நாம் இன்று வரை சிறுவர்களுக்குச் சொல்லி வரும் பாட்டியிடமிருந்து வடையைத் திருடும் காகம் கதை நம்முடையதல்ல. ஒன்றாம் நூற்றாண்டில் ஈசாப் சொன்ன கதையது. இந்தக் கதையின் வரலாற்றைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். நேற்று இணையத்தில் இந்தக் கதையினை விவரிக்கும் ஓவியங்கள் சிலவற்றைப் பார்த்தேன். இக்கதை ஈசாப் சொல்வதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் புழங்கியது என்கிறார்கள்.
அப்போது கதையில் காகம் வடை எதையும் திருடவில்லை. அதன் வாயில் இருப்பது வெண்ணெய் துண்டு. அதையே நரி ஏமாற்றி வாங்க முயல்கிறது. இதற்காகக் காகத்தின் குரலை மிகவும் புகழ்ந்து பேசுகிறது. காகமும் நம்பி ஏமாந்துவிடுகிறது.
இந்தக் கதையின் மிச்சம் போல ஒரு பாடல் இருப்பதாக வாசித்தேன். அந்தப் பாடலில் ஒரு நாள் காகத்தை ஏமாற்றிய நரி இறந்து போகிறது. அந்தப் புதைமேடு அருகிலிருந்த மரத்திலிருந்து காகம் நான் உனக்காக அழமாட்டேன். நீ என்னை ஏமாற்றி வெண்ணெய் திருடியவன். அதற்கான தண்டனையை இப்போது பெற்றுவிட்டாய் என்று சொல்வது போல அந்தப் பாடல் அமைந்திருக்கிறது.
தன்னை ஏமாற்றிய நரியை அதன் சாவிற்குப் பிறகும் காகம் மன்னிக்கவில்லை என்பது புதுக்கோணம். இன்னொரு புறம் நரியின் பாவத்திற்குக் கடவுள் தண்டனை கொடுத்துவிட்டார் என்ற கிறிஸ்துவச் சமய நம்பிக்கை இந்தப் பாடலின் வழியே வெளிப்படுகிறது. பௌத்த சமயத்தைச் சார்ந்த கதைகளில் இதே காகமும் நரியும் இடம்பெறுகின்றன. ஆனால் அங்கே மரத்திலிருந்து பழங்கள் பறித்துத் தரும்படியே நரி கேட்கிறது.
பெரும்பாலான கதைகளில் காகம் ஜன்னலிலிருந்தே வெண்ணெய் துண்டை எடுத்துக் கொண்டு ஒரு மரத்தை நோக்கிப் பறக்கிறது. அது கோடைக்காலமா, குளிர்காலமா என்ற குறிப்பு எதையும் காண முடியாது. காகம் மரத்தை அடைந்து ஒரு கிளையில் நிற்கிறது. இந்தக் கதைக்கு வரையப்பட்ட ஓவியங்களில் காகம் தோரணையாக நின்று கொண்டிருக்கிறது. வாசனையை வைத்தே நரி காகத்திடம் வெண்ணைத்துண்டு இருப்பதைக் கண்டறிவதாகக் கதை சொல்கிறது. இந்தக் கதையில் வருவது ஆண் காகமா,அல்லது பெண் காகமா என்ற சந்தேகமும் எழவே செய்கிறது.
இந்தக் கதைக்குப் படம் வரைந்த ஓவியர் ஒருவருக்குக் காகம் பாடம் துவங்கிய போது கீழே விழுந்த வெண்ணெய் துண்டு நேரடியாக நரியின் வாயிலே விழுந்ததா. அல்லது மரத்தடியில் விழுந்ததை நரி எடுத்துக் கொண்டதா என்ற சந்தேகம் வந்திருக்கிறது
அதைவிடவும் நரி புகழ்ந்து பேசுவதைக் கேட்கும்போது காகம் எப்படி இருந்தது என்பதை வரைவதே ஓவியனின் சவால் என்கிறார் ஓவியர்
இந்தக் கதைக்குப் பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்களைக் காணும் போது வியப்பாக இருக்கிறது. பெரும்பான்மை ஓவியங்களில் ஊரைவிட்டு விலகிய ஒரு மரத்தடியில் தான் காகம் அமர்ந்திருக்கிறது. ஒரேயொரு ஓவியத்தில் தான் பின்புலத்தில் பண்ணை வீடு போன்ற ஒன்றின் தோற்றம் தெரிகிறது. ஈசாப் காலத்து கதை என்பதால் இது கிராமப்புறத்தில் நடந்த ஒன்று என்றே ஒவியர்கள் சித்திரம் வரைந்திருக்கிறார்கள். ஆனால் நம் ஊரில் உள்ள கதையிலோ பாட்டி வடை சுடுகிறாள். அவளிடமிருந்து காகம் வடையைத் திருடிப் போகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் சாலையோரம் இப்படி வடை சுட்டு விற்கும் பாட்டிகள் உருவானார்கள். இட்லி கடையும் வடை சுட்டு விற்பனை செய்யும் பெண்களும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அருகில் தான் தங்கள் வியாபாரத்தை உருவாக்கினார்கள்.
காகம் அமர்ந்துள்ள மரமும் அதன் உயரமும் ஒவ்வொரு ஓவியத்திலும் ஒருவிதமாக உள்ளன. Ernest Griset (1874) ஓவியத்தில் பக்கத்தில் வேறு மரங்கள் எதுவுமில்லை. இலையுதிர்கால மரம் போலவும் இருக்கிறது. Randolph Caldecott, Engraving: ஓவியத்தில் பின்புலத்தில் விவசாயக் குடும்பம் ஒன்றின் வீடு காணப்படுகிறது. அதிலும் மரத்தில் இலைகளே இல்லை
Milo Winter (1919) வண்ணத்தில் வரைந்த ஓவியத்தில் நரி தான் முதன்மையாக உள்ளது. ஜப்பானிய ஓவியங்களில் பாதிப்பில் வரையப்பட்ட நரியும் காகமும் ஓவியத்தில் நரியின் வால் மிக அழகாக வரையப்பட்டிருக்கிறது
Paula McKay வரைந்த ஓவியத்தில் காகத்திடமிருந்து வெண்ணைத்துண்டு நேரடியாக நரியின் வாயிலே விழுகிறது.
Grandville (1837-1838) வரைந்த ஓவியங்களில் நரியும் காகமும் ஆடை அணிந்திருக்கின்றன. காகமும் ஒரு கனவானைப் போலவே தோற்றம் தருகிறது.
இருநூறு வருஷங்களுக்குள் இந்தக் கதைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. இதில் இந்தியாவில் வரையப்பட்ட ஓவியங்கள் விளக்கப்படம் என்ற அளவில் தான் உள்ளன. அதில் கலைத்தன்மையைக் காண முடியவில்லை.