குறைந்த ஒளியில்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ் என்னைப் புகைப்படங்கள் எடுப்பதற்காக  கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆலம்பரைகோட்டைக்கு அழைத்துச் சென்றார்.

காலை ஆறுமணிக்கு முன்பாக அங்கிருக்க வேண்டும் என இருள் கலையாத சாலையில் பயணம் செய்தோம். விடிகாலை வெளிச்சத்தில் அவரும் இரண்டு நண்பர்களும் நிறையப் புகைப்படங்களை எடுத்தார்கள். மிகச்சிறப்பான புகைப்படங்கள்.  இன்றுவரைஅந்தப் புகைப்படங்களைத் தான் எனது புத்தகங்களின் பின்னட்டையில் பயன்படுத்தி வருகிறேன்

பிரபு தேர்ந்த ஒளிப்பதிவாளர். சிறந்த இலக்கிய வாசகர். உலக சினிமாவைத் தேடித்தேடி பார்ப்பவர். முகநூலில் அவர் எழுதிய பதிவுகளைத் தொகுத்து  தனிநூலாக வெளியிடுகிறார். உயிர்மை பதிப்பகம் வெளியிட உள்ள குறைந்த ஒளியில் என்ற அவரது புத்தகம் உலகசினிமா. தமிழ் சினிமா, இலக்கியம், தினசரி நிகழ்வுகள் என பல தளங்களில் பிரபுவின் தனித்துவமிக்க பார்வைகளை முன்வைக்கின்றன. எள்ளலும் கூர்மையான விமர்சனமும் கொண்டாட்டமும் கொண்ட இந்தப் பதிவுகள் துடிதுடிப்பான அவரது தேடலின் சான்றுகள்.

பிரபு காளிதாஸின் குறைந்த ஒளியில் ஏப்ரல் 8 மாலை 6 மணிக்கு கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

பிரபுவிற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்

முகநூலில் மட்டுமின்றி பத்திரிக்கைகளிலும் அவர் தொடர்ந்து எழுத வேண்டும். அவர் எடுத்த சிறந்த புகைப்படங்களைத் தொகுத்து தனி நூலாக வெளியிட வேண்டும்.  உலகப்புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர்களின் புத்தகங்களைப் பார்க்கும் போது தமிழில் இது போன்ற முயற்சிகள் இல்லையே என ஆதங்கமாக இருக்கும். பிரபு தனது புகைப்படங்களை ஒரு தொகுப்பாக  வெளியிட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

0Shares
0