கவிஞனும் கவிதையும் -4 சு துங் போவின் நிலவு

அமெரிக்கக் கவிஞர் W.S.மார்வின் பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனக்கவிஞர் சு துங் போ (Su Tung-Po) பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார்.

சு துங் போவிற்கு ஒரு கடிதம் என்ற அந்தக் கவிதையில்

கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு

நீங்கள் கேட்ட அதே கேள்விகளைத்தான்

நானும் கேட்கிறேன்

தொனியைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை

என்கிறார் மார்வின்

சு துங் போவை வாசித்தவர்களுக்குத் தெரியும். அவர் விடையில்லாத கேள்விகளை எழுப்பி அதன் வழியே இயற்கையின் மர்மத்தை, வாழ்வின் புதிர்களை அவிழ்க்க முயன்றவர். பல நேரங்களில் அவரது கவிதையின் முடிவில் அவர் எழுப்பிய கேள்வி மறைந்து வியப்பு மேலிடுவது வழக்கம்.

எதையும் கேள்வியின் மூலம் அறிந்துவிட முடியும் என நாம் நினைக்கிறோம். ஆனால் கால மாற்றத்தில் அதே கேள்விகள் வேறு வடிவில் தோன்றியபடியே இருக்கின்றன. பதில் கிடைத்தபாடில்லை. நம்மால் எந்த மர்மத்தையும் அனுமதிக்கமுடியாது. எல்லாவற்றிற்கும் உடனே விடையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என முயல்கிறோம். மர்மத்தை அவிழ்க்க இயலாத போது அதை முற்றிலும் விலக்கவே முயல்கிறோம். ஆனால் சு துங் போ போன்றவர்கள் இயற்கையின் மர்மத்தை ஆராதிக்கிறார்கள். அந்த மாய இருளை விரும்புகிறார்கள். ருசிக்கிறார்கள்.

சு துங் போ சீனா முழுவதும் நடந்து அலைந்திருக்கிறார். அரண்மனை வாழ்விலிருந்து எளிய குடிசை வாழ்க்கை வரை அனுபவித்திருக்கிறார். சு துங் போவை புரிந்து கொள்ள முடிந்தவர்களே அரசுப் பணிக்குத் தகுதியானவர்கள் என்ற நிலை இருந்திருக்கிறது. சிறந்த ஓவியராகவும் விளங்கியிருக்கிறார். தாவோவை ஆழ்ந்து கற்றவர் என்பதால் அதனை இலக்கியத்தில் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.

இன்னொரு கவிதையில் எவ்வளவு காலமாக இந்த நிலவு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியைச் சு துங் போ எழுப்புகிறார் அதற்கான பதிலை வானிடம் கேட்க மதுக்கோப்பையை உயர்த்துகிறார். அந்தக் கவிதையில் உறக்கமில்லாதவர் மீதும் நிலவு ஒளிர்கிறது. அது போலவே பிரிந்தவர்கள் மீது ஏன் அது முழுமையாக ஒளிர்கிறது என்ற கேள்வியினையும் எழுப்புகிறார். கவிதையின் முடிவில் நிலவொளியின் மந்திரத்தைப் பகிர்ந்து கொள்ள நீண்ட காலம் வாழ்வோம் ஆயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் என்கிறார்

சு துங் போவின் நிலவு என்பது மகிழ்ச்சியின் அடையாளம். நிலவை எதிர்கொள்ளும் போது பிரிவும் வீடும் நினைவில் வந்துவிடுகின்றன. பிரிந்தவர்கள் ஒரே நிலவைக் காணுகிறார்கள். நிலவின் தூய வெளிச்சம் அவர்களை இணைத்துவிடுகிறது. நிலவு எதையோ முணுமுணுக்கிறது. அதைச் சிலரே கேட்கிறார்கள். நிலவின் தனிமை உலகை அழகாக்குகிறது. தனது பயண வழியில் கண்ட நிலவினை பற்றி நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

மேற்குலகில் புத்திசாலித்தனம், விசுவாசம், அழகு, அன்பு போன்றவற்றுடன் நிலவு அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் சீனப்பண்பாட்டில் அது நித்தியத்துவம், வீடற்ற உணர்வு. பிரிவுத்துயர், காதலர் இணைதல். ஆகியவற்றைக் குறிக்கிறது.

பிரிவின் வலியை சு துங் போ எழுதிய இன்னொரு கவிதை அழகாக வெளிப்படுத்துகிறது

அன்றிரவு ஒரு அமைதியான கனவு

என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றது

சிறிய ஜன்னலைப் பார்த்தபடி

நீ உன் நீண்ட சிகையைச் சீவிக்கொண்டிருந்தாய்

வார்த்தையின்றி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்

ஆயிரம் வரிகளில் கண்ணீர் வழிந்தது

••

மனித வாழ்க்கையை எதற்கு ஒப்பிடலாம் எனத் துவங்கும் சூ துங்போவின் கவிதையில் பனியில் தரையிறங்கும் காட்டுவாத்துகள் தனது காலடித்தடத்தை பதியவிட்டு எங்கே செல்கிறது என அறியாமல் மறைந்துவிடுவதைப் போன்றதே வாழ்க்கை என்கிறார்.

எதற்காகப் பறவைகள் பனியில் தரை இறங்கின. எங்கே செல்கின்றன என்பதை அறியமுடியாது. ஆனால் இந்தத் தற்செயல் நிகழ்வில் அபூர்வமான அழகு வெளிப்படுகிறது.

பனியில் தனது காலடித்தடங்களைப் பதிய வைக்க வேண்டும் என்பது பறவைகளின் நோக்கமில்லை. அது தன்னியல்பில் நடைபெறும் செயல்.. காலடித்தடம் என்பது நினைவின் வடிவம் தானா.

சு துங் போ இயற்கையை வியக்கவில்லை. மாறாக அது நிரந்தரமற்ற நிரந்தரம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

வானம் என்பது ஒரு பெரிய மேஜை

அதனடியில் நான் மறைந்திருக்கிறேன்

என அவரது இன்னொரு கவிதை துவங்குகிறது ‘

சு துங்போ வானைப் பெரிய மேஜையாகக் கருதியதில் வியப்பில்லை ஆனால் நான் அதனடியில் மறைந்திருக்கிறேன் என்பதில் மேஜையடியில் ஒளிந்த குழந்தைப் பருவம் வெளிப்படுகிறது. அது அவரது குழந்தைப்பருவம் மட்டுமில்லை. நமது குழந்தைப்பருவமும் தான். வான் குறித்த கற்பனையில்லாத சிறுவர்களே இல்லை.

பள்ளி வயதில் வானைப் பார்க்கும் போது ஏற்பட்ட கற்பனைகளைப் பெரியவர் ஆனதும் நாம் இழந்துவிடுகிறோம்.

பெரியவர்கள் வானை கைநீட்டி அழைப்பதுமில்லை. தன்னுடைய வீட்டிற்கு கூட்டிச் செல்வதுமில்லை. பத்துவயதில் வான் மீது கொண்ட விருப்பம் புதிரானது. .எந்த மேகம் யாருடையது என்று சிறார்களுக்குச் சண்டை வருவதைக் கண்டிருக்கிறேன். எல்லா ஊர்களுக்கும் சேர்ந்து ஒரு பொதுவான வானமிருப்பதை அந்த வயதில் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆகாசமிருக்கிறது. அதன் மேகக்கூட்டங்களும் ஒளிரும் நட்சத்திரங்கள் கொண்ட இரவும் அதற்கு மட்டுமே உரியது என நம்பியிருந்தேன்.  அது நிஜமில்லை என்று புரியவைக்கபட்டபோது வானம் மிகவும் தொலைவிற்கு சென்றுவிட்டிருந்தது.

நட்சத்திரங்களைப் பற்றி எப்போது பேசத் துவங்கினாலும் அது கவிதையை நோக்கியே திரும்பிவிடுகிறது. நட்சத்திரங்கள் தான் அதிகக் கற்பனையைத் தூண்டுகின்றன. அல்லது கவிதையில் ஒளிரும் நட்சத்திரங்கள் வானில் காணுவதை விடவும் அழகாக இருக்கின்றன.

கவிதையின் ஒரு வரி அல்லது ஒரு சொல் நம்மைக் காலத்தின் பின் அழைத்துச் சென்றுவிடுகிறது. அல்லது நாம் அப்படிச் செல்வதற்குக் கவிதையைச் சாதனமாக்கிக் கொள்கிறோம்.

சு துங்-போ‘ பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அரசியல்வாதி, தத்துவவாதி, கவிஞர், ஓவியர், பொறியாளர், கட்டிடக் கலைஞர் நீதிபதி மற்றும் ஆட்சியாளர்களுக்கு ஆலோசகர் எனப் பன்முகத்தன்மை கொண்டிருந்திருக்கிறார். இவர் தான் சீனாவின் முதல் பொது மருத்துவமனையைத் தொடங்கியவர். அரசின் சீர்திருத்தங்களையும் தவறான கொள்கைகளையும் வெளிப்படையாகக் கண்டித்த சு துங் போ நீதிமன்றத்தைத் தவளைகள் கூச்சலிடும் இடம் என்று கேலி செய்து, எதிர்ப்புக் கவிதை எழுதினார்.. இதன் காரணமாகக் கைது செய்யப்பட்டதுடன் சொந்த மாகாணத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பின்பு சு துங் போ பௌத்த தியானத்தில் அதிக ஈடுபாடு கொள்ளத் துவங்கினார். தன் வாழ்நாளில் சு துங் போ இரண்டாயிரத்துக்கும் அதிகமான கவிதைகள் எழுதியிருக்கிறார்

அரசியல் நெருக்கடிகளால் வெளியேற்றப்பட்ட சு துங் போ ஒரு கவிதை எழுதினார். அதில் தான் கனவில் துள்ளியோடும் மானாகவும் நிஜத்தில் கொதிக்கும் சட்டியில் போடக்காத்திருக்கும் கோழியாகவும் உணர்கிறேன் என்கிறார். இந்த மனநிலையின் நீட்சியாக தனது வீட்டில் அசைவ உணவுகள் சமைப்பதை நிறுத்தினார். தனக்குப் பிடித்தமான உணவைப் பற்றி நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார், லிச்சிப் பழங்களைப் புகழ்ந்து அவர் எழுதிய கவிதை சிறப்பானது.

அவரது கருணை விலங்குகளிடம் மட்டும் வெளிப்படவில்லை. ஹுவாங்சோவில், உள்ளூர் விவசாயிகள் வறுமையின் காரணமாகப் பச்சிளங் குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்பதை அறிந்தவுடன், குழந்தைகளைக் காப்பதற்காக நன்கொடைகளை ஏற்பாடு செய்தார், இதன் காரணமாக ஒரு வருடத்தில் சுமார் நூறு உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

தாவோ சிந்தனைகளை ஆழ்ந்து உள்வாங்கித் தனது கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சு துங் போ. அவர் காணும் மலையும் நிலவும் மலர்களும் மீன்களும் தோற்றத்தைக் கடந்து வேறு உண்மையை அடையாளம் காட்டுகின்றன. வாழ்வின் இனிமையைப் பேசும் அதே வேளையில் நித்தியமின்மையைச் சுட்டிக்காட்டவும் செய்கிறார்.

ஆயிரம் வருஷங்கள் என்பது ஒரு கனவைப் போல சட்டெனக் கடந்துவிடக்கூடியது என்று ஒரு கவிதையில் சொல்கிறார். உண்மை. ஆனால் தனது கவிதையின் வழியே அவர் இன்றும் நம்முடன் உரையாடுகிறார். நெருக்கமாகிறார்.

நான் சேணத்தை விடவும் செருப்பையும் ஊன்று கோலையும் விரும்புகிறேன். சோர்ந்து வைக்கோல் போரில் உறங்க ஆசைப்படுகிறவன். மழையிலும் பனியிலும் அலைந்து திரிய விரும்புகிறவன் என்கிறார். அந்தப் பயணி காற்றைப் போலச் சஞ்சரிக்கிறான். நீரைப் போல அனைத்தையும் தழுவிக் கொள்கிறான். வாழ்வில் மட்டுமின்றிக் கவிதையிலும் சு துங் போ தனித்த பயணியே.

0Shares
0