குற்றமுகங்கள் -17 கோளாம்பி

1828 நவம்பர் 20 அன்று கொச்சி இராஜ்ஜியத்தின் திவான் உத்தராதி தம்பிரானின் பசு திருடு போயிருந்தது.

நெற்றியில் சங்கு அடையாளம் கொண்ட அந்தப் பசுவை அவர் மகாலட்சுமியின் அவதாரமாகவே கருதினார். நேத்ரி என்று பெயரிடப்பட்ட அந்தப் பசுவிற்காகவே சொர்க்க மண்டபத்தினைக் கட்டியிருந்தார்.

பசுவைக் கயிற்றால் கட்டக்கூடாது என்பதற்காக வெள்ளிச்சங்கிலியை அணிவித்திருந்தார். பசு நின்றிருந்த அந்த மண்டபத்தில் காலையும் மாலையும் சாம்பிராணி போடுவார்கள். மண்டபத் தூண்களுக்கு இடையே சேலையால் தடுப்பு உருவாக்கி மணப்பெண்ணைப் பாதுகாப்பது போல வெளியாள் கண் படாமல் பசுவைப் பாதுகாத்தார்கள்.

உத்தராதி தம்பிரான் காலையில் குளத்தில் குளித்துக் கரையேறி நேராகச் சொர்க்க மண்டபத்திற்குத் தான் வருவார். ஐந்து வகை மலர்கள் தூவிப் பசுவை வணங்குவார். அந்தப் பசு தான் திருடு போயிருந்தது. அதைத் திருடியவன் கோளாம்பி என்றார்கள்.

கோளாம்பி என்பது எச்சில் துப்பும் கிண்ணம். வெற்றிலை மடித்துத் தருவதும் வெற்றிலை எச்சிலைத் துப்பும் கோளாம்பியை ஏந்தியபடி நிற்பதுமாகயிருந்த ராக்கனின் பெயரே கோளாம்பியாக மாறியிருந்தது.

கேசவன் தம்பிரான் குட்டநாட்டிலிருந்து ராக்கனை பனிரெண்டு வயதில் அழைத்து வந்திருந்தார். வீட்டு வேலைகள் பழகிய அவன் சில வருஷங்களில் அடைப்பக்காரனாக மாறினான். திவான் எங்கே சென்றாலும் ராக்கன் உடன் சென்றான். திவானின் ஆசை நாயகிகளுக்கு என்றே அவன் வெற்றிலையில் சேர்த்து தரும் பஷ்பம் ஒன்றை தயாரித்து வைத்திருந்தான்.

வீட்டுப் பணிப்பெண்களில் ஒருத்தியை தம்பிரான் அவனுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார். ஆனால் திருமணம் நடந்த இரண்டாம் நாளே அந்தப் பெண் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். அவர்களுக்குள் என்ன நடந்த்து என எவருக்கும் தெரியவில்லை. அவளுக்காகக் கோளாம்பி ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை .

கோவில் சிலையைப் போல எப்போதும் ஒரே முக பாவத்தில் கோளாம்பி இருந்தான். எவருடனும் பேச மாட்டான். எதற்கும் சிரிக்க மாட்டான். அவன் சாப்பிடும் போது யாரும் அதைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகக் கதவை மூடிக் கொண்டுவிடுவான். சட்டியில் எவ்வளவு சோறு வைத்திருந்தாலும் சாப்பிட்டு முடித்துவிடுவான். வெறும் சோறோ, கஞ்சியோ தான் வேண்டும். அதற்குத் தொடுகறிகளோ, துவையலோ எதுவும் வேண்டாம்.

கொடுங்கலூர் பரணி திருவிழாவிற்குக் கோளாம்பி தவறாமல் போய்விடுவான். தம்பிரானிடமோ, எஜமானியிடமோ அதற்கு அனுமதி கேட்க மாட்டான். அந்த ஏழு நாட்கள் அவனுக்கானவை.

அந்த நாட்களில் தம்பிரான் வெற்றிலை போட்டுக் கொள்ள மாட்டார். கோளாம்பியை தவிர வேறு எவரையும் நம்பி வெற்றிலை போட்டுக் கொள்ள முடியாது. விஷம் தடவிய வெற்றிலையால் கொன்றுவிடுவார்கள் என்ற பயமிருந்தது.

ஒரு நாளில் தம்பிரான் எத்தனை முறை வெற்றிலை போட்டுக் கொள்வார். எந்த நேரத்தில் எத்தனை வெற்றிலைகள் மடித்துத் தர வேண்டும், அவரது தலை எச்சிலை துப்ப எந்தப்பக்கம் திரும்பும் எனக் கோளாம்பிக்கு மட்டும் தான் தெரியும். பல சமயம் தம்பிரான் கோபத்தில் அவன் மீதே எச்சிலைத் துப்பியிருக்கிறார். உடனே குளத்திற்குச் சென்று குளித்துவிட்டு வந்துவிடுவான்.

கோளாம்பியை வீட்டுப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை. நரிப்பயல் என்று திட்டினார்கள். அப்படித் திட்டுவதற்கான காரணம் எதையும் அவர்கள் வெளியே சொன்னதில்லை.

கோளாம்பி அப்படி ஒரு முறை கொடுங்கலூர் பரணி பார்த்துவிட்டு திரும்பி வரும் போது ஏழு வயதுச் சிறுமி ஒருத்தியை அழைத்து வந்திருந்தான். அவள் யாரெனத் தம்பிரான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. அவளையும் வீட்டுவேலைகளுக்கு வைத்துக் கொண்டார்கள்.

மாலு என்ற அந்தச் சிறுமி எதைச் செய்யச் சொன்னாலும் கோளாம்பி செய்தான். அதனைத் தம்பிரான் கோவித்துக் கொண்டாலும் அவன் செய்யத் தவறவில்லை. அந்தச் சிறுமி கோளாம்பியின் மகள் தான் என்று பணிப்பெண்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால் மாலுவின் முகச்சாடை வேறாக இருந்தது. தாயைக் கொண்டு பிறந்திருப்பாள் என்றார்கள்.

மாலு ஒருநாள் தம்புராட்டியின் மயில்விசிறியைத் திருடிவிட்டாள் என்று தூணில் கட்டிவைத்து அடித்த போது கோளாம்பி கண்ணீர்விட்டு அழுதான். அவளுக்குப் பதிலாகத் தன்னை அடிக்கும்படி வேண்டினான். அத்தோடு தெய்வம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று உரக்கச் சப்தமிட்டான்.

இது நடந்த நான்காம் நாள் மாலு வீட்டைவிட்டு ஒடிப்போனாள். அவளைத் தேடிக் கொண்டு கோளாம்பியும் புறப்பட்டுப் போனான். அவன் மீது தம்பிரானுக்கு வந்த கோபத்தில் அந்த நாயை இனி வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

ஆனால் ஆறாம் நாள் அந்தச் சிறுமியோடு கோளாம்பி திரும்பி வந்து வீட்டு வாசலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தங்களை மன்னிக்கும்படி வேண்டினான். தம்பிரான் மன்னிக்கவில்லை. வெயில் உச்சிக்கு ஏறும்வரை அவன் வாசலிலே விழுந்துகிடந்தான். தம்பிரான் அவனை மட்டும் வீட்டிற்குள் அனுமதிப்பதாகவும் மாலுவை தோட்டத்து வேலைக்காகக் காயங்கரை அனுப்பி வைக்கப்போவதாகவும் சொன்னார். கோளாம்பி தன்னையும் காயங்கரை அனுப்பிவிடும்படி மன்றாடினான்.

அவள் யார் என்ற உண்மையைச் சொல்லும்படி தம்பிரான் கோபத்தில் சப்தமிட்டார்.

“எனக்குத் தெரியாது எஜமானே. அவள் பரணி திருவிழா கூட்டத்தில் திடீரென என் கையைப் பிடித்துக் கொண்டாள். நான் வீடு திரும்பும் போது என் கூடவே வந்துவிட்டாள். அது தான் உண்மை“ என்றான்.

தம்பிரானால் அதனை நம்ப முடியவில்லை. ஆனாலும் காயங்கரையில் உள்ள தோட்டத்திற்கு மாலுவை அனுப்பி வைப்பதில் தம்பிரான் உறுதியாக இருந்தார்.

அதன்பிறகு மாலுவைக் காணுவதற்காகவே கோளாம்பி அடிக்கடி காயங்கரை போய்வந்து கொண்டிருந்தான். மாலு ஆசைப்படுகிறாள் என்று தம்பிரான் வீட்டில் இருந்து சந்தனப்பொடி. கேசத்தைலம், சங்கு வளையல், ஜரிகை ரிப்பன் எனச் சிறுசிறுப் பொருட்களைத் திருடி வரத்துவங்கினான் . மாலு என்ற குட்டிக்குரங்கு கோளாம்பி என்ற குரங்காட்டியை ஆட்டுவைக்கிறது என்று காயங்கரை பணியாளர்கள் கேலி பேசினார்கள்.

கோளாம்பி காயங்கரை வரும்நாட்களில் அவனும் மாலுவும் இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. விடிகாலையில் கோளாம்பி கிளம்பி போகும் போது எதையோ தனக்குத் தானே பேசிக் கொண்ட படி நடந்தான்.

மாலு அவனைத் திருடனாக்கினாள். எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் கேட்டதை எல்லாம் திவான் வீட்டிலிருந்து திருடிக் கொண்டு வந்து கொடுத்தான். ஒரு சிறுமியின் மனதில் இத்தனை ஆசைகள் இருக்குமா என வியப்பாக இருந்தது.

அவள் ஒருநாள் தம்பிரானுக்கு மட்டுமே தரப்படும் நேத்ரி பசுவிலிருந்து தனக்குப் பால் கொண்டுவரும்படியாகச் சொன்னாள். அதை மட்டும் தன்னால் செய்ய முடியாது என்று மறுத்தான் கோளாம்பி. அந்தப் பாலை கொண்டுவராவிட்டால் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என மாலு கோவித்துக் கொண்டாள்.

இதற்காகவே கோளாம்பி பின்னிரவில் சொர்க்க மண்டபத்திற்குச் சென்று பித்தளைச் செம்பு ஒன்றில் பால் கறந்தான். அதைத் துணியால் மறைத்துக் கொண்டு காயங்கரைக்கு நடக்கத் துவங்கினான்.

ஆனால் மாலு அங்கேயில்லை. அவள் ஒடிப்போயிருந்தாள். கோளாம்பி அழுதான். மாலுவைத் தேடிக் கொண்டு கிளம்பினான். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவன் வீடு திரும்பிய போது தனியே வந்திருந்தான். பித்துப்பிடித்தவன் போல கண்கள் மஞ்சளேறியிருந்தன. இருண்டு போன முகம். செம்புழுதி படிந்த கால்கள். அவனை இனி அடைப்பக்காரனாக வைத்துக் கொள்ள முடியாது எனத் தம்பிரான் துரத்திவிட்டார்.

மாலுவிற்கு என்ன ஆனது என எவருக்கும் தெரியவில்லை.

இது நடந்த இரண்டு வாரங்களுக்குப் பின்பு தான் தம்பிரானின் பசு திருடு போனது. கோளாம்பியைக் கண்டுபிடித்துத் தனது பசுவை மீட்டுவருவதற்காகத் இருபத்தியோறு வீரர்களை தம்பிரான் அனுப்பி வைத்தார்.

அவர்கள் பதினாறு நாட்கள் குதிரையில் சுற்றியலைந்தும் கோளாம்பியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஒருவேளை மலபார் பிரதேசத்திற்குள் போயிருக்கக் கூடும் எனத் தம்பிரானிடம் தெரிவித்தார்கள்.

அவர் தலச்சேரியின் துணை ஆட்சியராக இருந்த தாமஸ் எச். பாபருக்கு அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதற்குப் பதில் எழுதிய தாமஸ் பாபர் ஒரு பசுவைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைப்பதை விடவும் தங்களுக்கு முக்கியப் பணிகள் இருப்பதால் அவர் புதிதாகப் பசு ஒன்றை வாங்கிக் கொள்ளும்படியாகத் தெரிவித்திருந்தார். இது திவானின் கோபத்தை அதிகமாக்கியது. வெள்ளைக்காரர்களை மிக மோசமான வசையால் திட்டினார்.

அவர்கள் பசுவைத் தேடிக் கொண்டிருந்த நாட்களில் உத்தராதி தம்பிரான் புது அடைப்பக்காரனை நியமித்திருந்தார். ராஜேந்து என்ற அந்த அடைப்பக்காரன் கிளிமானூர் அரண்மனையில் வேலைக்கு இருந்தவன். வைத்திய சாஸ்திரம் கற்றவன் என்றார்கள்.

அவன் ஒரு நாள் மதியம் ஊஞ்சலில் அமர்ந்திருந்த தம்பிரானுக்கு வெற்றிலை மடித்து நீட்டிய போது தூண் அருகே கோளாம்பி நிற்பது போன்ற நிழல் தெரிந்தது. யார் நிற்கிறார் என்று பார்க்கும்படி ராஜேந்துவிடம் சொல்லியபடி வெற்றிலை எச்சிலை துப்புவதற்காகத் தம்பிரான் தலை திரும்பிய போது ஊஞ்சலிலிருந்து விழுந்து இறந்து போனார். அவரது திறந்த வாயில் எச்சில் சக்கை ஒட்டியிருந்தது

வெற்றிலையில் விஷம் தடவி கோளாம்பி கொன்றுவிட்டான் என்றார்கள். கோளாம்பி எப்படி அந்த வீட்டிற்குள் வந்தான். ராஜேந்துவிற்க்குத் தெரியாமல் எப்படி வெற்றிலையில் கோளாம்பி விஷம் தடவினான் என்று தெரியவில்லை. ஒருவேளை ராஜேந்துவை அனுப்பியதே கோளாம்பி தானா.

காயங்கரையிலிருந்த மாலுவை தம்பிரானின் ஆட்கள் தான் மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு போய்க் காசிக்குப் போகும் யாத்ரீகர்களுடன் அனுப்பி விட்டார்கள் என்பதைக் கோளாம்பி தெரிந்து கொண்டதால் தான் இப்படி நடந்து கொண்டான் என்றார்கள்.

காசியின் வீதிகளில் நெற்றியில் சங்கு கொண்ட பசுவை கூட்டிக்கொண்டு ஒருவன் சுற்றியலைகிறான் என்று ஊர் திரும்பிய யாத்ரீகர்கள் சொன்னார்கள். அது கோளாம்பி தானா என்று தெரியவில்லை. மாலுவை கண்டுபிடிக்கத் தான் அப்படி அலைகிறானா. மாலு யார் என்ற உண்மை வெளிப்படவேயில்லை. ஒருவேளை கோளாம்பி சொன்னது தான் உண்மையா.

••

0Shares
0