எறும்பின் கால்கள்

எறும்புகள் எப்போது துங்கும் என்றொரு நாள் என் பையன் என்னிடம் கேட்டான். என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இரவானதும் அது துங்கிவிடும் என்று பொய்யாக ஒரு சமாதானம் சொன்னேன். உடனே அவன், இல்லை, ராத்திரியிலும் சமையலறையில் எறும்புகள் போவதைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னான்.

வேறு வழியில்லாமல் எறும்புகள் எப்போது உறங்கும் என்று எனக்குத் தெரியாது என்றேன். ஏன் தெரியாது என்று திரும்பவும் கேட்டான். கவனித்ததில்லை என்று சற்றே எரிச்சலோடு சொன்னேன். உடனே அவன் ஏன் கவனித்தில்லை என்று மறுபடியும் கேட்டான். பொட்டில் அடித்தது போன்றிருந்தது.

இது என்னை நானே கேட்டுக் கொள்ளவேண்டிய மிக முக்கியமான கேள்வி என்று தோணியது. ஏன் எறும்புகளை எப்போதுமே மிக அற்பமான ஒன்றாக நினைக்கிறோம். ஏன் அதை நாம் கூர்ந்து கவனிப்பதேயில்லை என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். முக்கியமான காரணம் எறும்புகள் மிகச் சிறியதாக இருக்கின்றன. யானையை பார்த்து வியப்படைவர்களில் ஒருவர் கூட எறும்பைப் பார்த்து வியப்படைவது கிடையாது. ஆனால் யானை எந்த அளவு வியப்பானதோ அதே அளவு எறும்பும் வியப்பானதே.

அத்தோடு எறும்பு கடிக்ககூடுமோ என்ற பயத்தில் அது நெருங்கி வருவதற்குள் நசுக்கி கொன்றுவிடுகிறோம். பழக்கம் என்ற அளவில் நம் எல்லோருக்குள்ளும் இயல்பாக பதிந்து போய்விட்டிருக்கிற தவறான செயலது. இன்னொன்று எறும்பு தானே என்ற எள்ளல் நம்மிடையே உள்ளது. ஒரு எறும்பிற்கும் இன்னொரு எறும்பிற்கும் நம்மால் வித்யாசம் காண முடிவதில்லை.

நான் வீட்டுசுவர்களில் ஊர்ந்து செல்லும் எறும்புகளை உற்றுப் பார்த்தபடியே அதோடு மனதில் தோன்றியதை எல்லாம் பேசும் சிறுவனாகவே வளர்த்தேன். என் வீட்டிற்குள் வரும் எறும்புகள் எங்கிருந்து வருகின்றன. அவை எப்படி வீடுகளின் சுவர்கள், கூரைகளில் ஏறி இறங்குகின்றன என்று வியப்படைந்திருக்கிறேன். என்னை பற்றி எறும்பு என்ன நினைக்கும். எப்படி அதன் மெல்லிய கால்களால் இவ்வளவு உயரத்திற்கு ஏற முடிகிறது. ஏன் என்னால் அப்படி ஏறமுடியவில்லை என்று குழம்பிப்போயிருக்கிறேன்.

எறும்புகள் தன்னால் துக்கிச் செல்ல முடிந்ததை போல பல மடங்கு எடையைத் தான் எப்போதும் இழுத்துக் கொண்டு போகின்றன. அது பேராசையல்ல. மாறாக உழைப்பின் மீதான பெரிய நம்பிக்கை. தன்னால் செய்ய இயலும் என்ற உத்வேகம்.

புழுதி படிந்த தெருவில் தானியங்களைத் தள்ளிக்கொண்டு பத்து பதினைந்து எறும்புகள் செல்வதைப் பார்க்கும் போது படைவீரர்களின் அணிவகுப்பு போலவே இருக்கும். எறும்புகள் இல்லாத உலகை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. எறும்பிடமிருந்து நான் கற்றுக் கொண்டது எறும்பை போலவே ஒடியாடி உழைத்தும் அதற்கான கவனம் கிடைக்காமல் போன நுற்றுக்கணக்கான மனிதர்கள் நம்மோடு வாழ்கிறார்கள் என்பதையே.

எறும்பு தனக்கான பாதையை யாராவது அமைத்து தருவார்கள் என்று காத்திருப்பதில்லை. தன் பாதையை தானே உருவாக்கிக் கொள்கிறது. எல்லா தடைகளையும் தாண்டி அது தன் இலக்கை நோக்கி சென்று கொண்டேயிருக்கிறது. வேறு எந்த உயிரினத்தையும் விட அதிக உயிரிழப்பை சந்திப்பது எறும்புகள் தான்.

ஒரு எறும்பு நசுக்கபட்டு கிடப்பதை கண்டதும் உடனே நாலைந்து எறும்புகள் அதன் அருகில் சென்று அதை உரசியும் நகர்த்தியும் பார்க்கின்றன. செய்வதறியாமல் ஒரு நிமிசம் பரபரப்பாக அங்குமிங்கும் அலைகின்றன. பின்பு அவை சாவை தவிர்க்க இயலாது என்று புரிந்து கொண்டதை போல தன்னியல்பில் கடந்து செல்ல துவங்குகின்றன. உலகில் மாறாத இயக்கங்களில் ஒன்று எறும்பின் அலைச்சல்.

ஹாவர்டு பாஸ்ட் என்றொரு அமெரிக்க எழுத்தாளர் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்த கதையில் பூங்கா ஒன்றில் ஒரு நாள் எறும்புகள் திடீரென உடல் பருமனாகி முயல் அளவு வளர்ந்துவிடும். கண்ணில் படும் மனிதர்கள் அத்தனை பேரும் உடனே எறும்புகளை தடியால் அடித்து கொல்ல துவங்குவார்கள்.

ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஒரு மருத்துவர் ஒவ்வொரு மனிதனாக தேடி சென்று விசாரணை செய்வார். எறும்பு மிகப் பெரியதாக இருக்கிறது அதனால் தான் என்று பலரும் சொல்வார்கள். யாரையாவது அது கடித்ததா? இல்லை ஏதாவது கெடுதல் செய்தததா என்று மருத்துவர் கேட்டவுடன், அதெல்லாமில்லை ஆனால் எறும்பு எறும்பாக தானே இருக்க வேண்டும் என்று ஆட்சேபணை செய்வார்கள்.

உடனே மருத்துவர் சொல்வார் மனிதர்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ஆனால் காலம் காலமாக எறும்புகள் எறும்புகளாகவும் யானைகள் யானைகளாகவுமே இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயமிருக்கிறது. வளர்ச்சியும் மாற்றமும் மனிதர்களுக்கு மட்டுமேயானதில்லை என்பார்.

கற்பனையான கதை என்ற போதும் கதையின் அடிநாதமாக மனிதர்கள் எப்போதுமே கற்பனையான பயத்திலும், உலகம் தனக்கு மட்டுமேயானது என்று அகந்தையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது.

வருடங்களுக்கு முன்பாக ஒரு ருஷ்ய திரைப்படம் ஒன்றை பார்த்தேன். அது இரண்டாம் உலக போரின் விளைவுகளை பற்றியது. அதில் ஒரு வயதான ருஷ்ய விவசாயி போரில் கலந்து கொள்ள சென்ற தன்னுடைய மகனை காண்பதற்காக யுத்தபூமிக்கே பயணம் செய்வான். மகனை காணமுடியாமல் தானும் படையில் சேர்ந்து சண்டையிடுவான். நாஜிகளை எதிர்த்து சண்டையிட்டு ருஷ்யபடை ஜெர்மனிக்கே சென்றுவிடுவார்கள்

ருஷ்ய பீரங்கிகள் ஜெர்மனிய கிராமங்களை அழித்தபடியே முன்னேறி செல்லும். அப்போது ஒரு திராட்சை தோட்டம் ஒன்றை ரஷ்ய பீரங்கி படை அழிக்க செல்லும் போது விவசாயி இறங்கி ஒடி அதை தடுத்து நிறுத்துவான். இது நம் எதிரிகளின் பூமி இதை அழிக்க வேண்டியது நமது கடமை என்று பீரங்கிவீரன் சொல்வான். ஆனால் விவசாயி ஆவேசமடைந்து நிலத்தில் எதிரி நிலம் நம்முடைய நிலம் என்றில்லை . உலகில் உள்ள நிலம் யாவும் இயற்கைக்கு சொந்தமானது. மனிதர்கள் அதன் தற்காலிக உரிமையாளர்கள் மட்டுமே என்று சொல்வான்.

பீரங்கிவீரன் கோபமாகி ராணுவ விதிகளின் படி அது தனது வேலை என்று பீரங்கியை முன்னேற செய்வான். உடனே விவசாயி அங்கிருந்த திராட்சைகளில் ஒரு கொத்தை பிடுங்கி வந்து அதை சாப்பிடு என்று தருவான். பீரங்கிவீரன் சாப்பிட்டுவிட்டு திராட்சையின் ருசியை ரசித்தபடியே தன்னுடைய பல்லின் இடுக்கு வழியாக திராட்சை விதையை துப்புவான்.

உடனே விவசாயி அவனிடம் திராட்சை விதையை எவ்வளவு சுலபமாக உன்னால் துப்பி எறிய முடிகிறது. ஆனால் இந்த விதையிலிருந்து நீ சாப்பிட்ட திராட்சையை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்று ஒரு நிமிசம் யோசித்து பார்.

எத்தனை இரவு பகல் திராட்சை செடிகளுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து பூச்சி, புழுவிடமிருந்து பாதுகாத்து ருசிமிக்க திராட்சை பழமாக ஒரு மனிதன் வளர்த்து எடுத்திருப்பான். அவனுடைய தீராத உழைப்பும் ஆசையும் தான் நீ சாப்பிட்ட பழத்தின் ருசியாக மாறியிருக்கிறது. விதையை துப்பி எறிவது மிக சுலபம் ஆனால் விதையிலிருந்து ஒரு விருட்சத்தை உண்டாக்கி காட்டுவது மிகப்பெரிய செயல் என்று சொல்வான். உடனே பீரங்கிவீரன் தன்னுடைய தவறை உணர்ந்து கிராமத்தை அழிக்காமல் விட்டு செல்வான்.

ஒரு விதையை காணும் போது அதனுள் ஒடுங்கியுள்ள விருட்சம் நம் கண்ணில் தெரிவதில்லை. எந்த ஒன்றையும் உருவாக்குதவற்கு உழைப்பும் காத்திருத்தலும் பொறுமையும் விடா முயற்சியும் தேவை. ஆனால் அதை அழித்து ஒழிப்பதற்கு சில நிமிசங்கள் போதுமானது. இன்று எறும்பு மட்டுமல்ல யானையுமே கவனிப்பாரற்று சாலையோரம் கையேந்தி வாழும் நிலை தான் உருவாகியிருக்கிறது. எறும்பும் தன் கைகளால் எண் சாண் என்கிறாள் ஔவை. பேதம் நம்மிடம் தானிருக்கிறது.

**

0Shares
0