ஐன்ஸ்டீனின் கனவுகள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்புகவிஞர் ஆனந்த், கவிஞர் தேவதச்சன் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து காலம் பற்றிய ஆய்வு ஒன்றில் ஈடுபட்டார்கள். 1992ல் ஆனந்த் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது காலம் குறித்த வியப்பான விஷயங்களை, தகவல்களை, கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அந்த ஆய்விற்காகப் பலரையும் நேர்காணல் செய்தார்கள்.  ஆனால் அது இன்றும் வெளியிடப்படவில்லை.

இன்று Einstein’s Dreams என்ற நாவலை வாசிக்கும் போது அந்த நினைவுகள் வந்து போயின

ஆலன் லைட்மென் எழுதிய இந்த நாவல் ஐன்ஸ்டீனின் காலம் குறித்த எண்ணங்களைப் புனைவாக்கியிருக்கிறது.  சின்னஞ்சிறிய நாவல்.இதாலோ கால்வினோ பாணியில் எழுதப்பட்ட புனைவு. உரையாடல்கள் மிகவும் குறைவு. நிறைய இடங்களில் கவித்துவமான வரிகளைக் காணமுடிகிறது.

இளம் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கனவுகளால் அலைக்கழிக்கப்படுகிறார். இந்தக் கனவுகளின் வழியே அவர் எப்படிக் காலம் குறித்த எண்ணங்களை உருவாக்கிக் கொள்கிறார் என்பதையே நாவல் விவரிக்கிறது. முப்பது சிறு அத்தியாயங்கள் வழியே காலம் குறித்த பல்வேறு கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடிகாரம் காட்டும் காலம் ஒரு புறம் உடலில் இயங்கும் காலம் ஒரு பக்கம். இந்த இரு கால நிலைகளுக்குள் நாம் எப்படிச் சஞ்சரிக்கிறோம் என்பதை இந்த நாவலின் ஒரு பகுதி பேசுகிறது. கடிகாரத்தை வெறும் அலங்கார பொருளாகக் கருதக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதய ஓசையைத் தான் காலமாகக் கருதுகிறார்கள். பசித்த போது சாப்பிடுகிறார்கள் உறக்கம் வரும் போது உறங்குகிறார்கள். அவர்களைக் கடிகார காலம் கட்டுப்படுத்துவதில்லை

ஆனால் அலுவலகம் செல்பவர்களைக் கடிகாரம் தான் இயக்குகிறது. அவர்கள் காலை எத்தனை மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும். எத்தனை மணிக்குள் அலுவலகம் போக வேண்டும். எப்போது மதிய உணவு. எப்போது மாலை தேநீர் அருந்த வேண்டும். எப்போது வீடு திரும்ப வேண்டும் என எல்லாவற்றையும் கடிகாரமே முடிவு செய்கிறது. அவர்கள் தங்கள் உடலின் கடிகாரத்தை விடவும் இயந்திர கடிகாரங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்.

காலம் நீரோட்டம் போலச் செல்லக்கூடியதா, அல்லது வாலைக் கவ்வியிருக்கும் பாம்பைப் போல வட்டமானதா, அல்லது அம்பு போலக் காலம் முன்னோக்கிச் செல்கிறதா என மாறுபட்ட கண்ணோட்டங்கள் தோன்றி மறைகின்றன.

காலம் இல்லாத இடமேயில்லை. மனிதர்களே இல்லாத இடத்திற்குச் சென்றாலும் காலம் இருக்கவே செய்கிறது. காலவுணர்விலிருந்து விடுபட முடியாது. ம்யூசியம் போன்ற இடத்திற்குள் செல்லும் போது காலம் உறைந்து போயிருப்பதை உணர முடிகிறது. நகரங்கள் கால உணர்வில் மிக வேகமாக இருப்பது போலவும் கிராமம் வேறு காலத்தில் வாழுவது போலவும் தானே இருக்கிறது

ஒரு உணவு மேஜை முன்பாகக் கணவனும் மனைவியும் அமர்ந்திருக்கிறார்கள். புதிதாகத் திருமணமானவர்கள். அந்த மேஜை தண்ணீர் குவளைகள் நாற்காலி எல்லாமும் புதிதாக இருக்கிறது. அதே மேஜையில் சில ஆண்டுகளுக்குப் பின்பு அந்தக் கணவன் மனைவியோடு இரண்டு குழந்தைகள் அமர்ந்து உண்ணுகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் அந்தப் பையன்கள் வளர்ந்திருக்கிறார்கள். கணவன் மனைவி தோற்றம் மாறியிருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் அந்தப் பையன்கள் பெரியவர்களாகியிருக்கிறார்கள். அவர்களுக்குத் திருமணமாகிறது. தந்தையும் தாயும் முதுமை அடைகிறார்கள். பையன்களுக்கும் பிள்ளைகள் பிறக்கின்றன. அதே உணவு மேஜையில் இப்போது பேரன் பேத்திகளுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். காலம் அந்த மேஜையில் ஒரு சாட்சி போல மௌனமாக அமர்ந்திருக்கிறது. அவதானிக்கிறது. அவர்களின் சந்தோஷத்தையும் வேதனையையும் அறிந்து வைத்திருக்கிறது. அவர்கள் வாழ்வின் சாட்சியமாக அந்த உணவு மேஜை மாறிவிடுகிறது. காலம் இப்படிப் பொருட்களின் மீது தனது தடயத்தை விட்டுப் போகிறது.

Farewell to the Ark ஜப்பானியத் திரைப்படத்தில் தீவில் வசிக்கும் அனைவரின் கடிகாரத்தையும் பறி முதல் செய்து புதைத்துவிடுகிறார்கள். ஒரேயொருவர் வீட்டில் மட்டுமே கடிகாரம் இருக்கிறது. அவர் தன்னைக் காலத்தின் அதிபதி என்று அழைத்துக் கொள்கிறார். அதிகாரமே காலத்தை எப்படிச் செலவு செய்வது என்பதை முடிவு செய்கிறது. நாட்டுப்புறக்கதையில் பகலை இரவு என்றும் இரவைப் பகல் என்று அழைக்க உத்தரவிட்ட மன்னரைக் காணுகிறோம். மதவழிபாடு முழுவதும் காலத்தோடு தொடர்பு கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் தான் பிரார்த்தனை செய்யப்பட வேண்டும் என்று மதம் வலியுறுத்துகிறது. எல்லாச் செயல்களும் காலத்தினால் தான் மதிப்பிடப்படுகின்றன. காலத்தினால் தான் வழிநடத்தப்படுகின்றன. காலத்தை எவரும் சந்தேகிக்க முடியாது. அதிகாரம் செலுத்த முடியாது.

இயற்கை குறிப்பிட்ட காலஒழுங்கினைக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் பருவகால மாற்றங்கள்.

நாவலில் ஐன்ஸ்டீன் காலம் குறித்த தனது கனவுகளை நண்பர் மைக்கேல் பெசோவுடன் பகிர்ந்து கொள்கிறார். . ஒவ்வொரு கனவும் காலத்தின் ஏதோவொரு கருத்தாக்கத்தை உள்ளடக்கியதாகயிருக்கிறது. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை எவ்வாறு உருவாக்கினார் என்பதை இந்த நாவலின் வழியே அறிந்து கொள்ள முடிகிறது

The tragedy of this world is that no one is happy , whether stuck in a time of pain or of joy. The tragedy of this world is that everyone is alone, For a life in the past cannot be shared with the present ,Each Person who gets stuck in time gets stuck alone என்று நாவலின் ஒரு இடத்தில் குறிப்பிடப்படுகிறது

உண்மையான விஷயமிது. நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்தோடு நின்றுவிடுகிறோம். நமது ரசனை, விருப்பங்கள். யாவும் அந்தக் காலத்தோடு உறைந்துவிடுகிறது. அதிலிருந்து விடுபட முடியவில்லை. சிலர் தன்னை1980களின் மனிதராக மட்டுமே இன்றும் நினைப்பதற்கு அது தான் காரணம். குறிப்பிட்ட ஒரு மலரைக் கண்ணால் பார்த்து அது எந்த நாளின் மலர் என்று கண்டறிய முடியாது. நேற்றின் மலர்கள் இன்றின் மலர்கள் என்பதெல்லாம் வெறும் தோற்றமே.

காதலர்கள் நீண்ட பிரிவிற்குப் பின்பு திரும்பச் சந்தித்துக் கொள்ளும் போது காலம் தான் உறுத்துகிறது. காலம் தான் பெரும் இடைவெளியாக அவர்கள் முன்நின்று வதைக்கிறது. குடும்பப் புகைப்படங்கள் காலத்தை நினைவுகளாக்கிவிடுகிறது.

இன்று காலமே பணமாக மாறுகிறது. எத்தனை மணி நேரம் வேலை செய்தோம் என்பதை வைத்து ஊதியம் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு நிமிஷத்தையும் பணமாக்க வணிகர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மனிதனுக்கு ஒரு நாள் தான் வாழ்க்கை என்றிருந்தால் எப்படியிருக்கும். காலத்தின் முக்கியத்துவத்தை அப்போது தான் மனிதர்களால் நன்றாக உணரமுடியும்

காலம் குறித்து தத்துவவாதி ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்பியலாளர் டேவிட் போம் இருவரும் நீண்ட உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். அது The ending of time என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. அதில் ஜே.கிருஷ்ணமூர்த்தி விஞ்ஞானி போல பேசுகிறார் டேவிட் போம் தத்துவவாதி போல கருத்துகளை முன்வைக்கிறார். அது தான் வியப்பான விஷயம்.

பழத்தைச் சாப்பிட்டு விடு

நாளைக்கென்றால் அழுகிவிடும்

என்றாள் அம்மா

வாங்கி விண்டு

உண்டேன்

இன்றை.

எனத் தேவதச்சனின் கவிதை ஒன்று சொல்கிறது. உண்மையில் நாம் இன்றை உண்ணுகிறோம். இன்றை சுவாசிக்கிறோம். இன்றின் வெளிச்சத்தில் வாழுகிறோம்.

கவிதை எவ்வளவு அழகாகக் காலத்தைப் புரிய வைத்துவிடுகிறது பாருங்கள்

••

0Shares
0