காதலின் நினைவில்

 ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ (நாவல்) – வாசிப்பனுபவம்

ந. பிரியா சபாபதி, மதுரை.

காதல் எனும் அன்பானது இவ்வுலகில் பிறந்த யாரையும் விட்டுவைப்பதில்லை. அது அனைவரின் மனத்திலும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கடந்து வராதவர்கள் எவரும் இல்லை. பலர் தம் மனத்தில் எழும் அன்பினைச் சொற்களின் வழியே அன்பானவர்களின் செவிக்குள் விழச் செய்கின்றனர். பலர் அதைத் தம் மனத்திற்குள்ளேயே திரையிட்டு மறைத்து விடுகின்றனர்.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’யை வாசிக்கத் தொடங்குவதற்கு முன் முழுக்க முழுக்க இது காதல் கதையைதான் மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் என எண்ணினேன். அந்த எண்ணத்தை இவரின் எழுத்து மாற்றிவிட்டது.

சூரியன் தரும் வெப்பத்தை நாம் வெயிலாகத் தான் பார்க்கிறோம். சூரியனையும் தன் வெப்பத்தையும் நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. நானும் இதுவரை அவ்வாறு பிரித்துப் பார்த்ததில்லை. குறிப்பாக, இந்த நாவலை வாசிக்கும் வரை.

“மலைப்பிரதேசங்களுக்கு வரும் சூரியன் வேறுதானோ? கரிசல் முரட்டு சூரியனின் கடைசித் தம்பி தான் இந்தச் சூரியனோ?”.

இந்த வாசித்த பின் வெளியே சென்று சூரியனை அண்ணாந்து பார்த்தேன். அனைவரும் என்னை வித்தியாசமாகப் பார்த்தனர். இனி, எப்பொழுது சூரியனைப் பார்த்தாலும் எனக்கு இந்த வரிதான் மனத்திற்குள் நீண்டு கொண்டிருக்கும்.

இந்த நாவலின் பெரும் பகுதி கோடைக்காலக் குறிப்புகளால் நிறைந்ததுதான்.

“தொலைதூர சாலையில் தபால்காரர் மெதுவாகத் தனது சைக்கிளில் போகிறார். அவரது பையிலிருந்த கடிதங்களில் ஒன்று ஊரைப் பிரிந்தவனின் வேதனையைச் சொல்லக் கூடியது. அவன் தப்புத்தப்பான எழுத்துகளால் மனத்தை வெளிக்கொட்டியிருக்கிறான். படிக்கத் தெரியாத அவனது அம்மா அந்தப் போஸ்ட் கார்டினை வெறித்துப் பார்த்தபடி இருப்பாள். அந்தச் சொற்களின் வழியே அவனது முகம் தென்படக்கூடுமோ, என்னவோ, அந்தக் கடிதம் அம்மாவிற்கு எழுதப்பட்டிருந்தாலும் தனக்குத் தானே ஆறுதல் தேடிக் கொள்வதுதான். வெயிலால் வளர்க்கப்பட்டவர்கள் இப்படித்தானே நடந்து கொள்வார்கள்?”

“கோடைக்காலத்திற்கென்றே தனியான சுபாவமிருக்கிறது, கோடையில் எத்தனை புதிய ருசிகள். கோடையில் விளையும் பழங்கள். எப்போதும் குடிக்கும் தண்ணீர் கோடையில் புதுருசி கொண்டுவிடுகிறது. கோடையில் அபூர்வமான சில பறவைகளைக் காணமுடிகிறது. கோடயில் மட்டுமே காணப்படும் மோர்ப்பந்தல். அங்கே கிடைக்கும் கொத்துமல்லி இலைகள் மிதக்கும் மோர்.”

‘சில்விக்கும்’ ‘சுப்பிக்கும்’ இடையே அரும்பும் பதின்பருவக் காதலானது மலைப்பிரேசங்களில் விழும் பனித்துளிகளைத் தாங்கும் மலரிதழ்களைப் போன்றது.

‘காதல்’ என்பது, ‘இவரைப் பார்த்து இந்த நேரத்தில் உதிக்கும்’ என்று யாரும் கங்கணம் கட்டிக் கொண்டு எவரையும் பார்ப்பதில்லை. எப்படித் தன் மனத்தினைப் பிறர் அன்பினால் இழுக்கிறார்கள் என்பது எவருக்கும் இதுவரை பிடிபட்டதில்லை. காதலின் இயல்பும் அது போலத்தான்.

“நெருப்பு தொடாதவரை மெழுகுவர்த்தி மெளனமாகவே இருக்கிறது. நெருப்பைத் தீண்டியதும் அது தன்னுடைய சுடரால் காற்றோடு பேச ஆரம்பிக்கிறது. தன்னை அழித்துக் கொள்வதும் காதலின் இயல்பு போலும்!”

‘சுப்பியின் இயற்பெயர் ராமசுப்ரமணியம் ஆகும். அவனைச் சுப்பி எனச் செல்லமாக அழைத்தது சில்வியாதான். அன்பிற்குரியவர்களை அன்பான சொல்லால் அழைப்பது ஆனந்தம் தானே?. அந்த ஆனந்தத்தைச் சில்வி அவனுக்குக் கொடுத்தாள்.

“ப்ரியம் தானே பெயரைச் சுருக்கிக் கூப்பிடச் செய்கிறது”

இந்த உலகில் ஆணோ, பெண்ணோ இயல்பாகப் பழகத் தொடங்க முடிவதில்லை. அது அவர்களுக்குள் இருக்கும் தயக்கம்தான். அந்தத் தயக்கம் இயல்பாகவே நமது நாயகன் சுப்பிக்கும் இருந்தது. அந்தத் தயக்கத்தினை உடைக்கும் வலிமையான ஆயுதம் தான் நமது நாயகி சில்வியின் அன்பு.

“ஒரு பெண்ணோடு பழகுவது பற்றி அதுவரை எனக்கிருந்த தயக்கங்களை, வீண் கற்பனைகளை அவள் அழித்தாள். நீரோடு நீர் சேர்ந்து விடுவது போன்ற விஷயமது எனப் புரிய வைத்தாள்”.

ஆம்! அவனும் அதைப் புரிந்து கொண்டான். அவனோடு சேர்ந்து வாசகர்களும் புரிந்துகொள்ள முடிகிறது.

‘அவள் இயல்பான கிராமத்துப் பெண்ணாகவே இல்லை’ என்ற ஈர்ப்புத்தான் அவனை அவளிடம் ஈர்க்கிறது. இருந்தாலும் அவளிடம் நட்புக் கொள்வதற்குக் தயக்கம் எப்பொழுதும் அவனுக்குள் பீறிட்டு எழுகிறது. இயல்பான பதின்பருவத்து ஆணின் மனப்போராட்டங்களை எழுத்தாளர் தன் எழுத்துச் சுழிப்பில் பதித்துச் செல்லும் பொழுது, அதை வாசிக்கும் ஒவ்வொரு ஆண் வாசகரும் தன் பதின்பருவத்தைக் கண்டிப்பாகத் திருப்பிப் பார்ப்பர் என்பது மறுக்க முடியாத உண்மை.

‘தன் மனத்திற்கு நெருக்கமானவர்கள், தன் அன்பிற்குரியவர்கள் தன்னைத் தவிரப் பிறர் மீது அன்பினைச் செலுத்தக் கூடாது’ என்பது, அன்பின் உச்சக்கட்டம். அன்பினைப் பெறுபவர்களும் இதனை வெளிப்படையாக வெறுத்தாலும் மனத்திற்குள் மகிழ்ச்சியடையத்தான் செய்வார்கள். குமார் மீது கொண்ட வெறுப்பான சில்வி மீது அன்புதான். நேசம் கொண்ட பெண்ணின் கோபத்தையும் அன்பையும் தாங்கும் வலிமை ஆணுக்கு இல்லை. சுப்பிக்கும் இதே நிலைதான்.

இக்கதையில் காதல் மட்டும் காணப்படவில்லை. குடும்ப உறவுகள், சமுதாய உறவுகள், இணக்கங்கள், உரசல்கள், இயல்பான மனித குணம் அனைத்தும் கதையுடன் இரண்டறக் கலந்து செல்கிறது. மாமியார் மருமகளுக்கு மட்டும் அல்ல; மாமனார் மருமகனுக்கும் இணையே பிணக்கு வருவது இயல்பு. அந்த இயல்பானது அடிப்படை இயல்பாகக் கூட இருக்கும்.

சுப்பித் தன் தந்தையைப் பற்றிக் கூறும் பொழுது, “அவருக்கு என் அப்பாவைப் பிடிக்காது. அப்பாவும் தாத்தாவும் பேசிக்கொண்டதாக நினைவேயில்லை. அப்பாவின் குணம் அப்படி. அவர் தாத்தாவை விடவும் அதிகம் கோபம் கொண்டவர். ஒருமுறை பள்ளி மாணவர்களில் ஒருவன் கன்னத்தில் அவர் ஓங்கி அறையவே அவன் மயங்கி விழுந்துவிட்டான். ஊரே கூடிவிட்டது. நல்லவேளை, அவன் மயக்கம் தெளிந்து விட்டான். பிறகு அந்தப் பையன் பள்ளிக்கே வரவில்லை. பின்னாளில் அந்தப் பையனுக்குக் காது கேளாமல் போய்விட்டது என்றார்கள்”.

எழுத்தாளர் இந்தப் பத்தியின் வழியாகத் தந்தையின் முழு இயல்பையும் கூறிச் சென்றுள்ளார்.

சில்வி அவனின் மனத்திற்குள் முழுமையாகப் பரவிக் கிடப்பதால் தன்னை அவளாகவே பாவிக்கிறான். அதனால்தான் அவள் புரியும் அத்துணைச் செயல்களுக்கும் துணைபுரிகிறான். அவளின் மகிழ்ச்சியின் தன் மகிழ்ச்சியாகவே எண்ணிக் கொள்கிறான். அதனால்தான் எந்தப் பழி தன் மீது வந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகிறான். இது உடல் அவனை ஆட்டுவிக்கும் செயலால் நடைபெற்றதில்லை; மனமும் அன்பும் இணைந்த செயலால் இது நடைபெறுகிறது.

“திடீரென உலகம் தண்ணீரில் நனைந்த பஞ்சைப் போலச் சுருங்கிவிட்டதாகத் தோன்றியது. எதற்காக இந்தச் சில்வியா பின்னால் நான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஏன் அவள் எது சொன்னாலும் செய்கிறேன். மற்றவர்கள் கேலி செய்வதை ஏன் பெரிதாக நினைக்கவேயில்லை. யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுமே அது போன்றதுதானா என் வேலையும்?”

காலமும் குடும்பச்சூழலும் அன்பானவர்களை என்றும் இணைப்பதில்லை. நம் சுப்பிக்கும் இதே நிலைதான் ஏற்படுகிறது. காதலின் வழியால் துன்புறும் ஆணின் மனமும் நூலை விட்டுப் பிரிந்த பட்டம் போன்றது. இவன் சில்வி மீது கொண்டுள்ளது வெறும் காதல் இல்லை. அது அன்பின் மீக்கூர்ந்த நிலையாகும்.

சில்வியை வாசிக்கும் பொழுது தனித்துவமான பெண்ணாகக் காணப்படுகிறாள். தன் மனதைக் கட்டுக்குள் வைக்க இயலாத பெண்ணாகவும் காணப்படுகிறாள். சில்வியாவைச் சில்வியாகவே பார்க்கத் தெரியாதவர்களுக்கு அவள் மாறுபட்ட பிறவியாகத்தான் தோன்றினாள். பிறரைவிடத் தனித்துவத்துவமானவர்களுக்கு அவர்கள் தனிப்பிறவியாகத்தானே தோன்றும். சில்வியும் அப்படித்தான். மன அலைக்கழிப்பே அவளை அவ்வாறு செயல்படுத்த வைத்துள்ளது என்பதைச் சுப்பியைத் தவிர வேறு எவரும் அறிந்ததில்லை.

காலத்திற்கு வலிமை உண்டு. அந்தக் காலம் அவர்களை ஒன்று சேர்க்கிறது. வேறொருவரின் மனைவியாகக் கணவனை இழந்த, இன்னொருத்தியின் கணவனாக. பல நேரங்களில் வெறுமை கொண்டவர்கள் தங்களைப்போன்றே வெறுமை கொண்டவர்களைக் கண்டடைகிறார்கள். தன் வெறுமையால் அவர்களது வெறுமையைப் போக்குகிறார்கள். அதற்கு இந்தச் சமுதாயம், ‘அவர்கள் உடலால்தான் தனது வெறுமையைப் போக்குகறார்கள்’ என எண்ணிக் கொள்ளும். அவர்கள் அன்பு எனும் சொற்கள் வழியாகத் தங்களது வெறுமையைப் போக்குகிறார்கள் என்பதை உணர மறந்து விடுகிறது.

“அக்கறை காட்டுறதுக்கு ஏதாவது ஒரு உறவு வேணும். இத்தனை வருஷமாக நாம பழகிட்டு இருக்கோம். இந்த உறவுக்கு என்ன பேரு. சொல்லு. பிரண்டஷிப்பா. லவ்வா, அல்லது சின்னவயசு பழக்கமா. பெயரில்லாத உறவுகள் இருக்கத்தானே செய்யுது” என்று சில்வியா கூறுவது எத்தனை நுட்பமானது.”

‘சில்விக்கு வாழ்க்கைத்துணையாக ஆகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கரைந்து அவளுக்கு மனத்துணையாக, ஊன்றுகோலாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் சுப்பிக்கு நாற்பதைக் கடந்த வயதில்தான் தோன்றுகிறது. ‘காதல் கரையவில்லை, மறையவில்லை; ஆனால், காதல் இல்லை’ என்பதுதான் உண்மை.

பெண்களின் ஆழ்மன உணர்வினை எழுத்தாளர் எடுத்துரைக்கும் பொழுது, “அதை எப்படிச் சொல்லுறது? ஓர் ஆண் மேல ஒரு பொண்ணுதானப்பா அக்கறை காட்ட, அன்பு செலுத்த முடியும்?ணு என் வொய்ப் நினைக்கிறா. அவளைத் தவிர வேறு யாரும் என்கிட்ட ‘அதிக அக்கறை காட்ட முடியாது’ணு நம்புறா. அதை ஏன் கெடுக்கணும்? அப்படியே இருந்துட்டு போகட்டுமே!.”

சுப்பியின் மனைவியும் தன் கணவன் மற்றொரு பெண் மீது கொண்ட ஏற்றுக் கொண்டவளாகத்தான் உள்ளாள். அவளும் போற்றுதலுக்குரியவளே.

சுப்பி, சில்வியாவின் அன்பினை வெளியுலகக் கண்ணால் பார்ப்பவர்களுக்கு அவர்கள் திருமணப் பந்தத்தில் இருந்து கொண்டே தவறான வழியில் செல்பவர்களாகத் தோன்றும். ஆனால், இருவர்களுக்கான காதலைத் தாண்டி உள்ள மனமெல்லாம் நிறைந்த அன்பினை அவர்கள் இருவரை தவிரச் சில்வியின் மகளான நான்சியால் மட்டுமே உணர முடியும்.

வாழ்வில் எல்லோருக்கும் வெறுமை சூழும் பொழுது ஒரு துணை தேவைப்படுகிறது. அந்தத் துணையானது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் அதில் சுயநலம் ஒட்டிக் கொள்கிறது அல்லது வேறு ஒன்று நிறைந்திருக்கலாம். ஆனால், இக்கதையைப் பொறுத்தவரையில் அன்பு கொண்டவர்களைக் காலம் கடந்து அந்த நேசம் இணைத்து வைத்திருக்கிறது.

•••

0Shares
0