நேற்று மாலை ஒரு பழக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கே தற்செயலாக சீதாப்பழத்தை பார்த்தேன். ஆசையாக ஒரேயொரு சீதாப்பழத்தை வாங்கி பிய்த்து சாப்பிட்டேன், பற்பசையை தின்பது போன்று சக்கையாக இருந்தது.
ஏன் இப்படி ருசியேயில்லை என்று கடைக்காரனிடம் கேட்டபோது இது எல்லாம் கலப்பு விதைல வர்றது சார் . அப்படி தான் இருக்கும். ஜ÷ஸ் போட்டு நிறைய சீனி போட்டு சாப்பிடணும். தனியா சாப்பிடக்கூடாது என்று சொன்னார்.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சீதா பழத்தை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதை தனியே சாப்பிடக்கூடாது என்று ஒரு ஆள் சொல்வதை இப்போது தான் முதன்முறையாக கேட்கிறேன்.
கடை நிறைய ஆப்பிள், கொய்யா. அன்னாசி, பப்பாளி சப்போர்ட்டா, அத்தி. செர்ரி, மங்குஸ்தான், கிவி, துரியன், க்ரீன்ஆப்பிள் என்று ஏதோதோ தேசங்களின் பழங்கள். அநேகமாக வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும் என்றிருந்த பழங்கள் என எதுவும் இப்போதில்லை.
எல்லா பழங்களும் எப்போதும் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதில் பெரும்பகுதி வணிக தந்திரங்களுக்கு உள்ளாகி ரசாயனம் கலந்து பழுக்க வைத்தவை, புகை போட்டவை என்கிறார்கள்.
ஒரு முறை சென்னை மத்திய பேருந்து நிலையத்தின் முன்புள்ள ஒரு பழக்கடையில் ஒரு சிறுவனை பார்த்தேன். அவனது வேலை ஆப்பிள் பழங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது. அவன் காலையில் இருந்து மாலை வரை சிறு சிறு ஸ்டிக்கர்ளை பிய்த்து பிய்த்து ஆப்பிளில் ஒட்டிக் கொண்டிருப்பதாக சொன்னான்.
எதற்காக ஆப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்று புரியவேயில்லை. என்ன ஸ்டிக்கர் என்று ஒரு ஆப்பிளை எடுத்து பார்த்தேன். அல்ட்ரா டெக்னாலஜி, பார்ம் பிக்டு என்றிருந்தது. இயற்கையாக விளையும் பழங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி ஏன் விற்க வேண்டிய நிலைமை வந்தது என்று கேட்டேன்.
கடைக்காரர் சிரித்தபடியே, ஸ்டிக்கர் ஒட்டுனா தான் நிறைய பேர் வாங்குறாங்க என்றார். இந்த ஆப்பிள் எதிலும் மாவு போல சதைபற்று இல்லையே. இவை பேரிக்காய் போலிருக்கிறதே என்றதும் ஆமா சார் இது ஆப்பிள் மாதிரி ஆனா ஆப்பிள் இல்லை. இது நறுச் நறுச் என்று தான் இருக்கும். நல்ல ஆப்பிள் ஒண்ணு விலை இருபது முப்பது ரூபா ஆகுது சார். இது நாலு ருபா ஐந்து ரூபா தானே என்றார்.
அப்படியானால் சிவப்பாக இருக்கிறது என்று நாம் தேடிவாங்கும் ஆப்பிள்கள் நிஜமான பழங்கள் இல்லையா என்று ஏமாற்றமாக இருந்தது. கடைக்காரரோ இதுவும் இயற்கையா விளையுறது தான் ஆனா மலிவு ரகம். திராட்சையில் இருந்து சாத்துக்குடி வரைக்கும் எல்லாத்திலும் இப்படி ருசியில்லாத சக்கை தான் நிறைய வருது. அதை தான் மக்கள் வாங்கி சாப்பிட்டுகிட்டு தான் இருக்காங்க என்றார்
அது முற்றிலும் உண்மை. பழக்கடையில் உள்ள பழங்களில் எதை முகர்ந்து பார்த்த போதும் வாசனையே வருவதில்லை. சிறிய துண்டுகளாக வெட்டி சாப்பிட்டு பார்த்தாலும் சுவை அறியமுடிவதில்லை. காகிதத்தை சவைப்பதை போலவே இருக்கிறது.
கலப்படம் செய்யவே முடியாது என்று நினைத்திருந்த பழங்களில் தான் இன்று அதிகமான அளவு கலப்படமும் உடற்கேடு விளைவிக்கும் பொருட்களும் கலக்கபடுகின்றன. அதிலும் காய்களாக பறிக்கபட்டு ரசாயனம் கலந்து பழங்களாக மாற்றபடுகின்றதே அதிகம்
காசு கொடுத்து நாம் வாங்கும் பெரும்பான்மை பழங்கள் வெறும்சக்கைகளே. தரமான, சுவையான பழங்களை வாங்க வேண்டும் என்றால் அதன் விலை நினைத்து பார்க்க முடியாத அளவு பலமடங்கு பெருகிவிட்டதோடு கிடைப்பதும் அரிதாக இருக்கிறது. சிறிய உதாரணம் நாட்டுவாழைப்பழங்கள்.
தென்மாவட்டங்களில் நாட்டுவாழைப்பழங்கள் இல்லாத பெட்டிகடைகளை காணவேமுடியாது. அவ்வளவு தார்கள் தொங்கும். சமீபத்தில் நான் காரில் சென்னையில் இருந்து மதுரை வரை வந்த போது சாலையோரம் உள்ள கடைகளில் ஒன்றில் கூட நாட்டுவாழைப்பழத்தார் எதையும் காணவில்லை. பச்சைபழமும் கற்பூரவாழையும் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு கடையில் நிறுத்தி விசாரித்த போது அது வருவதேயில்லை என்றார்.
புளிப்பேறிய திராட்சையும், களிமண்ணை தின்பது போன்ற சப்போர்ட்டாவும், சதைப்பற்றே இல்லாத மாம்பழமும், வாசனையே இல்லாத பலாப்பழமும், எலுமிச்சை பழம் அளவு கூட சாறில்லாத சாத்துக்குடியும் தான் இன்று பழக்கடைகளில் நிரம்பி வழிகின்றன.
இதில் எதை குழந்தைகள் அறியாமல் சாப்பிட்டுவிட்டாலும் நாலு நாட்கள் மருத்துவரிடம் போகவேண்டிய அவசியமாகிறது. உடல் ஆரோக்கியத்திற்கான பழங்கள் என்பது போய் இந்த பழங்களை சாப்பிட்டுவிடாமல் உடலை பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
ஒரு டீக்கடையில் தேநீர் சரியில்லை என்றால் கூட முகம் சுழிக்கும் ஆட்கள் பழக்கடைகளில் போய் பழம் சரியில்லை என்பதில்லை. சொல்பவர்களிடம் கேலியாக நாங்க என்ன செஞ்சா தர்றோம். பழம் சரியில்லை என்றால் தூக்கி சாக்கடையில் போடுங்கள் என்று தான் பதில் கிடைக்கிறது.
உணவிற்கு தரக்கட்டுபாடு, சோதனைகள் இருப்பது போல இந்த சக்கையான ருசியற்ற பழங்களை தரநிர்ணயம் செய்யும் அமைப்புகள் எதுவும் நடைமுறையில் இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது இருந்தால் அவை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. குறிப்பாக நோயாளிகள் அதிகம் உள்ள மருத்துவமனையின் முன்புள்ள பழக்கடைகளில் தான் இந்த ஏமாற்றுபழங்கள் அதிகம் விற்கபடுகின்றன.
எங்கோ நியூசிலாந்தில் கிடைக்கும் கிவிபழமும் மலேசியாவில் கிடைக்கும் துரியனும் இன்று சென்னையில் கிடைக்கின்றன. ஆனால் நாட்டுபழங்கள் எதுவும் நம்மிடையே விற்பனைக்கு கிடைப்பதேயில்லை.
ஒரு முறை நானும் ஒரு நண்பரும் பனம்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்காக சென்னை முழுவதும் சுற்றியலைந்தோம். பலருக்கும் அது சிரிப்பாக இருந்தது. ஆனால் கிடைக்கவேயில்லை. சில மாதங்களுக்கு பிறகு விளாத்திகுளம் அருகில் ஒரு கிராமத்திற்கு திருமணத்திற்கு சென்ற போது அங்கே பனம்பழம் கிடைத்தது. நாரோடு அதை சாப்பிட்ட போது மறக்கமுடியாத ருசியாக இருந்தது.
பள்ளிவயதில் நாட்டு இலந்தை பழங்களை பறிப்பதற்காக காடுமேடாக சுற்றியலைந்திருக்கிறேன்.இலந்தை செடியில் பழம் பறிப்பது எளிதானதில்லை. கையில் முள் குத்தாமல் ஒரு போதும் பறிக்க முடியாது.
சிலவேளைகளில் பழம் பறிக்க எத்தனிக்கும் போது இலந்தை செடியில் விழுந்துவிடுவதும் உண்டு. உடல் முழுவதும் முள் குத்தி ரத்தம் கசிய ஒவ்வொரு முள்ளாக எடுத்து போட்டு உடல்வலியோடு அந்த இலந்தைகளை சாப்பிட்ட ருசி வேறு எந்த பழத்திற்கும் இதுவரை கிடைக்கவேயில்லை.
நாட்டு இலந்தை பழங்களை வாயில்போட்டு ஒதுக்கிக் கொண்டே இருக்கும் சிறுவர்களை பால்யத்தில் நிறைய கண்டிருக்கிறேன். இலந்தை வெயில் குடித்து வளரும் பழம். அதன் ருசி அலாதியானது.
அதுபோலவே வெள்ளரிபழங்கள். குறிப்பாக இருக்கன்குடி பகுதியில் கிடைக்கும் வெள்ளரிபழங்களை போன்று வெடித்து பாளம்பாளமாக வெண்ணைகட்டிகள் போன்றிருக்கும் வெள்ளரிபழங்கள் வேறு எங்குமில்லை. அதை நாட்டுசக்கரை சேர்ந்து சாப்பிடத் தருவார்கள். அந்த வெள்ளரிபழங்களில் ஒன்றை கூட இந்த மாநகரம் கண்டதேயில்லை.
எண்ணெய் துணிகளால் சதா பழங்களை துடைத்து பளபளவென்று காட்சி பொருள் போல வைப்பதில் காட்டும் அக்கறை அந்த பழத்தின் தரத்தின் மீது இல்லை. அணில்கடித்த பழம் ரொம்ப ருசியாக இருக்கும் என்று சொல்வார்கள். காங்கிரீட் காடுகளான நகரில் இப்போது அணில்களும் இல்லை. அணில் கடித்த பழங்களும் இல்லை.
இயற்கையான இந்த மோசடி எங்கிருந்து துவங்குகிறது. ஏன் இவற்றை அனுமதிக்கிறோம், ஏன் இதைப் பற்றிய கவனம் நம்மிடம் குறைந்துபோனது. அழுகிப்போன பழங்களை விடவும் மோசமான வணிகமுறையில் அல்லவா யாவர் ஆரோக்கியமும் சிக்கியிருக்கிறது. இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் பழங்கள் என்பது பிளாஸ்டிக் பொருட்களைப் போல வெறும் காட்சி பொருளாகிவிடும் என்பது தான் நிஜம்.
**