கதையாகும் மனிதர்கள்

Niall Williams எழுதிய History of the Rain நாவல் எனக்குப் பிடித்தமானது. இந்நாவலை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். சிறிய நாவல். எளிமையான கதை. ரிச்சர்ட் பாக்கை நினைவுபடுத்தும் எழுத்து.

இளவயதிலே நோயாளியாகி படுக்கையில் வாழும் ரூத் தன்னைச் சுற்றி நிறையப் புத்தகங்களைக் கொண்டிருக்கிறாள். அவளது கட்டில் படகு போன்ற வடிவில் இருக்கிறது. நோயாளியான அவளுக்கு வேதனையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி புத்தக வாசிப்பு மட்டுமே.

புத்தகங்களின் வழியாக அவள் தனது தந்தையைத் தேடுகிறாள். கதை என்பது வாழ்க்கை தரும் பரிசு என்பதை உணருகிறாள் நாம் உயிரோடு இருப்பதற்காகக் கதை சொல்கிறோம். நாம் தான் கதை என்கிறாள்.

இந்த நாவலில் புத்தக வாசிப்பு மற்றும் கதைகளின் மகத்துவம் பற்றி நியால் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

சிலர் வாசகராக மட்டுமே இருக்க விரும்புகிற இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் எழுத்தாளராக விரும்புவதில்லை. அவர்களுக்குப் புத்தக வாசிப்பு தான் உலகம். அது போதுமானது. வாழ்க்கையின் நெருக்கடிகளை, சுகதுக்கங்களை அவர்கள் புத்தகத்திடமே பகிர்ந்து கொள்கிறார்கள். புத்தகம் வழியாகவே தனக்கான மீட்சியைக் கண்டடைகிறார்கள். புத்தகம் போல அவர்களை வேறு எதுவும் மகிழ்ச்சிப்படுத்துவதில்லை என்கிறார் நியால் வில்லியம்ஸ்

முதன்முறையாகத் தந்தையுடன் நூலகத்திற்குச் சென்ற அனுபவத்தை விவரிக்கும் ரூத் புத்தகங்களைத் தொடும்போது அடையும் உணர்ச்சியை வியந்து எழுதுகிறார். புத்தகம் படிப்பவர்களைக் காணும் போது ஏற்படும் தோழமை உணர்வைப் பற்றிச் சரியாகச் சொல்கிறார்.

உண்மையில் நாம் புத்தகங்களைத் தொடும் போது அந்த எழுத்தாளருடன் கைகுலுக்குகிறோம். நட்பு கொள்கிறோம். புத்தகம் உருவாக்கும் தோழமை அபூர்வமானது. புத்தகம் என்பது ஒரு நதி. அது நேற்றும் இன்றும் நாளையும் முடிவில்லாமல் ஒடிக் கொண்டேயிருப்பது. என்கிறார்.

பள்ளியும் வீடும், ஊரும் உறவுகளும் கற்றுத்தராத எத்தனையோ விஷயங்களைப் புத்தகம் கற்றுத் தந்துவிடுகிறது. விழிப்புணர்வு கொள்ள வைக்கிறது. புத்தகம் நமக்குள் உருவாக்கிய அற்புதமென்பது பிறரது துயரத்தை எண்ணி நம்மை வருந்தச் செய்ததும், பரிவு கொள்ள வைத்ததுமாகும்.

நம் கையில் வைத்துள்ள புத்தகம் நமக்குள் இருக்கும் புத்தகத்தை அடையாளம் காட்டுகிறது. புத்தகத்தின் பக்கம் புரளும் போது நமது அகமும் சேர்ந்தே புரளுகிறது. சில புத்தகங்களில் நாம் காணுவது கதாபாத்திரங்களை அல்ல நமது மூதாதையர்களை. நாம் மறந்து போன பாட்டன் பாட்டிகளை, எழுத்தாளன் சொற்களைக் கொண்டு மேஜிக் செய்கிறான். மாறவே மாறாது என நாம் நம்பும் உலகம் கதைகளில் மாறத்துவங்கிவிடுகிறது.

••

0Shares
0