அது ஆயிரம் ஆண்டாக இருக்கலாம்
அல்லது நேற்று தானா
நாங்கள் பிரிந்தது.
இப்போது கூட, என் தோளில்,
உன் நேசமான கையை உணர்கிறேன்

என்ற கவிதையின் வழியே தான் யோசனோ அகிகோ அறிமுகமானார். ஜென் கவிதைகளை போன்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு RIVER OF STARS -Selected Poems of Yosano Akiko என்ற அவரது கவிதை தொகுப்பினை வாசித்தேன். கவிதை என்பது உண்மையான உணர்வுகளின் சிற்பம். என்கிறார் அகிகோ
அவரது ஒரு கவிதையில் வெந்நீர் குளியலுக்குப் பின்பு உடைமாற்ற உயரமான கண்ணாடி முன்பு நிற்கும் ஒரு பெண் தன் உடலைப் பார்த்துத் தானே புன்னகை செய்கிறாள்.
அந்த நிமிஷத்தில் நீண்டகாலத்தின் பின்பு அவளது வெகுளித்தனம் வெளிப்படுகிறது.

தன் உடலைத் தானே பார்த்து வியக்கும் அந்த நிமிஷம் அழகானது. கவிதையில் உயரமான கண்ணாடி என்ற சொல் தான் அந்த அழகின் முழுமையை நமக்குக் காட்டுகிறது.
இதமான குளியலுக்குப் பிறகு தூய தனது உடலை அவள் ஒரு சிற்பத்தைப் போலவே காணுகிறாள். ஏன் புன்னகை என்பது முக்கியமானது.
அந்த உடல் அவளுடையது என்றாலும் அது காதலனால் துய்க்கப்பட்டிருக்கிறது. ஒரு இசைக்கருவியை மீட்டுவது போல அந்த உடலை மீட்டியிருக்கிறான். உடலின் வனப்பும் நளினமும் அழகும் அவளுக்குள் நினைவுகளை எழுப்புகிறது. சொல்லப்படாத இன்பத்தின் வெளிப்பாடாக அந்தச் சிரிப்பு வெளிப்படுகிறது.
தன் உடலை ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு தருணத்தில் தான் இப்படிப் பெண்ணால் உணர முடிகிறது என்பதே இதன் தனித்துவம்.
இன்னொரு கவிதையில் தாகம் கொண்ட ஆட்டுக்குட்டியின் கண்களைப் போன்றது தனது கண்கள் என்கிறார் யோசனோ.
எவ்வளவு அழகான வெளிப்பாடு.
காதல் என்பது தாகம் தானே. அந்தத் தாகம் தீரக்கூடியதில்லை. ஆட்டுக்குட்டிக்குத் தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வழி தெரியாது. அவளும் அப்படி தானிருக்கிறாள். அவன் தான் அதைப் புரிந்து கொண்டு தீர்த்து வைக்க வேண்டும். அவள் நேரடியாக எதையும் கேட்பதில்லை. ஆனால் சுட்டிக்காட்டுகிறாள். சங்ககவிதைகளில் இது போன்ற வெளிப்பாடினைக் காணமுடியும்.
அகிகோ மற்றும் அவளது கணவர் இருவரும் கவிஞர்கள். அவளைப் பிரிந்து கணவர் வெளிநாடு சென்றுவிட்டார். தனிமையின் ஏக்கத்தில். பிரிவின் தவிப்பில் அவளுக்குச் சொற்கள் போதுமானதாகயில்லை. அவள் தன்னுடைய மனதை இப்படி வெளிப்படுத்துகிறாள்.
எங்களுக்குக் கவிதை எழுதும் திறமையில்லை
நாங்கள் சிரிக்கிறோம்
இந்த அன்பு இருபதாயிரம் ஆண்டுகள் நீடிக்கும்
அது நீண்ட காலமா
அல்லது சுருக்கம் தானா.
நீண்டகாலம் அல்லது ஒரு நிமிஷம் இரண்டு காதலர்களுக்கு ஒரே அளவு கொண்டது. காலத்தை அவர்கள் உலகம் அளவிடுவது போல அளப்பதில்லை. அவர்கள் உணர்ச்சிகளின் வழியே காலத்தை அறிகிறார்கள். கடந்து போகிறார்கள்.

இன்னொரு கவிதையில் அகிகோ சொல்கிறார்
என் பளபளப்பான கறுப்புத் தலைமுடி
சீர்குலைந்து,
ஆயிரம் சிடுக்குகள்,
உங்கள் மீதான என் அன்பின்
ஆயிரம் சிக்கலான எண்ணங்களைப் போல
சிக்கலான காதலின் எண்ணங்களைப் போலத் தானே சிடுக்காகிக் கொண்டிருக்கிறது தலைமயிர். அதைச் சீவி சரிசெய்வது போலச் சந்திப்பும் அணைப்பும் கூடுதலும் தேவைப்படுகிறது. இங்கேயும் அவளாகவே தான் குழப்பத்திற்கு ஆளாகிறாள். கொதிக்கும் தண்ணீரைப் போலவே காதலின் எண்ணங்கள் குமிழிடுகின்றன.

அவரது நீள் கவிதை ஒன்றில் அகிகோ சொல்கிறார்
பிரபஞ்சத்தினுள் பிறந்து
பிரபஞ்சத்தினுள் வளர்ந்த போதும்
எப்படியோ நான் பிரபஞ்சத்திலிருந்து விலகி இருக்கிறேன்.
ஆம், நான் தனிமையில் இருக்கிறேன்.
உங்களுடன் இருந்தாலும் நான் தனிமையிலிருக்கிறேன்,
ஆனால் சில நேரங்களில்
நான் மீண்டும் பிரபஞ்சத்திற்குத் திரும்புகிறேன்.
நான் தான் பிரபஞ்சமா,
எனக்குத் தெரியவில்லை
அல்லது பிரபஞ்சம் எனக்குள் இருக்கிறதா.
என் இதயம் பிரபஞ்சத்தின் இதயம்;
என் கண்கள் பிரபஞ்சத்தின் கண்கள்;
நான் அழும்போது,
எல்லாவற்றையும் மறந்து அழுகிறேன்.
என நீள்கிறது அவரது கவிதை.
ஜப்பானிய கவிதையுலகின் தனித்துவமிக்கக் குரலாக ஒலிக்கிறார் அகிகோ.

இவர் ஒசாகாவின் புறநகரில் வசித்த இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பவரின் மகளாகப் பிறந்தவர். . ஜப்பானின் சர்ச்சைக்குரிய பெண் கவிஞராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். , எழுபத்தைந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார்
இதில் இருபது தொகுதிகள் கவிதைகள் இதில் பதினேழாயிரம் டாங்கா எனும் குறுங்கதைகள் இடம்பெற்றிருந்தன. கவிதையின் ராணி என்று அவளைக் கொண்டாடுகிறார்கள்.
முரசாகி சீமாட்டியின் செஞ்சிகதையின் புதிய மொழியாக்கம் ஒன்றையும் அகிகோ வெளியிட்டிருக்கிறார்.
ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்த அவரது தந்தை அகிகோ பெண்ணாகப் பிறந்துவிட்ட காரணத்தால் அவளை வளர்க்கும்படி அத்தையிடம் கொடுத்துவிட்டார். மூன்று ஆண்டுகள் அத்தை வீட்டில் தான் அகிகோ வளர்ந்தார். ஆண்பிள்ளைகள் வரிசையாகப் பிறந்த காரணத்தால் பின்பு அகிகோவை அவளது பெற்றோர் தாங்களே வளர்ப்பதாக அழைத்துக் கொண்டார்கள். பள்ளி வயதிலே இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டு புத்தகங்களை வாசிக்கத் துவங்கினார்.
தனது பத்தொன்பது வயதில் , அவர் தனது முதல் டாங்காவை வெளியிட்டார் அந்தக் கவிதை வாசகர்களின் மிகுந்த பாராட்டினைப் பெற்றது
யோசனோ ஹிரோஷி என்ற கவிஞரால் கண்டறியப்பட்டு அவரது இலக்கியவட்டத்தினுள் முக்கியக் கவியாக அறிமுகம் செய்யப்பட்டார் அகிகோ. யோசனோ டெக்கன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதிவந்தார். அவர் ஒரு பௌத்த மதகுருவின் மகன்
வசதியான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். மனைவி வழியாகக் கிடைத்த சொத்தில் அவர் ஒரு இலக்கிய இதழை நடத்தி வந்தார். அந்த இதழில் அகிகோ தொடர்ந்து எழுதினார். அதன் காரணமாக அவர் யோசனோ ஹிரோஷிவுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார். அவர்களுக்குள் காதல் உருவானது. .
தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அகிகோவை திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்தார். தன்னை யோசனோ ஏமாற்றிவிடக்கூடும் என நினைத்த அகிகோ தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதம் யோசனோவின் மனைவி கையில் கிடைத்தது யோசனோவின் மனைவி அகிகோவிற்குக் கடிதம் எழுதி எச்சரித்தார்.
யோசனோ ஹிரோஷியால் தன் காதலி அகிகோவை மறக்கமுடியவில்லை. தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அகிகோவை திருமணம் செய்து கொண்டார். டோக்கியோவில் அவர்கள் வாழ்ந்தார்க்ள். போதுமான வருவாய் இல்லாத காரணத்தால் கடன் சுமை ஏற்பட்டது. கையில் பணமில்லாத போது யோசனோ ஹிரோஷி விவாகரத்து செய்த மனைவியிடம் மன்றாடி பணம் பெற்று வந்தார்.
தன் கவிதைகளின் மூலம் அகிகோ புகழ்பெற ஆரம்பித்தார். இந்நிலையில் மூன்றாண்டு பயணமாக யோசனோ பாரீஸிற்குப் பயணம் மேற்கொண்டார். ஆறுமாதத்தின் பின்பு அகிகோவும் அந்தப் பயணத்தில் இணைந்து கொண்டார். அவர்கள் ஜெர்மனி, ஹாலந்து இங்கிலாந்து எனச் சுற்றியலைந்தார்கள்
ஜப்பானிய வரலாற்றில் மன்னரைப் பகிரங்கமாகக் கண்டித்து எழுதிய ஒரே கவிஞர் அகிகோ மட்டுமே. மன்னருக்கு எதிராக நடந்த புரட்சியாளர்களைத் தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளிப்படையாகப் பேசினார் இதன் காரணமாக அவரது வீடு கல்லெறியப்பட்டது.
தனது பாலின்ப வேட்கையினை நேரடியாகப் பேசியவர் அகிகோ. உடலைக் கொண்டாடும் அவரது கவிதைகள் காமத்தையும், தனிமையினையும் காத்திருப்பின் வலியினையும் பெண்ணின் நோக்கில் துல்லியமாக வெளிப்படுத்தின. இதன் காரணமாக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
சீனா மற்றும் அமெரிக்காவின் அதிகாரத்திற்கு எதிராகக் கவிதைகள் எழுதியவர் அகிகோ. பெண்களுக்கான இலக்கிய இதழ் ஒன்றையும் அவர் நடத்தி வந்தார்.
1942 இல் தனது அறுபத்து மூன்று வயதில் பக்கவாதத்தால் அகிகோ இறந்தார். டோக்கியோவின் புறநகரில் உள்ள தமா ரெய்னின் கல்லறையில் அகிகோ யோசானோவின் கல்லறை அமைந்துள்ளது
•••