காருகுறிச்சியார்.


 


 


 


 


 


 


 


சில நாட்களுக்கு முன்பாக நாதஸ்வர மாமேதை காருகுறிச்சி அருணாசலத்தின்  சொந்த ஊரான காருகுறிச்சிக்கு சென்றிருந்தேன். சிறிய கிராமம். அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது. ஊரின் நுழைவாயிலில் கையில் நாதஸ்வரத்துடன் உள்ள காருகுறிச்சியார் சிலை காணப்படுகிறது.


சிலை செய்தவருக்கு காருகுறிச்சியார் மீது என்ன கோபமோ தெரியவில்லை. நாதஸ்வரம் வளைந்து நெளிந்து போயிருக்கிறது. காருகுறிச்சியின் பூர்வீக வீடு விற்கபட்டு தற்போது யாரோ குடியிருக்கிறார்கள். அந்த வீட்டில் இருந்த பெண்மணி அடிக்கடி யாராச்சிம் வந்து பாத்துகிட்டு தான் இருக்காங்க உள்ளே வாங்க என்றபடியே அழைத்து சென்றார்வீட்டை நாங்க வாங்கி கொஞ்சம் மாத்தி அமைச்சிட்டோம். முன்னாடி ஒரு திண்ணை இருந்துச்சி. அதை நாங்க எடுத்துட்டோம். இந்த போட்டோவுல நேரு கூட இருக்காஹல்லே அவுக தான் என்று மடமடவென பேசிக் கொண்டிருந்தார்.
வீட்டின் உட்புறம் மாறமல் அப்படியே இருந்தது. சிறிய அறைகள். சுவரில் நாலைந்து பழைய புகைப்படங்கள். அதை நான் கவனிப்பதை அறிந்தவர் போல அவுஹ சொந்தக்காரங்க வீடு அடுத்த தெருவில் இருக்கு. அங்கே நிறைய போட்டோ இருக்கு என்றார். நான் தலையாட்டிக் கொண்டேன். அந்த காலத்தில நிறைய வித்வான்க வந்து போய்கிட்டு இருப்பாஹக. எந்நேரமும் கச்சேரி தான். ஜனாதிபதி முன்னாடி வாசிச்சி இருக்காஹல்லே. அந்தபெருமை யாருக்கு வரும் என்றார் அந்த பெண்மணி.


வீட்டின் உள்ளே இன்றைக்கும் காருகுறிச்சியின் இருப்பு அழியாமல் இருப்பது போலவே உணர முடிந்தது. அந்த போட்டோ இருக்க வீட்டை நானே காட்டுறேன் வாங்க என்று உடன் அழைத்து கொண்டு போனார்.சாலையை பார்த்த சிறிய காரை வீடு. பூட்டப்பட்ட வீட்டின் கதவை தட்டினார். முப்பது வயதைகடந்த பெண்மணி கதவை திறந்து வேற்று ஆளை பார்த்த மிரட்சியில் என்னக்காக என்று கேட்டார். தணிவான குரலில் அவர்கள் பேசிக் கொண்டார்கள். அருகாமை வீட்டில் இருந்து ஒரு ஆள் எட்டி பார்த்து புதுசா ரேஷன் கார்டு கொடுக்கீஹலா என்று கேட்டார். இல்லை என்று தலையாட்டினேன். அந்த வீட்டில் ஹாலில் பத்து பதினைந்து அரிய புகைப்படங்கள் இருந்தன. தான் அவரது பேத்தி முறை என்று அந்த பெண்மணி அறிமுகம் செய்து கொண்டார்.காருகுறிச்சி கோவில்பட்டியில் புதுவீடு கட்டி கிரஹபிரவேசம் செய்த நாளில் ஜெமினிகணேசனும் சாவித்திரி அம்மாவும் வந்த விருந்தாளிக்கு சாப்பாடு பரிமாறினார்கள் என்பது நீண்டநாட்களாக கோவில்பட்டி மக்களின் நினைவில் இருந்து வரும் மகிழ்ச்சி. அதன் சாட்சி போல ஒரு புகைப்படம் அந்த ஹாலில் தொங்கிக் கொண்டிருந்தது. ஜெமினியும் சிவாஜி ஏபி நாகராஜன் என்று திரைஉலகோடு காருகுறிச்சியாருக்கு இருந்த நட்பும் அன்பும் அந்த புகைப்படங்களில் வெளிபட்டன.


காருகுறிச்சியாரின் நாதஸ்வர இசைதட்டுகள், ஒலிநாடாக்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். அதெல்லாம் இப்போ யாரு கேட்கிறா. முன்னாடி ஒரு ரிக்காடு கிடந்தது. அதுவும் பிள்ளைக விளையாடி உடைஞ்சி போச்சில்ல என்றார் அந்த பெண்மணி.சாவித்திரியும் ஜெமினியும் காருகுறிச்சியார் குடும்பத்து மனிதர்கள் போலவே இணக்கமாக உள்ள இந்த புகைப்படத்தை பார்த்தபடியே இருந்தேன். சாவித்திரியின் கண்களில் அன்பும் நட்பும் தேங்கியிருப்பதை அறிய முடிகிறது. காலம் தன் நினைவின் சிறுபகுதியை அப்படியே ஒளிர செய்து கொண்டிருக்கிறது என்பது போலவே அந்த புகைப்படங்கள் இருந்தன.வெயிலேறிய கிராமத்து வீதியில் தனியே நடந்து சுற்றினேன். தெரு கிளைபிரிந்தது. பெரும்பான்மை வீடுகளுக்குள் தொலைக்காட்சியோசை கசிந்து கொண்டிருந்தது. வேப்பமரங்கள் அடர்ந்த ஊர். காருகுறிச்சி தன்வீட்டின் முன்னால் உள்ள சிறிய மேடு ஒன்றில் உட்கார்ந்து கொண்டு தினமும் நாதஸ்வரம் வாசித்து கொண்டிருப்பார் என்று ஒரு ஆள் புழுதிபடிந்த பாறையொன்றை காட்டினார். இசையறிந்த அந்த கல் வெயிலேறி மௌனமாக இருந்தது.ஊரில் இருந்து விடைபெற்று கிளம்பும் போது புலி வசித்த குகைக்குள் சென்று வந்தது போன்ற சிலிர்ப்பு இருந்து கொண்டேயிருந்தது. அடிமனதில் என்றோ கிராமத்து கோவிலில் கேட்ட நாதஸ்வர இசை அதிர்ந்து பீறிட்டது.


நாதஸ்வரத்தை போல கம்பீரத்துடன்  நம் மனதை உற்சாகமும் களிப்பும் கொள்ள வைக்கும் இசை வேறில்லை. அதை ஏன் இன்று நம்மில் பெரும்பான்மை உணரவேயில்லை என்று மட்டுமே ஆதங்கமாக இருக்கிறது.


   ** 

0Shares
0