பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருடர்களுக்கென ஒரு நாடக அரங்கம் மதராஸில் இருந்தது. அதன் நடிகர்கள் யாவரும் திருடர்களே. பார்வையாளர்களும் திருடர்களாகவே இருந்திருக்கக் கூடும்.
அந்த நாடகம் நடத்தப்படும் இடமும் நேரமும் ரகசியமாக அறிவிக்கபடும். அந்த இரவில் திருடர்கள் ஒன்று கூடுவார்கள். ஆண்களே பெண் வேஷமிட்டு நடித்த அந்த நாடகம் பெரும்பாலும் வேடிக்கையான கதையைக் கொண்டிருந்தது. குறிப்பாக வெள்ளைக்கார துரை மற்றும் அவரது மனைவி அல்லது காதலி பற்றிய கதைகளே நிகழ்த்தப்பட்டது.

இந்த நாடகங்களை எழுதிய நாடக ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. உண்மை சம்பவங்களின் தொகுப்பாகவே அந்த நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக லெய்மன் துரையின் விருந்து என்ற நாடகம் புகழ்பெற்றது. அந்த நாடகத்தில் லெய்மன் என்ற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஒரு நாள் தனது வீட்டிற்கு நகரிலுள்ள ஐந்து பிச்சைகாரர்களை விருந்திற்கு அழைக்கிறான்.
இந்த விருந்தில் கலந்து கொள்ளப் பிச்சைகாரர்களுக்குள் ஒரு போட்டி வைக்கிறான். அதில் வென்றவர்கள் மட்டுமே விருந்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அப்படித் தேர்வாகி வந்த ஐந்து பிச்சைகாரர்கள் லெய்மன் துரையின் மனைவி கேத்தரின் மீது ஆசை கொண்டு, அவனைக் கட்டிப் போட்டு அவன் முன்னால் அவளிடம் ஆசை வார்த்தை பேசுகிறார்கள். லெய்மன் துரையின் மனைவியை அடைவதில் அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி எப்படிக் கொலையில் முடிகிறது என்பதே நாடகம்
இந்த நாடகம் முழுக்கக் கேலியும் கிண்டலும் நிரம்பியது. கேத்தரினாக நடிப்பதற்குத் தான் போட்டி. அவளைப் போலவே பூவேலைப்பாடு கொண்ட தொப்பி, கவுன் அணிந்து கையில் விசிறியோடு நடிகர் மேடைக்கு வரும் போது பார்வையாளர்கள் விசில் அடித்துக் கொண்டாடுவார்கள்.
லெய்மன் துரையின் முன்னால் அவனது மனைவியைக் காதலிப்பதில் ஏற்படும் போட்டி வேடிக்கையின் உச்சமாக இருக்கும் என்றார்கள். குடிபோதையில் கேத்தரின் ஆடும் நடனம். லெய்மன் துரையின் மீது குதிரேயற்றம் செய்யும் பிச்சைகாரனின் வேடிக்கை. அந்த வீட்டின் தாதியாக இருந்த கிழவியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகப் பிச்சைகாரன் எடுக்கும் முடிவு எனத் தொடர் சிரிப்பலையை உருவாக்கும் நாடகம் திருடர்களுக்கு மிகவும் விருப்பமானது
திருடர்கள் குடும்பக் கதைகளை விரும்புவதில்லை. காதல் கதையை விடவும் பெண்ணைத் தூக்கிச் சென்று அடையும் கதைகளை அதிகம் விரும்பினார்கள். அரசர்களின் முட்டாள்தனத்தையும், வணிகர்களின் பேராசையினையும் பற்றிய நாடகங்களே அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன.
இந்த நாடகம் எங்கே நடக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டால் கூண்டோடு திருடர்களைப் பிடித்துவிடலாம் எனக் காவல் படையினர் தேடியலைவதுண்டு. சில தடவை பொய்யாக அவர்களே ரகசியமான ஒரு இடத்தில் நாடகம் நடக்கப்போவதாக அறிவிப்பு செய்தும் பார்த்திருக்கிறார்கள். அந்தப் பொறியில் திருடர்கள் மாட்டவேயில்லை.
திருடர்களின் நாடகத்தில் கோமாளி கிடையாது. வெள்ளைக்கார அதிகாரி தான் கோமாளி. ஒரு காட்சியில் மேடையிலே அவன் அணிந்திருந்த ஆடைகளைப் பிடுங்கி நிர்வாணமாக ஆட விடுவார்கள். புட்டத்தில் சவுக்கடி விழும். அப்போது எழும் சிரிப்பொலி அரங்கையே உலுக்கிவிடும்.
திருடர்களின் நாடக அரங்கில் சில விநோத நடைமுறைகள் இருந்தன. அவர்கள் நடிப்பதாகச் சொல்லி மேடையிலே குடிப்பார்கள். நிஜமாகச் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஒரு முறை நிஜக்கத்தியால் ஒருவனை நிஜமாகக் குத்தியதும் நடந்திருக்கிறது. பார்வையாளர்களில் ஒருவர் திடீரென நாடகத்திற்குள் பங்கேற்பதும் உண்டு. ஆபாச பேச்சுகளும் வசைகளும் அடிதடிகளும் நிறைந்த அந்த நாடகம் அவர்களுக்குப் புதுவகையான போதையாக இருந்தது
எவ்வளவு சண்டை கூச்சல்கள் வந்தாலும் நாடகம் பாதியில் நிற்காது. முழுமையாக நடந்தேறவே செய்யும். நாடகத்தின் முடிவில் அதில் சிறப்பாக நடித்த ஒருவருக்கு மூன்றாந்தரன் என்ற பட்டம் அளிக்கபடும். அவன் அந்த இரவில் நகரில் எங்கு வேண்டுமானாலும் திருடலாம். அவனைத் தவிர அன்று வேறு திருடர்கள் எவரும் திருட்டில் ஈடுபட மாட்டார்கள்.
அப்படி ஒருவன் லெய்மன் துரையாக நடித்துப் பார்வையாளர்களின் கைதட்டுகளை வாங்கி அன்றிரவு மூன்றாந்தரனாகத் தேர்வு செய்யப்பட்டான்.
அவனுக்கு இருபது வயதே ஆகியிருந்தது. கல்லால் செய்த உலக்கை போல உறுதியாக இருந்தான். வெள்ளைகாரர்கள் அணியும் கோட் மற்றும் தொப்பி அணிந்து கொண்டு தப்பும் தவறுமாக ஆங்கிலச் சொற்களை உளறும் போது அவனுக்கே மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்தவன் தன் மனைவியைக் காதலிப்பதை லெய்மன் பாராட்டும் காட்சியில் அவன் உண்மையிலே பிச்சைக்காரனை முத்தமிட்டான். உதடினைக் கடித்துவிட்டான் என்றே சொல்ல வேண்டும்.

மரக்கட்டையில் செய்த சாவி ஒன்றை அவன் கையில் பரிசாகக் கொடுத்து நகரில் நீ விரும்பிய இடத்தில் விரும்பிய பொருட்களைத் திருடிக் கொள்ளலாம் என்று திருடர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.
மூன்றாந்தரன் அன்றிரவு நகரின் வீதி வீதியாகச் சுற்றியலைந்தான். பெரியதும் சிறியதுமான வீடுகள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன. வானில் கலங்கிய நிலவு. எதைத் திருடுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.
வீடுகளில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது அவனை அறியாமலே பரிவு ஏற்பட்டது.
பொம்மையின் கழுத்தில் உள்ள சங்கிலியை பறிப்பது வீரமா என்ன. இப்படி உறக்கத்திடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டு ஆழ்ந்து துயில் கொண்டுள்ள மனிதர்களின் பொருட்களை அறியாமல் திருடுவதில் என்ன சாகசமிருக்கிறது என்று யோசித்தான்.
அந்த ஊரில் உள்ள வீடுகள், கடைகள் யாவும் அவனுக்கு விளையாட்டுப் பொருட்கள் போலிருந்தன.
விடியும் வரை அவன் ஊரை சுற்றியலைந்தும் எதைத் திருடுவது தனக்கு என்ன தேவை என்று அவனால் கண்டறிய முடியவில்லை. சலிப்புற்றவனாக அந்த இரவு வேகமாக முடியட்டும் என வேகமாக நடந்தான்.
கலையாத இருளில் கடற்கரையின் மணலில் படுத்து அவன் உறங்கியும் விட்டான். நண்டு மணலில் ஊர்ந்து கொண்டிருப்பது போலப் பகலின் வெளிச்சம் மணலில் உறங்கும் அவன் மீது ஊர்ந்து கொண்டிருந்த போது அவன் திருடர்களில் ஒருவனாக எவருக்கும் தோன்றவில்லை
••