குஞ்நுண்ணி மலையாளத்தில் முக்கியமான நவீன கவிஞர். இவரது கவிதைகள் நேரடியான மொழியில் எளிய அனுபவங்களை முன்வைக்ககூடியவை. அவரது கவிதைகள் குஞ்நுண்ணி கவிதைகள் என்று தமிழில் மொழியாக்கம் செய்து தனித்தொகுப்பாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் பா. ஆனந்த குமார்.
மலையாள நவீன கவிதையில் நாட்டார் இலக்கிய மரபுகளை முன்னிறுத்தி சமுக அரசியல் உணர்வோடு கவிபாடுகின்ற போக்கினை சார்ந்தவர் குஞ்நுண்ணி என்று அவரை அறிமுகம் செய்து வைக்கிறார் ஆனந்த குமார்.
வலப்பாடு என்ற ஊரில் பிறந்த குஞ்நுண்ணி கோழிக்கோடு ராமகிருஷ்ண மிஷின் உயர்நிலைப்பள்ளியில் நீண்ட காலமாக மலையாள மொழி பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். இவரது முதல் கவிதை தொகுதி நான்சென்ஸ் கவிதைகள். நம்பூதிரி பலிதங்கள் இவரது புகழ்பெற்ற நூல்.
இரண்டு மூன்று வரிகளுக்குள் அடங்கிவிடும் இவரது கவிதைகளின் எள்ளலும்கேலியும் உள்ளார்ந்த தத்துவ தளமும் சிறப்பானவை. எனக்கு பிடித்தமான குஞ்நுண்ணியின் சில கவிதைகள்
**
ஒரு தீக்குச்சி தா
தீப்பெட்டி தா
ஒரு பீடி தா
விரல் தா
உதடு தா
நான் ஒரு பீடியை இழுத்து ரசிக்கிறேன்
**
நான் பசிக்கும்போது புசிப்பேன்
தாகமெடுக்கும் போது குடிப்பேன்
சோர்வுறும்போது உறங்குவேன்
உறங்கும் போது எழுதுவேன் கவிதைகளை
**
எனக்குண்டு ஒருலகம்
உனக்குண்டு ஒருலகம்
நமக்கில்லை ஒருலகம்
**
ஒரு சிறியமரம்
அதிலொரு பெரிய வனம்
அதுதான் என் மனம்
**
பின்னால் மட்டுமே மடங்குகின்ற கால்கள் கொண்டவல்லவா
முன்னால் பாய்கின்றனர் இம்மனிதர்கள்.
**
மனிதனுக்கு மனிதனென்று பெயரிட்டது
மனிதன்தான் என்பது
எவ்வளவு பெரிய வெட்ககேடு.
**
பிறந்து விழுந்ததிலிருந்தே அழுகின்ற
சின்னத்தனம் விலங்குகள் ஒன்றுக்குமில்லையே
**
பண்டைய நம்பூதிரி
அச்சனை அஜ்ஜனாக்கினான்
அப்பனை அப்ஹனாக்கினான்
மகனையும் மகளையும் மஹனும் மஹளுமாக்கினான்
கொஞ்சம் மரியாதை பாக்கியிருந்ததால்
அம்மாவை அம்ஹா ஆக்கவில்லை
புதிய நம்பூதிரி அதையும் செய்தான்
அம்மாவை மம்மியாக்கி
**
என்னை பெற்றதும் நான் தான்
**
நானொரு வாடகை வீடு
யாருடைய
யார் இதில் வசிப்பது
**
வழி தவறச் செய்யாது
கொஞ்சம் தள்ளிநில் வெளிச்சமே
என்னை என் வீட்டில் சேர்க்க
என் காலுக்குத் தெரியும்
என்னை என் குழியில் தள்ள
என் கண்ணுக்குத் தெரியும்.
**
ஒரு பெரிய கப்பல் எனக்கிருந்தது அதையங்கு
இறக்குவதற்கு ஒரு சிரட்டைத் தண்ணீரும்
**
நன்றி – குஞ்நுண்ணி கவிதைகள். பா. ஆனந்தகுமார். பாரதி புக் ஹவுஸ். மதுரை.