிகளும் குறைவு. கோடை விடுமுறைக்கு பாட்டி வீடுள்ள கிராமங்களுக்கு போவதற்கு இந்த தலைமுறை குழந்தைகளுக்கு விருப்பமில்லை. ஒருவேளை செல்லும் போது கூட இரண்டு நாட்களில் போரடித்துவிடுகிறது.


வே ஹோம் என்று ஒரு கொரிய படமிருக்கிறது. பாட்டி வீட்டிற்கு செல்லும் நகரத்து சிறுவனை பற்றியது. அற்புதமான படமது, ஒவ்வொரு முறை அதை பார்க்கும் போது அந்த பாட்டி நெகிழ வைத்துவிடுகிறாள். அந்த படத்தில் வரும் சிறுவனை போல செல்லும் இடம் எல்லாம் பிட்சாவும் ரிமோட் கண்ட்ரோலும் தேவைப்படும் சிறுவர்கள் தான் இன்றிருக்கிறார்கள். டிவி இல்லாத இடம் என்பதை அவர்களால் கற்பனை செய்தே பார்க்க முடியாது.


தனது வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு சிறுவர்களுடன் பழகுவதற்கும் இன்றைய சிறுவன் விரும்புவதில்லை. பள்ளியில் கொள்ளும் நட்போடு முடிந்துவிடுகிறது.  உறவினர்கள் என்று எவரையும் அவன் அறிந்து கொள்ளவும் இல்லை. அவர்கள் மீதான அன்பும் அவனுக்குள் உருவாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் யாவரையும் விட்டு ஒதுங்கியும் விலகியும் இருப்பதே.



அதிலும் பெருநகர பெற்றோர்கள் குழந்தைகள் தங்களது  நேரத்தை பிடுங்கி கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர், பௌலிங் சென்டர் என்று தள்ளிவிடுகிறார்கள். அது சில நாட்களிலே போரடித்துவிடுகிறது. ஆகவே எதையாவது கற்றுக் கொள்ளட்டும் என்று சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள்


சிறையில் இருப்பவர்கள் கூட தினமும் அரைமணி நேரம் நடக்கவும் விளையாடவும் அனுமதிக்கபடுகிறார்கள். ஆனால் நம் வீட்டு பிள்ளைகள் கோடை விடுமுறையிலும் எதையாவது படிக்க மட்டுமே வேண்டும் என்ற மனப்பாங்கே நம்மிடம் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் விளையாட்டின் மீது நமக்கு விருப்பமேயில்லை.


தொலைக்காட்சியில் நாளைக்கு எட்டு மணி நேரம் கிரிக்கெட் பார்ப்பவரில் பத்து சதவீதம் கூட அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு போகிறவர்கள் கிடையாது. வேறு எந்த விளையாட்டையும் நின்று ரசித்தவர்கள் இல்லை.


விளையாட்டை இழந்த சிறுவனுக்குள் என்ன தான் நினைவுகள் இருக்கும். விளையாட்டு வெறும் பொழுது போக்கு மட்டுமில்லை .அது வெற்றி தோல்வியை புரிய வைக்கிறது போராட கற்று தருகிறது போட்டி மனப்பான்மையின் அவசியத்தை புரிந்து கொள்ள வைக்கிறது. தனித்திறன்களை வெளிப்படுத்த வைக்கிறது. கற்று தருகிறது. கற்க வைக்கிறது. புதிய நட்பை உருவாக்குகிறது. புதிய வெற்றிகளை பரிசாக தருகிறது. வீரத்தழும்புகளை உருவாக்குகிறது. அதுவரை இருந்த நமது அடையாளங்களை புதுப்பித்து மாற்றுவடிவம் தருகிறது.


ஒருவகையில் இந்த விளையாட்டுகளின் வழியே இயற்கையை நெருங்கி செல்வது தான் நடைபெற்றிருக்கிறது.  எனது பால்யத்தில் ஒரு சிறுவன் பெங்களுரில் இருந்து எங்கள் ஊருக்கு வந்திருந்தான். அவன் எப்போதும் தன் ஊரின் பெருமைகளையே பேசுவான். அதிலும் தன் ஊரில் ராணுவம் இருக்கிறது. அங்கே பீரங்கியிருக்கிறது என்று அடிக்கடி சொல்வான். கிராமத்து சிறுவர்களுக்கு அது ஆத்திரமாக இருக்கும். நாங்கள் பீரங்கிக்கு எங்கே போவது. 


அதை விட அவன் பெங்களுரில் நூறு சினிமா தியேட்டர் இருப்பதாக சொல்வான். அதை நம்பமுடியாமல் மிரட்சியோடு பார்ப்பார்கள். இதற்காகவே ஒரு நாள் முழுவதும் சினிமா படம் பேர் சொல்லி விளையாடி அவனை தோற்கடித்தோம்.


அவ்வளவு நகரப் பெருமை பேசியவனுக்கு நீந்தத் தெரியாது. கிராமத்து சிறுவர்கள் அநாயசமாக நீந்துவதுடன் அவனை கேலி செய்யும் விதமாக வேறு வேறு உயரங்களில் இருந்து குதிப்பார்கள். அவன் கரையில் அமர்ந்தபடியே பார்த்து கொண்டிருப்பான். அவனுக்கு நீச்சல் பழகி தருவது என்று நானும் இன்னொரு நண்பனும் முடிவு செய்து அவன் இடுப்பில் ஒரு துண்டை கட்டி படியில் நின்றபடி ஒரு கிணற்றின் படியில் நின்றபடியே நீந்த சொல்லி தந்தோம். அவன் தடுமாறி துண்டு அவிழ்ந்துவிடவே தண்ணீருக்குள் முழ்க துவங்கினான்.


மறுநிமிசம் நாங்கள் குதித்து அவனை தூக்கி கொண்டு வந்தோம். மூக்கில் தண்ணீர் போய் அவன் பயந்து போய்விட்டான். வீட்டிற்கு போன பிறகும் அழுது கொண்டேயிருந்தான். அவனது பாட்டியும் தாத்தாவும் எங்களை திட்டினார்கள். ஆனால் மறுநாள் அவன் அதே கிணற்றடிக்கு வந்து நின்றான். நீச்சல் பழகுகிறாயா என்று கேட்டதும் பயந்து வேண்டாம் என்றான். பிறகு சரியென இறங்கினான். அன்று ஒரளவு பழகிவிட்டான். நாலு நாளில் அவனுக்கு நீச்சல் வந்துவிட்டது. எங்களோடு கோடை முழுவதும் நீந்தி விளையாடினான்.


ஊருக்கு போகும் நாளில் எங்களை விட்டு போவதை நினைத்து அழுதான். அடுத்த வருசம் தான் கட்டாயம் வந்துவிடுவதாக சொன்னான். ஆனால் அதன் மறுவருசம் அவன் வரவேயில்லை. அதன் பிறகு அவனை பார்க்கவேயில்லை.


பதினைந்து வருசங்களுக்கு பிறகு தற்செயலாக ஒரு கோவில் திருவிழாவில் அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டு நினைவுபடுத்தி கொண்டு நீச்சல் பழகியதை சொல்லி சிரித்தான். என்ன செய்கிறாய் என்று கேட்டேன்.


தனக்கு நீச்சல் ஆழமான உத்வேகத்தை உருவாக்கியது. அதற்காகவே இந்திய கடற்படையில் பணியாற்றுகிறான். இன்று உலகின் பல கடல்களில் குதித்து குளித்த அனுபவங்களை சொல்லி சிரித்தான்.



என்றோ கோடையில் பயின்ற நீச்சல் வாழ்நாள் முழுவதும் கூட வருகிறது. இந்த அனுபவம் அவனுள் பசுமையாக ஊறிக்கிடக்கிறது. ஆனால் இன்றுள்ள சிறுவர்களுக்கு  அடுத்த வீட்டில் உள்ள சிறுவனோடு கூட நெருக்கமான உறவோ அன்போ இல்லை.


வீடு மாறி  போகும் நாட்களில் பெரியவர்களை விடவும் சிறுவர்கள் எளிதாக அங்கிருந்த நண்பர்களை மறந்துவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது.  விளையாட வழியின்றி குழந்தைகள் என்ன செய்வது என்ன செய்வது என்ற கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். பயணம் செல்வதற்கு எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. ஆனால் பெற்றோர்கள் தங்களது வீட்டில் கிடைக்கும் சுகத்திலே திளைப்பதால் வெயிலும் வியர்வையுமாக அலைந்து திரிந்து பார்க்க விரும்புவதில்லை. நீந்தியும், மலையேறியும், இயற்கையை அறிந்து களிக்கவும் பெற்றோருக்கு மனதின்றி போனதால் கோடையை கடந்து செல்வது சிறுவர்களுக்கு அலுப்பூட்டுகிறது.


ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு இடம் மாறுவது தான் பெரும்பான்மை குழந்தைகளின் கோடை விடுமுறையாக உள்ளது. அதற்கு மாற்றாக அறியாத இடங்களை நோக்கி பயணம் செய்யுங்கள். குளிர்சாதன அறைகளுக்குள் மட்டும் இல்லை உலகம். வெயிலும் குளிர் போன்ற ஒரு இயற்கையே என்று புரிய வையுங்கள்.


வீடுகளுக்குள் ஒடுங்கி இருந்து பார்வை சுருங்கி போன சிறுவர்களுக்கு முடிவில்லாத வெட்ட வெளியை, மரங்களை, அணில்களை, பறவைகளை, ஆகாசத்தை, இரவு நேரத்தின் அடர்ந்த நட்சத்திரங்களை காட்டுங்கள். கானகங்களை அறிய செய்யுங்கள்.


கதை பேசுங்கள். கதை சொல்ல செய்யுங்கள். விளையாட அனுமதியுங்கள். நம் பயத்தை குழந்தைகளின் மீது திணிப்பதால் அவர்கள் தங்களது இயல்பை இழக்கிறார்கள். அது அவர்களது இளமையை மட்டுமில்லை வாழ்க்கை முழுவதையுமே அர்த்தமற்றதாக்க செய்துவிடும் என்றே தோன்றுகிறது.


***

0Shares
0