கடைசிக் குதிரைவண்டி

புதிய சிறுகதை

கண்ணாயிரம் வீட்டின் பெரிய இரும்புக் கேட்டை ரகசியமாகத் தள்ளி அந்த இடைவெளியின் வழியே உள்ளே எட்டிப்பார்த்தார் சேர்மதுரை.

குதிரை கண்ணில் படவில்லை.

வாசலை ஒட்டி ஒரு இன்னோவா கார் நிற்பது மட்டும் தான் கண்ணில் தெரிந்தது. எக்கிக் கொண்டு பார்த்தபோது நாலைந்து பூச்செடிகளும் பைக் ஒன்றும் கண்ணில் பட்டது

குதிரையை எங்கே கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று மாலை அவரது கடனுக்காகக் குதிரையைக் கண்ணாயிரத்தின் ஆட்கள் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.

அந்த நேரம் சேர்மதுரை வீட்டில் இல்லை. குதிரைவண்டி ஒட்டுவது நின்று போன பிறகு மாலை நேரம் சூப்பும் காளானும் விற்கும் தள்ளுவண்டிக் கடையில் எடுபிடி வேலை செய்துவந்தார். ஒரு நாளைக்குப் பத்து ரூபாய் சம்பளம். இரவுச்சாப்பாடு அவர்களே தந்துவிடுவார்கள்.

பகல் நேரம் கொய்யாப்பழம் வாங்கி விற்பது, தள்ளுவண்டியில் ஐஸ் விற்பது என்று கிடைத்த சிறுவேலைகளைச் செய்து வந்தார். இந்த வருமானத்தில் எப்படி வாங்கிய இருபதாயிரம் ரூபாய் கடனை அடைப்பது என்று புரியவில்லை. அசலைப் போல ரெண்டு மடங்கு வட்டி கொடுத்தாகிவிட்டது. மூன்று மாதமாக வட்டி தரவில்லை. கடன்காரன் குதிரையைப் பிடித்துக் கொண்டு போய்விட்டான். அவரிடம் உள்ள ஒரே சொத்து குதிரை தானே.

அதைப் பிடித்துக் கொண்டு போனால் போகட்டும் என்று வீடு திரும்பிய இரவில் வீறாப்பாக இருந்தார். ஆனால் மனது கேட்கவில்லை. குதிரைக்குப் புல் போட்டிருப்பார்களா. அதன் காதில் புண் இருந்ததே அதைச் சுத்தம் செய்து களிம்பு போட்டிருப்பார்களா என்று கவலையாக இருந்தது.

ஒருவேளை கண்ணாயிரம் வீட்டிற்குப் போனால் குதிரைக்குப் பதில் தன்னைப் பிடித்துக் கட்டிப்போட்டாலும் போட்டுவிடுவார்கள். இந்தப் பயம் இரவில் குதிரையைத் தேடி போகாமல் செய்தது.

ஆனால் காலையில் அவரால் வீட்டிலிருக்க முடியவில்லை. வழக்கமாகப் பறிப்பது போல நாலைந்து மூலிகைகளைப் பறித்துக் கசக்கி ஒரு துணியில் முடிந்து கொண்டு குதிரையக் காணுவதற்காகக் கிளம்பினார். காலை ஒன்பது மணிக்குப் பிறகு போனால் கண்ணாயிரம் வீட்டில் இருக்கமாட்டார் என்று அவருக்குத் தெரியும். அவர் எப்போதும் பெட்ரோல் பங்கில் தானிருப்பார். அங்கே போய்த் தான் சேர்மதுரை கடன் வாங்கினார். சில நாட்கள் வட்டிப்பணம் கொடுக்கவும் போயிருக்கிறார். கண்ணாயிரத்திற்கு நாலைந்து பெட்ரோல் பங்குகள். சினிமா தியேட்டர். லாட்ஜ் எல்லாம் இருந்தது.

அவர் குதிரை வண்டி ஒட்டுகிற காலத்தில் கண்ணாயிரம் எங்கோ பலசரக்கு பையனாக வேலை செய்து கொண்டிருந்தான். காலம் சேர்மதுரையைத் தாழ்த்தி அவனை உயர்த்திவிட்டிருக்கிறது.

இருபத்தைந்து வருஷங்களுக்கும் மேலாக அவர் குதிரை வண்டி ஒட்டி வந்தார். இதற்கு முன்பு ஒரு குதிரை வைத்திருந்தார். அது வெள்ளைக் குதிரை. அப்படிக் குதிரை அமைவது அதிர்ஷ்டம் என்பார்கள்.

நெல்லூரில் இருந்த வாசிரெட்டியிடம் அதை விலைக்கு வாங்கினார். அந்தக் குதிரை வந்த ராசியோ என்னவோ கையில் எப்போதும் பணம் புரண்டது. அந்த நாட்களில் சொந்த மாமா மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி எவ்வளவோ சொன்னார்கள். ஆனால் சேர்மதுரை கேட்கவேயில்லை.

அவர் புதுத்தெரு சரோஜாவை சேர்த்து வைத்துக் கொண்டார். மாநிறம் என்றாலும் தென்னங்குருதது போல உடல்வாகு. சம்பாதித்த பணத்தை எல்லாம் அவளிடம் தான் கொடுத்தார். அந்த நாட்களில் நெய்சோறு, கறிக்குழம்பு, மீன் காடை, கருவாடு என்று வேளைவேளைக்கு ருசித்துச் சாப்பிட்டார். சினிமா கோவில் கொடைக்கானல் பயணம் என்று சந்தோஷமாக இருந்தார்.

எல்லாம் சில ஆண்டுகளில் வடிந்துவிட்டது வெள்ளைக் குதிரையை விற்கும் அளவிற்கு நெருக்கடி உண்டானது. அந்தப் பணத்தையும் சரோஜா தான் வாங்கிக் கொண்டாள். ஒரு நாள் விடிந்து எழுந்து பார்க்கையில் வீட்டில் சரோஜா இல்லை. வீட்டில் அவளது பொருட்கள் எதுவுமில்லை.

வேப்பங்குளத்தானுடன் ஒடிப்போய்விட்டாள் என்று அறிய வந்தபோது வேதனையாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு வீட்டிலே முடங்கிக் கிடந்தார். பின்பு வயிற்றுப்பசி உந்தித் தள்ள எழுந்து நடமாடத் துவங்கினார். கண்ணாயிரத்திடம் கடன் வாங்கிப் புதுக்குதிரை ஒன்றை அந்தியூர் குதிரை சந்தையில் வாங்கி வந்தார். அந்தக் குதிரை தான் இப்போது அவரிடமிருக்கும் தேவானை.

வாங்கி வந்த புதிதில் அந்தக் குதிரைக்கு ஏக அலங்காரம் செய்திருந்தார். மணிகளும் குஞ்சலமும் நெற்றிக்கவசமும் அணிந்து அந்தக் குதிரை வசீகரமாகயிருந்தம். காலவோட்டத்தில் எல்லாம் போய்விட்டது

இப்போது அந்த ஊரின் கடைசிக் குதிரை வண்டி அவருடையது. யாரும் குதிரை வண்டிப் பயணத்திற்கு வராமல் போனதால் வண்டியை எடுப்பதேயில்லை. குதிரையை மட்டும் சில நாட்கள் கல்யாண ஊர்வலத்திற்கு வாடகைக்கு அனுப்பி வைப்பார். அதுவும் கிழடு ஆகிப்போனதால் யாரும் அழைப்பதில்லை.

குதிரையை விற்றுவிடலாம் என்றாலும் கிழட்டுக்குதிரையை வாங்க ஒருவரும் விரும்பவில்லை. குதிரையை வைத்துப் பராமரிப்பதற்கு அவரிடமும் பணமில்லை. ஒரு காலத்தில் அதற்கு ஓட்ஸ், பார்லி, கோதுமைத்தவிடு, போன்றவை எல்லாம் கொடுத்து வளர்த்திருக்கிறார். இப்போது புல்லும் மார்க்கெட்டில் வீணாகிப் போன இலைதழைகளும் தான் அதற்கு உணவாகின்ற்ன. அதிலும் வலது காதில் புண்ணாகி சீல்பிடித்தபிறகு குதிரையின் முகத்தைச் சுற்றிலும் எப்போதும் ஈக்கள் மொய்த்தபடியே இருந்தன. பாவம் அந்தக் குதிரை என்று தோன்றியது

••

கண்ணாயிரம் வீட்டிலிருந்து ஒரு வேலையாள் வயர்கூடை ஒன்றுடன் வெளியே நடந்து வருவது தெரிந்தது. ஒளிந்து கொள்வதா அல்லது குதிரையைப் பற்றிக் கேட்கலமா என்று யோசனையாக இருந்தது

அந்த ஆள் கேட்டினை திறந்து வெளியே வந்த போது சேர்மதுரை அவனைக் கையெடுத்துக் கும்பிட்டார்

“என்ன வேணும். எதுக்குப் பம்மிகிட்டு நிக்குறே“ என்று அந்த வேலையாள் முறைத்தபடியே கேட்டான்

“குதிரைவண்டிக்காரன். என் குதிரையைப் பிடிச்சி கொண்டுவந்துட்டாங்க“

“அந்த கிழட்டு குதிரையா. அதை எப்பவோ அடிமாட்டோட அனுப்பி வச்சிட்டாங்க“

“என்னய்யா சொல்றீங்க. அடிமாடு கூட அனுப்பிச்சிட்டாங்களா“

“அதை வச்சி என்ன ஊர்வலமா போக முடியும். ஐநூறு ரூபாயை கொடுத்து அடிமாட்டுக்காரன் கொண்டுட்டு போயிட்டான்“

“எப்போம் போனான்“

“ஆறு மணியிருக்கு. மேற்கே ஒரு டின்பேக்டரி இருக்கும் தெரியுமா. அங்கே இருந்து தான் லாரி கிளம்பும். அங்கே போயி பாரு“

அதைக் கேட்டதும் சேர்மதுரைக்குக் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது. டின் பாக்டரியை நோக்கி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார். அவரை அறியாமல் கண்கள் கலங்கின.

எத்தனை வருஷம் தன்னை வைத்து காப்பாற்றிய உசிர். அதை அநியாயமாகக் கொல்ல விடக்கூடாது என்று நினைத்தபடியே நடந்தார்

கண்ணாயிரம் மீது கோபமாக வந்தது. வட்டிக்காக யாராவது இப்படிச் செய்வார்களா. படுபாவி என்று சபித்தபடியே டின்பேக்டரியை நோக்கி நடந்தார்.

அந்த ரோடு மேடு போல உயர்ந்து போகக் கூடியது. குதிரை வண்டி ஒட்டும் காலங்கில் அந்த மேட்டில் ஏறும் போது குதிரைகள் கால் தாங்கும். தட்டி ஒட்ட வேண்டும். இன்றைக்கு பெருமூச்சு வாங்க நடந்தார்.

டின்பேக்டரி முன்னால் நின்ற லாரியில் நாலைந்து வத்தலும் தொத்தலுமான மாடுகள் ஏற்றப்பட்டிருந்தன. குதிரையைக் காணவில்லை. ஒருவேளை வேறு லாரியில் கொண்டு போயிருப்பார்களோ என்று கவலையாக இருந்தது. லாரி க்ளீனரிடம் கேட்டபோது அதைக் கொண்டு போய் என்ன செய்றது. அதான் பின்னாடி கட்டி போட்ருக்கேன் என்றான்

கட்டிடத்தின் பின்னால் குதிரை நின்றிருந்தது. காதில் சீல் வடிந்து ஒழுகியது. கிழே கிடந்த காகிதம் ஒன்றை எடுத்து துடைத்தபடியே குதிரையைத் தடவிக் கொடுத்தார். குதிரையின் கண்கள் உலர்ந்து போயிருந்தன. அதன் நெற்றியை தடவியபடியே அதனுடன் பேசினார்.

சிகரெட் பிடித்தபடியே அடிமாட்டு வியாபாரி வருவது தெரிவது

“யாரு நீ.. குதிரைகிட்ட என்ன செய்றே“ என்று அதட்டும் குரலில் கேட்டான் வியாபாரி

“என் குதிரை …சாமி. “

“நீ.. ரயில்வே ஸ்டேஷன் முன்னாடி குதிரைவண்டி வச்சிட்டு இருந்தவன் தானே …உன்னைப் பாத்துருக்கேன். “

“ஆமாய்யா“

அடிமாட்டு வியாபாரிக்கு அவரை அடையாளம் தெரிந்திருந்தது

“உன் பேரு என்ன சொன்னே“

“சேர்மதுரை“

“உன் வண்டியில எம்ஜிஆர் படம் ஒட்டி வச்சிருப்பே. ஞாபகம் இருக்கு“

“ஆமாம் சாமி.. வாத்தியார்னா எனக்கு உசிரு.. “

“சின்ன வயசுல உன் குதிரை வண்டில நான் வந்துருக்கேன். பள்ளிக்கூடத்துப் போறப்போ ஒரு நாள் ஒசியில் நீ ஏத்திகிட்டு போயிருக்கே. ஞாபகமிருக்கா. “

“நினைப்பு இல்லை சாமி“

“ மினி பஸ்சும் ஆட்டோவும் வந்தபிறகு குதிரைவண்டியில யாரு போகப்போறா.. இந்தக் குதிரை எப்படிக் கண்ணாயிரம் கிட்ட வந்துச்சி“

“கடனுக்குப் பிடிச்சிட்டு போயிட்டாரு“

“இந்த கிழட்டு குதிரையை வச்சி நீ என்ன செய்யப்போறே“

“பெத்தபிள்ளை மாதிரி வளர்த்துட்டேன்“

“ஐநூறு ரூபா குடுத்து இதை வாங்கியிருக்கேன் அதை யாரு குடுக்குறது“

“அந்த ரூபாயை நான் அடைக்கிறேன். குதிரையை விட்டு குடுங்க“

“உனக்கு எம்ஜிஆர் பாட்டு பாடத்தெரியுமா“

“தெரியும் சாமி“

“அப்போ நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஒடு பாடு. உன் குதிரையை விட்ருறேன்“

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஒடு ராஜா பாடலை உடைந்த குரலில் பாடினார் சேர்மதுரை. அந்தப் பாடலின் கூடவே அடிமாட்டு வியாபாரியும் பாடிக் கொண்டு வந்தான். பாடி முடித்தபோது சேர்மதுரைக்கு இருமல் வந்துவிட்டது

“உன் பாவம் எனக்கு எதுக்குக் கொண்டு போய்த் தொலை“. என்று சொல்லியபடி அந்த ஆள் சிகரெட்டினை காலில் போட்டு நசுக்கினான்.

எந்தச் சாமி புண்ணியமோ குதிரை திரும்பக் கிடைத்துவிட்டது என்று அதைக் கூட்டிக் கொண்டு வெயிலோடு நடந்து தன் வீடு திரும்பினார் சேர்மதுரை

••

ஊரின் மேற்கே அரளிமலைக்குப் போகும் சரிவில் இருந்த ஒற்றைவீட்டில் சேர்மதுரை குடியிருந்தார். அந்த வீட்டின் முன்னே ஒரு வாகைமரமிருந்தது. ஒரு காலத்தில் அந்த வீடு தீப்பெட்டி குடோனாக இருந்தது.. பயர் ஒர்க்ஸ் செல்லையா குடும்பத்துடன் நீண்டகாலப் பழக்கம் என்பதால் அவரைக் காலி செய்யாமல் வைத்திருந்தார்கள்

ஒரு காலத்தில் ரயில் நிலைய வாசலில் வரிசையாகப் பத்து பனிரெண்டு குதிரை வண்டிகள் நிற்பது வழக்கம். ரயிலை விட்டு இறங்கும் பயணிகள் எந்த வண்டி அலங்காரமாக ஜோடிக்கபட்டிருக்கிறது என்பதைப் பார்த்து ஏறுவார்கள். சேர்மதுரை வண்டியினுள் பெரிய சமுக்காளம் விரித்திருப்பார். விசிறிக் கொள்ள ஒரு விசிறி. அவர் வெற்றிலை போடுவதற்காக சிறிய பெட்டி. நாலைந்து மயில்தோகைகள் வண்டியிலிருக்கும். சேர்மதுரை அதிகம் கூலி கேட்பதில்லை. ஆகவே அவருக்கு வாடிக்கையாளர்கள் எளிதாகக் கிடைத்தார்கள்.

ரயில் நிலையம், சினிமா தியேட்டர். பேருந்து நிலையம் தவிர வாடிக்கையாக டாக்டர் செல்லையா வீடு. டிம்பர் மில் கந்தசாமி முதலியார் வீடு, பழைய சேர்மன் கரையாளர் வீடு போன்றவற்றில் எங்கே வெளியே கிளம்பினாலும் அவரது குதிரை வண்டியை தான் அழைப்பார்கள். தங்கள் வீட்டு மனிதர்களில் ஒருவரைப் போலத் தான் அவரை நடத்தினார்கள்.

அதிலும் அவரது வண்டியில் பெண்களைத் தனியே அனுப்பி வைக்குமளவு அவர் மீது நம்பிக்கையிருந்தது.

டிம்பர்மில் கந்தசாமியாருக்கு ஜோதிடம் பார்ப்பதில் நம்பிக்கை அதிகம். ஆகவே வாரம் இரண்டு நாள் புதுப்புது ஜோசியர்களைத் தேடி போவது வழக்கம். அந்த நாட்களில் விடிகாலையில் கிளம்பிவிடுவார்கள். கந்தசாமி முதலியார் ரயில்வே கேட்டை ஒட்டிய அபிராமி மெஸ்ஸில் தான் எப்போதும் டிபன் சாப்பிடுவார். அதுவும் இட்லி வடை தான். அப்போது சேர்மதுரையும் உடன் சாப்பிட வைத்துவிடுவார்..

“வண்டி ஒட்டுறவன் கூட நாலு இட்லி சாப்பிடுப்பா“ என்று சொல்லி சர்வரிடம் ஐந்தாறு இட்லிகளைக் கொண்டுவந்து இலையில் வைக்கச் சொல்லுவார்.

“சேமத்துரை உனக்கு ஒண்ணு சொல்லுவேன். எப்பவும் வயிற்றைக் காயப்போடக்கூடாது. நேரத்துக்குச் சாப்பிடணும். அதுக்குத் தான் கல்யாணம் பண்ணிக்கோனு சொல்றேன். நீ கேட்க மாட்டேங்குறே“

“எனக்கு எதுக்கு முதலாளி கல்யாணம்“ என்று மறுத்துவிடுவார் சேர்மதுரை

“நான் பொண்ணு பாக்கட்டுமா. கடையநல்லூர்ல தெரிந்த இடத்துல பொண்ணு இருக்கு“

“வேணாம் முதலாளி. இந்தக் குதிரையை வச்சிகிட்டு வயிற்றுபாட்டைப் பாத்துட்டு இருந்தா போதும்“

“என்னைக்கும் ஒருபோல இப்படி இருக்கமுடியாதுல்ல. நாளைக்கு ஏதாவது உடம்புக்கு வந்துட்டா. பாக்க ஒரு பொம்பளை வேணும்லே“

“நம்ம கஷ்டம் நம்மோட போகட்டும். ஒரு பொம்பளையைக் கண்ணீர் விட வைக்க வேணாம்“

“உன்னை திருத்த முடியாதுப்பா.. உனக்கு உடம்புக்கு முடியாட்டி. என் வீட்டுக்கு வந்துரு.. நான் வச்சி பாக்குறேன். “

“இந்த வார்த்தை போதும் முதலாளி. நீங்க நல்லா இருக்கணும்“

“என் வீட்டுக்காரிக்கு பெரிய மனசு. எப்பவும் வீட்ல பத்து பேர் சாப்பிட்டு இருக்கணும். அவளைத் தான் உனக்குத் தெரியும்லே.. உதவினு யாரு கேட்டாலும் கைல கழுத்துல இருக்கிறதை கழட்டி குடுத்துருவா.. “

“உங்க மனசு தான் அவங்களுக்கு. குடுக்கிறவனுக்கு எப்பவும் குறைவு இருக்காது முதலாளி“.

“உன்கிட்ட சொல்றதுக்கு என்ன, கல்யாணத்துக்கு முன்னாடி நான் செய்த வியாபாரம் ஒண்ணும் உருப்படலை. ஆனா அவ வந்த நேரம் தான் எனக்குத் தொழில்ல விருத்தியாச்சி.. புது வீடு கட்டுனேன். டிம்பர் மில் வச்சேன். எல்லாம் அவ ராசி. இல்லாத வீட்டுப் பொண்ணு தான். ஆனா வாழவந்த இடத்துக்கு லட்சுமியை கூட்டிகிட்டு வந்துட்டா.. நமக்குச் செல்வம் கொட்டுது“

“அவங்க நல்லா இருக்கணும் முதலாளி“

“அவ பேச்சுக்கு நான் மறுபேச்சே கிடையாது எல்லாம் அவ முடிவு தான்“.

கந்தசாமி முதலியார் இப்படித்தான். மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிவிடுவார். எதையும் மறைத்துக் கொள்ளத் தெரியாது.

நாலைந்து முறை கந்தசாமி முதலியார் மனைவியை கோவிலுக்கு வண்டியில் அழைத்துப் போய்வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் பேசிய கூலிக்கு மேலே தான் அந்த அம்மா கொடுத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கந்தசாமி முதலியார் புதிதாகப் பஸ் சர்வீஸ் விட்டார். எதிர்பார்த்தது போல அது ஒடவில்லை இரண்டுமுறை விபத்து ஏற்பட்டு விட்டது.

 ஒரு நாள் புதூர் ஜோசியக்காரனை பார்க்க அவரது குதிரைவண்டியில் தான் போனார்கள்

ஜோசியக்காரன் “உங்க ஜாதகப்படி நஷ்டம் வரப்போகுது. பஸ் கம்பெனியை வர்ற விலைக்குக் குடுத்துருங்க “என்று சொன்னான்

கந்தசாமி முதலியார் கேட்டுக் கொள்ளவில்லை. அது அவர் மனைவியின் ஆசை. அவள் சொன்னபடி தான் பஸ் வாங்கிவிட்டிருக்கிறார். அவள் ராசியை மீறி எப்படி நஷ்டம் வந்து சேரும் என்று உறுதியாக இருந்தார்

வண்டியில் திரும்பி வரும்போது ஜோதிடரை திட்டிக் கொண்டே வந்தார். ஆனால் ஜோதிடர் சொன்னபடி தான் நடந்தது. எதிர்பாராத தீவிபத்து நஷ்டம் என்று அடுத்தடுத்து இழப்புகள். பெரிய கடன் சுமை உருவானது. உறவினர்கள்  பலரும் அவரது மனைவி ராசி கெட்டவள் என்று பேசிக் கொண்டார்கள். அவளது துரதிருஷ்டம் கந்தசாமி முதலியாரை பிடித்துக் கொண்டுவிட்டது என்றார்கள். ஆனால் அவர் மனைவியை ஒரு வார்த்தை கோவித்துக் கொள்ளவில்லை.

ஒரு நாள் அவளே சொன்னாள்

“என் பேச்சை கேட்டுப் பஸ் கம்பெனி ஆரம்பிச்சது தான் தப்பு. எல்லாம் போயி.. இப்போ கடன்ல இருக்கோம்“

“அப்படி பேசாதே பாப்பூ. தெரியாத தொழில். நம்பினவங்க ஏமாத்திட்டாங்க. அதுக்கு நீ என்ன செய்ய முடியும். நீ சொர்ணலட்சுமி. உன் கை பட்டது எல்லாம் ராசி தான்“

அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் பெருஞ்சப்தமாக அழுதாள். அதன் இரண்டு வாரங்களில் கந்தசாமி முதலியார் சொந்த வீட்டினை விற்கப்போகிறார் என்று கேள்விபட்டபோது சேர்மதுரை கண்ணீர் விட்டார்.

வக்கீல் ஒருவரைப் பார்க்க போய்வரவேண்டும் என்று சேர்மதுரையை அழைத்த அன்று பாதி வழியில் குதிரை வண்டியை நிற்கச் சொல்லிவிட்டு கந்தசாமி முதலியார் சொன்னார்

“வீட்டை வித்துட்டு வாடகை வீட்ல குடியிருக்க முடியாது. அவமானமாபி போயிடும். குடும்பத்தோட கோயம்புத்தூருக்கு போகலாம்னு இருக்கேன். இது தான் உன் வண்டியில கடைசியா வர்றது. “

“அப்படி சொல்லாதீங்க முதலாளி. கஷ்டம் யாருக்கும் வரத்தான் செய்யும். உங்க மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும்“

“அந்த நம்பிக்கை போயிருச்சி சேமத்துரை. கல்யாண வயசுல ரெண்டு பொம்பளை பிள்ளைகள் இருக்கு. எப்படிக் கட்டிக் கொடுக்கப் போறேன்னு தெரியலை. படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. மனசுல ஒரே பாரம் “

“நீங்களே இப்படிப் பேசினா எப்படி முதலாளி. “ என்று ஆற்றாமை தாங்கமுடியாமல் சேர்மதுரை கண்ணைத் துடைத்துக் கொண்டார்

வக்கீல் வீட்டிற்குப் போய்விட்டு திரும்பி வரும்போது கந்தசாமி முதலியார் ஒரு வார்த்தை பேசவில்லை. அவரது முகம் கறுத்துப் போயிருந்தது.

மறுநாள் காலை சுந்தரம் ஒடிவந்து சேர்மதுரையிடம் சொன்னான்

“கந்தசாமி முதலியார் தூக்கு போட்டு செத்துட்டாராம்“

“அது எப்போ“

“விடிகாலையில்“

அந்த வீட்டு வாசலுக்குப் போய் நிற்கும்போது சேர்மதுரையின் கால்கள் நடுங்கின. எப்பேர்பட்ட மனுசன். இப்படிப் போய்விட்டாரே. ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கும் பெண்களைக் காணும் போது அவராலும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை

கந்தசாமி முதலியார் போல எத்தனை எத்தனை பெரிய மனிதர்கள் மறைந்துவிட்டார்கள். ஊரில் புகழ்பெற்றிருந்த குடும்பங்கள் மறைந்துவிட்டன. யார் யாரோ பணக்காரர் ஆகிவிட்டார்கள். பழைய கடைகள். வீடுகள் இடிக்கபட்டு புதிய கட்டிடமாகிவிட்டன. ஊரில் தெரிந்த முகங்கள் குறைந்துவிட்டார்கள். ஊரின் பெயர் மட்டும் தான் அப்படியே இருக்கிறது.

இத்தனை மாற்றங்களுடன் ஒன்றாக அவரது குதிரை வண்டியும் கைவிடப்பட்டுப் போனது. குதிரை வண்டிகள் நிற்கும் இடத்தில் இப்போது ஆட்டோ ஸ்டாண்ட் நிற்கிறது. சாலைகளில் கேட்ட குதிரைவண்டி சப்தம் மறைந்துவிட்டது

கடைசிக் குதிரைவண்டியாக அவன் மட்டும் வண்டியோட்டிக் கொண்டிருந்தான். வயதான சிலரை மருத்துமவனைக்கு அழைத்துக் கொண்டு போவது. ஜவுளிக்கடை விளம்பர பேனரை வைத்துக் கொண்ட மைக்கில் தெருத்தெருவாக விளம்பரம் செய்து வருவது, எனக் கிடைத்த வேலைகள் செய்து வந்தார். ஆனால் நாளுக்கு நாள் வருமானம் தேய்ந்து கொண்டே வந்தது குதிரை வண்டியில் யாரும் ஏறாத ஒரு நாளின் இரவில் காந்தி சிலையின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு விட்டு கண்டபடி கத்தினார் சேர்மத்துரை. யாரை திட்டுகிறார் என்று புரியாமல் தெருநாய்ப் பயந்தோடியது. அதன்பிறகு வண்டியை எடுக்கவேயில்லை.

பேசாமல் எங்காவது வடக்கே ஒடிப்போய்விடலாமா என்று சில நாட்கள் தோன்றும் குதிரையை என்ன செய்வது என்ற குழப்பம் தான் அவரை ஊரோடு நிறுத்தியிருந்தது

••

குதிரையின் காதில் மருந்தை அரைத்துப் போட்டு துணிவைத்துக் கட்டினார். குதிரை கால்தாங்கியபடியே நின்றது. அதன் கண்களில் எதையோ யாசிப்பது போலிருந்தது. எதற்காக இந்தக் குதிரையை மீட்டுக் கொண்டு வந்தோம். இதை இனி என்ன செய்யப் போகிறோம் என்று எதுவும் புரியவில்லை.

எப்படியும் இந்தக் குதிரை சில நாட்களில் செத்துப்போய்விடும். அதை நேர்கொண்டு காண மனதைரியம் கிடையாது. இதைப் பிழைக்க வைக்க வேண்டும் என்றால் செலவு செய்ய வேண்டும். அதற்குக் கையில் பணமில்லை. இரவெல்லாம் அவர் உறக்கம் வராமல் யோசித்துக் கொண்டேயிருந்தார்

குதிரை வண்டி ஒட்டுவது ஒரு காலத்தில் அத்தனை சந்தோஷமாக இருந்தது. அந்த ஊரில் அவர் போகாத வீதியில்லை தெரியாத சந்து கிடையாது. அதிலும் ஒரு காலத்தில் அவரது குதிரைவண்டியில் தான் டிரான்சிஸ்டர் ரேடியோ இருந்தது. அதில் சினிமா பாட்டுகள் ஒலிக்கும். அதைக் கேட்டுக் கொண்டு சந்தோஷமாக வண்டி ஒட்டிவார். இரவில் வீடு திரும்பும் போது அவரது குதிரை வண்டி சப்தம் தனியே கேட்கும்.

எல்லாமும் மறைந்துவிட்டது. அந்தக் காலம் இனி திரும்பி வராது. தன்னை நேசித்த மனிதர்கள் யாவரும் மறைந்துவிட்ட பிறகு அந்த ஊரில் எதற்காக இருக்க வேண்டும். ஏன் ஊரை அவரைப் பிடித்து வைத்திருக்கிறது

இரவெல்லாம் குழப்பத்துடன் இருந்தார்

விடிகாலை இருட்டோடு அவர் சரிவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். பைபாஸ் ரோடு வரை நடந்து சென்று வடக்கே செல்லும் லாரி ஒன்றில் ஏறிக் கொண்டார்

“எங்க போகணும்“ என்று லாரி டிரைவர் கேட்டான்

“திருப்பூர் வரைக்குபோகணும்“

“நான் சேலம் போறேன். வழியில இறக்கிவிட்டா மாறி போயிடுவீங்களா“ என்று கேட்டான் லாரி டிரைவர்

தலையாட்டினார் சேர்மதுரை

கலையும் இருட்டினுள் லாரி விரைந்து சென்றபடியே இருந்தது. காலை எட்டு மணிக்குச் சாலையோரம் இருந்த உணவகம் ஒன்றில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சாப்பிட இறங்கினான்

சேர்மதுரையிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. அவர் தயக்கத்துடன் வண்டியில் உட்கார்ந்து இருந்தார்

“சாப்பிடுவோம் வாங்க“ என்று டிரைவர் அழைத்தார்

“பசியில்லை “என்று மறுத்தார் சேர்மதுரை

“என்கிட்ட காசு இருக்கு வாங்க “என்றான் டிரைவர். அவன் அப்படிச் சொன்னது அவரைத் தலைகுனியச் செய்தது

அவர்கள் சாப்பிட உட்கார்ந்தபோது வீட்டின் வெளியே கட்டியிருந்த குதிரை நினைவிற்கு வந்து போனது

“வேலை தேடிப்போறீங்களா“ எனக்கேட்டான் லாரி டிரைவர்

“ஆமா. ஊர்ல பிழைக்க வழியில்லே. “

“ஊர்ல என்ன வேலை செய்துகிட்டு இருந்தீங்க“

அவர் பதில் சொல்லவில்லை. மௌனமாக இலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். சூடாக இட்லி கொண்டுவந்து வைத்தார். அதைப் பிய்த்து வாயில் வைக்கும் போது ஏன் இப்படிக் குதிரையைத் தனியே விட்டுவந்தோம் என்ற குற்றவுணர்ச்சி மேலோங்கியது

“என்ன யோசனை சாப்பிடுங்க “என்றான் டிரைவர்

குதிரையின் சீல்பிடித்த காதுகளும் உலர்ந்த கண்களும் நினைவில் வந்து மோதின

ஒருவாய் இட்லியை சாப்பிட முடியாமல் “வாய் கசக்குது“ என்றபடியே வெளியே எழுந்து நடந்தார்

இலைபோடும் இடத்தில் கைகழுவுவது போலக் குனிந்து உட்கார்ந்து அழுதார்

பாவம் சேர்மதுரை.. அவரால் அவ்வளவு தான் செய்யமுடியும்.

••

0Shares
0