உலகின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது Sunflower (Italian: I girasoli). விட்டோரியா டிசிகா இயக்கியுள்ள இந்தப்படம் வழக்கமான காதல்கதை போலக் காதலுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பேசுவதில்லை. மாறாகக் காதலின் புதிய பரிமாணத்தை அடையாளம் காட்டுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது கதை நடக்கிறது

போர் முடிந்த போதும் வீடு திரும்பாத ராணுவ வீரர்களின் நிலையைப் பற்ற அறிந்து கொள்ள இத்தாலியிலுள்ள அரசாங்க தகவல் மையத்தில் பலரும் காத்து கிடக்கிறார்கள். அங்கே தன் கணவன் என்ன ஆனான் என்று கேட்டு சண்டையிடுகிறாள் ஜோவானா. அவளுடன் அவளது மாமியாரும் உடன் வந்திருக்கிறாள். கறுப்பு ஆடை அணிந்துள்ள அவளிடம் உங்கள் மகன் உயிரோடு தானிருக்கிறான். நான் அவனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று உறுதியளிக்கிறாள்.

காரிடாரில் அவள் நடந்து செல்லும் காட்சி அத்தனை அழகானது. சோபியா லாரனின் மிகச்சிறந்த கதாபாத்திரமிது.
அன்டோனியாவை எப்படி ஜோவானா காதலித்தாள் என்று பிளாஷ்பேக் துவங்குகிறது.
இத்தாலியில் ராணுவ வீரன் திருமணம் செய்து கொண்டால் பனிரெண்டு நாட்கள் விடுமுறை கிடைப்பது வழக்கம். அப்படி அன்டோனியோவை போர்முனைக்கு அனுப்பாமல் இருக்க அவரசமாகத் திருமணம் செய்து கொள்கிறாள் ஜோவானா. கடற்கரையில் அவர்கள் காதல் பித்தேறி விளையாடுகிறார்கள். கட்டிப்பிடித்து முத்தமிட்டு உருளுகிறார்கள். அவளது காதணியைத் தெரியாமல் விழுங்கிவிடுகிறான் அன்டோனியோ. கடல் தண்ணீரைக் குடிக்க வைக்கிறாள் ஜோவானா. கடற்கரையில் இருவரும் நெருக்கமாக உருண்டு புரளுகிறார்கள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறாள் ஜோவானா. ஆனால் தனக்குத் திருமணத்தில் ஆர்வமில்லை என்று மறுக்கிறான் அன்டோனியோ. அவள் விடாப்பிடியாக வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள்
டிசிகாவின் படங்களில் திருமணம் முக்கியமான நிகழ்வு. பெரும்பான்மைத் திரைப்படங்களில் தேவாலயத்திலிருந்து திருமணமாகி தம்பதிகள் வெளியே வருவது காட்டப்படுகிறது. இதிலும் புதுமணத்தம்பதிகளாக அன்டோனியோவும் ஜோவானாவும் வருகிறார்கள். தனது பூர்வீக வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு போகிறான் அன்டோனியா
அங்கே பகலிரவை மறந்து இன்பம் தூய்கிறார்கள். அவளுக்காக அவனே சமைக்கிறான். முட்டைகளை உடைத்து ஊற்றி பெரிய அடையாக்குகிறான்.மதுவும் முட்டையும் போதும் போதுமெனச் உண்ணுகிறார்கள். இனி முட்டையைக் கண் கொண்டு பார்க்க மாட்டேன் என்கிறாள் ஜோவானா. ஒன்றாக வீட்டின் புறவெளியில் நடக்கிறார்கள். அப்போது அவனைத் தூக்கிக் கொண்டு நடக்கிறாள் ஜோவானா. உனக்கு இவ்வளவு பலமா என வியக்கிறான். அந்தக் காட்சி தான் படத்தின் திறவுகோல். ஒரு பெண்ணை அவளது தோற்றத்தை வைத்து மதிப்பிட முடியாது என்பதன் அடையாளமிது. போர்முனையில் காணாமல் போன தன் கணவனைத் தேடி கண்டுபிடிக்க அவள் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் மையப்பகுதி.
பனிரெண்டு நாட்களையும் பனிரெண்டு யுகம் போல அனுபவிக்கிறாள் ஜோவானா. அந்த நாட்கள் முடிந்தவுடன் ராணுவத்தில் சேர வேண்டுமே என்பதால் தனக்கு மனநிலை சரியில்லாமல் போனது போல நடிக்கிறான் அன்டோனியா. அவனைக் கைது செய்து மனநலக் காப்பகம் ஒன்றில் அடைக்கிறார்கள். அவனைப் பார்வையிடுவதற்காக ஒரு நாள் ஜோவானா அங்கே செல்கிறாள். ஆசையில் அவளைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறான். அவன் மனநலமற்றவனில்லை என்ற உண்மை தெரிய வந்துவிடுகிறது. ரஷ்யாவின் முன்கள படைப்பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறான்

ரஷ்யப் பயணத்தின் முன்பாக ரயில் நிலையத்தில் வைத்து ஜோவானாவை முத்தமிட இடம் தேடி அன்டோனியோ அலைகிறான். எங்கும் ஆட்கள். யாருமற்ற இடம் கிடைக்கவில்லை. முடிவில் ஆண்கள் கழிப்பறை முன்பாக அவளை முத்தமிடுகிறான். அவளுக்கு இடமோ, சூழலோ எதுவும் முக்கியமில்லை. தன்னைப் பிரியப்போகிறான் என்ற ஒற்றை உணர்ச்சியே மேலோங்கியிருக்கிறது. கட்டி அணைத்து முத்தம் தருகிறாள். அன்டோனியோ அவளைப் பிரிந்து போகிறான்.
போர் முடிகிறது. யுத்தமுனையிலிருந்து ராணுவ வீரர்கள் வீடு திரும்புகிறார்கள். அந்த ரயில் வரும் காட்சி மறக்கமுடியாதது. கையில் புகைப்படங்களுடன் அவரவர் குடும்பத்தினர் ரயில் பெட்டிகளைத் தேடி ஓடுகிறார்கள். வராத ராணுவ வீரனுக்காகக் கண்ணீர் விடுகிறார்கள். தன் கணவன் வரவில்லையே என ஜோவானா வருத்தமடைகிறாள். அப்போது அன்டோனியோவுடன் பணியாற்றிய இன்னொரு ராணுவ வீரன் ரஷ்யாவில் நடந்த உண்மைகளை வெளிப்படுத்துகிறான்
பனிப்பிரதேசத்தில் குளிர்தாங்கமுடியாமல் விழுந்துவிடுகிறான் அன்டோனியோ. அவனைக் கைவிட்டுப் படைப்பிரிவு நகர்கிறது. ஆகவே அவன் பனியில் சிக்கி இறந்து போயிருக்கக் கூடும் என்கிறான். இந்த உண்மையை ஜோவானா ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை அவன் உயிர்பிழைத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைக்கிறாள். இதை அறிந்து கொள்ளச் சோவியத் யூனியனுக்குத் தனி ஆளாகப் பயணம் செய்கிறாள்.
சோவியத் யூனியனில், ஜோவானா சூரியகாந்தி வயல்களைப் பார்வையிடுகிறாள் ராணுவ பணியில் அடிபட்டு விழுந்த ஒவ்வொரு இத்தாலியச் சிப்பாய்க்கும் ஒரு மலர் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள் .
ரஷ்யாவில் உதவிக்கு யாருமின்றி அலைந்து திரிந்து முடிவில் அன்டோனியா உயிருடன் இருப்பதைக் கண்டறிகிறாள். ஆனால் எதிர்பாராத அதிர்ச்சி அங்கே அவளுக்குக் காத்திருக்கிறது

அவன் வேறு ஒரு ரஷ்யப் பெண்ணை மணந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவர்களுக்கு ஒரு குழந்தையிருக்கிறது. அந்தப் பெண்ணைச் சந்திக்கிறாள் ஜோவானா. அவள் தான் பனியில் மயங்கி கிடந்த அன்டோனியோவை காப்பாற்றியவள். அந்த நன்றிக்கடனுக்காக அவளைத் திருமணம் செய்து கொண்டுவிட்டான் என்ற உண்மை புரிகிறது.
எந்தக் கணவனைத் தேடி வந்தாளோ அவனைத் தொலைவில் ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே ரயில் ஏறி இத்தாலி புறப்படுகிறாள். அவசரமாக ரயிலில் ஏறி அமர்ந்து அவள் கண்ணீர்விடும் காட்சி மிகச்சிறப்பானது. தன்னை மறந்து அழுகிறாள். அவள் கணவன் மீது தவறில்லை. அவன் நியாயமாகவே நடந்து கொண்டிருக்கிறான். அந்தப் பெண் மீதும் தவறில்லை. பனியில் சாகக் கிட்ந்தவனை காப்பாற்றி உயிர் கொடுத்திருக்கிறாள். மூவருமே நல்லவர்கள் ஆனால் ஒருவருக்கு எதிராக ஒருவர் நடந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது
வழக்கமான படங்களில் ஆணோ பெண்ணோ எதிர்மறையாகச் சித்தரிக்கப்படுவார்கள். இதில் அப்படியில்லை. சூழ்நிலை தான் அவர்களைப் பிரிக்கிறது. அன்டோனியோவை வேறு திருமணம் செய்ய வைக்கிறது
தன்னைத் தேடி ஜோவானா ரஷ்யா வரை வந்துவிட்டது அவனுக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. அவளைக் காண்பதற்காகத் தன் குடும்பத்துடன் அவன் இத்தாலி திரும்புகிறான்
ஆனால் அவனுடன் இணைந்து வாழ விரும்பாத ஜோவானா வேறு வேலைக்குப் போய்விடுகிறாள். புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறாள். காலம் மாறுகிறது. அவளை மறுபடியும் சந்திக்கிறான் அன்டோனியோ இப்போது அவர்களுக்கு வயதாகியிருக்கிறது. அவளுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் அவள் அதை ஏற்கவில்லை. அவன் மீதான அவளது காதல் மாறவில்லை. ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நினைத்து அவனை ஏற்க மறுக்கிறாள். அவர்கள் பிரிகிறார்கள்.
அவளுக்காக ஒரு பரிசை அளிக்கிறான் அன்டோனியோ. அதை ஏற்றுக் கொள்கிறாள். ரஷ்யா செல்வதற்காக அவன் ரயில் ஏறுகிறான். அவனது பிரிவைச் சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜோவானா.
அழியாச்சுடரைப் போலக் காதல் ஒளிர்கிறது. இளமையில் துவங்கி முதுமை வரையான அவர்களின் வாழ்க்கையின் ஊடே நினைவுகளின் வழியே காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவனது புகைப்படத்தை வேண்டாம் என உடைக்கிறாள் ஜோவானா/ ஆனால் மனதிலிருந்து அவனை அகற்ற முடியவில்லை. அது தான் உண்மையான காதல். வயதைக் கடந்து அந்தக் காதல் அவர்களுக்குள் இருந்த அன்பின் மகத்துவத்தைச் சொல்கிறது.
நெருக்கடி ஒரு பெண்ணை எந்த அளவு தைரியம் கொள்ளச் செய்யும் என்பதற்கு ஜோவானா ஒரு உதாரணம். அவள் தனி ஒருத்தியாகச் சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்கிறாள். கணவனைத் தேடுகிறாள். கண்டறிகிறாள். வாழ்க்கை ஏன் அவளுக்கு எந்த இன்பத்தையும் தர மறுக்கிறது. அந்தப் பனிரெண்டு நாட்கள் தான் அவள் வாழ்வின் மறக்கமுடியாதவை. அதைத் தவிரப் பிரிவும் வேதனையும் காத்திருப்பு தான் அவளது வாழ்க்கையாக நீளுகிறது.

தன் கணவனின் புதிய வாழ்க்கையை அறிந்து கொண்டபிறகு அவள் அழுகிறாள். யார் மீது அவள் கோபம் கொள்ள முடியும். அவள் புதிய வேலையைத் தேர்வு செய்கிறாள். புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறாள். அது ஒன்று தான் விடுதலை. அது ஒன்று தான் கடந்த காலத்திலிருந்து விடுபடும் வழி
ஆனால் அந்த வாழ்க்கையின் ஊடே மறுபடியும் அன்டோனியோ வந்துவிடுகிறான். அவனால் அவளை மறக்கமுடியவில்லை. அவளுடன் சேர்ந்து வாழ மன்றாடுகிறான். அவள் ஏற்பதில்லை. காலம் தான் அவர்களை ஒன்று சேர்க்கிறது. காலம் தான் அவர்களைப் பிரித்து வைக்கிறது
படத்தின் ஆரம்பக் காட்சியில் சூரிய காந்தி பூக்கள் நிரம்பிய வயல் சிறந்த இசையுடன் காட்டப்படுகிறது. சூரியகாந்தி ஒரு குறியீடு. சூரியகாந்திப்பூவைப் போலத் தான் ஜோவானா நடந்து கொள்கிறாள்.
டிசிகாவின் கதாபாத்திரங்கள் உண்மையானவர்கள். நாம் ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படுவதில்லை. படத்தில் வரும் அன்டோனியாவின் தாயை நம்மால் மறக்கமுடியாது. அவர் மௌனமாகத் துயரத்தை வெளிப்படுத்துகிறார். அவரது வருகையும் காத்திருப்புமே ஜோவானாவை தேடிச் செல்ல தூண்டுகிறது
விளையாட்டாக வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் இளம்பெண்ணாக அறிமுகமாகும் ஜோவானா படத்தின் முடிவில் முதிர்ச்சியடைந்த, உறுதியான பெண்ணாக அடையாளமாகிறாள். இந்த மாற்றத்தில் அவள் இழந்திருப்பது ஏராளம். இந்தப் படம் ஜோவானாவின் வாழ்க்கையைச் சொன்னாலும் அது அவளின் கதை மட்டுமில்லை. நாம் அறிந்த பலரின் வாழ்க்கையினையும் இது நினைவுபடுத்தவே செய்கிறது
••